ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- வாங்க
1972ல் எனக்கு பத்துவயது இருந்தபோது எழுதப்பட்டது ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். அது வெளிவந்தபோது தமிழ்ச்சூழலில் என்ன விவாதம் எழுந்தது என்று நான் ஜெயகாந்தனிடம் ஒருமுறை கேட்டேன்.
மீசையை நீவியபடி “நடந்த விவாதம் ஒண்ணுதான். அதிலே உலகத்துக்கு முன்னாடி ஓர் வேணும், ஒருண்ணு தப்பா எழுதியிருக்குன்னு… நான் புக்கா வந்தப்ப முன்னுரையிலேயே பதில் சொன்னேன்”
நான் சிரித்து “ஏத்துகிட்டாங்களா?” என்றேன்.
“இலக்கணம் பின்னாலே திரும்பிப் பாத்துட்டு நடக்கிற வியாதி கொண்டது. முன்னாடி நின்னு பேசினா அது கவனிக்காது” என்றார்
ஜெயகாந்தன் இந்த நாவலில் ஏன் ஓர் என்று எழுதவில்லை? ஜெயகாந்தன் முறையாக தமிழ்கற்றவர். பழந்தமிழிலக்கியம் ஆழப்பயின்றவர். இந்த இலக்கணம் அவருக்குத் தெரியாதா என்ன? அவர் சொல்ல விரும்புவது ’ஓர்’ உலகத்தை அல்ல ’ஒரு’ உலகத்தை. ஓர் என்ற உச்சரிப்பு The அல்லது A அல்லது One என்னும் குறிப்பை அளிக்கிறது. அவர் விரும்பியது… and one என்னும் குறிப்பை. ஒரு மனிதன், ஒருவீடு அதோடு ஒரு சாதாரணமான இயல்பான உலகம்.
ஓருலகம் என்ற கருத்து உணர்ச்சிகரமாக பேசப்பட்ட காலம் அது. ஓருலகக் கனவை கண்ட கம்யூனிஸ்டு கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்தான் அவர். அந்த சொல் அவரையும் கொந்தளிப்படையச் செய்திருந்தது. ஆனால் அந்நாவலில் முதலில் மனிதன், அதன்பின் வீடு, அப்பால் உலகம் என அவர் காட்டவிரும்பினார். அந்த உலகுக்கு அழுத்தம் விழலாகாது என்று நினைத்தார். மனிதர்களால் வீடுகளாலான உலகம் அது, அவ்வளவுதான்.
1974 லேயே இந்நாவல் எனக்கு அறிமுகமாகிவிட்டது. அன்று முழுக்கோடு பள்ளியில் ஆசிரியராக வந்த ரூபன் என்னும் இளைஞர் ஜெயகாந்தனின் தீவிரவாசகர்.மாலை மைதானத்தில் பாட்மிண்டன் விளையாடுவார்கள்.அதன்பின் ஆவேசமாக அவர் ஜெயகாந்தனைப் பற்றிபேசுவார். என் அம்மாவுக்கு ஜெயகாந்தனை அவ்வளவாக பிடிக்காது. ஜெயகாந்தனை நான் அந்த ஆசிரியர் சொற்கள் வழியாகவே சரியாக அறிமுகம்செய்துகொண்டேன்
அவர் அளித்து ஜெயகாந்தனின் நாவல்களை வாசித்தேன். ஆறாம் வகுப்பில் ஜெயகாந்தனை ஆழ்ந்து படித்திருந்த என்னை அதன்பின் என் ஆசிரியர்கள் அறிமுகம்செய்துகொண்டனர். அவர்களில் பலர் அன்று ஜெயகாந்தனின் பக்தர்கள். நான் வாசித்த ஜெயகாந்தன் நாவல்களில் என்னை பிடித்து ஆட்கொண்ட நாவல் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். பலவாரக்காலம் என்னை காய்ச்சல்கொண்டவன் போல அது அலையச் செய்திருக்கிறது.
நான் என்னை ஹென்றியாக உணரவைத்தது அது. நான் ஒரு நாடோடியாகவேண்டும், ஊரைவிட்டு கிளம்பிவிடவேண்டும், அறியாத ஊர்களுக்குச் சென்று குடியேறவேண்டும் என்றெல்லாம் கனவுகள் கண்டேன். பின்னர் கிளம்பியதற்கு தொடக்கப்புள்ளியும் அந்நாவல்தான்.அன்றிருந்த அந்த ‘காய்ச்சலை’ இன்றைய தலைமுறை உணரமுடியுமா? அந்த வரலாற்றுப்புலத்தைச் சொன்னால் அவர்களுக்கு தெரிவித்துவிடமுடியுமா?
இன்று முற்றிலும் அழிந்துவிட்ட ஒன்று என்றால் சாகச உணர்வுதான். சாகசம் என்றால் தேவையான ‘கிட்’களுடன் மலையேறுவதையோ கடலில் பாய்வதையோ சொல்லவில்லை. அவற்றுக்குப் பின்னால் வாழ்க்கையை தெளிவாகத் திட்டமிட்டு அமைத்துக்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இது வேறொன்று, வாழ்க்கையை காற்றுக்கு விட்டுவிட்டு இறங்கிச் செல்வது. அந்த மனநிலை எழுபதுகளில் எங்குமிருந்தது. ஹென்றி அதன் அடையாளம்.
உலகமெங்கும் ஹிப்பி இயக்கம் பற்றி எரிந்து பரவிக்கொண்டிருந்த காலம் அது. அத்தகைய இயக்கம் எப்படி குமரிமாவட்டத்தில், முழுக்கோடு என்னும் சிற்றூர் வரை வரமுடியும்? அதுதான் உலகம் ஒன்றாக ஆரம்பித்த காலம் என நினைவுகொள்க. உலகளாவிய செய்தி ஊடகங்கள் வலுப்பெற்றன. உலகத்தை காட்டும் சினிமா ஒரு பேரலையாக எழுந்தது. முழுக்கோடு என்னும் சிற்றூரில் நான் ருஷ்ய, அமெரிக்க இதழ்களை வாசித்துக்கொண்டிருந்தேன். [அவற்றை அன்று இலவசமாகவே தபாலில் பெறமுடியும்]
ஹிப்பிகள் சினிமாக்களில் இடம்பெற்றனர். ஹிப்பி ஸ்டைல் என்னும் தலைமயிர்ப்பாணி அறிமுகமாகியது. இலக்கியத்தில் ஹிப்பிகளின் உளநிலைகளை, கொள்கைகளைப் பேசும் படைப்புக்கள் உருவாகி வந்தன. மலையாளத்தில் எம்.முகுந்தன், காக்கநாடன் போன்றவர்கள் அந்த இயக்கத்தின் இலக்கிய முகங்கள். அத்தனைக்கும் அப்பால் கோவளம் ஹிப்பிகளின் மையங்களில் ஒன்றாக உருத்திரண்டு வந்தது. ஹிப்பிகளால் கண்டெடுக்கப்பட்ட ஒதுக்குபுறமான கடற்கரை அது.
அவர்கள் கன்யாகுமரிக்கும் அவ்வப்போது வந்தனர். அங்கிருந்து திற்பரப்புக்கும்.ஆகவே திருவரம்பு சாலையில் மாதத்தில் ஒரு சில ஹிப்பிகளை நேரில் பார்க்கவும் வாய்ப்பிருந்தது.
பெட்டிக்கடையில் அமர்ந்திருக்கையில் ஒரு ஹிப்பி வந்து ‘எ பண்டில் ஆப் பீடி ப்ளீஸ்’ என்பார்.
“வேர் ஆர் யூ ஃப்ரம்?” என்பேன்.
‘கேலிஃபோர்னீயா, யுஎஸ்” என்ற குழறும் குரல்.
“ஆர் யூ என் அமெரிக்கன்?” என்று கேட்பேன். நான் ஆங்கிலம் பேசுவதை ஊரார் வியந்து பார்ப்பார்கள். கரடிநாயரின் மகன் ஆள் சூட்டிகை.
“நோ, நோ கண்ட்ரி ஃபர் எ மேன்”.
இந்தியா வந்தபின் அவர்கள் இந்தியாவுக்கான ஆங்கிலத்தையும் உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். அவர் புன்னகைத்து கிளம்பிச்செல்வார்.
“வைக்கோல் புதரு மாதிரில்லாவே தலை இருக்கு?”
“பாம்பு பூரான் கேறி இருந்தாக்கூட தெரியாது”
“செரியான கஞ்சாப்பார்ட்டி. கண்ணப்பாரு, மெதந்துல்லாவே கெடக்கு”
“சிவகணமாக்கும் கேட்டேரா, வாய்மீறி பேசப்பிடாது”
அந்தச் சழக்குகள் நடுவே நான் அந்த ஆப்த வாக்கியத்தில் மெய்சிலித்துக்கொண்டு அமர்ந்திருப்பேன். நாடற்றவன். மனிதனுக்கு நாடே தேவையில்லை. நாடில்லா மனிதன். ஹிப்பிகள் தங்களை மேன் என்னும் சொல்லால் அன்றி அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. வெறும் மனிதன். “கேன் யூ ஸ்பேர் டென் ருப்பீஸ் ஃபர் எ மேன்?”. மனிதனல்ல, மானுடன்!
ஆச்சரியமாக இருக்கிறது ஏறத்தாழ அந்தக்காலகட்டத்தில்தான் ‘மனிதன்’ என்ற சொல் அத்தனை புழக்கத்திற்கு வந்தது. முன்பு அச்சொல்லுக்கு இருந்த வரையறைகள் மாறிக்கொண்டிருந்ததன் அடையாளம் அது. சினிமாப்பெயர்களிலேயே மனிதன், உயர்ந்த மனிதன், அவன்தான் மனிதன், ஏழாவது மனிதன்,மனிதனும் தெய்வமாகலாம், மனிதன் மாறவில்லை…
ஹிப்பி இயக்கத்தை உருவாக்கிய அடிப்படை உணர்வுகள் உலகளாவியவை. அவற்றை மூன்று புள்ளிகளாகத் தொகுப்பேன்.ஒன்று நாற்பதுகளில் நிகழ்ந்த உலகப்போர், அதன் அழிவுகளும் நினைவுகளும். அது அன்றுவரை மனித இனம் கொண்டிருந்த விழுமியங்கள் பலவற்றை மாற்றியது. பொதுக்கல்வி, உலகளாவிய வணிகம், தொழிற்புரட்சி ஆகியவற்றால் உலகம் முன்னேற்றமடைகிறது என்ற ஆணித்தரமான நம்பிக்கை மழுங்கியது. அது உருவாக்கிய சோர்வு மானுட சிந்தனையில் அழுத்தமாக பரவியது.
இரண்டாவது, ஐம்பதுகளுக்குப்பின் உயிர்பெற்ற ஊடகப்பெருக்கம் உலகை ஒவ்வொருவருக்கும் காட்ட ஆரம்பித்தது. நிலப்பிரபுத்துவகால வாழ்க்கையில் இயல்பான சிறுவட்டத்திற்குள் வாழ்ந்து நிறைவடைந்தவர்களின் அடுத்த தலைமுறை ‘உலகம்’ என்று கனவுகாண ஆரம்பித்தது. எழுபதுகளின் சினிமாக்களிலேயே “உலகம்” என பெரும்பரவசத்துடன் அறியாநாடுகளைப் பற்றி எழுதப்பட்ட பாட்டுகள் எத்தனை என்று பாருங்கள். “உலகம் அழகு கலைகளின் சுரங்கம்” என்ற எண்ணம் மக்களை ஆட்கொண்டிருந்தது. “காலை ஜப்பானில் காபி! மாலை நியூயார்க்கில் காபரே! இரவில் தாய்லாந்தில் ஜாலி!இனிமேல் நமக்கென்ன வேலி? இங்கும் எங்கும் நம்முலகம்! உலகம் நமது பாக்கெட்டிலே!வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே!” என்ற திரைவரிகள் அன்றைய மனநிலையின் மிகச்சரியான வெளிப்பாடுகள்.
மூன்றாவதாக புரட்சி என்னும் எண்ணம். எழுபதுகள் புரட்சியின் காலகட்டம். மக்களின் உள்ளம் வரலாற்றின் அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்துவிட்டது- ஆனால் அரசுகளும் சமூகமும் அசைவற்று பின்னால் நின்றிருந்தன. ஒன்று நிலப்பிரபுத்துவம், அல்லது நிலப்பிரபுக்களே முதலாளித்துவ ஆட்சியாளர்களாக மாறிய போலி ஜனநாயகம். அதற்கு எதிரான கிளர்ச்சி உலகின் பெரும்பாலான நாடுகளில் உருவாகியது. இந்தியாவில் நக்சலைட் எழுச்சி. அது தோற்கடிக்கப்பட்டது. பொதுத்தளத்தில் அது சோர்வை உருவாக்கினாலும் பண்பாட்டுத்துறையில் ஒரு கட்டற்ற பாய்ச்சலை நிகழ்த்தியது
அச்சூழலை நாம் தமிழகத்தின் சிற்றிதழ் சார்ந்த நவீன இலக்கியத்தில் மிகக்குறைவாகவே காணமுடிகிறது. லா.ச.ரா, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன் முதல் வண்ணநிலவன்,வண்ணதாசன் வரையிலான எழுத்து குடும்ப- பாலியல் சிக்கல்களுக்குள் சுழன்றுகொண்டிருப்பதையே காணமுடிகிறது. அவர்கள் உலகத்தை எதிர்கொள்ளவே இல்லை. சொல்லப்போனால் அவர்கள் சமகாலத்துக்கு வரவே இல்லை. அவர்கள் எழுதியதெல்லாமே அவர்களின் இளமைக்காலத்து வாழ்க்கையை, முப்பது நாற்பதாண்டுகள் முந்தைய உலகை
ஆனால் ஆச்சரியமாக அன்றைய எழுத்தாளர்களில் அந்த காலகட்டத்தின் அத்தனை தத்துவ – ஆன்மிகச் சிக்கல்களும் வெளிப்பட்ட படைப்புக்கள் ஜெயகாந்தனால் எழுதப்பட்டவை. இன்று யோசிக்கையில் ஜெயகாந்தனின் எழுத்து இல்லையேல் தமிழிலக்கியம் சமகால உலகச்சிக்கல்களை எதிர்கொண்டமைக்கான தடையங்களே எழுத்தில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஜெயகாந்தன் வணிக இதழ்களில் எழுதியமையால் சிற்றிதழ்ச்சூழலில் நிராகரிக்கப்பட்டார் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. உண்மை அதுவல்ல, அவர் எழுத்திலிருந்த உலகம்தான் சிற்றறைகளுக்குள் வரலாறோ சமகாலமோ இன்றி சுருண்டுகொண்ட சிற்றிதழ்சார் இலக்கியவாதிகளை மிரளவும் விலகவும் வைத்தது
அன்று பொதுவாசகர்களும் வாசித்த நவீன இலக்கியம் என ஜெயகாந்தனின் ஆக்கங்களைச் சொல்லமுடியும். ஜெயகாந்தனின் புனைவுலகில் மூன்று படைப்புக்கள் அக்காலகட்டத்தின் உலகளாவிய தத்துவ-அறவியல் சிக்கல்களை நேரடியாகப் பேசுவன. ஒருநடிகை நாடகம் பார்க்கிறாள், பாரிஸுக்கு போ, ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்.
இன்று வாசகர் கவனிக்கலாம். அன்று உருவாகி வந்த பெண்விடுதலை நோக்கின் தொடக்கத்தை, அவர்கள் மரபை மறுத்தும் ஏற்றும் அலைக்கழிந்ததை நாம் ’சிலநேரங்களில் சிலமனிதர்கள்’ நாவலில் காணலாம். அன்று கருத்தளவில் இருந்த சுதந்திரமான மாற்றுக்குடும்ப வாழ்க்கையின் சித்திரம் ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலில் இருந்தது. அன்று கலை- தனிவாழ்வு சார்ந்த விழுமியங்களில் மரபுக்கும் புதியதலைமுறைக்குமான மோதலை, அதன் விளைவான தந்தைமகன் பூசலை, ‘பாரிஸுக்குப் போ’ அளவுக்குச் சொன்ன இன்னொரு நாவல் தமிழில் இல்லை.
இவற்றில் அன்றைய உலகின் வேட்கைகளில் ஒன்றான கட்டின்றி அலைதல், பொறுப்பில்லாமலிருத்தல், தன் வாழ்வை தானே கண்டடைதல் என்னும் கனவை நேரடியாக எழுதிக்காட்டிய ஆக்கம் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். ஆகவேதான் அது என்னை அந்த வயதில் மாதக்கணக்கில் நிலைகொள்ளாமல் கொப்பளிக்கச் செய்தது.என்னை ஹென்றியாக உருவகித்துக்கொண்டேன். கண்கள்மேல் விழும் முடியை ஒதுக்காமல் தலையை தூக்கி பார்க்கும் ஹென்றி. அந்த மனிதனை மிகஅருகே பார்த்தேன். அவன் நான்தான்.
பின்னர் இந்நாவலை எண்பத்தொன்பதில் மீண்டும் வாசித்தேன். அப்போது எனக்கான இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கிக் கொண்டுவிட்டிருந்தேன். எண்பதுகளின் நவீன இலக்கியம் என்பது நவீனத்துவ அழகியலில் வேரூன்றியது.வடிவ ஒருமை அதன் மிக முக்கியமான அளவுகோல்.க.நா.சு திரும்பத்திரும்ப முன்வைத்தது கச்சிதமான வடிவம் என்னும் பார்வையை மட்டுமே. மிகையற்ற யதார்த்தச் சித்தரிப்பு, அணிகளற்ற சுருக்கமான மொழி, குறைத்துக்கூறி உணர்த்தும் கதையமைப்பு ஆகியவை அதன் நிபந்தனைகள். அன்றைய வாசிப்பில் என் மனதில் ஜெயகாந்தன் மிகவும் பின்னடைவுகொண்டார்.
ஹென்றி என்ற ஆளுமையை ஜெயகாந்தன் புனைகிறார், அவன் ஒரு யதார்த்தமல்ல கனவுதான் என நினைத்தேன். ‘கனவு’ என்ற சொல்லையே சுந்தர ராமசாமி எதிர்மறையாக பயன்படுத்தியிருந்த காலம். ‘யதார்த்தத்தின் மேல் கனவின் திரையை விரித்த கலைஞன்’ என்று அவர் தி.ஜானகிராமனை மதிப்பிடும்போது யுதார்த்தமே புனைவின் சாரம் என்றும் கனவு என்பது ஒருவகை பிசுக்கு என்றும் அவர் எண்ணுவது தெரியும். ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலின் கனவுதான் என்னை இளமையில் பெரிதும் கவர்ந்தது, அக்கனவையே அதன் முதன்மைக்குறைபாடாக கருதலானேன்
வடிவம் என்றவகையில் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஒரு நாவலாக ஆகவில்லை என்று தோன்றியது. நாவலுக்குரியவகையில் அது தான் எழுப்பிக்கொண்ட வினாக்களை விரித்துக்கொண்டு ஒரு விவாத வடிவமாக ஆகவில்லை. ஒரு முழுவாழ்க்கைச் சூழலை உருவாக்கவில்லை. அது அங்குமிங்கும் தொட்டுக்கொண்டு விரிந்த ஒரு குறுநாவலன்றி வேறல்ல என்று மதிப்பிட்டேன்.என் மனதில் அன்று பெருநாவல் என்னும் இலட்சியவடிவம் இருந்தது.
மொழிநடை மற்றும் கூறுமுறை என்றவகையில் வாசகனுக்கு எதையும் விட்டுவைக்காமல் அனைத்தையும் சொல்லிவிட்ட படைப்பு என்றும் ஜெயகாந்தனின் நாவல்களை நான் மதிப்பிட்டேன்.ஜெயகாந்தனின் கதைகள் அனைத்தைப்பற்றியும் இந்த விமர்சனங்கள் இருந்தன. இக்கருத்துக்களை நான் விரிவாக அல்லவென்றாலும் ஓரளவு எழுதியிருக்கிறேன்.
மீண்டும் ஜெயகாந்தனை கண்டடைந்தது தொண்ணூறுகளின் இறுதியில். அன்று நவீனத்துவத்தின் எல்லைகளைக் கண்முன் காணத்தொடங்கிவிட்டிருந்தேன். ஓர் எல்லையில் கோட்பாடுகளின் மூலம். இன்னொரு எல்லையில் என் சொந்தப் புனைவினூடாக. அமைப்புவாதம் பின்அமைப்புவாதம் பின்நவீனத்துவம் சார்ந்த விவாதங்கள் தமிழில் உருவாயின. அவற்றை பின்னர் நித்யசைதன்ய யதியின் குருநிலையிலிருந்து விரிவாக அறிந்துகொண்டேன். டி.ஆர்.நாகராஜ், சச்சிதானந்தன் போன்றவர்களிடம் விவாதித்தேன். அவற்றை பேட்டிகளாக வெளியிட்டேன். பின்நவீனத்துவம் சார்ந்து தமிழில் உருவான குழப்பங்களுக்கு ஆழமான தெளிவான விடைகளாக அமைந்தவை அந்தப் பேட்டிகள்
இணையாகவே சில புனைகதைகள் எனக்கு நவீனத்துவத்தின் எல்லைகளை காட்டின. ஒன்று, கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸின் நூறாண்டுகால தனிமை. தொண்ணூறுகளில் அதை வாசிக்காமல் கேரளத்தில் நடமாடமுடியாது என்ற அளவு புகழ்பெற்றிருந்தது. இன்னொன்று யுவான் ருல்போவின் பெட்ரோ பரோமா. விமர்சகர் எம்.கிருஷ்ணன் நாயரால் திரும்பத்திரும்ப முன்வைக்கப்பட்ட நாவல் அது.கூடவே போர்ஹெஸின் சிறுகதைகள். மலையாள எழுத்தாளர் சேது அவற்றுக்காக ஆவேசமாக வாதிட்டதுடன் அவற்றை முன்மாதிரியாகக்கொண்டு கதைகளும் எழுதிக்கொண்டிருந்தார்.
ஆனால் அதற்கு முன்னரே செவ்வியல் நாவல்களின் மாண்பை நவீனத்துவம் அடையவில்லை என்ற எண்ணம் எனக்கிருந்தது. நான் தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, அலெக்ஸி தல்ஸ்தோய், மக்ஸீம் கார்க்கி, ஷோலக்கோவ் போன்றவர்கள் எழுதிய ருஷ்யப்பெருநாவல்களை முன்னரே வாசித்திருந்தேன். தாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ், மேஜிக் மௌண்டெய்ன் ஆகியவற்றை தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வாசித்தேன். சுபமங்களாவில் தாமஸ் மன் பற்றி விரிவான ஒரு கட்டுரையும் எழுதினேன். ஜார்ஜ் எலியட், ஹெர்மன் மெல்வில், செர்வாண்டிஸ் ஆகியவர்களையும் வாசித்து விமர்சனக்குறிப்புகள் எழுதினேன்.
பெருநாவல்கள் மானுடப்பிரச்சினைகளை கையாள்கையில் நவீனத்துவநாவல்கள அவற்றை மிகச்சிறிய தனிமனிதச் சிக்கல்களாக ஆக்கிவிடுகின்றன என்னும் உணர்வு எனக்கு வலுவாக உருவாகத் தொடங்கியது.மனிதனின் அகச்சிக்கல்களைச் சொல்ல நவீனத்துவம் வலியுறுத்தும் வடிவஒருமை, தர்க்கபூர்வத்தன்மை, உணர்ச்சிகளை வெளிக்காட்டாத கூறுமுறை, அணிகளற்ற வெற்றுநடை ஆகியவை மிகப்பெரிய தடைகள் என்று தோன்றியது.
இந்நோக்கிலேயே நவீனத்துவத்திற்கு முந்தைய யதார்த்தவாதத்தின் பேரிலக்கியங்களான இந்திய நாவல்களை தொடர்ச்சியாக தமிழில் அறிமுகம் செய்து எழுதினேன். அக்னிநதி, நீலகண்டப்பறவையைத்தேடி, மண்ணும் மனிதரும், சதுரங்கக்குதிரை போன்றவற்றை முன்னுதாரண ஆக்கங்களாக முன்வைத்தேன். அவை தமிழில் முன்னரே வெளிவந்து பெரும்பாலும் கவனிக்கப்படாதவை. அவற்றைப்பற்றிய என் கட்டுரைகளே தமிழ்ச்சூழலின் முதல் எதிர்வினைகள். அவை அதற்குப்பின் பரவலாக வாசிக்கப்பட்டன, அவை பார்வைகளையே மாற்றியமைத்தன.
நவீனத்துவர்கள் செய்த பெரும்பிழை என்னவென்றால் அவர்களுக்கு என ஒரு மாறா வடிவஇலக்கணத்தை அமைத்துக்கொண்டு , பின்னர் அதற்குள் சொல்லத்தக்க வாழ்க்கையை மட்டுமே பேசுவதற்கு எடுத்துக்கொண்டதுதான்.ஒரு துளிக்குள் வாழ்க்கையைச் சித்தரிப்பது அவர்களின் அழகியல். ஆகவே ஒரு துளிக்குள் சிக்கும் வாழ்க்கையையே அவர்கள் சொல்லத் தலைப்பட்டனர்.
இந்தியச் சூழலின் மிகப்பெரிய அகநெருக்கடி ஆன்மிகம் சார்ந்தது. ஆன்மிகத்திற்கும் மதநெறிகளுக்குமான மோதல், அன்றாடத்திற்கும் தொன்மையான மெய்யறிதல்களுக்குமான மோதல் என நாம் உணரும் ஆன்மிகச் சிக்கல்கள் மிக ஆழமானவை. நம்மேல் அலையென வந்து மோதுபவை. நம்முடைய நவீன மேற்கத்திய கல்வியின் தர்க்கத்தால் ஒரு சித்தரை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஒரு துறவியின் கட்டற்ற தன்மையை வகுத்துக்கொள்ள முடியவில்லை.
நவீனத்துவம் வரலாற்றை பொருட்படுத்தவில்லை, அதன் மையம் தனிமனிதன் மட்டுமே. அதற்கு பண்பாட்டின் பரிணாமமும் ஒட்டுமொத்தச் சித்திரமும் முக்கியமல்ல. ஆகவே அது செவ்வியலை கருத்தில்கொள்ளவில்லை. அதற்கு புறவய ஆய்வில் நம்பிக்கை இல்லை. ஆகவே பிற அறிவுத்துறைகளுடன் எந்த உறவையும் கொள்ளவில்லை. அதன் ஆர்வம் மனிதனின் அகத்தை ஆராயும் உளவியலில் மட்டுமே குவிந்தது.தமிழ் நவீனத்துவ எழுத்தாளர்கள் எவருமே வரலாற்றை பயின்றவர்கள் அல்ல. இலக்கியத்திற்கு அப்பால் எந்த ஆர்வமும் உடையவர்கள் அல்ல.
ஆனால் தொண்ணூறுகளில் தமிழ்வாழ்க்கையை எதிர்கொள்ளநேர்ந்த எனக்கு வரலாறு முக்கியமானதாக இருந்தது. நான் வரலாற்றை, வரலாற்றெழுத்தின் வெவ்வேறு வழிகளை பயின்றேன்.டி.டி.கோசாம்பி குறித்த என் நீண்ட கட்டுரையை நான் 1988 ல் கல்குதிரைக்கு அளித்தபோது கோணங்கி திகைப்படைந்தார். அதை இலக்கியவாதி ஏன் எழுதவேண்டுமென அவருக்கு அன்று புரியவில்லை. டி.டி.கோசாம்பி பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல்கட்டுரை அது. அது பின்னர் சுபமங்களாவில் 1992ல் பிரசுரமாகியது.
தொண்ணூறுகளில் நிலைமை மாறத்தொடங்கியது. காலச்சுவடில் பி.கே.பாலகிருஷ்ணனின் கேரளவரலாற்றின் மீதான மாற்றுப்பார்வை கொண்ட நூலின் சுருக்கத்தை நான் பிரசுரித்தேன். நாட்டாரியல், மானுடவியல் போன்றவற்றுடன் இலக்கியத்துக்கு உள்ள உறவு துலங்கி வந்தது. பிறதுறைகளை கருத்தில்கொண்டு இலக்கியம் எழுதப்படவேண்டும் என்னும் எண்ணமே நவீனத்துவத்தை கடந்துசெல்வதாக அமைந்தது. செவ்வியல் நோக்கிய கூர்நோக்கு உருவாகியது.
நவீனத்துவத்திலிருந்து வெளியேறுவதென்பது இந்திய இலக்கியம் தன் சவால்களை சந்திப்பதற்கு இன்றியமையாதது என்று தோன்றியது. ஆனால் அதற்கு மேலையிலக்கியம் நவீனத்துவத்தில் இருந்து வெளியேறி உருவாக்கிக் கொண்ட பின்நவீனத்துவ எழுத்துமுறை முன்னுதாரணம் அல்ல. அவர்களின் வரலாற்று- பண்பாட்டுச் சிக்கல்கள் வேறுவகையானவை. அவர்கள் நவீனத்துவத்தின் இறுக்கமான புனைகதை வடிவை உடைத்து அதை ஒரு புதிர்விளையாட்டாக மாற்றிக்கொண்டனர். நவீனத்துவத்திற்குரிய செறிவான சரளமான நடை என்பதை மீறி சிக்கலான, விளையாட்டான, அணிகள் கொண்ட நடையை உருவாக்கிக் கொண்டனர். நவீனத்துவம் முன்வைத்த கறாரான தத்துவத்தன்மையை மறுத்து உள்ளீடின்மையையோ அல்லது உன்னதத்தையோ சென்றடையமுற்பட்டனர்.
இங்கே அவற்றை அப்படியே பின்பற்றலாகாது என்பது என் எண்ணமாக இருந்தது. இங்குள்ள சிக்கல் இன்னமும் வலுவாக நீடிக்கும் பண்பாட்டு மரபு, இன்னும்கூட எழுதப்படாத மாபெரும் வரலாற்றுப்பின்னணி, இன்னும் நிலைகொள்ளும் தொன்மங்கள். அவற்றை அறியவும் ஆராயவும் நான் கண்டடைந்த வழி விஷ்ணுபுரம் போன்ற இணையான மாற்றுவரலாற்றையும் தொன்மங்களையும் உருவாக்கிக் கொள்வது.அல்லது கொற்றவை, வெண்முரசு போல செவ்வியலாக்கங்களை திரும்ப எழுதுவது.
அது ஒரு முக்கியமான பின்நவீனத்துவ நகர்வு. அதற்கான மீபுனைவு [Metafiction] வடிவம் அல்லது கிளைபிரிந்து விரியும் வடிவற்ற வடிவம் ஏற்கனவே மரபில் இருந்தது. அதை புதியபுனைவு வடிவமாக மாற்றிக்கொள்ள முயன்றேன்.அது ஓர் இலக்கிய பணியாக இதுகாறும் நீடிக்கிறது. இம்முயற்சிகளை தொண்ணூறுகளிலேயெ தொடங்கினேன். நாவல் கோட்பாடு என்னும் நூல் அந்தச் சிந்தனைகளின் வெளிப்பாடு. 1997ல் விஷ்ணுபுரம் வெளிவந்தது. 1998ல் பின் தொடரும் நிழலின்குரல்.
அதையொட்டி சொல்புதிது தொடங்கிய போது நவீனத்துவச் சிந்தனைகளை கடப்பதே அதன் இலக்காக இருந்தது. அன்று தானும் நவீனத்துவச்சிந்தனைகளில் இருந்து வெளிவரும் திமிறலில் வேதசகாயகுமார் இருந்தார். அவரே முன்பு முன்வைத்த பல மதிப்பீடுகளிலிருந்து முன்னகர்ந்துகொண்டிருந்தார். குறிப்பாக அவர் பார்வையில் கு.ப.ரா, மௌனி, லா.ச.ரா போன்றவர்கள் செயற்கையாக மிகைப்படுத்தப்பட்டவர்கள் என்னும் சித்திரம் உருவாகி வந்தது. தி.ஜானகிராமன் நாவல்களை அவர் நிராகரித்தார். முன்பு அவர் கருத்தில் கொள்ளாத ஜெயகாந்தனையும், கு.அழகிரிசாமியையும் அணுகினார். அன்று தொடர்ந்து விவாதித்துக்கொண்டிருந்தோம்.
இந்த விவாதங்களின் வழியாக நவீனத்துவத்திற்கு அப்பால் என்னும் தேடலின் பகுதிகளாகவே சொல்புதிது செவ்விலக்கிய ஆய்வுகளையும் வரலாற்று ஆய்வுகளையும் வெளியிட்டது. ஆன்மிக, தத்துவ கட்டுரைகளையும் மொழியாக்கங்களையும் வெளியிட்டது. அன்றுவரை தமிழ் நவீன இலக்கியம் பொருட்டாகவே நினைக்காத அறிவியல்புனைவுகளுக்காக ஒரு மலர் வெளியிட்டது. தமிழிசை, நாட்டாரியல் பற்றிய கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
அந்த விவாதங்களின்போதுதான் ஜெயகாந்தனை மறுபடியும் வாசித்தேன். தொண்ணூற்றியொன்பதில். ஜெயகாந்தனை நவீனத்தமிழிலக்கியம் சரியாக எதிர்கொள்ளவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. நவீனத்துவத்தின் வடிவ இலக்கணத்தை வைத்து அவரை ஒருசாரார் நிராகரித்தனர். அவர் தொட்டுப்பேசிய அக்காலத்தின் மையச்சிக்கல்களுடன் எந்த உறவும் இல்லாமல் குடும்பம்- ஆண்பெண் உறவு சார்ந்த சிக்கல்களில் மட்டுமே உழன்ற நவீன இலக்கியவிமர்சகர்கள் மற்றும் எழுத்தாளர்களாலும் அவர் ஆக்கங்களை அணுகமுடியவில்லை. அவர் பேரிதழ்களில் எழுதியது அவரை வணிக எழுத்தாளராக முத்திரை குத்த எளிதாக இருந்தது
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை இவ்வாறு பத்தாண்டு இடைவெளியில் 1978 முதல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். 2020ல் நேற்று ஒரே இரவில் மீண்டும் வாசித்தேன். இந்த வாசிப்பு நான்காவது. 1999 ல் உருவான மதிப்பீடே ‘ஜெயகாந்தனின் முற்போக்கு அழகியல்’ என்னும் கட்டுரையில் உள்ளது.அது பெரிதும் மாறிவிடவில்லை. ஆனால் மேலதிகமான சில விமர்சனங்களும் சில கண்டடைதல்களும் இன்று உள்ளன
[மேலும்]