வெண்முரசு தொடங்குதல்
[நண்பர் சக்திவேல் நடமாடமுடியாத உடற்குறை கொண்டவர். இந்த தளத்தில் வாசகர்கடிதங்கள் எழுதிவந்தவர் ஒரு கருத்து தரப்பாக அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார். அவர் வெண்முரசு வாசிப்பதைப் பற்றி எழுதிய கடிதத்திற்கு (வெண்முரசு தொடங்குதல்) பதிலாக நண்பர் ஒருவர் அவர் எளிதாக வாசிக்கும்பொருட்டு ஒரு கிண்டில் வாங்கி அளிக்க விரும்புவதாக எழுதியிருந்தார். அந்தக் கிண்டிலை சக்திவேல் பெற்றுக்கொள்ளலாம் என்று நான் அவருக்கு எழுதியிருந்தேன். அதற்கு அவர் எழுதிய கடிதமும் என் பதிலும் இது]
அன்புள்ள ஜெ,
நேற்றிரவு தான் இக்கடிதம் கண்டேன். வெண்முரசு தொடங்குதல் என்ற தலைப்பில் தங்கள் தளத்தில் வெளியிட்ட என் கடிதத்தி்ற்கான எதிர்வினையாகவே இவ்வுதவி கரம் அமைந்துள்ளது என அறிகிறேன். உங்கள் நண்பர் பி அவர்களை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கமைக்கும் ஆளுமைகளுடான இணைய வழி சந்திப்பில் பார்த்துள்ளதாக நினைக்கிறேன். அவர் முகம் என்றொரு முகம் நினைவு வந்தது. ஆனால் நிச்சயமாக தெரியவில்லை.
வெண்முரசு தொடங்குதல் பதிவு பற்றி சிலவற்றை கூற எண்ணுகிறேன். முதலில் அப்பதிவை தளத்தில் கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளினேன். அடுத்த சில நிமிடங்களில் உங்கள் கையெழுத்திட்ட திசைதேர் வெள்ளம் நாவலும் வீடு வந்ததை ஆசீர்வாதமென்றெண்ணி மகிழ்ந்தேன். ஆனால் இன்னொரு ஐயம் உடன் எழுந்தது. நான் இதற்கு தகுதியானவன் தானா என்று. என் படத்தை பலரறியும் அளவுக்கு நான் தகுதியுடையவனா என்று.
இதற்கு முன் வானதி, வல்லபி இணையர் குறித்து உங்கள் தளத்தில் எழுதியுள்ளீர்கள். அவர்கள் உண்மையில் மகத்தான ஒன்றை செய்தவர்கள், சாதித்தவர்கள். நீங்கள் தமிழ் உள்ளவரை வரலாற்றில் இடம் அமைந்தவர். உங்கள் கையால் எழுதப்படுவது வரலாற்றின் பல்லாயிரம் பக்கங்களுள் நிலை நின்றுவிடுகிறது. அப்படியிருக்க, எனக்கு கிடைத்த பெருவாழ்த்தில் ஒன்று இது. ஏதேனும் சாதித்து அமர்தல் வேண்டும் என்ற ஊக்கத்தை பெறுகிறேன்.
இப்போது பி அவர்களின் கடிதத்திற்கு வருகிறேன். ஏற்கெனவே கிண்டில் வாங்க வேண்டும் என கூறிய போது அம்மா இப்போதைக்கு முடியாது என மறுத்து விட்டார். ஒரு கிண்டில் வாங்கிக் கொள்ளலாம் என்றாலும் அவ்வப்போது புத்தகங்களை வாங்க இயலாதவன் நான். அதுவும் குறிப்பாக நான் வாசிக்கும் வேகத்திற்கு. இதோ இந்த மாதம் வெண்முரசின் வண்ணக்கடலையும் நீலத்தையும் வாசித்துவிட்டேன். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பிரயாகையை தொடங்கி விடுவேன்.
நீலம் பற்றி கொஞ்சம் கூட எழுத முடியாது. இப்போதைக்கு எழுதினால் பித்து உளறலாகத் தான் இருக்கும். கடந்த மாதம் பதிவு செய்திருந்த திசைதேர் வெள்ளத்தின் செம்பதிப்பிற்கே நான்கைந்து மாதத்திற்கு எப்புத்தகமும் கேட்க மாட்டேன் என சொல்லி தான் வாங்கினேன். இன்னொரு விஷயம் சமீபத்தில் பார்த்த தங்களின் ஜப்பான் கீற்றோவியம் மற்றும் அரசியல் குறித்த புத்தகத்தில் ஒன்று இலவசமாக இருந்தது கிண்டிலில். கிண்டில் இருந்தால் படிக்கலாம் என நினைத்திருந்தேன். அதேபோல் செல்வேந்திரனின் வாசிப்பின் பயன் (பெயர் சரியா) புத்தகமும். ஆக வெண்முரசு நாவல்களில் முதற்கனல் தவிர பிற கணிணியில் தான் வாசித்தேன். கணிணியில் வாசிப்பது எனக்கு பெரிதாக உவப்பில்லை எனினும் வெண்முரசை தொடர்ந்து வாசிக்க இதை தான் செய்ய வேண்டும்.
என் மனவோட்டங்களை கூறிவிட்டேன். முகவரியை இக்கடிதத்தின் இறுதியில் இணைக்கிறேன். முடிவு உங்களுடையதாகவே இருக்கட்டும். அவர் உங்கள் நாண்பர். மேலும் என் மனதில் அப்பாவுக்கு நிகரானவர் நீங்கள் எனக்கு. தாங்கள் அறிவீர்கள் எனக்குரியதை என்னும் நம்பிக்கையினால்.
அன்புடன்
சக்திவேல்
அன்புள்ள சக்திவேல்
இந்தத் தளத்தில் சிலருடைய படங்கள் மீண்டும் மீண்டும் வருவதை பார்த்திருப்பீர்கள். நாஞ்சில்நாடன் போன்ற மூத்த பெரும்படைப்பாளிகள், சுந்தர ராமசாமி போன்ற வரலாற்றுமனிதர்களின் படங்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிரசுரமாகும். கூடவே ம.நவீன், விஷால்ராஜா, அனோஜன் பாலகிருஷ்ணன், சுரேஷ்பிரதீப், சுனீல்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களின் படங்கள். அவர்களின் படம் இல்லாமல் ஒரு கட்டுரைகூட பிரசுரமாகாது.
ஏனென்றால் எழுத்தாளனின் முகம், உருவம் முக்கியமானது என்பது என் எண்ணம். அவனுடன் வாசகர்கள் உரையாடுகிறார்கள். முகமிலி என்றால் ஒரு முகத்தை கற்பனைசெய்துகொள்கிறார்கள். ஒருவரின் எழுத்து அங்குமிங்குமாக சிதறித்தான் பிரசுரமாகும். அவருடைய முகமே அதை ஒருங்கிணைக்கிறது. ஒற்றைகுரலாக ஆக்குகிறது. தொடர்ச்சியாக அவருடன் உரையாடச் செய்கிறது. கடலூர் சீனு பெரும்பாலும் நூல்மதிப்புரைகள், பயணக் குறிப்புகள், கடிதங்களே எழுதியிருக்கிறார். அவருடைய முகமே அவற்றை ஒரு கருத்துத் தரப்பாக ஆக்குகிறது. அவ்வண்ணம் இத்தளம் வழியாக அறிமுகமான முகங்கள் எத்தனை என எண்ணிப்பாருங்கள்.
வாசகர்களில் சில முகங்களை தொடர்ந்து பிரசுரிப்பதுண்டு. உதாரணம் முருகவேலன். அவர்களில் ஓர் எழுத்தாளர் இருக்கிறார் என்னும் உணர்வு, அவர்கள் அவ்வண்ணம் அறிமுகமாகவேண்டும் என்னும் எண்ணமே அதற்குக் காரணம். பலர் அவ்வண்ணம் தொடர்ச்சியாக எழுதாமலாவதும் உண்டு. அது அவர்களின் சவால், அவர்களின் சிக்கல். இங்கே நீங்கள் சமீபகாலமாக தொடர்ச்சியாக எழுதிவருகிறீர்கள். உங்கள் எழுத்துக்களில் ஒரு தொடர்ச்சி உள்ளது. உங்களை ஒரு வாசகராக அன்றி எழுத்தாளராக, ஒரு தரப்பாக காண்பதற்கான வாய்ப்பு உள்ளது என எனக்குப் படுகிறது. ஆகவே உங்கள் உருவம், முகம்.
தொடர்ச்சியாக எழுதுங்கள், அதற்குத் தேவையானதற்கு ஒருமடங்கு கூடுதலாக வாசியுங்கள். அதற்கு இந்த கிண்டில் கருவி மிக உதவியானது. எங்கும் எப்போதும் நூலுடன் திகழ முடியும். ஆனால் நான் சொன்னதுபோல அப்படியே தூங்கிவிடக்கூடாது. மிகத்தள்ளி வைத்தபின்னரே தூங்கவேண்டும். இல்லாவிட்டால் எப்படியோ உடல் அதன்மேல் பட்டு கெட்டுவிடும். அதேபோல பெட்டியில் இறுக்கமாக வைத்து பூட்டக்கூடாது. கைப்பையில் அதன்மேல் எடை வைக்கப்படக்கூடாது.
உங்கள் நிலையில் உடல் பற்றிய தயக்கம் அல்லது கழிவிரக்கம் ஏற்படலாம். எனக்கு பொதுவாகவே அறிவியக்கவாதிகள் ஏதேனும் கழிவிரக்கத்துடன் இருப்பது பிடிக்காது. மொத்த தமிழ்நாட்டின் பத்துகோடி மக்களில் மிஞ்சிப்போனால் ஐந்தாயிரம் பேருக்கு மட்டும் அளிக்கப்பட்ட கொடைக்கு உரிமையாளன் அறிவியக்கவாதி. அவன் சில்லறை கழிவிரக்கங்கள், தயக்கங்களுடன் இருப்பதில் சிறுமை ஒன்று உண்டு.தனக்கு கிடைத்திருப்பது என்ன என்று அறியாத நிலை அது.
உடலாலோ தோற்றத்தாலோ அல்ல நீங்கள் நிலைகொள்ளப்போவது. உங்கள் படைப்பால், தரப்பால்.எந்த நல்ல வாசகனும் உங்கள் உடலையோ தோற்றத்தையோ வாழ்க்கைச்சூழலையோ அந்தக் கருத்துக்களை மதிப்பிடுவதற்கு ஒரு காரணியாக கொள்ளப்போவதில்லை. நல்ல வாசகன் கரிசனமும் காட்டமாட்டான், ஏளனமும் கொள்ள மாட்டான்.
ஒரு மனிதன் தன் சொற்களால் மெல்ல மெல்ல ஒரு கருத்துருவின் படிமமாக ஆகிறான். க.நா.சு என்றால் ஒரு முகம் அல்ல, ஒரு மனிதர் அல்ல, அவர் வாழ்நாள் முழுக்க முன்வைத்த ஒரு கருத்துநிலை. நான் அதை ஏற்பேன், இன்னொருவர் எதிர்ப்பார். அதுதான் அவர். அப்படி தன்னை ஓரு கருத்தின் காட்சியுருவாக ஆக்கிக்கொள்வதையே அறிவியக்கவாதி செய்கிறான்.
யோசித்துப்பாருங்கள் நாம் கொண்டாடும் இனிய அழகிய முகங்களெல்லாம் உண்மையில் முதியவர்களின் முகங்கள் அல்லவா? நான் தல்ஸ்தோயை பஷீரை சுந்தர ராமசாமியை அசோகமித்திரனை படங்களில் நெடுநேரம் மிகுந்த மனக்கிளர்ச்சியுடன் பார்பேன். தேடித்தேடி அவர்களின் படங்க்களை என் கணிப்பொறியில் வைத்திருக்கிறேன். அவர்களின் முகமே அவர்களின் சிந்தனை. உங்கள் உருவம் எனக்கு நீங்கள் சொன்ன கருத்துக்களின் குவிமையம் மட்டுமே.
அவ்வண்ணம் ஆவதே ஓர் அறிவியக்கவாதியின் அறைகூவல். அதற்குரிய அனைத்தையும் செய்ய அவனுக்கு உரிமை உண்டு. அதற்குரிய தவத்தைச் செய்யும் பொறுப்பும் உண்டு. அறுதியாக அவன் எதை முன்வைத்தான், எந்த படைப்புவெற்றியை அடைந்தான் என்பதுதான் முக்கியம். அதன்பொருட்டு வாழவேண்டும் என்பதே அவனுக்கு முன்னாலுள்ள பாதை.
அந்த வாழ்க்கை இலக்கில் அவன் ஒருபோதும் ஒரு சலுகையையும் எதிர்பார்க்கலாகாது. ஒரு வகையான தயக்கத்தையும் அடையக்கூடாது. ஒருவகையிலும் உடலையோ சூழலையோ சாக்குபோக்காகச் சொல்லவும் கூடாது. ஏன் ஒன்றை செய்யமுடியவில்லை என்பதற்கு இலக்கியத்தில், அறிவியக்கத்தில் ஒரு மதிப்பும் இல்லை, செய்தவை என்ன என்பதே முக்கியம். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் மட்டுமே.
உங்களுக்கு உடல்பிரச்சினை இருக்குமென்றால் அதை கடக்க வழி கண்டுபிடியுங்கள். உடலால் சிந்தனையாளன் வாழவில்லை. உடல் அவனுடைய தன்னடையாளமும் அல்ல. உங்களுக்கு உங்கள் உடல் ஒரு தடையாக இருக்கலாம். இன்னொருவருக்கு குடும்பப்பொறுப்பு சிக்கலாக இருக்கலாம். இன்னொருவருக்கு சமூகச்சூழல் சிக்கலாக இருக்கலாம். அதைக் கடக்கும் வழியை கண்டடைந்து தன்னை அழுத்தமாக நிறுவிக்கொள்வதே அறிவியக்கவாதி செய்யவேண்டியது.
நீங்கள் வானதி -வல்லபி போன்றவர் அல்ல. நீங்கள் சேவை செய்யவேண்டியவர் அல்ல. நீங்கள் அறிவியக்கவாதி. உங்களை முழுமையாக நீங்கள் வெளிப்படுத்தினீர்கள் என்றால் அடுத்த இருபதாண்டுகளில் தமிழ்நாட்டின் அறிவியக்கம் கூர்ந்து கவனிக்கும் தரப்புகளில் ஒன்று நீங்கள். புனைவிலக்கியத்தில்கூட உங்கள் சாதனைகள் நிகழலாம்.
இதை ‘ஊக்குவிப்பதற்காக’ ‘கருணைகொண்டு’ சொல்லவில்லை. நான் அப்படிச் சொல்பவன் அல்ல. இங்கே வழக்கமாக காட்டப்படும் பெண், தலித், ஒடுக்கப்பட்டோர், உடல்குறைகொண்டோர் என்னும் எந்த சலுகையையும் அறிவுச்செயல்பாட்டில் எவருக்கும் நான் அளிப்பதில்லை. ஆகவே என்னை பெண்களுக்கு எதிரானவர் என்றும் உடற்குறைகொண்டவர்களை இழிவுசெய்பவன் என்றும் சொல்கிறார்கள். அந்த முத்திரைகளைப் பற்றி நான் கவலைப்படவுமில்லை. இதை உங்கள் தகுதியை, நீங்கள் செல்லத்தக்க தொலைவை உணர்ந்தபின்னரே எழுதுகிறேன்.
உங்களை நான் உரையாடத்தக்க ஒரு தரப்பாகவே பார்ப்பேன். உங்களை எதிர்க்கவேண்டியிருந்தால் மிச்சமில்லாமல் எதிர்ப்பேன். எந்த கரிசனமும் காட்ட மாட்டேன். உங்கள் புனைவிலக்கியம் அல்லது கருத்துநிலை ஆகியவற்றை ஆராயவேண்டும் என்றால் அதில் உங்கள் உடற்குறை ஒரு சமூகப்படிமமாக, தன்னுருவகமாக உங்களில் என்ன செல்வாக்கை செலுத்தியிருக்கிறது என்று எந்த தயக்கமும் இல்லாமல் ஆராய்வேன்.
அது ஓர் எழுத்தாளனின் சாதியப்புலத்தை, அவன் தனிவாழ்க்கையை கருத்தில்கொண்டு படைப்பையும் கருத்தையும் ஆராயும் கோணம்தான். நான் ஓர் எல்லைவரை வாழ்க்கைவரலாற்று இலக்கியவிமர்சனம் பயனுள்ளது என நினைப்பவன். அதில் எந்த ’கருணை’யும் காட்டுவதில்லை. அந்த அணுகுமுறையே உங்களிடமும் இருக்கும்.
ஆகவே வெற்றுத்தயக்கம், சில்லறை உளச்சிக்கல்கள் ஆகியவற்றிலிருந்து வெளியே வாருங்கள். ஒருவேளை இதுவே ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம். ஒரு ‘நார்மல்’ மனிதரிடம் இச்சமூகம் எதிர்பார்க்கும் லௌகீக வெற்றி போன்றவற்றை உங்கள் மேல் சுமைகளாக ஏற்றாமலிருக்கலாம். ஷோப்பனோவர், கிராம்ஷி போன்ற பலரை பார்க்கையில் அவர்களுக்கு இந்த விடுதலை இருந்ததை காணமுடிகிறது.
எண்ணிப்பாருங்கள், உங்களுக்கிருக்கும் எந்த குறைபாடும் இல்லாமல் எல்லாவகையான வசதிகளுடனும் இருப்பவர்கள் பல்லாயிரம்பேர் வெண்முரசு வாசிக்கும் நிலையில் இல்லை. ஆயிரம் கவனச்சிதறல்கள், சில்லறை வாழ்க்கை சவால்கள். தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் சாக்குபோக்குகள். என்னென்ன காரணங்கள் சொல்கிறார்கள் என கண்டால் திகைத்துவிடுவீர்கள். நீங்கள் அமர்ந்து படிக்கவும் அகத்தே வளர்ந்துபெருகவும் நேரமும் சூழலும் இருக்கிறது.
உங்கள் உலகம் நூல்களால், கருத்துக்களால், புனைவால் ஆனது. அதை ஏற்கவும் படைக்கவும் முயலுங்கள். முழுமையாக உங்களை ஈடுபடுத்துங்கள், வெல்லுங்கள்.
ஜெ
அன்னை மாயம்மா, அ.கா.பெருமாள்- கடிதங்கள்