[2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி வாசித்தளிக்கப்பட்ட விருது அறிவிக்கை]
இலக்கியம் என்பதே நுரைத்து வாழ்வின் இடைவெளிகளை எல்லாம் நிறைப்பது. வாழ்க்கையைவிட பொங்கி மேலெழுவது. ஆனால் செவ்வியலும் கற்பனாவாதமும் யதார்த்தவாதமும் பேரிலக்கியங்களை உருவாக்கியபின் அதன் தொடர்ச்சியாகவும் எதிர்வினையாகவும் குறைத்துச் சொல்லும் அழகியல் ஒன்று உருவாகியது. வாழ்க்கையின் சில தருணங்களை, சில உணர்வுகளை, சில பார்வைகளை மிகவிரைவாக மெல்லிய கோடுகளால் வரைந்தளிக்கும் அழகியல். தமிழில் அவ்வழகியலின் சிறந்த முகங்களில் ஒன்று சுரேஷ்குமார இந்திரஜித்
1982ல் அலையும் சிறகுகள் என்னும் சிறுகதைத் தொகுதி வழியாக அறிமுகமானவர். அவரவர் வழி, மறைந்து திரியும் கிழவன்,நானும் ஒருவன்,நடனமங்கை,நள்ளிரவில் சூரியன், இடப்பக்க மூக்குத்தி, மாபெரும் சூதாட்டம், பின்நவீத்துவ வாதியின் மனைவி, பின்னணிப் பாடகர் ஆகிய சிறுகதைத் தொகுதிகளும், அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்,கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
2010 ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டுவரும் விஷ்ணுபுரம் விருது 2020 ஆம் ஆண்டு சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு அவருடைய புனைவுலக பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது. ஈராயிரமாண்டு செவ்விலக்கிய- நவீன இலக்கியப் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழியில் முற்றிலும் புதிய ஓர் அழகியலை முன்வைத்து தொடர்ந்து இயங்கியமைக்காக இவ்விருதை அளிப்பதில் விஷ்ணுபுரம் அமைப்பு மகிழ்கிறது
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
கோவை