ராபர்ட் புரூஸ் ஃபூட்-சிரஞ்சீவியின் கல்லறை– ராஜமாணிக்கம்

வரலாற்றுக்கு முந்தைய வரலாற்றின் நுழைவாயில்

தமிழகத்தின் கற்காலங்கள்

இந்திய தொன்மங்களில் ஏழு சிரஞ்சீவிகளை மட்டும் குறிப்பிட்டு சொல்லியிருப்பார்கள், ஞானம், பக்தி, பழி, கொடை, வஞ்சம் என்று தங்களின் குணத்தால் அமரத்துவம் பெற்ற சிரஞ்சீவிகளை வெளிச்சமிட்டு காட்டியிருப்பார்கள். அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக நவீன சிரஞ்சீவிகளை தேடிச்சென்று பார்ப்பது ஒரு வரம் போல அமைகிறது. ஞானத்தால் அமரத்துவம் பெற்று இருக்கும் சிரஞ்சீவியான ராபர்ட் ப்ரூஸ் ஃபூட்டின் [Robert Bruce Foote] புனித அமைவிடத்தை தரிசித்து அவரிடம் ஆசி பெற வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.

இந்திய நிலவியல்,(Geology) தொல்உயிரினங்கள், பாறையியல் [Petrology), பாறைபடிமவியல்(Paleontology), வரலாற்றுக்கு முந்தைய புவியியல்( Pre historic Geography), தொல்லியல் (Archeology) ஆகியவற்றில் முன்னோடியும், முதன்மையானவருமான ராபர்ட் புரூஸ் ஃபூட், இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவில் அமரத்துவம் எய்தியவர். அவரின் உடல்மிச்சம் ஏற்காடு புனித டிரினிட்டி கல்லறைத்தோட்டத்தில் அவரின் மனைவி எலீசா மற்றும் அவரின் குழந்தைக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கிறது. தன் ஞானத்தால் யுகங்களை தாண்டி வழிபடப்படும் வியாசனை போல ஒவ்வொரு தொல்லியல், நிலவியல் , மாணவர்களும் ஆர்வலர்களும் ப்ரூஸ்ஃபூட்டை நினைத்து வணங்குகிறார்கள்.

ராபர்ட் புரூஸ் பூட் தமிழகத்தின் தொல்பழங்காலத்தை முதல்முதலாக ஆய்வுநோக்கில் கண்டறிந்து ஆவணப்படுத்தியவர். முதல்கற்காலம் இரண்டாம் கற்காலம் சார்ந்து அவர் செய்த ஆரம்பகட்ட ஆய்வுகளால்தான் தமிழகத்தின் வரலாற்றை நாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தொடங்க முற்பட்டோம். தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றின் அடித்தளத்தைச் செதுக்கிய சிற்பிகளில் ஒருவர் ராபர்ட் புரூஸ் ஃபூட்

ஆச்சுலியன் ஆயுதங்கள், சென்னை கற்கருவிகள்,( Madras stone tools ) தொல் மானிடரின் தடங்கள், (Hominid traces ) தக்காண நிலவியல், குகைகள், பெருங்கற்கால நாகரீகம்,(Megalithic) புதை படிமவியல், (Fossil study)ஆதி மானுடர்கள் ( Hominid), பூதி மேடுகள் (Ash mounds), என்று 1000க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை மானுட நாகரீகத்திற்கு அளித்த மகத்தான அறிஞர். தன் அறிதலால் அமரத்துவம் எய்தி இருக்கும் ராபர்ட் ப்ரூஸ் ஃபூட்டின் புனித அமைவிடத்தை வணங்கி மீள்வது ஒரு கனவுதிட்டம்.

நல்ல முன்பனி மிகு காலையில் ஏற்காட்டில் புனித டிரினிட்டி தேவாலயத்தின் கல்லறை தோட்டத்தை தேடி நானும் நண்பர்களும் சென்றோம். செல்லும் வழியில் 1902 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரிச்சர்ட்ஸன் & கூருடி நிறுவனத்தின் பழைய இரும்புப் பாலத்தை தாண்டி ஏற்காட்டின் ஏரியை அடைந்தோம். கூகுளீசரிடம் வழி கேட்டால் அங்கிருந்து 800 மீட்டரில் இருப்பதாக சொன்னார். அங்குள்ள மக்களுக்கு டிரினிட்டி சர்ச்சின் அமைவிடமோ, அதன் முக்கியத்துவமோ , தெரியவில்லை. அன்றாடங்களின் உந்து விசைக்கு உட்பட்டு முன்னகர்வதை பெருமையோடு செய்யும் மனிதர்களாகி விட்டோம்.

கூகுளில் இருந்த டிரினிட்டி சர்ச்சின் புகைப்படத்தை காட்டி வழி கேட்டோம். இன்னொரு பழமையான ஆங்கிலிக்கன் தேவாலயத்தை காட்டினார்கள். மான்போர்ட் பள்ளி வழியாக சென்று அந்த நூற்றாண்டு பழமையான தேவாலயத்தை பார்த்தோம், மெல்லிய தூவானம், கல்லால் வடிவமைக்கப்பட்ட தேவாலயம் மழையில் நனைந்து மெல்லிய ஒளியில் துலங்கி காட்சி அளித்தது. ஐரோப்பிய அருவ ஓவியத்தை காண்பது போல. ஆனால் அங்கு இருந்த கல்லறைத்தோட்டம் அல்ல நாங்கள் புகைப்படத்தில் பார்த்தது.

திரும்ப முச்சந்திக்கு வந்து சிலரிடம் விசாரித்தோம். ப்ரூஸ் ஃபூட்டின் கல்லறை தெரிந்திருக்கவில்லை, 150 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் டிரினிட்டி சர்ச் பற்றியும் தெரியவில்லை. பிறகு ஒரு ஆட்டோ ஓட்டுனர் இந்த புகைப்படத்தில் உள்ள சர்ச் மேலே தான் இருக்கிறது என்றார். 80 மீ தூரத்தில் மேலேறி பார்த்தோம். பெந்தகோஸ்தே போர்டு மிகப்பெரிதாக அச்சுறுத்தும் வகையில் பிரச்சாரம் செய்திருந்தது. அதை தாண்டி பார்த்த போது ஆங்கிலிகன் சர்ச் ஆளரவமற்று இருந்தது.

முன்புறம் அகல வாக்கில் விரிந்த கல்லறைத்தோட்டம், மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ராபர்ட் புரூஸ் ஃபூட்டின் உடன் பணியாற்றிய கிங் கின் கல்லறை. பதற்றத்தோடும் பரவசத்தோடும் ஒடி ஓடி ஒவ்வொரு கல்லறையின் பெயரையும் பார்த்துக்கொண்டிருந்தேன். உலகப்போரில் உயிர் நீத்தவர்கள், ஜியாலஜிகல் சர்வேயில் இருந்தவர்கள், லெப்டினெண்ட்கள், இன்னும் சில சாமானிய ஆன்மாக்களின் கல்லறைகளை பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்த போது நண்பர் கதிர் புகைப்படத்தில் இருந்த புரூஸ் ஃபூட்டின் கல்லறைக்கு பின்புறமிருந்த மரத்தை குறிவைத்து தேட துவங்கினார். 5 நிமிடத்தில் சென்ற நூற்றாண்டின் மகத்தான மனிதன் ஒரு எளிய கெல்டிக் பாணி கற் சிலுவையின் கீழ் இருப்பதை படித்தார்.

என் நாயகன், ராபர்ட் ப்ரூஸ் பூட் , சூப்ரிண்டெட் , ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா, பிறந்தது செல்த்னேஹேம், இறந்தது கல்கத்தாவில், மழை ஈரத்தில் பாசல்ட் வகைமை கல்லில் செதுக்கப்பட்ட கல்லறை. கீழே சின்ன குழிவு மலரால் அஞ்சலி செலுத்த, பூக்குவைகளை வைக்க, அதற்கு மேல் ஸ்டெப் டைப் புட்டிங் போன்ற அமைப்புடன் பீடம் அதன் முகப்பில் புரூஸ் ஃபூட்டின் பிறப்பு, இறப்பு பற்றிய செய்திகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. தொடர் மழையினால் பசும் பூஞ்சைகள் கல்லறையின் மீது பரவி வேறு பாதிப்புகள் வரா வண்ணம் பாதுகாக்கின்றன.

கற்சிலுவையில் புரூஸ் பூட்டின் கையொப்பம் என்று சொல்லும் வகையில் அடையாளம் வைக்கப்பட்டிருக்கிறது. 9 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த கெல்டிக் கிராஸ். அதில் இருக்கும் நிம்பஸ் அல்லது வட்டம், ஞானத்தை, அமரத்துவத்தை, குறிக்கும் ஒரு குறியீடாக கிரேக்க, மெசபடோமிய, இந்து, பெளத்த அக்கேடிய, கெல்டிக் தொன்மங்களில் பயன்படுத்தப்பட்ட குறியீடு. 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கெல்டிக் குறியீட்டு மறுமலர்ச்சிக்கு பிறகு ஆங்கிலீகன் சர்ச்கள் இவ்வகை குறியீடுகளை கல்லறை தோட்டங்களில் அனுமதித்தது.

புரூஸ் பூட்டின் கல்லறையில் இருக்கும் கற்சிலுவையில் இருக்கும் இண்டர் லேஸ் டிசைன்கள், கெல்டிக், ஐரிஷ், ஆங்கிலோ சாக்சன் சிலுவைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் குறியீடு. இவ்வகை குறியீடுகள், ஓவியங்களை இன்சுலார் வகை ஓவியங்கள் என சொல்கிறார்கள். அங்கே ப்ரூஸ் பூட்டிற்கு இயற்கை அன்னை தன் கரங்களால் பசுமை கொடுத்து தன் பசுங்கரங்களால் கூரை அமைத்து காக்கிறாள்.

ப்ரூஸ்பூட் வழிபட்ட சர்ச் இது, அமரத்துவம் எய்திய அந்த மகத்தான சிரஞ்சீவியை மனதால் வழிபட்டு பணிவோடு பிரார்த்தித்துக்கொண்டேன். அருகில் அவரின் மனைவி எலீசா, மெலீசா போர்ட்டின் கல்லறை, அதற்கு அடுத்து புரூஸ் ஃபூட்டின் குழந்தையின் கல்லறை என்று வரிசையாக இருக்கிறது. அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தி விட்டு என் மானசீக ஆசிரியரிடம் ஆசியும், அருளையும் வேண்டி பிரார்த்தித்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்- ராஜமாணிக்கம்

நாம் ஏன் அழகை உருவாக்க முடிவதில்லை?

தொல்பாறைகளுடன் உரையாடுதல்…


சங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு

கீழடி – நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும்

முந்தைய கட்டுரைவெண்முரசு தகவல்கள்
அடுத்த கட்டுரைபேய்ச்சி தடை – நவீனுடன் ஒரு பேட்டி