உடல், குற்றவுணர்வு, கலை
பெண்கள் எழுதுதல்
பெண்கள் எழுதுவது- கடிதம்
பெண்கள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
தொடர்ச்சியாக முகமற்றவர்களுக்கு நீங்கள் எழுதும் கடிதங்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். உலகுக்குப் புறம்காட்டல் என்ற தலைப்பே என்னை ஒருமாதிரி பதற்றத்திற்குள்ளாக்கியது. ஏனென்றால் நான் எப்போதுமே அப்படித்தான் இருந்துவருகிறேன். ஆனால் புறம்காட்டுவது என்பது என்னைப் பொறுத்தவரை ஒளிந்துகொள்வதாகவே இருந்துள்ளது. ஏனென்றால் என் பத்தாண்டுகால வாழ்க்கை என்பது குற்றவுணார்ச்சி நிறைந்தது. அதிலிருந்து என்னால் இதுவரைக்கும் மீளமுடியவில்லை. நான் இதை எழுதுவதேகூட ஒரு பெரிய கொந்தளிப்புடன் மட்டும்தான். இத்தனைபேர் நம்பி எழுதுகிறார்களே என்பதனால்தான்.
இதை எப்படி எழுதிமுடிப்பேன் என்றே எனக்கு தெரியவில்லை. ரொம்ப விரிவாக எழுத என்னால் முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. நான் இலக்கியவாசகியாக இருக்கவில்லை. நான் இலக்கியம் வாசித்தது அறம் கதைகள் வழியாகத்தான். அதுக்கு முன்னால் காலேஜில் படிக்கும்போது பாலகுமாரன் படித்தேன். கடிதமெல்லாம் எழுதினேன். என் கடிதம் அவருடைய புத்தகத்தில் வெளிவந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதெல்லாம் முன்பு. அதன்பிறகு நீண்டகாலம் எதுவுமே படிக்கமுடியவில்லை.
நான் வாழ்ந்தது ஒரு கஷ்டமான வாழ்க்கை. என் குடும்பப்பின்னணியிலே நான் வேலைக்குப்போயாகவேண்டிய கட்டாயம் இருந்தது. சொந்தமாக அப்பாவுக்கு இருந்த குடும்ப பென்சன் மட்டும்தான். அப்பா எனக்கு எட்டுவயதாக இருக்கும்போதே தவறிவிட்டார். அம்மாவும் நானும் தம்பியும்தான். எனக்கு டிகிரி முடித்ததும் வேலைகிடைத்தது. ஒரு அக்கவுண்ட் நிறுவனம். ஆடிட்டரிடம் வேலை பார்த்தேன். ரொம்ப கொஞ்சம்தான் சம்பளம். ஒரு கட்டத்தில் ஆடிட்டருடன் நெருக்கமாக இருக்கவேண்டியிருந்தது. அவர் என்னை கூட்டிப்போவார். போகாமலிருக்க முடியாது. வேலைபோய்விடும் என்ற பயம். அந்தபயமே தேவையில்லை என்று இன்றைக்கு தெரிகிறது. வேலைபோனால் வேறுவேலை கிடைத்திருக்கும். ரொம்ப கம்மி சம்பளம். ஆனால் அதுக்கே என்னை மிரட்டி பிளாக்மெயில் செய்தார்.
முதல்தடவை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் போனேன். பயந்துபோய் அழுதுகொண்டே போனேன். அப்போது சம்பளத்தில் நிறைய அட்வான்ஸ் வாங்கியிருந்தேன். அதன்பிறகு அடிப்பது திட்டுவது எல்லாம் உண்டு. விபச்சாரி போல நடத்தினார். நான் நான்கு வருடம் அவருடைய டார்ச்சரை ஆட்பட்டு அங்கே இருந்தேன். அதன்பின் பரீட்சை எழுதி ஜெயித்து அரசுவேலை கிடைத்தது. தப்பிவிட்டேன். ஆனால் அரசுவேலைக்கெல்லாம் போகக்கூடாது என்று மிரட்டினார். வீட்டுக்கு வந்து அம்மாவையெல்லாம் கேவலமாக பேசினார். ஆனால் நான் வேறு ஊருக்கு வேலை கிடைத்து போனதனால் தப்பிவிட்டேன். அங்கும் வந்து பிரச்சினை செய்தபோது ஆபீஸில் கம்ப்ளெயிண்ட் கொடுப்பேன் என்று சொன்னேன். அதன்பிறகு விட்டுவிட்டார். அங்கே வேலைசெய்யும் பலபெண்களின் நிலைமை இதுதான்.
ஆனால் அதன்பிறகு என்னால் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கமுடியவில்லை. அங்கே இருக்கும்போது எப்படியாவது வாழவேண்டும் என்றுதான் தோன்றியது. ஆகவே அரகண்ட் ஆக இருப்பேன். அம்மாவிடம் பயங்கரமாக கோபித்துக்கொள்வேன். நாலைந்துமுறை வீட்டைவிட்டு போய் காஞ்சீபுரம் வரை போய் வந்திருக்கிறேன். சுஜாதா ஒரு கதையில் காஞ்சிபுரம் போனால் மனசு சரியாகிவிடும் என்று எழுதியிருந்தார். அதனால்தான் என்று நினைக்கிறேன். எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டேன் என்று நினைத்துக்கொண்டேன். கதையெல்லாம் கூட எழுதினேன்.கல்கியில் ஒரு கதை வந்தது.
ஆனால் அப்போது ஒரு புத்தகத்தில் பாலகுமாரன் எழுதியிருந்ததை வாசித்தேன். அந்த உறவு என்னுடைய உடலைவிட்டு போகவே போகாது என்று தெரிந்தது. ஏனென்றால் அது உடலில் கலந்துவிட்டது. சாப்பிட்ட பொருட்கள் எல்லாம் உடலில் இருப்பதுபோலத்தான். தீமையான உறவு நம்முடைய ஆன்மிகமான சாராம்ஸத்தை அழித்து நம்முடன் இருக்கும். ஆகவேதான் தீயவர்களை தொடுவதை ஞானிகள் செய்வதில்லை என்று பாலகுமாரன் எழுதியிருந்தார். ராவணனின் காமப்பார்வை பட்ட காரணத்தால்தான் சீதை அக்னிப்ரவேஸம் செய்தாள் என்று ஒரு புராணப்பிரசங்கத்தில் கேட்டேன்.நான் அந்த கேவலமான வாழ்க்கையில் இருந்து வெளியே வரவேமுடியாது என்று தெரிந்தபின் என்னசெய்வது என்றே தெரியவில்லை.
body memory என்று ஒன்று உண்டு என்று ஆன்மிக நூல்களிலே இருந்தது. அதைப்போல ஒரு memory தண்ணீருக்கும் உண்டு என்று போட்டிருந்தது. அதை நினைக்கையில் எல்லாம் எனக்கு ஒரு படபடப்பு வந்துவிடும். கைகால்களில் குளிர் வந்துவிடும். இரவில் விழித்துக்கொண்டால் தூக்கமே இருக்காது. விடியவிடிய ஏதேதோ நினைப்புதான். நான் நினைப்பதில் 90 சதவீதமும் தற்கொலை பற்றித்தான். விதவிதமான தற்கொலைமுறைகளைப்பற்றி நினைப்பேன்.
நான் இந்தளவுக்கு நினைப்பதற்குக் காரணம் நானே அந்த உறவில் கொஞ்சம் இன்வால்வ் ஆனேன் என்பதனால்தான். ஏனென்றால் அப்படி கொஞ்சம் இன்வால்வ் ஆகாமல் என்னால் அதில் நீடிக்கமுடியாது. நான் மனைவி போல நினைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால் விபச்சாரியாக நினைத்துக்கொள்ளவேண்டும். இப்போது நினைத்தால் அந்த இன்வால்வ்மெண்ட் தான் எனக்கு கொந்தளிப்பாக இருக்கிறது. அதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை.
நான் உங்கள் நாவல்களில் இரவு படித்தேன். நூறு சிறுகதைகளும் படித்தேன். வெண்முரசு ஐமபது பக்கங்களுக்குமேல் படிக்க முடியவில்லை. படிப்பது மிகவும் கஷ்டமானது. ஒரு ரெண்டு பக்கங்களுக்குமேலே படித்தால் மனசு வேறே எங்காவது போய்விடும். நான் எந்த பூஜைகளிலும் கலந்துகொள்வதில்லை. தயக்கமாக இருக்கும். சினிமாக்கள் கூட பார்ப்பதில்லை. அரைமணிநேரம்தான் பார்ப்பேன். பாதிப்படம் அரைமணிநேரத்தோடு நின்றுவிடும். ஆனால் ஃபேஸ்புக்கில் இரவில் நிறையநெரம் இருப்பேன். துண்டுதுண்டாக படித்துக்கொண்டிருப்பேன்.
இந்த வாழ்க்கை ரொம்ப கீழானது என்று தெரிகிறது. inertia தான் என்னுடைய பிரச்சினை. டிப்ரஷனுக்கு ஏதாவது மருந்துகள் சாப்பிடலாம என்று யோசித்தேன். ஆனால் டிப்ரஷன் எனக்கு கிடையாது என்று எனக்குத்தெரியும். என்னுடைய பிரச்சினை கர்மாதான். அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் இலக்கியம் அதிலிருந்து மீட்பளிக்கும் என்று எழுதியிருந்தீர்கள். எனக்கு அப்படி எந்த மீட்பும் கண்ணுக்குத்தெரியவில்லை. இதை ஏன் எழுதியிருக்கிறேன் என்றும் தெரியவில்லை. நீளமாக எழுதுவது சிலசமயம் நான் செய்வதுதான். ஆகவேதான் எழுதியிருக்கிறேன்
எனக்கு இரண்டு ஆண்டுகளாக வேதாந்த சிந்தனையில் ஈடுபாடுண்டு. ஜே.கிருஷ்ணமூர்த்தி படித்தேன். அதன்பிறகு ரங்கநாதானந்தரின் உரைகளையும் படித்தேன். சில சொற்பொழிவுகளுக்கும் செல்வதுண்டு. வேதாந்தத்தில் இருந்து எதையாவது அறிந்துகொள்ளமுடியுமா என்று பார்க்கிறேன். எழுதவேண்டும் என்ற ஆசையும் உண்டு.
கே.
அன்புள்ள கே,
உங்கள் உளநிலையில் உள்ள குழப்பங்களும் சிக்கல்களும் உண்மையிலேயே பிரமிப்பை அளிக்கின்றன. ஆனால் நம் உள்ளங்கள் இப்படித்தான் வெவ்வேறு சரடுகள் ஒன்றுடனொன்று பின்னி பிரிக்கமுடியாதபடி கிடக்கின்றன என்றும் தெரிகிறது. எந்தப்புனைவும் உண்மையனுபவத்துக்கு நிகரல்ல என்று சொல்வது அவ்வப்போது புரிகிறது.
பொதுவாக ஒருவர் தன்னுடைய வாழ்க்கைக்கொள்கை, தன்னுடைய உளச்சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லும்போது அவர் தன் உள்ளம் என ஒன்றை முன்வைக்கிறார். அது ஒரு வகையான புனைவே ஒழிய எப்போதும் மாறாமலிருக்கும் ஓர் அமைப்பு அல்ல. அப்புனைவு நீங்கள் எனக்கு எழுதும்போது உருவாக்கிக் கொண்டது. ஆனால் முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டது அல்ல. தொடர்ச்சியாக இதைப்போல வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்காக புனைவு செய்துகொண்டே இருக்கிறீர்கள். சிறுசிறு வேறுபாடுகளுடன் இப்புனைவு ஏறத்தாழ ஒன்றே. அது உங்களுக்கு தேவைப்படுகிறது.
இப்புனைவை உருவாக்க உங்களுக்குத் தேவையானவற்றை துளித்துளியாக பலகாலமாகச் சேர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். பல்லாயிரம் துளிகள். அவற்றையெல்லாம் ஒன்றோடொன்றாகப் பொறுக்கி அடுக்கி, ஊற்றுமுகம் கண்டு ஆராய்வது எவருக்கும் இயல்வது அல்ல. அப்படிச் செய்தால் உடனே நீங்கள் இன்னொன்றை சேர்த்துக்கொள்வீர்கள். அது அப்படியே சென்றுகொண்டே இருக்கும். ஆகவே இந்த உளநிலையை மட்டும் பார்க்கிறேன். எனக்கு என்ன தோன்றுகிறது என்று சொல்கிறேன். புதிதாக ஒன்றுமில்லை, நான் எப்போதுமே சொல்லிவருவனதான்.
இங்கே எப்போதுமுள்ள ஒரு வழக்கம், ஆசாரவாதத்திற்கு வேதாந்த விளக்கம் அளிப்பது. அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பே அற்ற இரண்டு வழிகள். நாமறிந்த வரலாற்றுக்காலம் முதலே அவை வெவ்வேறாகவே இருந்துள்ளன. ஆசாரவாதிகளின் நோக்கில் மெய்யான வேதாந்திகள் அனாச்சாரவாதிகளும் பைத்தியங்களுமாகவே இருந்துள்ளனர். ஆனால் பின்னர் அவர்களின் ஆசாரமதம் அவர்களை உள்ளிழுத்துக்கொள்ளும்போது அவர்களும் ஒருவகையான ஆசாரவாதிகள்தான் என்றோ, அல்லது ஆசாரத்தை கடந்துசெல்லும் ‘உரிமை’ உள்ள ஞானிகள் என்றோ விளக்கிக்கொள்வார்கள்.
ஆசாரவாதம் உடல்சார்ந்தது, உலகுசார்ந்தது, அன்றாடத்தன்மை கொண்டது, நெறிகளாலானது, சீரான வாழ்க்கையை மட்டுமே முன்வைப்பது. அது ஒருவழி, அது தேவையானவர்களுக்கு உதவலாம். உதவுவதைக் காண்கிறேன். அது தூலமானது, உறுதியானது. எளிய, உறுதியற்ற மனிதர்களுக்கு பிடிமானமாக அமைவது. அறிவின் அறைகூவலை ஏற்க எல்லாராலும் இயலாது. ஆகவே நான் ஆசாரவாதங்களை மூர்க்கமாக மறுப்பவன் அல்ல. அது என் வழி அல்ல, எனக்கு அதனுடன் தொடர்பில்லை, அது வேதாந்தத்தின் வழியும் அல்ல; அவ்வளவுதான்
ஆசாரவாதத்தினுள் ஆலயவழிபாடு, தாந்த்ரீகமரபு, வைதிகமரபு என பல உள்ளோட்டங்கள் உண்டு. அது எதற்கும் மரபு தேடும், மரபை அப்படியே கடைப்பிடிக்க முயலும். மரபை கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் மரபே உயர்ந்தது என்று நம்பிக்கொண்டிருக்கும். எதற்கும் முன்னோர்சொற்களும் நூல்மேற்கோளும் தேடும். அவற்றுக்கு விளக்கமும் தொன்மையிலிருந்தே வரவேண்டுமென நினைக்கும். எல்லாவகையான புதிய சிந்தனைகளுக்கும் எதிரானதாக திகழும்
வேதாந்த மரபும் ஆசார மரபும் ஒன்றே என்றும், ஆசாரமில்லாவிட்டால் வேதாந்த மரபுக்கு பொருளில்லை என்றும், ஆகவே தூயவேதாந்தம் போன்றவற்றுக்கு வேரில்லை என்றும் ஆசாரவாதிகள் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அடிப்படையில் வேதாந்த மரபு முற்றிலும் வேறு
வேதாந்த மரபு ஆத்மாவை மட்டுமே பொருட்படுத்துவது. ஆத்மாவின் வெளிப்பாட்டுநிலைகளான ஜாக்ரத், ஸ்வப்ன, சுஷுப்தி, துரியம் ஆகிய நான்கு நிலைகளில் ஜாக்ரத் என்னும் தன்னுணர்வு நிலையை முதல்தளமாக மட்டுமே பார்ப்பது. அன்னம், பிராணன், மனம், விக்ஞானம் ,ஆனந்தம் என்னும் ஐவகை இருப்புநிலைகளில் அன்னத்தை அதாவது உடலை ஓர் ஊர்தி என்று மட்டுமே பார்ப்பது. அறிந்து அறிந்து அறிவைக்கடத்தலே அதன் வழி. தூயஅறிவே அதன் இலக்கு. அதற்கு ஆசாரங்கள் எவ்வகையிலும் வழிகாட்டாது என்பதே எந்த வேதாந்தியும் சொல்லும் தரிசனமாக இருக்கும்
இந்தியாவில் எல்லாமே காலப்போக்கில் ஆசாரமாக ஆகும். வேதாந்தமும் ஒருவகை ஆசாரமாக ஆகி, வேதாந்தத்துக்கான பாரம்பரிய மடங்கள் உருவாகி, அங்கே ஆசாரமே வேதாந்தமாக முன்வைக்கப்படுகிறது. அது எப்படியோ நடந்துகொண்டு போகட்டும். ஆனால் அங்கிருந்து சிலர் கிளம்பி தங்களை வேதாந்திகளாக எண்ணிக்கொண்டு ஒவ்வொரு வேதாந்தக் கருத்தையும் ஆசாரவாதத்திற்குள் இழுத்துச் செல்கிறார்கள். அதிலொன்றே நீங்கள் கேட்டது
இந்த ‘உடல்நினைவு’ ‘நீரின் நினைவு’ என்பதெல்லாம் அபத்தமான போலிஅறிவியல் கொள்கைகள். உடலை மட்டுமே முன்வைக்கும் ஆசாரவாதத்தை வேதாந்தமாக காட்டுவதற்கான பசப்புகள். கடைசியில் என்ன சாப்பிடவேண்டும், எவருக்கு பிறவித்தகுதி உண்டு, எவரைத் தொடவேண்டும் என்பதில் போய் நிற்கும். விவேகானந்தர் சொன்னதுபோல என்ன சாப்பிடவேண்டும், எப்படிச் சாப்பிடவேண்டும் என்று மட்டும் ஈராயிரம் வருடங்களாக விவாதித்துவந்த ஒரு மரபின் நவீனப்பாவனைக்குரல் இது.
நீங்கள் ஆசாரவாதி என்றால் அங்கே செல்லுங்கள். அதை முழுமையாக நம்பி அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை கேளுங்கள்.ஒருவேளை அவர்கள் பரிகாரச்சடங்குகள் கொண்டிருக்கலாம், நம்பிக்கையின் வழியான மீட்பின் பாதையைக் காட்டலாம். அவர்களின் போலிவிளக்கங்களை கொண்டுவந்து அறிவார்ந்த செயல்பாடுகளுடன் இணைக்கவேண்டியதில்லை. அது அடிப்படைகளையே குலைத்துவிடுகிறது. மேற்கொண்டு பேச ஒன்றுமே இல்லாமலாக்கிவிடுகிறது.
தூயஅறிவை நோக்கிச் செல்வதற்கான பாதையே வேதாந்தம். அதன் கோணத்தில் உடல் என்பது அறிவதற்கான ஊடகம். நல்லதை மட்டுமல்ல அல்லதையும். அறிந்தவற்றை தொடர்ச்சியான ஆய்வினூடாக, தெரிவினூடாக கூர்மைப்படுத்தியபடி முன்செல்வதே ஆன்மிகமான பயணம். அதற்கப்பால் உடலுக்கு எந்த இடமும் இல்லை. உடல்சார்ந்த ஆசாரங்கள், உடல் சார்ந்த ஒழுக்கநெறிகள் இரண்டுக்குமே அவ்வளவுதான் இடம்.
உடல் எவ்வகையிலும் அறிவை வடிவமைப்பதில்லை. எவ்வகையிலும் அகத்தை வகுப்பதுமில்லை. அது ஓர் ஊடகம், அதனூடாக அறிவு நிகழ்ந்ததுமே அது விலகிவிடுகிறது. இதொன்றும் புதிய உண்மையும் அல்ல. ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்விலிருந்தே தெரிந்ததுதான். உடல் கடந்துசென்றுகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் முற்றிலும் புதிதாக நுழைந்து, அறிந்து, முற்றிலும் உதிர்த்துவிட்டு முன்னகர்கிறது. உடலில் எதுவும் தங்குவதில்லை. பழிகள் தீமைகள் மட்டுமல்ல, நன்மைகளும் அறங்களும் கூட.
உண்மையில் உடலின் இந்த நிலையின்மையையே வேதாந்தம் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறது. ஒரு தவசீலர் மிக எளிதாக போகத்திலாழ்ந்து அனைத்தையும் இழந்துவிட முடியும்.பல ஆண்டு ஆசாரங்களை ஒரே நாளில் போக்கிவிடமுடியும்.
ஒருவர் நித்யாவிடம் இதைப்பற்றிக் கேட்டதை நினைவுகூர்கிறேன். அவருடைய ஒரே மகன் இறந்தான், கடுந்துயர்கொண்ட அவர் ஓர் ஆண்டிலேயே மீண்டு சாதாரணமாக ஆகிவிட்டார். அப்படி மறந்து சாதாரணமாக ஆனதன் குற்றவுணர்வு அவரை அவ்வப்போது படுத்தி எடுத்தது. அதை அவர் கேட்டார். “அவனை தொட்டதே எனக்கு இப்போது நினைவில் இல்லை. முகம்கூட சரியாக நினைவு வரவில்லை. என் மகனை அள்ளி எடுத்த கைகளும் நெஞ்சும் எப்படி அவனை மறந்தன?”
நித்யா சொன்னார், “உடல் ஓர் அறிவுக்கருவி மட்டுமே. உடல் உணர்வன எல்லாமே அறிவு ஆக மாறிக்கொண்டிருக்கின்றன. அறிவு நினைவாகவும் கல்வியாகவும் சேர்ந்துகொண்டே இருக்கிறது. தொலைபேசி வழியாக பேச்சு ஓடுகிறது. அதை வைத்தபின் அதில் எந்த பேச்சும் இல்லை. அதை எங்காவது பதிவுசெய்து வைத்திருந்தால் இருக்கும். உடல் அடுத்த அறிவை நோக்கிச் சென்றுவிட்டது”.
”வேதாந்தத்தின்படி அனைத்தும் அறிவு என்று மட்டுமே நிலைகொள்கின்றன. பொருள்வய அறிவு நினைவெனும் அறிவாக ஆகிவிட்டது. உன்னுள் இருக்கும் மகன் ஓர் அறிவுத்துளி மட்டும்தான். அது நல்ல அறிவோ கெட்ட அறிவோ அல்ல. பயனுறு அறிவோ பயனிலா அறிவோ அல்ல. அறிவுக்கு அப்படி ஒரு உலகியல் தன்மை இல்லை. நாம் அதை அப்படி அடையாளப்படுத்திக்கொள்கிறோம்”.
”அந்த அறிவுத்துளியை நீ எப்படி கையாள விரும்புகிறாய் என்பது உன்னுடைய பிரச்சினை. துயர நினைவாக நிறுத்திக்கொள்ளலாம், அல்லது கடந்தகாலமாக ஆக்கி முன்னகரலாம். மெய்யறிவுக்கான உதாரணமாகவும் அதைக் கொள்ளலாம். அது உன் தெரிவு.உடலுக்கு இதில் பங்கேதுமில்லை. அது உன்னை கட்டுப்படுத்துவதுமில்லை, உன்னை வழிநடத்துவதுமில்லை.” என்றார் நித்யா
வேதாந்த மரபு இதைத்தான் சொல்லும். பிரக்ஞை நிலையில் இருந்து அறிதல்கள் சுருங்கிச் செறிந்திருக்கும் கனவுநிலை[ ஸ்வப்னம்] அவை நுண்மைகளாக சுருங்கிய ஆழ்நிலை [சுஷுப்தி] வழியாக அவை இப்புடவியெனும் பெருக்கின் பகுதியாக இருக்கும் துரிய நிலைக்குச் செல்வதுதான் தன்னிலையின் பாதை.அதை முதல் பிரக்ஞைநிலையிலேயே பிடிவாதமாக தடுத்து வைக்க நீங்கள் விரும்புகிறீர்கள்.
இப்படி சொல்கிறேன்.அன்னம் என்னும் உடல் ஓர் அறிதல் கருவி. அதிலிருந்து உயிர்நிலைக்கு, உள்ளத்தின் தளத்திற்கு, அறிவின் தளத்திற்கு, மெய்நிலைக்கு செல்லவேண்டியதே மானுட இருப்பின் இயல்பான வழி. நீங்கள் உடல்நிலையிலேயே நிறுத்திக்கொள்ள முயல்கிறீர்கள்
ஏனென்றால் உங்களுக்கு குற்றவுணர்வு தேவைப்படுகிறது. அது நீங்கள் ரொம்ப நல்லவர் என்று நினைத்துக்கொள்ள உதவுகிறது. தப்புசெய்துவிட்டு வாழ்நாள் முழுக்க மருகிக்கொண்டிருப்பவர் என்னும் அடையாளத்தை விரும்புகிறீர்கள். ஆகவே இந்த புனைவை நிகழ்த்திக்கொள்கிறீர்கள்.
வேதாந்தத்தில் இது ஒரு கீழ்நிலை. ஒரு தேக்கநிலை. இதை உடைத்து மேலும் ஆழ்நிலைகளுக்குச் செல்வதே நீங்கள் செய்யவேண்டியது. உடல் அங்கே ஒரு இருப்பே அல்ல. உடலின் நன்று தீதுகள் பொருட்டல்ல. அறிதலினூடாக மேலும் நுண்ணிய அறிதல், இருத்தலின் ஆழ்ந்த படிநிலைகள்- அது மட்டுமே அங்கே உள்ளது. அங்கே செல்கிறீர்களா இல்லையா என்பதே கேள்வி. அதற்கு முயல்க என்று மட்டும்தான் வேதாந்தம் சொல்லும். வேதாந்தத்தின் வழி இதுவே, ‘உடல் அல்ல நான்’ என உணர்வது. ‘நா ஹன்யதே’ என்னும் கீதைச்சொல்லே அதன் முதல்வரி.
வேதாந்தம் சொல்வது ஒன்றே, மானுட இருப்பின் ஐந்து நிலைகளில் முதல்நான்கில் எங்கு நின்றாலும் அது தேக்கநிலையே. அன்னத்தில், பிராணனில், மனதில்,விக்ஞானத்தில். ஐந்தாம் நிலையான ஆனந்தம் நோக்கிச் சென்றுகொண்டே இருப்பதே உயிரின் கடமை. நித்யாவின் உவமை, நத்தை மிகமெல்லத்தான் சென்றுகொண்டிருக்கும். அதை தூக்கி எப்படி சுழற்றி போட்டாலும் அதே திசைநோக்கி மீண்டும் செல்லும். அதன் திசையை மட்டுமே அது அறியும்
நாம் எங்கு நின்றிருக்கிறோம் என்பது முக்கியமே அல்ல. சென்றடையவேண்டிய இடம் கைலாயம். கிளம்பி திருச்சியை தாண்டவில்லை. ஆனாலும் சென்றுகொண்டே இருந்தால் நாம் கைலாயப் பயணத்தில் இருக்கிறோம்.வேதாந்தம் அறைகூவுவது இதைத்தான்.
இருபத்தைந்துஆண்டுகளுக்கு முன்பு அறிவின் உச்சத்தில் நின்றுவிட்டவர்கூட தேங்கிப்போனவரே என்று சொல்லப்பட்டபோது நான் அடைந்த துணுக்குறலையும் ஒவ்வாமையையும் இன்று நினைவுகூர்கிறேன். இன்று அதை புரிந்துகொள்கிறேன். முழுமைக்கு முந்தைய எதுவும் தேக்கநிலையே.
நீங்கள் வேதாந்த ஆர்வம் உண்டு என்று சொன்னமையால் இவ்விளக்கம். இலக்கியவாதி என்றால் நீங்கள் உங்களை, உங்கள் உணர்வின் எல்லைகளையும் உள்ளத்தின் சிக்கல்களையும், அறிந்துகொள்ள ஒரு வாழ்க்கையனுபவத்தைப் பெற்றிருக்கிறீர்கள் அவ்வளவுதான். அதைக்கொண்டு மானுட அனுபவத்தை விளக்கிக்கொள்ள முயலவேண்டும். அதை மொழியினூடாக நிகழ்த்த முயலவேண்டும். அது மட்டுமே செய்யவேண்டியது.
அதை இலக்கியத்தில் உளவியலாய்வாக செய்ய முடியாது என்பதே இலக்கியத்தின் விதிகளில் ஒன்று. இலக்கியத்தில் ஒன்றை பார்க்கவேண்டும் என்றால் அதிலிருந்து விலகவேண்டும். ஆடியில் நம்மை முழுமையாக பார்க்க நாம் ஆடியை விட்டு விலகுவதுபோல. அந்த விலக்கம்தான் உணர்வலைகள் அற்ற முழுமைநோக்கை அளிக்கும்.
அந்த விலக்கம் பல காரணங்களால் வரும். காலம் ஓர் விலக்கத்தை அளிக்கும். அதைவிடச் சிறந்த விலக்கம் இலக்கியவடிவங்களால் அமைவது. தன் அனுபவத்தை வேறொருவரின் அனுபவமாக, வேறு களத்தில் எழுத்தாளர்கள் எழுதுவது அதனால்தான். எவ்வளவு விலக்கமோ அந்த அளவுக்குக் கூர்மை இயல்வதாகும்.
இப்போதுள்ள பிரச்சினை இதுவே. நீங்கள் உங்களை எப்படி புனைந்துகொள்ள விரும்புகிறீர்கள்? ‘நல்லவராகையால் குற்றவுணர்வுகொண்டு தவிப்பவர்’ என்றா, ‘தன்னை அறிந்து கடந்துசெல்லும் வேதாந்தி’ என்றா, ‘தன்னை முன்வைத்து மானுடத்தை அறிந்து எழுத முயலும் எழுத்தாளர்’ என்றா? முடிவெடுங்கள். அதைச் செய்யுங்கள்
சிறைப்பட்டுக் கிடக்க எவருக்கும் உரிமை இல்லை. அது முன்னகரும் வாய்ப்புகள் அனைத்தையும் அளித்த வல்லமைக்கு நாம் செய்யும் சிறுமை. முன்னகர்க.
ஜெ