அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் எழுதும் முதல் கடிதம். எப்படி இருக்கிறீர்கள்? எங்களூர்ப் பெண் அருண்மொழி எப்படி இருக்கிறார்கள்? அஜிதன் சூழலியல் படிப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள்.
இந்த கடிதம் நீளமாகப் போகுமென்று நினைக்கிறேன். உங்கள் நேரம் மிகவும் முக்கியமானது என்று தெரியும். மானசீகமாகப் பல நாட்களாக உங்களுடன், உங்கள் எழுத்துக்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். ஒரு கடிதம் எழுதினால்தான் என்ன என்று தோன்றியதால், இக்கடிதம். உங்கள் நேரத்திற்கு நன்றி.
உங்களுடைய அந்த விகடன் கட்டுரை மூலமாகவே நான் உங்களை அறிந்தேன். அந்த கட்டுரையை படித்து அந்த நாள் முழுதும், அதை மீண்டும் படித்தும், மற்றவர்களுக்கு படித்துக் காட்டியும் கழித்தோம். பள்ளித் தலைமையாசிரியையான என் அம்மாவும் (சிவாஜி ரசிகை), மின்வாரிய ஊழியரும், தொழிற்சங்க செயலருமான என் அப்பாவும் (எம்ஜிஆர் ரசிகர் என்று தோன்றும்) மிகவும் ரசித்தனர்! ஆனால், ஆராதனை அல்லது அவதூறு என்று பழகிவிட்ட நம் மக்கள் அதை எப்படி எடுத்துக்கொல்வார்களோ (தட்டச்சுப் பிழையல்ல!) என்ற பயமும் இருந்தது. அதுவே நிகழ்ந்தது வருத்தமென்றாலும், அந்த நிகழ்ச்சி நீங்கள் இணையத்தில் விஸ்வரூபம் எடுக்கக் காரணமாய் அமைந்ததால் மகிழ்ச்சியே!
சில அறிவியல் கட்டுரைகள், நேர்காணல்களை எழுதியுள்ளேன். என் பெயரிலேயே வெளியானவை மிகச்சில. அவற்றில் ஒன்றின் சுட்டி கீழே:
பீட்டர் கேரட்ஸன், அமெரிக்க விமானப்படையின் எதிர்காலத் தொழில்நுட்பத்தலைவர். விண்வெளிக்கற்கள் பூமிமேல் விழுந்து பேரழிவு ஏற்படும் நிலைவந்தால், உலகத்தைக் காக்க அமைக்கப்பட்ட அவசர அணித்தலைவர். அற்புதமான மனிதர்.
இந்தியாவின் எரிபொருள் பற்றாக்குறையை சரி செய்ய, தொலை நோக்குப்பார்வையுடன் அவருடன் சேர்ந்து எழுதிய, நாளிதழில் ஒரு முழுப்பக்கம் வரக்கூடிய கட்டுரை, வேறொரு அரசியல் காரணத்திற்காக, அடுத்த நாளே அவசரமாக 500 வார்த்தைகளில் நேர்காணலாக வெளியானது.
http://timesofindia.indiatimes.com/Interviews/Space-based-solar-power-could-solve-energy-crisis/articleshow/4759530.cms
பீட்டர் கேரட்ஸன் எழுதிய விண்கற்கள் Vs. பூமி கட்டுரையின் சுட்டி இங்கே
http://www.airpower.maxwell.af.mil/airchronicles/apj/apj08/fal08/garretson.html
என் மகளுக்கு பனி மனிதன் சொல்ல ஆரம்பித்துள்ளேன். அவள் கண்களில் தெரியும் ஆச்சர்ய அனுபவம், என்னை அந்த உலகுக்கே கொண்டு செல்கிறது! குழந்தைகளுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் ஒரு சிறந்த பரிசு அது.
உங்கள புத்தகங்களைப் படித்துவிட்டு பின்னர் கட்டுரைகளைக்கு வரலாம் என்றுதான் நினைத்தேன், உங்கள் கட்டுரைகள்தான் வழிவிடவில்லை! கடந்த 1 வருடத்தில் நீங்கள் எழுதி நான் இன்னும் படித்திராத கட்டுரைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். உங்கள் வலைத்தளத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது மகிழ்ச்சியுடன் செலவிட்டுக்கொண்டு இருக்கிறேன். புத்தகங்களையும் வரவழைத்துப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
உண்மையைச் சொல்பவனுக்கு ஊரெல்லாம் எதிரி என்ற நிலையில், எந்த ஒரு அமைப்பின்/கழகத்தின் சார்போ, ஆதரவோ இல்லாமல் முடிந்தவரையில் சரியென்று நினைப்பதை எழுதுவது இப்போது அபாயகரமான வேலையாகிவிட்டது. இன்றைய சூழலில் ஒரு தமிழ் எழுத்தாளனின் ஆகக்கூடிய உச்சம் நீங்கள் என்றே தோன்றுகிறது. நேர்மை, வரலாற்று நோக்கு, அனுபவம் செறிந்த இளம்பருவம், கற்பனை வளம், எழுத்து வசியம் இவை அனைத்தும் அற்புதமாக கூடிவந்திருக்கும் தமிழ் எழுத்தாளனின் இன்றைய உச்சம்.
எந்த அளவிற்கு உங்கள் எழுத்துக்களைப் பிடிக்க ஆரம்பித்து விட்டதென்றால், எனக்கு சுயம் இல்லையா, எதற்காக இவர் சொல்லுவதை எல்லாம் நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கேள்வி எழும் வரை! அதனால், இணையத்தில் உங்கள் மேல் வரும் முடிவற்ற அவதூறுகளை தினமும் ஆர்வத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன்! ஒரு நிலையில், உங்களையும், உங்கள் எழுத்துக்களையும் பொதுவாக எப்படி தூற்றுகிறார்கள் என்று தெரிந்துவிட்டது!. அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு அடிப்படை, காழ்ப்பும், முன்முடிவுகளும்தான் என்றே உணர்ந்தேன். (நீங்கள் ஒரு இந்து மத அடிப்படைவாதி, பிற மதங்களை வெறுப்பவர், இந்தியமக்களை அமைதிப்படுத்த தேசிவவாத்தை முன் வைக்கிறீர்கள், கம்யூனிசத்தை எதிப்பதால் பிற்போக்குவாதி, காந்தியை முன்வைப்பதால் காந்தியைப் பிடிக்காதவர்கள் (அவரு அம்பேத்கர திட்டினாருல்ல?) உங்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும், திரைப்படத்திற்கு வந்துவிட்டதால் நீர்த்து விட்டீர்கள்…)
இப்போதெல்லாம், உங்கள் மீது வீசப்படும் அவதூறுகள் மீது எந்த ஆர்வமும் இல்லை, ஏதாவது புதிதாகச்சொல்கிறார்களா என்று மட்டுமே பார்க்கிறேன். பெரும்பாலும் அப்படி எதுவும் காணக்கிடைப்பதில்லை. மாறாக, எப்போதுதான் நேர்மையாக விவாதிக்கக் கற்றுக்கொள்வோமோ என்று அயர்ச்சியாக இருக்கிறது. மெதுவாக மாறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
மிகச்சில விஷயங்களில் நான் உங்கள் கருத்துக்களிலிருந்து சற்றே வேறு படுவதாகத் தோன்றுகிறது. அதில் ஒன்று இங்கே:
இயற்கையுடன் மற்ற மிருகங்கள் ஒத்து வாழ, மனிதன் மட்டும் முரண்பட்டு நிற்கிறான் என்ற கருத்து.
மனிதன் இயற்கையை ஒரு இனம் புரியாத வெறியுடன் நுகர்ந்து அழித்துக்கொண்டிருப்பதாகவே எனக்கும் படுகிறது. இது வெறும் புலம்பலில்லை. கார்பன் காலடித்தடம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போதுதான் அதிகம். உள்ளூரில் பார்த்தால், சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை நாம் படுத்தும் பாட்டைக் கண்டால் தெரியும். நுட்பமான பல பறவைகளும், விலங்குகளும், பல நூற்றாண்டுகளாக கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வரும் பறவைகளுமாய் இயற்கை வனப்புடன் இருந்த இடம், இன்று சென்னை நகரின் பொறுப்பற்ற செயல்பாட்டாலும், நுகர்வு கலாச்சாரத்தாலும், குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படும் இடமாகிவிட்டது.
இந்த உலகமே என்னுடையது, நானே நுகர்ந்து அழிப்பேன் என்ற எண்ணம் அப்பட்டமான சுயநலமாகத்தெரிந்தாலும், ஒரு சந்தேகம்:
நேர்மையாக வாழும் விலங்குகளைப் படைத்த இதே இயற்கைதானே மனிதனுக்கு இவ்வளவு சுயநலமும் தீமையை விரும்பும் குணமும் கொடுத்திருக்கிறது? அவனும் இந்த விளங்க இயலா இயற்கையின் விளையாட்டினால்தானே உருவாக்கப்பட்டான்? மற்ற விலங்குகளை எல்லாம் தனக்கு அடிமையாக்கி தான் சரியென்று நினைப்பதையே எல்லாவற்றின் மீதும் திணிக்க முடிந்த வல்லமையை, இதே இயற்கைதானே மனிதனுக்குத் தந்திருக்கிறது? அப்படியானால், அவன் மட்டும் எப்படி இயற்கையின் விதிகளில் இருந்து முரண்படுகிறான் என்பது விளங்கவில்லை. தங்கள் கருத்தை அறிய ஆவல்.
உங்களின் நீயா நானா உரையாடல்:
உங்கள் எழுத்து பளபளக்கும் கூரிய தங்க வாள், நினைத்ததை கச்சிதமாக முடிக்கும் திறன் கொண்டது. ஆனால், நீங்கள் நல்ல பேச்சாளர் அல்ல என்று சொல்லிவந்திருக்கிறீர்கள். அதனால், நீங்கள் நேரில் வந்து பேசப்போகிறீர்கள் என்றதுமே, இது தேவையா என்று தோன்றியது. ஆனாலும், அந்த நிகழ்ச்சியில், ஒரு கண்ணியமான எழுத்தாளராக, நிதானமாக விவாதிப்பவராக, தெளிவாகப் பேசினீர்கள்! (நல்ல வேளை, உங்கள் பேச்சு, அட்டைக் கத்தி இல்லை, ஒரு இரும்பு வாள் என்று சொல்லலாம்)!
அறம் முதலிய கதைகளைப்பற்றி
அறம் சிறுகதையில் தொடங்கி, கோட்டிவரை ஒரு மகத்தான சிறுகதை காட்டாறில் வேகமாய், சுகமாய் இழுத்துச்செல்லப்படுவதாய் உணர்கிறேன். இக்கதைகள் முன் வைக்கும் மனிதம் உணர்ச்சிகரமாய் ஆயிரமாயிரம் மக்களை சென்றடைவதையும், அவர்கள் உங்களுக்கு எழுதும் கடிதங்களையும், அவர்கள் வாழ்வில் பார்த்துக்கொண்டிருக்கும் உன்னதமான மனிதர்களை கவனித்துக் கண்டுகொள்வதையும் பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சோற்றுக்கணக்கைப் படித்த பிறகு என் வாழ்வில் எனக்குச் சோறிட்ட பலரும் நினைவுக்கு வந்து இத்தனை நாள் இவர்களை எப்படி நினைக்காமல் இருந்தேன் என்று கூச வைத்தார்கள்.
வணங்கான் மேலேறி அமர்ந்த பின்பு, யானை அதிர்ந்து நடந்த போது, நானே யானை மேலமர்ந்து போவது போல், என் கால்கள் அதிர்ந்தன! என் சிறு வயதில், யானை மீதேறிய அந்த நிகழ்வு, 25 வருடங்களுக்குப் பிறகு துல்லியமாக நினைவுக்கு வந்தது!
ஒவ்வொரு கதையப் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஏராளமான சம்பவங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. உங்களை நேரில் பார்க்க வேண்டும், உங்களுடனும், உங்கள் நண்பர்களுடனும் மழைக்காடுகள், ஆறுகள் என்றெல்லாம் சுற்றித்திரிய வேண்டும் ஆசை. பார்க்கலாம், எனக்கு கொடுத்துவைத்திருக்கிறதா என்று!
நீங்கள் தனியார் பேருந்திலோ, அரசாங்க விரைவு பேருந்திலோ சென்னை செல்வதாக படிக்கும் போது கொஞ்சம் படபடப்பு எழுகிறது. (சென்னை மெட்ரோ தான் இன்று இந்தியாவின் #1 சாலைக்கொலை நகரம்- வருடத்திற்கு 1000 உயிரிழப்புகள்).
நீங்கள் பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து உங்கள் படைப்பூக்கம் இப்போது போல் நீண்டகாலம் கொழுந்துவிட்டெரிய வேண்டிக்கொள்கிறேன்.
PS: எழுதி முடித்தபின் படித்துப் பார்க்கும்போது, என்னைவிட வயதும், அனுபவமும் முதிர்ந்த யாரோ ஒருவர் எழுதியதைப் போல இருக்கிறது! ஒரு வேளை, இதைக் கண்டுதான் வசவு மருதப்பாட்டா ‘கிழடுதட்டிய’ என்று ஏமாந்துவிட்டாரோ?
இக்கடிதத்தை உங்கள் வலைத்தளத்தில் வெளியிட நினைத்தால் ‘என்னைப்பற்றி’ என்ற தலைப்பில் வரும் பத்திகளை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் நேரத்திற்கு மீண்டும் நன்றி!
அன்புடன்
ராஜன் சோமசுந்தரம்
அன்புள்ள ராஜன்
மன்னிக்கவும். நீங்கள் ஒருமாதம் முன்பு எழுதிய கடிதத்துக்கு இப்போது பதில் போடுகிறேன். அப்போது சிறுகதை மனநிலை. வேறெதையுமே எழுத மனம் குவியாத நிலை. அந்த வேகத்தில் நிறைய கடிதங்களைப் பின்னர் விரிவாக எழுதலாமென்று விட்டுவிட்டேன். இப்போதுதான் ஒவ்வொன்றாக பதில் எழுதுகிறேன்
நீங்கள் எழுதிய பிரியமான வரிகளுக்கு நன்றி. பொதுவாக ஒரு மர்ம வைத்திய நம்பிக்கை உண்டு. ஒரு உழிச்சில் அல்லது பிழிச்சிலுக்குப் பின் நோயாளிக்கு வலி வந்தாகவேண்டும். இல்லாவிட்டால் மர்மத்தை உழிச்சில் தீண்டவில்லை என்றுதான் பொருள். அதேபோலத்தான் எழுத்தும். இந்த அளவுக்காவது எதிர்வினை வரவில்லை என்றால் எழுதுவது எவரையும் தீண்டவில்லை என்றல்லவா பொருள்? அதைப்பற்றி நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. பொருட்படுத்தும்படியான எதிர்வினைகளுக்கு எப்போதுமே பதில் அளிக்கிறேன்.
சிலகருத்துக்கள் சீண்டும் தன்மை கொண்டவை என்பதை நான் அறிவேன். இசைவுத்தன்மை [கன்ஃபார்மிட்டி] கொண்ட கருத்துக்களைவிட இக்கருத்துக்களே சிந்தனைகளை தூண்டுகின்றன. ஏன் இப்படிச் சிந்திக்கக்கூடாது, வரலாற்றையும் வாழ்க்கையையும் இப்படி நோக்கக்கூடாது என்று அவை கேட்கின்றன. நம் சூழலில் பெரும்பாலானவர்கள் அப்படி எதையும் படித்தவர்களோ கேட்டவர்களோ அல்ல. நாலுபேருக்கு நல்லதாக படும் விஷயங்களை உரக்கச்சொல்லும் மேடைப்பேச்சுக்கே பழகியவர்கள். ஆகவே அத்தகைய கருத்துக்களால் புதிய சிந்தனைகளை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக கொந்தளிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஐநூறு பேர் என்றால் ஐந்து பேர் புதிதாகச் சிந்திக்கவும் கூடும். அவர்களுக்காகவே இக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன
ஜெ
தாயார் பாதம்
வணங்கான்
மத்துறு தயிர்