உடல், குற்றவுணர்வு, கலை

அன்புள்ள ஜெ,

இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். என்னை அறிமுகபடுத்திக் கொள்வதில் உள்ள குழப்பத்திலேயே இதை எழுதுகிறேன். இலக்கிய வாசிப்பும் எழுத்துமே இதுவரை நான் பயின்று வந்தது. என் துறையையும் அதைச் சார்ந்தே அமைத்துள்ளேன். ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியை துவங்கவுள்ளேன்.

ஆனால் அது என் தொழில் சார்ந்த அடையாளம் மட்டுமே. எழுதத் துவங்கிவிட்டேன். கருக்கள் என்னுள் எந்நேரம் அலைமோதுகின்றன, ஆனால் அவை என் சிறுவயது அனுபவங்களிலிருந்தே விரிகின்றன. அதைத் தாண்டிய ஒன்றை  என்னால் கண்டடைய முடிவதே இல்லை. ஆம் என் சிறுவயதில் நெருங்கிய உறவாலே பாலியல் சீண்டல்களுக்கு ஆட்பட்டிருக்கிறேன். 10 வயதில் அதை தேடிக்கொண்ட பாவனை ஏதும் என்னிடமிருந்ததா இல்லை அவையெல்லாம் எனை சுற்றி நடந்தேறினவா என்ற காரணம் புரியாத திகைப்பிலே இன்னும் இருக்கிறேன்.

அத்தகைய சூழலுக்குள் நான் விடப்பட்டிருந்தேன். பிறவிக் குணமாகவே என்னுள் இருந்து வந்துள்ள அதீத தயக்கம், எளிதில் புரியாமை மற்றும் எதையும் அறிந்து கொள்ள துணியும் ஆவல்களோடு அந்த நேரங்களில் என்னை விடுவித்து தப்பித்துக் கொள்ள வழியை அறிந்தும் நான் அந்நேரங்களில் அதை அங்கேயே கவனித்துக்கொண்டிருந்தேன் என்பதை இன்றும் உணர்கிறேன். அங்கு நான் நின்றிருந்த ஒவ்வொரு நொடியும் இன்று என்னுள் குற்ற உணர்வுகளாக எழுகின்றன. கடந்த ஏழு வருட வாசிபபால் என்னுள் இருந்த உளவியல் பிரச்சினைகளிலிருந்து மீண்டுள்ளேன்.

எழுத துவங்கிய பின்னரே அறிந்தேன்.  அந்த அனுபவத்தை தாண்டிய உலகை என்னால் கண்டடையவே முடிவதில்லை. அந்த அனுபவம் என்னை அதுவாக மட்டுமே வைக்கிறது. அதை எழுதியும் விட்டேன் டைரி குறிப்புகளாக, இருந்தும் என் சிந்தனை அந்த திரையை விலக்கி காண இயலாமல் தவிக்கிறது. உள்ளொன்றும் புறமொன்றுமாக எண்ணங்கள் அலைகழிக்க இப்பொழுது நான் எழுதுவதில் மனம் பொருந்தாமல் சுயவெறுப்பு மற்றும் தன்னிரக்க  எண்ணங்களால் தற்கொலை முடிவுகளுக்கும் தள்ளப்படுகிறேன். மீண்டும் இலக்கியத்தின் வழி மீள்கிறேன்.

என்னால் இந்த அனுபவத்தை தாண்டி வர இயலுமா? நான் அது மட்டும் தானா போன்ற கேள்விகள் வதைக்கின்றன. உங்களுடைய வார்த்தைகள் என் பிரச்சனையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.

அன்புடன்

அன்புள்ள அ,

எனக்கு வரும் வாசகியர் கடிதங்கள் பெரும்பாலானவற்றில் இந்த சிக்கல் சிறிய அளவிலேனும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வாசகி சொன்னார், அவர் விசாரித்தவரை நேர்ப்பாதி பெண்களுக்கு ஏதோ ஒருவகையில் இந்த அனுபவம் இருந்திருக்கிறது. நமது குடும்ப அமைப்பின் நெருக்கம், பெண்களைப்பற்றிய நமது பார்வை, பொதுவாகவே நெரிசலான நமது வாழ்க்கைமுறை என பல காரணங்கள் இருக்கலாம். அதைவிட கூடுதலாக தோன்றுவது, இது இத்தனை சாதாரணமாக இருப்பதனால் உயிர்களிடம் இருக்கும் அடிப்படையான வழக்கமாக இருக்கலாம்.

இதன் அறச்சிக்கல்கள், ஒழுக்கச் சிக்கல்கள் எனக்கு தெரிகிறது. இது மூத்த ஆண்களால் செய்யப்படும் குற்றம் என்பதும் தெரிகிறது. ஆனால் அக்குற்றத்தை கண்டிக்கும் போக்கில் இதை ஒரு மாபெரும் பிரச்சினையாக சமூகத்தில் ஊதிப்பெருக்குகிறோமோ, அது பெண்களின் கோணத்தில் அவர்களை சிறுமைப்படுத்துவதாகவும் சிறைப்படுத்துவதாகவும் ஆகிவிடுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பல பெண்கள் அதைப்பற்றி எழுதும்போது இருக்கும் உணர்வுநிலைகளைச் சார்ந்து இதைச் சொல்கிறேன். அசட்டுத்தனமான ஒரு சின்ன விஷயத்தை ஏதோ பெரிய அறச்சிக்கல்போல, ஆன்மிக இழப்பு போல பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

*

எனக்கு உணவை சுவைத்து உண்பவர்களை பிடிக்கும். அது ஒரு ரசனை. இப்புவியிலுள்ள பல ரசனைகளில் முக்கியமானது. ஆனால் நாச்சுவை என்பது அடிப்படையானது. அதில் கற்பனைக்கு இடமே இல்லை. ஓர் ஓவியத்தை ரசிப்பது, இசைகேட்பது, இலக்கியம் படிப்பது போன்றவை மேலான ரசனை கொண்டவை. இயற்கையின் மடியில் தன்னை அளித்து அமர்ந்திருப்பது அதைவிடவும் ஒரு படி மேலானது. ஏன் இந்த வேறுபாடு?

ஒருவர் நாச்சுவை ரசிகர் என்றால் நல்லது என்று தோன்றுகிறது. ஆனால் அதையே ஒருவர் பேசிக்கொண்டிருந்தால் எரிச்சல் வருகிறது. அவர் பண்படாத ஆள் என எண்ண தோன்றுகிறது. சிலர்  ‘அந்த ஓட்டலில் மட்டன் நன்றாக இருக்கும், இந்த ஒட்டலில் அடைஅவியல் அப்படியே தூக்கும்’ என்றே பேசிக்கொண்டிருப்பார்கள். என் உள்ளம் மிக எளிதாக அவர்களிடமிருந்து விலகிவிடும். சொல்லப்போனால் நட்புகூட இல்லாமலாகிவிடும்.

அவர்களிடம் என்னால் அணுக்கமாக பழகமுடியவில்லை என்பதை கண்டு நான் அதை ஆராய்ந்திருக்கிறேன். அலுவலகச்சூழலில் பலசமயம் அப்படிப்பட்டவர்களிடம் நெருக்கமாக இருக்கவேண்டியிருக்கும். ஆனால் கூடுமானவரை அவர்களிடமிருந்து விலக அகத்தே முயன்றுகொண்டிருப்பேன். ஏனென்றால் அவர்கள் உணர்வுசார்ந்து, ஆன்மிகமாக என்னை கீழே இழுக்கிறார்கள். என்னை வீழ்த்துகிறார்கள். எனக்கு ஏற்படும் இழப்பை என்னால் தெளிவாகவே உணர முடிகிறது. எடைமிக்க ஒரு பொருளை தூக்கிக்கொண்டு நடப்பதுபோல கடினமாக இருக்கிறது அவர்களுடனான உறவு.

காரணம் நாச்சுவை என்பது உடல்சார்ந்தது. உடல் என்பது மானுட இருப்பின் அடிநிலை. அதிலிருந்து மேலெழுந்தே மானுடனின் பிறநிலைகள் அமைந்துள்ளன. நான் சொல்வது நமது தொன்மையான யோகமரபில் நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வந்ததுதான். நேரடியாக குருவிடமிருந்து பல மெய்யுரைகளையும் நான் கேட்கநேர்ந்திருக்கிறது. இந்தக்கோணத்தை சற்று விரிவாக நவீன நோக்கில் மு.தளையசிங்கம் எழுதியிருக்கிறார்.

பொதுவாக பஞ்சகோசம் என இது சொல்லப்படுகிறது. கோசம் என்றால் வட்டம். ஒருவகை இருப்பு. மானுடர் ஒரேசமயம் ஐந்து நிலைகளிலும் இருக்கிறார்கள். அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம். இதை எளிமையாக தமிழ்ப்படுத்தினால் உடல் சார் இருப்பு, உயிர்சார் இருப்பு, உளம்சார் இருப்பு, விழிப்புநிலை இருப்பு, மெய்நிலை இருப்பு என ஐந்து நிலைகள்.

பெரும்பாலான மனிதர்கள் முதன்மையாக உடல்சார் இருப்பு கொண்டவர்கள். ஆகவே உடலின்பங்களும் உடல்துன்பங்களும் மட்டுமே அவர்களுக்கு உண்டு. என்னிடம் ஒரு காவல்துறை அதிகாரி குற்றவாளிகளை அடிக்கவேண்டும் என்பதற்கு ஆதரவாக சொன்ன நியாயம் ஒன்று நினைவுக்கு வருகிறது. “சார் நானும் பாத்திட்டேன். உடல்வலி தவிர வேறே எந்த துன்பமும் அவங்களை போய் சேருறதில்லை. மிரட்டினா பயப்பட மாட்டாங்க. நினைச்சு வருத்தப்பட மாட்டாங்க. சுத்தமா கற்பனையே இல்லாதவங்களை எதுவுமே பண்ணமுடியாது. அவங்களை தண்டிக்கணும்னா உடலிலே மட்டும்தான் அந்த தண்டனை நடக்கணும்”

குழந்தைகள் உடலிருப்பு மட்டுமே கொண்டவர்கள். ஆகவே நாக்கு அத்தனை கூர்மையாக இருக்கிறது. பிற இருப்புகள் உருவாவது படிப்படியாகத்தான். எளிய மனிதர்கள் முதுமை அடைந்தால், உள்ளமும் சித்தமும் அப்பாலுள்ள நிலைகளும் ஆற்றலிழக்கையில் அவர்களிடம் மீண்டும் நாச்சுவை மட்டுமே எஞ்சியிருக்கிறது. ’கோபல்ல கிராமம்’ நாவலில் கோழியிறகால் காதுகுடையும் ஒரு கிழவர் பற்றி கி.ரா. எழுதியிருப்பார். உடலின் எளிய இன்பம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலை அது.

உடல் கள்ளமற்றது, அடிப்படையானது, அதுவே அனைத்துக்கும் ஊர்தி. ஆனால் உடல் என்பது இருப்பின் மிகக் கீழானநிலை மட்டுமே. உடல் அல்லாமல் ஆவதே ஒருவர் நுண்ணுணர்வு கொள்ளும் நிலை. அதுவே அழகுணர்வுகொள்வது, ஞானம் அடைவது, முழுமையை நோக்கிச் செல்வது.

ஆகவே எவரானாலும் எந்நிலையிலானாலும் உடல்சார்ந்து தன்னை வகுத்துக்கொள்பவர், உடல் சார்ந்தே சிந்தனை ஓடுபவர், உடலின் மகிழ்ச்சிகளையும் சிக்கல்களையும் பெரிதென நினைப்பவர் இருத்தலின் கீழ்ப்படிகளில் ஒன்றில் இருக்கிறார். அதிலிருந்து மேலெழுந்தாலன்றி அவருக்கு நுண்ணுணர்வு, ஞானம், மீட்பு ஏதுமில்லை.

இதை ஆன்மிகத்திலும் காணலாம். உடலையே எண்ணிக்கொண்டிருப்பவர்கள் மதத்தில் உண்டு. எதைச்சாப்பிடலாம் என்பதில் அது தொடங்கும். எப்படி குளிக்கவேண்டும், எங்கே படுக்கவேண்டும், எப்படி கும்பிடவேண்டும் என்றெல்லாம் நீண்டு கடைசியில் அது தீண்டாமை வரைச் செல்லும். உடல்சார்ந்த ஆசாரங்களுக்கு அப்பால் அவர்களுக்கு மதம் எதையுமே அளிப்பதில்லை. உடல்மட்டுமேயான மனிதர்கள் உண்டு, அவர்களுக்கு அந்த ஆசாரமன்றி வேறெதையும் அளிக்கவும் முடியாது. குற்றவாளிகளுக்கும் மனநோயாளிகளுக்கும் ‘டிரில்’ வழங்குவதுபோல. அது மட்டுமே அவர்களிடம் சென்றுசேரும்.

உடல் பற்றிய பார்வைகளில் இப்போது இரண்டுவகை எல்லைநிலைகள் தமிழ்ச்சூழலில் உள்ளன. ஒன்று, உடலின் தூய்மை, புனிதம் என தொடங்கி உடலே நீ என வகுக்கும் ஒரு பார்வை. இன்னொன்று, நேர் எதிராகச் சென்று உடலை கொண்டாடுவது, உடலை விடுதலை செய்வது, உடலரசியல் என்றெல்லாம் சொல்லி கடைசியில் உடலே நாம் என வகுக்கும் நவீனப்பார்வை. இரண்டுமே உடலையே நம் இருப்பு என வகுக்கின்றன.

ஆகவே இரண்டுமே மனிதர்களை உடலென்றே எண்ணிக்கொண்டிருக்கும் அசட்டு சிந்தனைகள். அவை நம்மை நமது இருப்புகளில் ஒன்றில் சிறையிடுபவை. நமது சாத்தியங்களை மறுப்பவை. எந்நிலையிலும் நாம் நமது உடலை முழுக்க துறப்பதில்லை, நமது அடுத்த நிலைகளை உடல்வழியாகவே அடையவும் முடியும், ஆகவே நம் உடலே நாம். ஆனால் நாம் நம் உடல் மட்டும் அல்ல. அந்த தன்னுணர்வே அறிவுச் செயல்பாட்டின் முதல்படி.

உடலின் எல்லா கூறுகளையும் ஒட்டுமொத்தமாகவே சொல்கிறேன். உடலின் அழகு, உடல்நலம், உடலின் வசதிகள் ஆகியவையும் கீழ்நிலை சார்ந்தவையே. அவற்றில் சிக்கியிருப்பதும் ஓர் இழிவே.உடலை அலங்கரித்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்து கொள்ளலாம். ஆனால் உடலின் அலங்காரத்தில் மூழ்கியிருப்பது கீழ்மை. நேற்று லிஃப்டில் ஒருவனுடன் வந்தேன். கண்ணாடியில் தன் கைமுண்டாக்களை பார்த்துக்கொண்டே இருந்தான். எண்பதுகிலோ மாமிசம் என்னுடன் வருவதுபோல உணர்ந்தேன்.

ரயிலில் ஓய்வுபெற்றவர்களைப் பார்ப்பேன். கால்நீட்டி அமர்ந்ததுமே சாப்பாடு, உணவுக்கட்டுப்பாடு, சீக்கு, மருந்துகள் என ஆரம்பித்து நான்குமணிநேரம் உரையாடிக்கொள்வார்கள். மிகச்சிறு மனிதர்கள், என் காலுக்கு கீழே எறும்புகளைப்போல பிலுபிலுவென ஊர்பவர்கள் என்றே உணர்வேன். வெறும் உடல்கள்.

உடலேயான நிலைக்கு அடுத்த நிலையில் சிலர் உண்டு. உயிரை ஓம்புபவர்கள். பெரும்பாலும் யோகா பயில்பவர்கள். எந்நேரமும் மூச்சிலேயே குறியாக இருப்பார்கள். அதுவும் ஒரு குறுகிய இருப்பே. ஆனால் ஒரு படி மேலானது.

உள்ளத்தில் இருந்தே நுண்ணிருப்பு தொடங்குகிறது. மானுடருக்கு மட்டுமே அது இயல்வது என ஓர் எண்ணம் உண்டு. அது உண்மை அல்ல. குரங்குகள், நாய்கள் கூட அந்நிலையில் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். உள்ளதால் இருத்தல், உள்ளமென்றே இருத்தல் அது. இருத்தலை மட்டுமல்ல இன்பங்களையும் துன்பங்களையும் உள்ளமென்றே உணர்தல்.

அதையும் யோகமரபில் இரண்டாகப் பிரிக்கிறார்கள். அசுத்தமனோமய கோசம் என்பது உள்ளம் உடல்சார்ந்த உணர்வுகளால் ஆனதாக இருப்பது. உடல்வய உள்ளம். சுத்த மனோமயகோசம் என்பது உடல்சார் உணர்வுகளுக்கு அப்பால் சென்று உள்ளம் தன் தூயநிலையில் உவகையையும் துயரையும் அடைவது. உடலில்லா உள்ளம். அங்கே உடல் குறியீடுகளாக மட்டுமே இருக்கும்.

மனோமய நிலைக்கு அப்பாலுள்ளன இருவகை ஆழ்ந்த இருப்புநிலைகள். ஞானத்தாலான விக்ஞானமய கோசம். மெய்மையால், நிறைவாலான ஆனந்தமயகோசம். உடலில் இருந்து மேலும் நுண்ணிய இருப்புகளை நோக்கிச் செல்வதே மீட்பின் நிறைவின் பாதை. இன்பத்தின் பாதை.

*

நீங்கள் கேட்டிருந்த கேள்விக்கு நான் சிக்கலான தத்துவப் பதிலை சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று படுகிறதா? ஆனால் யோசித்துப் பாருங்கள், நீங்கள் இருக்கும் நிலை என்ன? உடலில் சிக்கியிருக்கிறீர்கள். உடலின் நினைவுகளில் உங்களை நீங்களே கட்டிப்போட்டிருக்கிறீர்கள். உடலின்பங்களில் திளைப்பதும் சரி, உடலில் குற்றவுணர்வும் கசப்பும் அடைவதும் சரி ,ஒன்றின் இரண்டு பக்கங்கள்தான். நூறுகிலோ பாறாங்கல்லை தூக்கி தோளில் வைத்திருப்பது. அந்த எடையுடன் நீங்கள் எங்கே செல்லமுடியும்?

காமத்தைப் பற்றி எனக்கு பல கடிதங்கள் வருவதுண்டு. நான் சொல்லும் பதில் ஒன்றே, காமம் தேவை என்றால் அதில் ஈடுபடுங்கள். அதில் இரவுபகலாக மூழ்கிக்கிடப்பவனும் சரி, அதை கட்டுப்படுத்துகிறேன் என்று அதையே நினைத்துக்கொண்டிருப்பவனும் சரி, ஒன்றையே செய்கிறார்கள். உடலில் சிக்கியிருக்கிறார்கள். அதற்கு அடுத்த நிலையை பொருட்படுத்தாமலிருக்கிறார்கள். சாப்பிட்டதுமே பசியாறி அடுத்த வேலைக்குச் செல்வதுபோல காமத்தை கையாள முடிந்தால் அது ஒரு பேசுபொருளே அல்ல.

நேரடியாகவே ஒரு கேள்வி. பலமுறை வந்த கேள்வி. இப்போது இந்த வயதில் உங்களை ஓர் ஆர்வம் துரத்துகிறது, அறிந்துகொள்வதற்கான ஆர்வம். இதேபோன்று காமம் சார்ந்தது, ஒழுக்கமீறல் சார்ந்தது. என்ன செய்யவேண்டும்? அது அத்தனை முக்கியம் என்று பட்டால் சென்று, ஈடுபட்டு, அறிந்து, அறிந்ததை மட்டுமே எடுத்துக்கொண்டு கடந்துசெல்க. அவ்வளவுதான். அறிவியக்கச் செயல்பாட்டில் ஒழுக்கம் ஓர் அளவுகோல் அல்ல. ஒரு செயல்பாடு அறிவுச்செயல்பாடா என்பதே முக்கியம். அறிவென கடைசியில் எது எஞ்சுகிறது என்பதே சாராம்சமான கேள்வி.

அடிப்படையில் அறிவுச்செயல்பாடு, ஆன்மிகப் பயணம் இரண்டுமே ‘ஒழுக்கமற்றவை’தான். ஒழுக்கமீறலைச் [Immoral] சொல்லவில்லை, ஒழுக்கம்கடந்த நிலையைச் சொல்கிறேன். [Amoral]. ஒழுக்கம் என்பது ஒரு அன்றாடச் சமூக ஒழுங்கு மட்டுமே. அது காலந்தோறும் மாறும். உலகியலின் ஒரு தளம் அது. அறிவியக்கத்திற்கோ ஆன்மிகத்திற்கோ அது பேசுபொருளே அல்ல. நான் என் வரையில் இலக்கியத்திலும் அதை ஒரு முக்கியமான கருப்பொருளாக நினைக்கவில்லை. ஒழுக்கச்சிக்கல்களை பேசும் படைப்புகளை எழுதுவதில்லை, படிப்பதுமில்லை. அதில் எனக்கு அதிர்ச்சிகள் ஏதுமில்லை, பிரச்சினைகளும் ஏதுமில்லை.

அதற்கும் அப்பால் ஒன்று உண்டு, அதையே எழுதியிருக்கிறீர்கள். அறிவியக்கத்திற்கான ஆற்றலும் ஆன்மிகப்பயணத்திற்கான உள்விசையும் கொண்டவர்களுக்கு குழந்தைப்பருவம் முதலே இருக்கும் ஓர் இயல்பு என்பது அறிந்துகொள்வதற்கான வேட்கை. அதன்பொருட்டு அவர்கள் மீறிச்செல்வார்கள். பாதுகாப்பு எல்லைகளை மீறிச்செல்வார்கள். ஒழுக்க எல்லைகளை மீறிச் செல்வார்கள். தன் உடலை அதற்கு பயன்படுத்துவார்கள். அந்தப் பருவத்தில் பலரும் குற்றச்செயல்களிலும் ஈடுபட்டிருக்கக் கூடும். இளமையில் ஒரு கொலை செய்த துறவியை எனக்கு தெரியும்.

அந்த ஆர்வம் அளிக்கும் மீறல், அதன்பொருட்டுச் செய்த செயல்கள் அத்தனை அறிவியக்கவாதிகள், ஆன்மிகவாதிகளின் பின்புலத்திலும் இருக்கும். அதன்பொருட்டு குற்றவுணர்வு கொள்வது என்றால் அதைப்போல நகைப்புக்கிடமான ஒன்று வேறு இல்லை. அறிந்ததுமே கடந்து செல்லவேண்டிய ஒன்றுமட்டும்தான் அது.

எந்நிலையிலும் உடல்சார்ந்தது காமம். அதன்பொருட்டு குற்றவுணர்ச்சியை அடைவதுபோல அறிவுச்செயல்பாட்டுக்கும் ஆன்மிகத்திற்கும் தடையாக அமைவது வேறொன்றில்லை. அறிவார்ந்தும் ஆன்மிகமாகவும் முன்னகர விழைபவர் முற்றிலும், ஒரு துளிகூட இல்லாமல், உதறவேண்டியது அது. அதில் பாவ உணர்ச்சி,பழியுணர்ச்சி என ஏதுமில்லை.

பழியுணர்ச்சி பாவ உணர்ச்சி போன்றவையெல்லாம் குடும்பம் என்ற அமைப்பையும், மானுட உறவுகள் என்ற ஒப்பந்தங்களையும் பேணும்பொருட்டு உருவாக்கப்பட்ட உணர்வுகள். முற்றிலும் உலகியல் சார்ந்தவை. அந்த உலகியல் தளத்தில் அவற்றை பிறரை பாதிக்காமல் ஆற்றிவிட்டீர்கள் என்றால் அதன்பின் அரைக்கணம்கூட எண்ணத்தக்கவை அல்ல அவை.

குற்றவுணர்ச்சி எதன்பொருட்டென்றாலும் அறிவுச்செயல்பாட்டுக்கும் ஆன்மிக முன்னகர்வுக்கும் தடையே. மனஅழுத்தத்தைக் கொண்டுவருகிறது. மிகமிக அடிப்படையான உலகியலில் கட்டிப்போட்டுவிடுகிறது. மேற்கொண்டு செல்லவேண்டிய அத்தனை பாதைகளையும் பாறாங்கல்லால் மூடிவிடுகிறது. அதை தூக்கி அப்பாலிட்டு ஒருகணமும் திரும்பி நோக்காமல் முன்செல்பவர்களுக்கு மட்டுமே வளர்ச்சியும் முழுமையும் இயல்வது.

‘என் உடல் அல்ல நான்’ என்பதே ஓர் அறிவியக்கவாதி, ஓர் ஆன்மசாதகன் சொல்லிக்கொள்ளவேண்டியது. இது ஊர்தி மட்டுமே. அதற்கு அப்பால் இதற்கு இடமேதுமில்லை. எங்குமே செல்லாமல் பைக்கை இரவுபகலாக துடைத்து பளபளவென வைத்திருக்கும் சிலர் உண்டு. பைக்கில் ஏறி முடிந்தவரை சென்று, மேலே செல்லவேண்டிய இடத்தில் அதை அப்படியே போட்டுவிட்டு மேலும் ஏறிச்செல்பவர்களே மலையுச்சியை அடையமுடியும்.

உடலைச் சீரழிக்கலாகாது என நான் சொல்வது அதனால்தான். மண்டைக்குள் இருக்கும் அந்த காலிஃப்ளவர் மிகமிக நொய்மையானது. அதனுடன் விளையாடக்கூடாது. ஆகவேதான் போதைப்பொருட்களை அஞ்சுகிறேன். ஒரு சின்ன ஈஸ்னோஃபீலியா பிரச்சினை இருந்தால் காட்டின் பேரழகை ரசிக்க முடியாமலாகும். ஆகவே உடலை பேணுக. உடல்நான் என்பதனால் அல்ல, உடல் என் ஊர்தி என்பதனால் மட்டும். வண்டியை  ‘கண்டிஷனாக’ வைத்துக்கொள்வது மட்டும்தான் அது.

மற்றபடி உடலின் எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்படாமலிருக்கவேண்டும் என்றே சொல்வேன். எட்டுமணிக்கு காபி சாப்பிட்டாகவேண்டும் என்றால் நாம் உடலின் அடிமை. சுவையான உணவு கிடைத்தேயாகவேண்டும் என்றால் உடலின் சிறையில் இருக்கிறோம்.

நாங்கள் எந்தப் பயணத்தைப் பற்றிச் சொன்னாலும் உடனே சாமானியர், இவர்களை உடல்மனிதர் என்போம், “அங்க சாப்பாடெல்லாம் எப்டி? இட்லி கிடைக்குமா?” என்பார்கள். பொறுமையிழந்து நண்பர் ஈரோடு கிருஷ்ணன் ஒருமுறை கத்திவிட்டார். “கெடைக்காது, செத்த நாயைத்தான் திங்கணும். தின்னுட்டுப்போறோம். இப்ப என்ன?”. எப்படி கட்டுண்டிருக்கிறார்கள் என எண்ண எண்ண திகைப்பே எழுகிறது.

நீங்களும் அதேபோல கட்டுண்டிருக்கிறீர்கள். உங்கள் உடலே நீங்கள் என்னும் எண்ணத்தால். அதன் நினைவுகளை குற்றவுணர்வாக ஆக்கிக்கொண்டிருப்பதனால். அந்த பழையகாலத்தால் எந்த சிறுமையும் இல்லை. அது இன்று நிகழ்ந்தால்கூட அது ஒன்றும் பெரிய விஷயமும் அல்ல. ஆனால் அதை சுமந்துகொண்டிருப்பது, அதற்கு அத்தனை உளவிசையை அளிப்பது சிறுமை.

அறிய, உணர, முழுமைநோக்கிச் செல்லவே மானுடரின் உள்ளம் ஆற்றல்கொண்டிருக்கிறது. அந்த ஆற்றலை இப்படிச் செலவழிப்பது ஒரு மாபெரும் வீணடிப்பு. அதற்காகவே நீங்கள் வெட்கம் கொள்ளவேண்டும். இதுவரை அப்படி அசட்டுத்தனமாக வீணடித்த நாட்களுக்காக குற்றவுணர்ச்சியும் கொள்ளவேண்டும். நாட்களை இழந்தால் திரும்ப பெறவே முடியாது. அதிலும் இளமையின் நாட்கள் பல மடங்கு ஆற்றல்கொண்டவை. பலமடங்கு பெறுமதியானவை.

உங்கள் உடல் அல்ல நீங்கள் என்னும் உணர்வை ஆழ உணரத்தொடங்கும்போதே நீங்கள் அறிவியக்கத்தில் நுழைகிறீர்கள். நீங்கள் எழுத்தாளர், கலைஞர் என்றால்  ‘நான் என் உடல் அல்ல, அதனுள் இருந்து அதை கவனிக்கும் ஆராய்ச்சியாளர்’ என எண்ணிக்கொள்ளுங்கள். ஓர் ஆன்மிகசாதகன் ‘நான் என் உடல் அல்ல, அதனுள் இருக்கும் ஆன்மா. எதிலும் ஈடுபடாமல் எல்லாவற்றையும் நிகழ்த்தி கடந்து செல்பவன். நான் தேகம் அல்ல தேகி” என்று சொல்லிக்கொள்ளவேண்டும்.

உங்கள் உடலில், உள்ளத்தில் என்ன நிகழ்கிறது என்பதை கூர்ந்து பாருங்கள். பாவனைகள் இல்லாமல் அதை எழுதமுடியுமா என்று பாருங்கள். சரியான மொழிவடிவாக அதை ஆக்கமுடியுமா என ஓயாது முயலுங்கள். புனைவின் ஒரு விதி உண்டு, ஆழமான எதையும் நேரடியாக எழுதினால் எழுதமுடியாது. உண்மையான அனுபவங்களை அப்படியே எழுதினால் அது கூற்று [account] தானே ஒழிய இலக்கியம் அல்ல. இலக்கியம் என்பது புனைவே.

ஆகவே புனைவுலகை உருவாக்குங்கள். உங்களிடமிருந்து மிக அப்பால். அதில் உங்களை அறியாமல் சென்று அமையும் உங்கள் உணர்வுகளும் கண்டுபிடிப்புகளும் மட்டுமே உண்மையில் பொருட்படுத்த தக்கவை. ஆரம்பகட்ட எழுத்தில் இது இயல்வதில்லை. நேரடி அனுபவங்களை அப்படியே எழுதத்தான் வரும். ஆனால் அதை பயிற்சி வழியாக கடந்துசெல்லவேண்டும். மெடுசாவின் தலையை நேரடியாக பார்க்கமுடியாது, கேடயத்தில் பிரதிபலித்துத்தான் பார்க்கவேண்டும்

ஆழமான அனுபவம், அது எதுவாக இருந்தாலும், எழுத்தாளருக்கு ஒரு செல்வம்தான். அது ஒரு பேசுபொருள் என்றவகையில் முக்கியமானது. ஆனால் அதை மட்டுமே பேசினால் அதற்கு இலக்கிய மதிப்பு இல்லை. அதைக்கொண்டு மனிதனைப் பற்றி மேலும் யோசியுங்கள். அதை பேசுவதன் வழியாக மனிதனின் ஆழத்தைப் பற்றி பேசுங்கள். அதனூடாக பயணம் செய்யுங்கள்.

நாம் ஒன்றை எழுதினால்  அதை கடந்து செல்லவேண்டும். கடந்து செல்வது என்றால் என்ன? மேற்கொண்டு அதில் கேள்விகள் இல்லாமலாவது. அது அந்த அனுபவத்தை நாம் ஒட்டுமொத்த மானுட அனுபவமாக வரலாற்றில் வைத்துவிட்டால் மட்டுமே இயலும். உங்களைப்பற்றி நீங்கள் அறிவதெல்லாம் மனிதர்களைப் பற்றி அறிவதாக மாறினால் மட்டுமே அப்படி விடுபடமுடியும்.

அன்னியமாக, விலகிநின்று எழுதுங்கள். உடலைக் கடந்து சென்று உள்ளத்தின் ஆழத்தை அடைந்தால் நீங்கள் மேலும் கலையை கண்டடைகிறீர்கள். ஞானத்தை அடைந்தால் மேலும் எழுகிறீர்கள். இலக்கியமோ கலையோ எதுவானாலும் அது ஒரு யோகச்செயல்பாடுதான். ஆகவே எதையும் முழுமையாகச் செய்தால் ஆனந்தமயநிலையை, முழுமையையே சென்றடைவோம். அது ஓரு தொலைதூர இலட்சியம்

ஜெ

 

பிகு. உங்கள் புனைபெயராக ஒன்றைச் சொல்லியிருந்தீர்கள். அது நன்றாக இல்லை. அது ஓர் எதிர்மறைப்பெயர். ஒருவர் தனக்கு நேர்நிலையாகவோ எதிர்மறையாகவோ பெயர் சூட்டிக்கொள்ளக்கூடாது. இது நம்மை நாமே வகுத்து முடிவாக முன்வைப்பதுபோல. நாம் நம்மை மீறிச் சென்றுகொண்டே இருக்கவேண்டியவர்கள்.

 

முந்தைய கட்டுரைஒரு கிணறு
அடுத்த கட்டுரைகார்கடல்- செம்பதிப்பு- முன்பதிவு