ஒரு கிணறு

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களுடைய ‘கிணறு’ கட்டுரையின் இறுதிவரியில் நீங்கள் “சென்றகாலங்களை ஆழமான ஊற்று அறாத ஒரு கிணற்றில் இருந்து ஒளியுடன் இறைத்து ஊற்றிக்கொண்டே இருக்கிறோம்…” எனக் குறிப்பிட்டிருப்பீர்கள். ‘ஒளியுடன் நீரிறைத்தல்’ என்ற வார்த்தை எங்கள் மனதுக்கு அளித்த வெளிச்சம் அளப்பரியது. செயல்வழி ஞானத்தின் நீட்சியாக, குக்கூவின் தோழமைகளும்  இன்னும்சில பொதுநண்பர்களும் இணைந்து ‘ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்’ என்றொரு முன்னெடுப்பைத் துவக்கியுள்ளோம். இதன்வழியாக புளியானூர், அய்யம்பாளையம், ஆடையூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பழங்கிணறுகளைத் தூர்வாரி மீட்டெடுக்கும் செயலை நிறைவு செய்திருக்கிறோம்.

“கிணற்றுப்பணியோடு சேர்த்து ஒரு மின்மோட்டாரும் பொருத்திக் கொடுக்கலாம்” என நூற்பு சிவகுருநாதனிடம் நீங்கள் சொன்ன பிறகு, ஆடையூர் கிணற்றில் மோட்டார் அமைத்து அதை வயோதிகர்களும் எளிதில் பயன்படுத்தும்படி அமைத்தோம். நவீனத்தின் துணைநிற்றலும் ஒருவகையில் இச்செயலுக்கு மலர்வைக் கொடுக்கிறது. அதைத் தொடர்ந்து, அண்மையில் வலசைதுருவம் கிராமத்தில் கிணற்றுப்பணி நன்முறையில் நிறைவடைந்தது.

திருவண்ணாமலைக்கு அருகிலிருக்கும் ஒரு சிறுகிராமம்தான் வலசைதுருவம். சுற்றிலும் சிறுசிறு மலைக்குன்றுகள் சூழ்ந்த நிலப்பகுதியாக அக்கிராமத்தின் தன்மை அமைந்திருக்கிறது. வலசைதுருவம் கிராமத்தின் முதன்மையான வள ஆதாரம் என்பது மாடுகள் மற்றும் ஆடுகள். அங்கிருக்கும் பெரும்பான்மையான மக்கள் மேய்ச்சல் மாடுகளைத் தங்கள் வாழ்வாதராமாகக் கொண்டு வாழ்கிறார்கள். கூடுமானவரை அனைத்துமே நாட்டுமாடுகளாகத்தான் இருக்கின்றன.

இருபது வருடங்களுக்கு முன்புவரைகூட, கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் நூறு அல்லது அதற்கு மேற்பட்ட மேய்ச்சல் மாடுகள் வளர்க்கப்பட்டு, ஒரு பெருங்குழுவாக அம்மக்கள் இணைந்து அந்த மேயச்சல்  பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். மேய்ச்சலுக்கான பேராதாரமாக அந்த மலைநிலந்தான் விளங்கியிருக்கிறது. ஆனால், தற்சமயம் அந்த நடைமுறை முழுக்க இல்லாமல்போய் அருகிவிட்டது. வலசைதுருவ கிராமத்தின் வாழ்விழப்புக்குப் பின்னால் காரணமாயிருப்பது, அங்கிருக்கிற இரு கல்குவாரிகள். சுற்றிய மலைகளைத் தகர்த்துப் பெயர்த்து, அவைகளை உருத்தெரியாமல் அழித்து, அதன் கல்கழிவுகளை அருகிருக்கும் நிலங்களில் கொட்டுவதே அந்தக் கல்குவாரிகளின் தினசரி வேலை.

அக்கிரமாத்திற்கென தனியாகக் குளங்கள் எதுவும் வெட்டப்படவில்லை. மலைக்குன்றுகளிலிருந்து இயல்பாகவே வழிந்த மழைநீர், அங்கங்கு தேங்கிய பள்ளநிலப்பகுதியே அம்மக்களுக்கான தண்ணீர்க்குளங்களாக நெடுநாள்வரை பயன்பட்டுள்ளது. மலையைச் சுற்றி நிறைய நீர்க்குளங்கள் அக்காலத்தில் உருவாகியுள்ளன. ஆனால், இன்று ஒற்றைக்குளம் கூட அங்கு உயிரோடில்லை. அக்கிராமத்தில் வாழ்கிற ஒரு முதிய வயோதிகர் அம்மலையைப்பற்றிச் சொல்கையில், அந்த மலையின் பெயரே ‘சுனைமலை’ என்றார். ஆனால், அத்தகைய சுனைமலை இன்று அந்நிலத்தில் இல்லை. அம்மலையைச்சுற்றி மட்டும் எட்டு கிராமங்கள் உள்ளன. மலையழிவு என்பது எவ்வகையில் நிகழ்ந்தாலும் அது அச்சம் தரத்தக்கது.

அவ்வாறு தண்ணீர் சார்ந்து முதல்சரிவு தொடங்கி, மெல்லமெல்ல அம்மக்கள் தங்கள் பிழைப்புக்காக வெளியூர்களுக்கும் பெருநகரங்களுக்கும் கூலியாட்களாகப் போய்விட்டனர். அங்கு, ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் வாழ்கிற மக்கள் மட்டும் பக்கத்திலிருக்கும் ஊர்களுக்கு கூலிவேலைக்குச் செல்கிறார்கள். இத்தகையதொரு சூழலில்தான் அந்த ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடிநீர் இல்லாமல் அவதியுறும் ஒரு தகவல் நம்மை வந்தடைந்தது. அதன்பின் நண்பர்கள் நேரடியாகச் சென்று முழுமையாக விசாரிக்கையில்தான் உண்மைநிலவரம் தெரியவந்தது. அங்குள்ள குடிநீர்த்தொட்டி முழுதும் தூர்ந்துபோய்க் கிடந்தது. வாரத்தில் இருநாட்கள் அக்கிராமத்திற்குத் தண்ணீர் விடப்படுகிறது. ஆனால் அதுவும் உப்புத்தண்ணீர்.

ஆகவே, குடிநீருக்காக அக்கிராம மக்கள் அங்கேயே அருகிலுள்ள ஒரு பழங்காலக் கற்கோவிலில் உள்ள அடிகுழாயைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த அடிகுழாயின் ஆழ்துளைக் கிணறும் பழுதாகிவிட்டதாலும், சிறுசிறு ஏற்றத்தாழ்வுகள் உண்டாக்கிய மனக்கசப்பாலும் அம்மக்கள் வேறெதாவது குடிநீராதராம் தேடி இன்னலுற்றிருந்தனர். முன்பு சுனைமலை இருந்த இடம் தற்போது கல்குவாரி அமைக்கப்பட்டு பெரும்பள்ளமாக மாறிக்கிடக்கிறது. இறுதியில் வேறுவழியில்லாமல், அப்பள்ளத்தில் தேங்கிக்கிடக்கும் மலைநீரைத்தான் அம்மக்கள் தினமும் ஏழெட்டு கிலோமீட்டர் தூரம் நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ வந்து சுமந்து செல்கிறார்கள்.

குளம்தான் அக்கிராமத்தில் இல்லையேதவிர, அறுபது வருடங்களுக்கு முன்பு காமராஜர் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட கிணறு ஒன்று ஊருக்குள்ளேயே இருந்தது. அக்கிணற்றைத் தூர்வாரி மீட்டெடுக்கும் பணியை நாம் பொறுப்பேற்றுக் கொண்டோம். முதற்கட்ட களச்சோதனையின்போது மிக அதிகப்படியான கான்கிரீட் கழிவுகளும் கிணற்றுக்குள் கொட்டப்பட்டிருந்தது. ஆகவே, தீர்க்கமான ஒரு திட்டமிடலுக்குப் பிறகு அக்கிணற்றுக்கான புனரமைப்புப் பணிகளைத் துவக்கினோம்.

கிணற்றுப்பணியைத் துவங்குகையில் நாம் எதிர்பார்க்காத ஏதேதோ நெருக்கடிகள் சூழ்வதும், முட்டிமோதி அதை நாம் நிகழ்த்தி முடிக்கையில் அதேபோல எதிர்பாராத சில மகிழ்வுத்தருணங்கள் நேர்வதும் தவிர்க்கமுடியாத ஒன்றாயிருக்கிறது. கிணற்றைத் தூர்வாரிக் கழிவு அள்ளிக் கொட்டுகையில், அதில் அவ்வளவு கோலிக்குண்டுகள் நிறைந்திருப்பதைக் கண்டோம். தூர்வாரிய அய்யா ஒருத்தர், கிணற்றின் கறுநீருக்குள் இறங்கி, மேலே வெளியே வந்ததும் அவரணிந்திருந்த டவுசர்பை முழுக்க கோலிகுண்டுகள்! அதை இரு கைகளிலும் அள்ளி, வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்களின் கைகளில் கொடுத்தார். உடனே, அச்சிறுவர்கள் கிணற்றைச் சூழந்து கோலி விளையாடத் தொடங்கியதும் அவ்விடத்தின் சூழலே வேறொன்றாகப் பூத்தது.

ஊர்க்கிணறுப் புனரமைப்பு இயக்கத்தின் பணிகள் வலசைதுருவத்தில் நன்முறையில் நிகழ்ந்துமுடிவதற்கு, அகர்மாவிலிருந்து வந்த துணைநின்ற மஞ்சரியின் இருப்பு இன்றியமையாதது. தோழர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உடன்வந்து உழைப்பைப் பகிர்ந்து, எப்போதும் எளியசிரிப்பை ஏந்திநின்ற எல்லா நண்பர்களையும் இக்கணம் மனதில் நிறைக்கிறோம். அண்ணன் காமாட்சி கவி, தோழமை அரவிந்த், பாரதி மற்றும் கெளசிக்-அருணிமா என ஒரு கூட்டுழைப்பின் பெருவிளைவென இச்செயலை முழுமைகொள்ளச் செய்த உள்ளங்களுக்குக் கரங்குவிந்த நன்றிகள்!

கார்த்திகை தீபத் தினத்திற்கு முந்தையநாள் இரவு திருவண்ணாமலைப் பகுதிகளில் பெருமழை பெய்தோய்ந்தது. மறுநாள் காலை, வலசைதுருவக் கிணற்றைச் சென்று பார்க்கையில் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து கைநீட்டினாலே நீரெட்டிவிடும் அளவுக்குத் தண்ணீர் சுரந்து மேலுயர்ந்து நின்றிருந்தது. புனரமைப்புக்கு முன்புவரை, கிணற்றின் சுனைக்கண்கள் அடைபட்டிருந்ததால், கடந்த முப்பது வருடங்களில் பெருமழைகள் பெய்தபோதும்கூட கிணறு நிரம்பியதில்லை என ஊர்மக்கள் நெகிழ்வுததும்பச் சொன்ன சொல்லின் ஈரம் என்றும் நெஞ்சில் உலராதிருக்கும்.

கிணறு சுனைத்திறப்பு நிகழ்வுவிழா நாளன்று, ஓவியர் ஸ்டாலின் அவர்கள் கிணற்றைச்சுற்றி முழுக்க மண்வண்ண ஓவியங்களை வரைந்து, நீரளிக்கும் தொட்டிச்சுவற்றில் நீர்த்துறவி ‘நிகமானந்தா’வை வரைந்து, அதில் ‘நெருப்பே தெய்வம், நீரே வாழ்வு’ என்றெழுதினார். தண்ணீரைக் காக்கவேண்டி உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்த பெருந்தியாகக் குறியீடான நிகமானந்தாவுக்கு தமிழ்நிலத்தில் நிகழ்ந்த நீரஞ்சலியாகவே இதைக் கருதுகிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஊர்க்கிணறுப் புனரமைப்பு இயக்கத்தின் வழியாக நாம் முன்னெடுத்த எல்லா கிணற்றுப்பணி நிறைவு நிகழ்வுகளையும் தாண்டி இந்நிகழ்வில்தான் ஊர்மக்கள் சனத்திரளாக வந்திருந்தார்கள். எல்லோரும் கிணற்றைச் சூழந்து நின்று சிரிப்பால் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். இறுதியில் நிகழ்வு நிறைவுறும் நேரத்தில், அக்கிராம மக்கள் எல்லோரும் சேர்ந்து, ஒரு தட்டில் பழங்களையும் இனிப்புகளையும் துணிகளையும் வைத்து, பெருத்த கரவொலியோடு அதை கிருஷ்ணமூர்த்தியிடமும் மஞ்சரியிடமும் ஒப்படைத்தார்கள்.

கிருஷ்ணமூர்த்தி நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து அதைப் பெற்றுக்கொண்டார். நிகழ்வுமுடிந்து கூட்டங்கலைந்து எல்லோரும் போய்க்கொண்டிருக்க, நாம் கிணற்றை சென்று பார்த்தோம். அங்கிருந்த ஒரு ஈரப்படிக்கல்லின் மீது தவளை ஒன்று கண்திறந்து அமர்ந்திருந்தது. இன்னதென அறியாத ஒரு முழுமையுணர்வு மனதிலெழுந்தது. ஒளிப்படங்களால் இந்நிகழ்வினை உயிர்நிறைத்தளித்த ஒளிப்படக்கலைஞர் வினோத் பாலுச்சாமியின் அகம் எல்லா நிறைநலங்களும் பெற்றடைக!

வலசைதுருவம் கிராமத்தின் தூர்வாரியக் கிணற்றை கிராமத்தினரிடம் ஒப்படைக்கும் திறப்புநிகழ்வு, யானை டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவுதினமான டிசம்பர் 9ம் தேதி நிகழ்ந்துமுடிந்தது. சுனைக்கண் திறந்த அக்கிணறானது ‘யானை டாக்டர்’ அவர்களுக்கும், அறம் தொகுப்பின் தனிச்சிறந்த ஒரு சிறுகதை வாயிலாக அவர் வாழ்வை வரலாற்றில் நிலைநிறுத்திய உங்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது.

‘நூறு நிலங்களின் மலை’ புத்தகத்தில் நீங்கள் எழுதிய “மலையெல்லாம் இமயம் என்பதுபோல் நீரெல்லாம் கங்கை” என்ற வாக்கியத்தை நாங்கள் இக்கணம் நெஞ்சேந்துகிறோம். வலசைதுருவக் கிணற்றிலும் கங்கையின் புனிதம் குடிநீராகப் பெருகி எழுக! நீரன்றோ நம் தீராத்தொன்மம்.

யாவருக்கும் வாழ்வளிக்கும் நீரெனும் பேரிறையைத் துதித்துத் தொழுகிறோம். கிணற்றின் முதல்நீர், அந்தக் கற்கோவிலின் அம்மன் தெய்வத்துக்குப் படையலாகப் படைக்கப்பட்டது.

கரங்குவிந்த நன்றியுடன்,
குக்கூ காட்டுப்பள்ளி
புளியானூர் கிராமம்

முந்தைய கட்டுரைதல்ஸ்தோயின் மனிதாபிமானம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉடல், குற்றவுணர்வு, கலை