நற்றுணை [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நேற்று நற்றுணை சிறுகதை வாசித்தேன். அதிலிருந்து இன்னும் மீளவில்லை. என் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு கண்டிப்பாக கேசினி தான் காரணமாக இருக்க முடியும். ஏனென்றால் பல இடங்களில் கேசினி போன்ற ஒருவர் எனக்கு தேவையாகவே இருந்துள்ளார். கேசினி காலமும் எல்லையும் கடந்த யக்ஷி ஆதலால் எங்கும் இருப்பாள் என்று நினைத்து இரண்டு, மூன்று முறை அழைத்து பார்த்தேன் வரவில்லை. எனக்கு எவ்வாரேனும் கேசினியை பார்த்துவிட வேண்டும் என்று நினைத்து திருநயினார்குறிச்சிக்கு போக வேண்டும் என்றே முடிவு செய்து விட்டேன். அனால் அங்கு இன்னும் அந்த கோயில் இருக்குமா என்று தான் தெரியவில்லை.
ஏதேனும் மாற்றத்தை கொண்டுவர கேசினி போன்ற ஒருவர் தேவைதான் போலும். வரலாற்றில் ஒரு பெரிய மாற்றம் நிகழத் தொடங்கிய இடம் திருநயினார்குறிச்சி. அந்த மாற்றம் கேசினியால் மட்டுமே நிகழ்ந்தது அல்ல, கேசினி அங்கு வரவில்லை என்றாலும் அது நிகழ்ந்திருக்கும். அதுவரை யாரும் நுழையாத ஆண்களின் எல்லைக்குள் அம்மிணி தங்கச்சி நுழைந்து அவர்கள் எல்லோரது பிடியிலிருந்தும் தப்பி ஓடிய போதே அந்த மாற்றம் நிகழத் தொடங்கிவிட்டது. எல்லாப் பெண்ணும் யக்ஷியாக மாறும் கட்டம் வாழ்வில் ஒருமுறையேனும் கண்டிப்பாக வரும்.
நன்றி !
அன்புடன்,
தீபிகா
அன்புள்ள ஜெ
நற்றுணை கதையை சென்ற செப்டெம்பரிலேயே வாசித்தேன். அப்போது அந்தக்கதை ஒரு பேய்க்கதையாக மட்டுமே தோன்றியது. நேற்று ஏதோ டிவியில் பார்த்துக்கொண்டிருந்தேன். ஈக்களையும் தேனிக்களையும் பற்றிய ஒரு ஆவணப்படம். அதில் ஒருவரி வந்தது. தேனிக்களுக்கு கொடுக்கு உண்டு. தன் உணர்கொம்புகளில் ஒன்றை தேனிக்கள் கொடுக்குகளாக ஆக்கிக்கொண்டன. சட்டென்று எனக்கு நற்றுணை கதை நினைவுக்கு வந்தது. தன்னுடைய ஒரு பகுதியை நச்சுக்கொடுக்காக ஆக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் கதைதானே அது என நினைத்தேன். உடனே எடுத்து திரும்ப வாசித்தேன். கல்விக்காக, வாழ்க்கைக்காக, தன் தடைகளை உடைத்துக் கிளம்பிய ஒரு பெண்ணின் கதை.
அந்தப்பெண்ணில் இருந்து எழுந்தது யட்சி. அந்த யட்சி பழைய புத்தரின் காவல்தேவதை. எவ்வளவு சரித்திரப்பின்புலம். கதையை படித்துக்கொண்டே இருந்தேன். ஒரு கிளாஸிக். நான் தமிழில் படித்த கதைகளிலேயே மகத்தான கதை இதுதான். எனக்கு மட்டும் பணம் இருந்தால் ஒரு அற்புதமான சினிமாவாக இதை எடுக்கவைப்பேன். அத்தனை பெண்களுக்கும் காட்டவைப்பேன். நேற்று என் தோழிகளிடம் இந்தக்கதையைச் சொல்லிக்கொண்டிருந்தேன். அத்தனைபேருக்குமே அந்த யட்சியின் அர்த்தம் உடனே புரிந்தது. அவரவருக்கு உள்ளே இருந்து யட்சியை வெளியே எடுக்காமல் இங்கே வாழ்க்கை என்பதே இல்லை பெண்களுக்கு.
வெற்றிச்செல்வி ஆறுமுகம்