அஞ்சலி- யூ.ஏ.காதர்
2011-ல் தாங்கள் ஒரு (முஸ்லிம்) நண்பருடன் இணையம் வழியாக நடத்திய சாட்டிங் (உரையாடலை) அண்மையில் (December 2 ஒரு விமர்சனம்) மறுபிரசுரம் செய்திருந்தீர்கள். யு. எ. காதர் இறந்தபோது மறுநாளே தாங்கள் எழுதியிருந்த அஞ்சலி கட்டுரையையும் வழக்கம்போல படித்தேன். உடனே என்னிடமிருந்த “திசையெட்டும்” மொழிபெயர்ப்பு காலாண்டிதழ்களில் காதர் “இக்கா” கதைகள் ஏதும் வந்துள்ளதா என தேடினேன்.
கிடைக்காததால் குறிஞ்சிவேலன் அவர்களிடம் கேட்டபோது தோப்பில் மீரான் செய்திருந்த “திற்கோட்டூர்” உள்ளதே என்றார், என்.பி. முகமதின் “தெய்வத்தின் கண்” நாவல் இரண்டுமே சாகித்திய அகாதெமியில் கிடைக்கிறது. இஸ்லாமியர்கள் செறிவாக இருக்கும் வட தமிழக முஸ்லிம்களின் வாழ்க்கை இங்கு இலக்கியத்தில் பதிவாகவே இல்லை என்று தாங்கள் எழுதிய நினைவு. உண்மைதான், Kerala – God’s own country என்று சொல்லப்படுகிறது என்பதற்கு கைமுறியன் நாராயணன், பகவதிசூட்டு, சூரிக்களகம் தரவாடு, மூத்தாப்பா, குஞ்சாறு மௌலவி, கோயா மகன் போன்ற கதை மாந்தர்களின் சமூக உறவு இங்கு தமிழகத்திலும் இருந்தபோதிலும் ஏன் இலக்கியமாகவில்லை என்று யோசிக்கிறேன்.
ஆக, முடிந்தவரை உரிய படைப்பாளிகள் அவர்களுக்கு விருது கிடைக்கும்போதும், மறைவின்போதும் தாங்கள் எழுதும் பதிவுகளினூடாக ஏராளமானோர் இங்கு தமிழ் இலக்கியச் சூழலுக்கு அறிமுகமாகிக் கொண்டே வருகின்றனர். அதில் மத அடையாள பேதமெதையும் தாங்கள் காட்டுவதில்லை என்பது என் அனுபவம்.
கொள்ளு நதீம், ஆம்பூர்.
அன்புள்ள கொள்ளு நதீம்,
இணையம் இருப்பதனால் இக்குறிப்புகளை ஒன்றுடன் ஒன்று தொடுக்க முடிகிறது. பலசமயம் அவை ஒருவகை முழுக்கட்டுரைகளாக ஆகிவிடுகின்றன
ஜெ
அன்புள்ள ஜெ
நான் மலையாளத்திலும் நிறைய வாசிக்கக்கூடியவன்.என்னுடைய தேடலில் வி.ஏ.ஏ.அசீஸ் பற்றி இதுவரை எந்தச் செய்தியும் இல்லை. நீங்கள் மட்டும்தான் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். மறுபதிப்பே வரவில்லை என நினைக்கிறேன்.இணையத்திலோ நூலகங்களிலோ அவருடைய பெயரே காணக்கிடைக்கவில்லை. எப்படி ஓர் எழுத்தாளர் அப்படி மறைந்து போக முடியும்?
டி.ராகவ்
அன்புள்ள ராகவ்,
அப்படி பல மலையாள எழுத்தாளர்கள் மறைந்துவிட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் மலையாள எழுத்தும் வாசிப்பும் முழுக்கமுழுக்க வணிகம் என்பது. ஒரு நூல் புகழ்பெற்றால் ஆயிரக்கணக்காக விற்கும். அதைப்பற்றி ஊரே பேசும். விற்கவில்லை என்றால் அப்படியே மறைந்துபோய்விடும். விமர்சகர்கள் நூலை பதிப்பகத்தாரால் ‘ஊக்கப்படுத்தப்பட்டால்’ மட்டுமே பேசுகிறார்கள். அவர்களாக எந்த நூலையும் பேசுவதில்லை. இலக்கியம் வணிகமாக ஆனால் அதுதான் நிகழும். எது விற்குமோ அது நிற்கும்.
வி.ஏ.ஏ.அசீஸ் ஆல் இண்டியா ரேடியோவில் வேலைபார்த்தார். முக்கியமான கதைகளையும் நாவல்களையும் எழுதியிருக்கிறார். துறமுகம், ஆலப்புழா துறைமுகம் மறைந்ததன் பின்னணியில் இஸ்லாமியக் குடும்பங்களின் வீழ்ச்சியைச் சித்தரிக்கும் நாவல்.
ஜெ
அன்புள்ள ஜெ
யு.ஏ.காதர் அவர்களுக்கான அஞ்சலிக்குறிப்பைப் பார்த்தேன். நான் மொய்து படியத்து நாவல்களை வாசித்திருக்கிறேன். குறிப்பிடவேண்டிய எழுத்தாளர். இன்றைக்கு உங்கள் இணையதளத்தில் மட்டுமே இத்தனை எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அஞ்சலிக்குறிப்புகளே ஒரு வரலாறாக ஆகிக்கொண்டிருக்கின்றன.
என்.பி.முகமத் பற்றி எழுதியிருந்தீர்கள். அவருடைய ஏதாவது படைப்பு தமிழில் கிடைக்கிறதா?
ஆர்.கணேஷ்
அன்புள்ள கணேஷ்,
என்.பி.முகமத் படைப்புக்கள் தமிழாக்கம் செய்யப்பட்டதில்லை.
என்.பி.முஹம்மத் 1928ல் கோழிக்கோடு அருகே கேரள சுதந்திரப்போராட்ட வீரர் என்.பி.அபுவின் மகனாக பிறந்தார்.கேரள கௌமுதி இதழில் பணியாற்றினார். 2003ல் மறைந்தார். இவருடைய தமையன் என்.பி.மொய்தீன் கேரள காங்கிரஸ்தலைவர்களில் ஒருவர். முஹம்மத் எம்.டி.வாசுதேவன் நாயரின் அணுக்கத்தோழர். இருவரும் இணந்து அரபிப்பொன் என்னும் நாவலை எழுதியிருக்கிறார்கள். முகம்மதின் மிகச்சிறந்த நாவல் ‘எண்ணப்பாடம்’ [எண்ணைவயல்].
ஜெ