யுவன் 60
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
இன்று, இப்போது யுவன் அவர்களை அவர் வீட்டில் சென்று பார்த்தோம். காஞ்சிபுரம் சிவா, சண்முகம்,சௌந்தர், காளி, மாரிராஜ், நான் சென்றிருந்தோம். மிக மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார். ஒரு வெள்ளி காமாட்சி விளக்கு வாங்கி பூங்கொத்துடன் நம் நண்பர்கள் சார்பில் அவருக்கு அளித்து மகிழ்ந்தோம்
ராஜகோபாலன்
சென்னை
***
அன்புள்ள ஜெ
யுவன்60 உணர்ச்சிகரமான கட்டுரை. கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக தமிழின் இரு முக்கியமான படைப்பாளிகள் நடுவே நீடித்துவரும் ஆழமான நட்பு ஆச்சரியம் அளிக்கிறது. கிரா பேட்டி பார்க்கையில் அவர் கு.அழகிரிசாமியைப்பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். சுந்தர ராமசாமிக்கும் கிருஷ்ணன்நம்பிக்கும் அப்படி ஒரு உறவு இருந்திருக்கிறது. இத்தகைய நட்புகளில் ஒரு பெரிய நெகிழ்ச்சி உள்ளது. சமகால ஆளுமைகளிடையே இருக்கும் இந்த நெருக்கம் நாமும் ஏதோ சரித்திரத்தில் வாழ்கிறோம் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.
யுவன் சந்திரசேகர் என்னுடைய மனசுக்கு உகந்த எழுத்தாளர். ஒற்றை வரியில் அவருடைய ஆக்கங்களைப்பற்றி நீங்கள் சொல்லிச்செல்வதேகூட ஆழ்ந்து படித்து உருவாக்கிய மதிப்பீடுகளாக உள்ளது.
அவனுடைய தேடலென்பது மானுடர் கொள்ளும் மாறுவேடங்கள், திரிபுநிலைகள் சார்ந்தே இருந்து வந்துள்ளது.
நவீனத்துவத்தை கடக்கும் யுவன் அந்த உன்னதத்தை இசை, நாடோடிஆன்மிகம் என்னும் இரண்டு களங்களிலேயே சந்திக்கிறான். குடும்பத்துக்குள் அல்ல.
என்ற இரண்டுவரிகளுமே முக்கியமானவை. யுவன் அவர்கள் குடும்பப்பின்னணியில் நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அவருடைய அடிப்படையான கேள்விகள் எவையும் அங்கே இல்லை என்பது உண்மை
ராஜேஷ்
***
அன்புள்ள ஜெ,
இன்றுகாலை பதிவைப்படித்ததும் மகிழ்ச்சியாகவும் கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. தமிழின் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர் யுவன் சந்திரசேகர். இதுவரை எழுதிய தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலை எடுத்தாலும்கூட அவர் முதற்சில இடங்களில் வருபவர். இன்றுவரை ஒரு விருது அவருக்கு வழங்கப்பட்டதில்லை. இன்றுவரை அவரை எவரும் கௌரவித்ததும் இல்லை. அவருடைய அறுபதாவது பிறந்தநாள்கூட இப்படி எளிமையாக கடந்து செல்கிறதே என்று நினைத்தேன்.சாதாரணமானவர்களுக்கெல்லாம்கூட இங்கே விழாக்கள் நடைபெறுகின்றன. பாராட்டுக்கள் நடைபெறுகின்றன.
ஆனால் பிறகு நினைத்தேன், வேறு எவர் பாராட்டவேண்டும் என்று. சுந்தர ராமசாமிக்கும் அசோகமித்திரனுக்கும் இப்படித்தான் அறுபதாம் பிறந்தநாள் வந்தது. அன்றைக்கும் எவரும் அதை பொருட்படுத்தவில்லை. நீங்கள்தான் அறுபதாம் ஆண்டுமலர் வெளியிட்டீர்கள். இன்று நீங்கள் யுவனை பாராட்டி வாழ்த்தி எழுதியிருக்கிறீர்கள். இன்னொருவர் என்றால் பொருட்படுத்தியிருக்க மாட்டீர்கள். தமிழ்ச்சூழலில் ஒரு படைப்பாளியிடமிருந்து இன்னொரு படைப்பாளிக்கு வரும் வாழ்த்துதான் முக்கியம். இந்த வாழ்த்துதான் காலத்தில் நிற்கும்.
யுவன் சந்திரசேகர் என்னைவிட ஏழு வயது குறைவானவர். அவருக்கு ஆசீர்வாதம் அளிக்க வயது எனக்கு உண்டு, இருந்தாலும் வாசகனாக வாழ்த்துக்கள்.
ஸ்ரீதர் கணேஷ்