பெண்கள்- கடிதங்கள்

பெண்கள் எழுதுதல்

பெண்கள் எழுதுவது- கடிதம்

அன்புள்ள ஜெ,

உங்கள் தளத்தில் பெண்கள் எழுதுவது பற்றி வந்த கடிதங்கள், உங்கள் பதில் ஆகியவற்றைப் பார்த்தேன். இரண்டு நாட்களாகவே ஒரு நெகிழ்ச்சி மனநிலையில் இருக்கிறேன். அந்தக் கடிதங்களில் உள்ள அதே மனநிலையில்தான் நானும் இருக்கிறேன். நானும் மானசீகமாக உங்களுடன் பேசிக்கொண்டே இருப்பவர்களில் ஒருத்தி. ஒவ்வொருநாளும் உங்கள் உரைகளை கேட்கிறேன். குரலில் இருக்கும் நெகிழ்வும் சிலசமயம் சிரிப்பும் நேரில் பேசும் உணர்வை அளிக்கிறது. நானும் பத்துப்பதினைந்து கடிதங்கள் எழுதி அனுப்பாமல் விட்டுவிட்டேன்

எனக்கு இந்தக் கட்டுரைகளும் கடிதங்களும் வாசித்து ஒருவகையான ஆவேசமும் பரவசமும் இருக்கிறது. எதையாவது எழுதவேண்டும், எழுத்து மட்டும்தான் விடுதலை என்ற நினைப்பு வந்துள்ளது. ஏனென்றால் இப்படி ஒரு விவாதமும் இந்த அளவுக்குக் கவனமும் இங்கே மிகவும் குறைவு. இங்கே பெண்கள் எழுதுவதற்கு சில விஷயங்கள்தான் உள்ளன. பெண்ணியம் எழுதுபவர்கள் நிறையபேர். திரும்பத்திரும்ப புலம்பலும் கசப்பும்தான். நானும் அந்தமாதிரி நிறைய எழுதினேன். [இப்போது நான் அவற்றை உங்கள் பார்வைக்கு கொண்டுவரவே மாட்டேன்.] இன்றைக்கு அதெல்லாம் தமாஷாக உள்ளது. பெண்கள் பெண்ணியமெல்லாம் எழுதும்போது திரும்பிப்படித்தால் அவர்களுக்கே அதெல்லாம் கசப்பாக இருக்கும் என நினைக்கிறேன். நானே ஏதோ ஒரு வேகத்தில் எழுதிவிடுவேன். அதன் பிறகு வாசித்தால் இதை ஒரு வாசகர் ஏன் வாசிக்கவேண்டும், என்ன கிடைக்கும் என்று தோன்றிவிடும்.

இங்கே பெண்களுக்கு முன்னுதாரணமாக எழுதும் பெண்கள் பெரும்பாலும் நீங்கள் சொல்வதுபோல அரைவேக்காட்டு அரசியலை பேசுபவர்கள். அவர்களுக்கு ஒரு விடுதலை நாட்டம் உள்ளது. ஆனால் அது எங்கே எப்படி என்றெல்லாம் தெரியாது. விடுதலை வேண்டும். மூச்சு திணறுகிறது. ஆகவே புரட்சி கலகம் என்று சொன்னால் ஒரு கிக் இருக்கிறது. அப்படி பேசும் அரசியல் உடனே பிடிக்கிறது. அந்த அரசியலை தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள தகுதி இல்லை. அதற்கான உழைப்பும் கிடையாது. புரட்சி பெரியாரிசம் என்றெல்லாம் எதையாவது அதிரடியாக பேசினால் ஒரு கிக் இருக்கிறது.

இது ஒருபக்கம். விடுதலை என்றால் என்ன என்று தெளிவில்லை. இந்த குடும்பம் செக்ஸ் இதெல்லாம்தான் கட்டுகள் என்று நினைப்பு. ஆகவே ஃப்ரீசெக்ஸ் குடும்பத்தை தாண்டுவது இதெல்லாம் விடுதலை என்று ஒரு நினைப்பு. அதை எழுதினாலும் ஒரு பிம்பம் வருகிறது. உடனே பத்துபேர் வந்து பாராட்டுகிறார்கள். இதெல்லாம் நடக்கிறது. அந்த வலையிலே சிக்கி கொஞ்சகாலம் போகும். ஆனால் நாம் உண்மையாக இருந்தால் நமக்கே சலிப்பு வர ஆரம்பித்துவிடும். நாம் வெளியே போக ஆரம்பிப்போம். அல்லது உள்ளே சுருங்கிவிடுவோம். இதெல்லாம் இல்லை என்று தோன்றிக்கொண்டே இருக்கும்.

இன்னொரு விஷயம், இதை நானே எழுதி அப்றம் உணர்ந்திருக்கிறேன். அதாவது மேலே சொன்ன புரட்சி கலகம் என்றெல்லாம் எழுதியபிறகு அதில் சலிப்பு வந்து டீன் ஏஜ் மனநிலைக்கு போக விரும்புவது. ரொமான்ஸ் எழுதுவோம். சின்னப்பெண்ணாக காதல் ஏக்கம், பிறகு பூக்கள் வண்ணத்துப்பூச்சி நம்பிக்கை இப்படி கொஞ்சம். உண்மையில்  முதலில் சொன்ன புரட்சியை விட இது இன்னும் கொஞ்சம் உண்மையானது.

நீங்கள் கொடுத்திருந்த அறுபது இணைப்புகளில் பாதியையாவது படித்திருக்கிறேன். மீண்டும் படித்தேன். எல்லாமே முக்கியமான கட்டுரைகள் அல்லது உரையாடல்கள். பெண்கள் மிக அக்கறையாக படித்து எழுதியிருக்கிறார்கள். விவாதிக்கிறார்கள். அதேசமயம் கசப்போ பாவனைகளோ இல்லாமல் உண்மையான ஆர்வமும் நம்பிக்கையும் உடையவர்களாக இருக்கிறார்கள். எத்தனை ஆழமான கட்டுரைகள். இதெல்லாம் வேறு எங்கும் இல்லை. இந்த லீகில் சேரவேண்டும் என்று எனக்கும்படுகிறது. ஆனால் முடியுமா என்று சந்தேகமாகவும் உள்ளது.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

எஸ்

அன்புள்ள எஸ்,

நீங்கள் சொல்வது உண்மை, எழுத்து அப்படித்தான் பெரும்பாலும் இருக்கிறது. ஆனால் அது ஏன் என்று பாருங்கள். அங்கீகாரத்துக்காக அடையாளத்துக்காக எழுதப்படுவது அது. அது ஓர் சுயஏமாற்று. அதில் உள்ளே நம் அகம் சலிப்புற்றபடியே இருக்கிறது. நமக்காக எழுதவேண்டும். நாமே நம்மை மதிப்பதற்காக எழுதவேண்டும். இந்த பூமியில் பல ஆயிரமாண்டுகளாக நிகழ்ந்துவரும் அறிவியக்கத்துடன் நம்மை இணைத்துக்கொள்வதற்காக, நாமும் நமது பங்களிப்பை அதில் செய்வதற்காக எழுதவேண்டும்.

அடையாளத்துக்காக எழுதும்போதுதான் பெண் என்னும் அடையாளம் முக்கியமாகிறது. அறிவியக்கத்தில் ஆண்-பெண், ஏழை -பணக்காரன், உயர்குடி- தாழ்குடி என எந்த வேறுபாடும் அடிப்படையில் இல்லை. அந்த வேறுபாடுகள் எல்லாம் பேசுபொருளிலேயே உள்ளன — உளநிலையிலோ படைப்பூக்கத்திலோ இல்லை.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

நீங்கள் எனக்கு அளித்த “முகங்களின் தேசம்” என்னும் இந்தியப் பயணச் சிறுகதைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயமும்  எனக்கு ஒரு பேரனுபவமாகவே திகழ்ந்தது. எனக்கென்று செலவிடத் தோன்றும் நேரங்களில் நான் முகங்களின் தேசம் வாசித்தேன். இந்தியா என்பது எனக்கு இதுவரையிலும் என்  புவியியல் பாடத்தில் வரும் வரைபடமாகவே என் நினைவில் இருந்தது. இந்தியா  என்றால் என்ன என்ற கேள்விக்கு எனக்கு இதுவரையிலும் இருந்த பதில் அது என் தாய் நாடு என்றதாகவே இருந்தது. இந்தியா என்பது மாநிலங்களால் இணைக்கப்பட்ட நாடல்ல மக்களால் இணைக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரிலுள்ள இந்தியர்களை பற்றியக் கருத்துக்கள் இது வரையிலும் கேட்டிராததாகவே இருந்தது. இந்தியா அன்பாலும், கருணையாலும் நிரம்பித் தானே உள்ளது, இதற்கு மேலும் இந்தியாவை யாரால் செழுமைப்படுத்திவிடமுடியும்? யாரால் இந்தியாவை காப்பாற்றிட முடியும், கைப்பற்றிட முடியும்? இதற்கு மேலும் என்ன மாற்றம் வேண்டும் இந்தியாவிற்கு. கண்டிப்பாக இந்த இந்திய பயணம் பள்ளிக்குக் கூட செல்லாமல் வீட்டில் இருக்கும் எனக்கு தேவையாகவே இருந்தது. அனால் இந்த புத்தகத்தை எனக்கு அளிக்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படி தோன்றியது என்றுதான் தெரியவில்லை. எனக்கு இப்படி ஒரு விலைமதிப்பற்ற பரிசை அளித்ததற்கு நன்றி!

தீபு நாகராஜன்

அன்புள்ள தீபு,

வருங்காலங்களில் பயணம் இன்னும் எளிதாக மாறும். பெண்கள் இன்னும் அதிகமாக பயணம் செய்யும் வழதிகள் வரும். அதற்கு முன் சிலவிஷயங்களை நாம் ஒரு நெறியாகக் கொள்ளவேண்டும். பயணத்திற்கான எந்த வாய்ப்பையும் தவறவிடக்கூடாது. சிறிய அசௌகரியங்கள் மனச்சுளிப்புகளை பொருட்படுத்தக்கூடாது. பயணத்திற்கான ஆர்வம் எப்போதுமிருப்பவர்களே பயணம் செய்ய முடியும்.

இருவகை மனிதர்கள் உண்டு. பயணத்தை விரும்புவார்கள், ஆனால் பயணத்துக்காக எந்த சிறிய சமரசமும் செய்துகொள்ள மாட்டார்கள். எந்த விஷயத்தையும் அதற்காக விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை டிவியிலே பிடிச்ச படம் போடுறாங்க, அதனாலே வர முடியாதுஎன்று சொல்பவர்கள் இவர்கள்.

இவர்கள் தவிர்த்த பயணங்களே மிகுதி. ஆனால் பயண வாய்ப்பே அமையவில்லை என்றும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். எல்லா பிரச்சினைகளும் தீர்ந்தபின் பயணம் செய்யவேண்டுமென்றால் கடைசி காசிராமேஸ்வரம் பயணம்தான் மிச்சம்.

இன்னொருவகையினர் பயணம் என்றால் எதையும் விட்டுவிட்டு கிளம்பிவிடுபவர்கள். அந்த மனநிலையிலேயே இருப்பவர்கள். அவர்களே நிறைய பயணம் செய்கிறர்கள். ஆனால் பலர் நினைப்பதுபோல அவர்கள் பயணத்தால் எதையும் இழப்பதுமில்லை. பயணம் செய்யச்செய்ய அதற்கேற்ப வாழ்க்கையை அமைக்கவும் பயின்றிருப்பார்கள். பயணம் ஒரு தெய்வம், அதை உபாசனை செய்பவர்களுக்கே அமையும்

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலிகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேதசகாயகுமார்- ஒரு நூல்