கி.ரா- கடிதம்

அன்புள்ள ஜெ,

ஆயிரம் வணக்கங்கள். பின் வருவது கிரா ஐயாவைப் பார்த்தபின் எழுதியது. கிட்டத்தட்ட ஓராண்டாகிறது. அதன்பின் கரொனா மற்றும் பணிச்சூழல் காரணமாக அவரை மீண்டும் சென்று சந்திக்க இயலவில்லை. ஆனால், அந்த ஏக்கம் உங்கள் வாசக நண்பர்களின் முயற்சியால் ஓரளவு தீர்ந்தது. ஐயாவையும் தங்களையும் ஒரே சந்திப்பில் பார்த்தது எங்கள் பாக்கியம். அந்தக் கணங்கள் வாழ்க்கை முழுமைக்கும் கூடவரும். கோடி நன்றிகள்.

இப்படிக்கு,

பார்த்தன்

வரலாற்றின் காலடியில் (கிராவுடன் கொஞ்ச நேரம்)

கிரா-வப் போய் பாத்து கும்பிட்டுட்டு வந்து ஒரு வருசம் மேல ஆகுது. கோயிலுக்கு போய்ட்டு, வேறு எங்கயும் கால வெக்காம, நேரா வீட்டுக்கு வரணும்னு எங்க பாட்டி சொல்லுவாங்க. Q13ல எடுத்த வண்டிய நேரா வீட்டுக்கு வந்துதான் நிறுத்துனேன். இந்த சாமிகிட்ட எனக்கு எந்த வெண்டுதலுமில்ல. சாமியும் அர்ச்சனை, தீபாராதனை எதுவும் எதிர்பாக்குற டைப் இல்ல. என்ன, “சாமி! உனக்கு கெடைக்கவேண்டிய மால மரியாத கெடைக்காம இருக்கே”ன்னு நாம அழுதா, நம்ம கண்ண தொடச்சிவிட்டு ஆறுதல் சொல்லுது சாமி. 98 வயசுலயும் எந்தத் தேவையும் இல்லாம நெறஞ்ச மனசோட இருக்குறதுக்கு நாம்மளும் இலக்கியம் படைக்கணும் போல இருக்கு. அதுக்கு வாய்ப்பில்லாததால, கொறஞ்சது, இலக்கியம் படிக்கவாவது செய்யலாம். முழுப்பலன் இல்லென்னாலும், வயசான காலத்துல ரொம்ப முக்காம மொணகாம இருக்க ஏதுவா இருக்கும்னு தோணுது.

லாஸ்பேட்டை ஏரியாக்குள்ள நொளஞ்சதுமே ஒரு சந்தோசப் படபடப்பு. தூரத்துல இருந்து பாத்த மலை பக்கத்துல போகப் போக பிரம்மாண்டமா வளந்துக்கிட்டே போகும்போது தோணுற அதே உணர்வு. தூரத்துல இருக்கயில கண்ணுக்கு அடக்கமா பாந்தமா தெரியிற அழகு, பக்கத்துல நெருங்கயில கண்ணுக்கு அடங்காம ஒரு மெரட்டு விடுமில்ல, அதுபோல. ஒரு வழியா நேதாஜி செலயக் கண்டுபிடிச்சி ரைட் எடுத்து லெப்ட் எடுத்து, வீட்டு க்ரில் கதவ தட்டி உள்ள போயி அவர பாத்ததும், இல்ல இல்ல, அவரு காலதான் பாத்தேன், பாத்ததும் ரெண்டு புருவதுக்கு கீழ பொலபொலன்னு ஊத்தெடுக்குது. நாம ஒரளவுக்கு அறியக்கூடிய ரெண்டாயிர வருச வரலாறுல, கிட்டத்தட்ட 5 சதவீதம் நம்ம முன்னால மனுச உருவத்துல இருக்குறப்ப வேற என்ன தோணும். ஒரு ரெண்டு நிமிசம் அவரும் என்னைத் தொந்தரவு செய்யாம விட்டுட்டாரு.

அறிமுகம் செஞ்சிக்கிற தேவை இல்லென்னாலும் ஒரு சம்பிரதாயமா , யாரு, எங்கேருந்து வர்றேன்னு சொன்னேன்(எனக்கு ஊர் கோவில்பட்டி). பொதுவா அந்தத் தகவலுக்கு எந்த உணர்ச்சியையும் காட்டாதபோதும், அவரு நம்மள முழுசா கிரகிச்சிக்கிட்டே இருக்குற மாதிரி இருந்திச்கி. அவரோட கதயில நமக்கு ஏதாவது ஒரு சின்ன வேசமாச்சும் கிடைக்க வாய்ப்பு இருக்குமோ என்னவோ. ஆமா, இன்னமும் எழுதுறாரு. அவருகூட கிட்டத்தட்ட 3 மணிநேரம் இருந்தேன். நேரம் போனது தெரியல. கூட அவரோட ரெண்டாவது மகனும் இருந்தாரு. என்ன பேசுனம்ங்குறதுக்கு நான் எந்த குறிப்பும் வச்சிக்கல. இப்போ என் நினைவுல இருக்குறத எழுதுறேன். இதுல எதுவும் மிகையாகவோ கொறவாகவோ வந்துறக்கூடாதுங்குற எண்ணத்தோட..

கிராவப் பாத்து வணக்கம் வச்சிட்டு பத்து நிமிசத்துல திரும்பிறணும்னுதான் போனேன். வயசாளிக்கு எதுக்கு தொந்தரவு குடுக்கனும். ஆனா, அவர பாத்த பின்னாடி, கொளத்தக் கண்ட எருமயா ஆயிட்டேன். என்ன பேசுறது எங்க ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கயில, மொத ஸிப் காபி குடிக்கிறத்துக்கு முன்னாடி டம்ளர கையில எடுத்து நாசூக்கா பாலாடய ஊதிவுடுற மாதிரி, அவரோட மகன் கேட்டாரு, “அப்பாவொட கதைகளப் படிச்சிருக்கீங்களா?” கிராவப் பத்தி எந்த வெவரமும் தெரியாம, அவர வாசிக்காமலேயே சில பேர் வந்துருக்கலாம். நான், “ஐயாவோட மூணு நாவல் வாசிச்சிருக்கேன். கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர், அப்றம் கொஞ்சம் சிறுகதைகள் கட்டுரை தொகுதி. அப்றம் மறைவாய் சொன்ன கதைகள். யாராவது கத கேட்டா கோர்வயா சொல்ல தெரியாது. ஆனா அந்தக் கதைகள்ள வர்ர பாத்திரங்களோட பாதிப்பு எங்கிட்ட நெறய இருக்கும். அச்சிந்தலு-கிட்டப்பன், அந்தமான் நாயக்கர்ல வர்ர அக்கா, சென்னம்மா, கத சொல்லுற கெழவி, செம்புல நல்லெண்ண வெச்சி சோத்துல ஊத்தி சாப்புடுற செட்டியார் பையன். ‘பெத்த கொந்த்து நாயக்கர்’ தான் சின்ன வயசுல எம் புள்ளைகளோட கதாநாயகன்”ன்னு சொன்னேன். ‘சின்ன கொந்த்து லட்சுமி’யப் பத்தி ஒண்ணும் சொல்லல. பின்னால யோசிக்குறப்ப, அந்த கலப்ப பொறந்த கத, ஊரு கூடி மாடு பிடிக்கிறது, கரிசல்ல மண்ணு எப்பிடி கருப்பாச்சிங்குற வெவரம், விவசாயி போராட்டம் எல்லாம் நெனவுக்கு வருது.

ஐயா நிமுந்து உக்காருற மாதிரி இருந்திச்சி. அப்பப்ப வசதியா ஒக்கார கால மாத்தி வச்சிக்கிவாருபோல. சரி வந்த வேலயப் பாப்போம்னு மெதுவா, அவரு இதுவர ஆயிரம்வாட்டியாச்சும் பதில் சொல்லியிருக்க வாய்ப்புள்ள அந்த கேள்விய கேட்டேன். “நீங்க எப்ப எழுத ஆரம்பிச்சீங்க? ஒங்கள எழுத தூண்டுனது எது?”. “சின்ன வயசுல நண்பர்களுக்கு நெறய கடிதம் எழுதுவேன். அவங்கதான் எனக்கு எழுத தைரியம் குடுத்தாங்க” ஐயா கிட்டத்தட்ட எல்லா கேள்விக்கும் மொகத்துல எந்த சலிப்போ, ஆர்வமோ  இல்லாம இயல்பா தீர்க்கமா பேசுறாரு. “நீங்க தான மொத மொதல்ல கடித இலக்கியம்ங்குற வடிவத்த கொண்டு வந்தீங்க”. அந்த கேள்விக்கி ஆமா இல்லைன்னு பதில் சொல்லாம, “மொதல்ல நான் எழுதுன வடிவத்துக்கு ரொம்ப எதிர்ப்பு இருந்திச்சி. எல்லாரும் இது மொழி இலக்கணத்துக்கு எதுரானதுன்னு சொன்னாங்க. நான் உறுதியா இருந்தேன். என் நண்பர்கள் தான் தொடர்ந்து எழுத தைரியம் குடுத்தாங்க”ன்னாரு. நான், “உங்க எழுத்துவடிவம் உண்டு பண்ணிய தாக்கம் உண்மையில அதிகம்யா. குறிப்பா எனக்கு நவீன இலக்கியம் படிக்கிறதுக்கு தெம்பு குடுத்தது நீங்கதான். பாலமித்ரா, ரத்னபாலா, கோகுலம், பூந்தளிர்னு வாசிச்சிட்டு இருந்த வயசுல, ஜூவியில கரிசல் காட்டுக் கடுதாசிகள் தான் நான் படிச்ச மொத நவீன இலக்கியம். இப்போ இருக்குற ரெம்ப பேரு ஒங்கள மாதிரி எழுதுறாங்க. பூமணி, நாஞ்சில் நாடன்”. இப்பிடி சொன்னதோட நிக்காம துடுக்குத்தனமா ஒரு கேள்விய கேட்டுட்டேன்.

“புதுமைப்பித்தனோட கதைகள படிச்சிருக்கேன். அவரும் வட்டார வழக்குல எழுதுன மாதிரி இருந்தது? உங்களுக்கு முன்னாடியே அவரு  ஆரம்பிச்சிட்டாரா?” ன்னு கேட்டதுக்கும் ரெம்ப இயல்பா விளக்குறாரு. அதாவது, “அவரோட கதாபாத்திரங்கள் தான் வட்டார வழக்குல பேசிக்குவாங்க. கதை சொல்லி பெரும்பாலும் எழுத்துத் தமிழ்லதான்  சொல்லி இருப்பாரு”. அப்புறம் நான் கேட்காட்டியும் சொல்றாரு, “ஏன் எல்லாரும் எழுத்துத் தமிழத் தேர்ந்தெடுத்தாங்கன்னா, அவங்களுக்கு முன்னாடி எழுதப்பட்ட பெரிய பெரிய காவியங்கள் எல்லாம் கவிதை வடிவிலதான் இருந்திச்சி. கவிதைக்கி, யாப்பு, அணி, இலக்கணம் எல்லாம் முக்கியம்ங்குறதால, கவிதையில இருந்து தொடங்குன நவீனத் தமிழ் இலக்கியமும் அதே இலக்கண வழிய பின்தொடர்ந்திச்சி. அதே நேரத்துல, இந்த காவியங்கள் எல்லாம் எழுத்து வடிவுல வர்றதுக்கு முன்னாடி பல்லாண்டு காலமா செவி வழியாதான் உலவிக்கிட்டு இருந்திச்சி. அந்த கதைகள் எல்லாம் பேச்சு தமிழ்லதான் இருந்திருக்கும். நாம அதிலிருந்து  ஏன் தொடங்கக் கூடாதுன்னு ஒரு எண்ணம். ஒங்களுக்குத் தெரியுமா, ஆங்கிலத்துல எழுதப்பட்ட மொத நாவல் வடிவம் பேச்சு வழக்குல, கடித வடிவுலதான் இருந்திச்சி”.

நான் புதுமைப்பித்தன் இவரோட முன்னோடியா இருப்பாரோங்குற பலநாள் சந்தேகத்த வேற மாதிரி கேட்டேன், “உங்கள ரொம்ப இன்ஸ்பைர் எழுத்தாளர்ன்னு யாராவது இருக்காங்களாய்யா?”. இந்த கேள்விக்கு அவரு ஸ்டைல்ல ஒரு கதயா சொல்றாரு. “அப்பிடி இல்ல. ஆனா, ஒரு விசயம் சொல்லுறேன். நான் சொல்றது உலகத்துல எழுதப்பட்ட மொதல் ஆங்கில நாவல் பத்தி. இது நடந்து 300 வருசம் இருக்கும். இங்கிலாந்து உலகம் முழுசும் மும்முரமா காலனி ஆதிக்கம் செஞ்சிட்டு இருந்த சமயம். பேர்பாதி ஆம்பளைங்க உலகத்துல உள்ள வெவ்வேறு மூலைக்கிப் போறாங்க. அப்போ, லண்டன்ல ஒரு முக்கியமான தெருமுனையில ஒருத்தன் தெனமும் காலையில ஒரு டேபிள்-சேரோட வந்து உக்காருறான். அவனப் பாக்க பொம்பளைங்க எல்லாம் வந்து பெரிய கியூல நிக்கிறாங்க” (பெரூசு ஏடாகூடமா ஏதோ சொல்லப்போகுதோன்னு மனசுல ஒரு எண்ணம்). “அப்பெல்லாம் பெண்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவங்கெல்லாம் தங்களோட கணவரோ காதலரோ எழுதுன கடிதத்தோட வந்து நிக்கிறாங்க. அவன் கிட்ட ஒரு பழைய டைப்ரைட்டர். அவன் அவங்க கொண்டு வர்ற லெட்டரப் படிச்சி காமிப்பான். அப்புறம அவங்க சொல்லுற பதில கடிதமா டைப் செஞ்சி குடுப்பான். அவங்க அவனுக்கு காசு குடுப்பாங்க. இது தான் அவனோட தொழில். அவனுக்கு ஒரு மனைவி அஞ்சாரு கொழந்தை. தினமும் இரவு சாப்பாடு ஒண்ணா உக்காந்து சாப்புடுவாங்க. அப்ப அவன் அன்னன்னிக்கி கேள்விப்பட்டதெல்லாம் கதையா சொல்லுவான். அவன் மனைவி சொல்லுவா, இவ்வளவு அருமயா கத சொல்லுறீங்களே, நீங்க ஏன் இத எழுதி புத்தகமா போடக்கூடாது. நமக்கும் நாலு காசு சேருமேன்னாளாம். அவனும், சரி அதுக்கு ஒரு நேரம் அமையட்டும் எழுதுறேன்னான். இப்பிடி இருக்கயில ஒருநா ஒரு பொம்பள தன் புருசன் அனுப்புன லெட்டரோட வந்தா. இவனும் படிச்சிக் காட்டுனான். சரின்னுட்டு அவ பதில் கடிதாசி போடணும்னாள். சரி சொல்லு எழுதுறேன்னான். அவ உருக்கமா சொல்லச் சொல்ல இவன் எழுதுனா. எழுதி முடிச்சதும், அத வாசிச்சிக் காட்டுன்னா அவ. இவனும் வாசிச்சிக் காட்டுனான். அவ இடைமறிச்சி, நீ நான் சொன்னத எழுதாம வெற ஏதோ எழுதியிருக்குற அப்படீன்னா. இவனும் சரி மறுக்கா சொல்லுன்னுட்டு திரும்பவும் அவ சொன்னதெல்லாம் அப்பிடியே எழுதுனான். இப்பவும் வாசிச்சி காட்டும்பொது அவளுக்கு திருப்தி இல்ல. இவனுக்கு அவளப் பாக்க பாவமா இருக்கு ஆனா அவ சொன்னத அப்பிடியே எழுதுனாலும் அவளுக்கு ஏன் திருப்தி ஆகலென்னு தெரியல. கடைசியா ஒரு தடவ முயற்சி செஞ்சி பாப்போமுன்னு சொல்லிட்டு எழுதுனப்பதான் தெரிஞ்சது. அவ பேச்சு வழக்குல சொன்னத இவன் அப்பிடியே இலக்கண சுத்தமா மாத்தி எழுதியிருக்கான்னுட்டு. அப்பிடி எழுதுனப்ப அவ மனசுல இருந்தத அப்பிடியே எழுத்துல கொண்டுவரமுடியல. இப்போ அவ சொன்ன மாதிரியே பேச்சுவழக்குல வார்த்தைகளப் போட்டு எழுதுறான். அவளுக்கும் அது புடிச்சிப்போச்சி. அப்ப அவனுக்குள்ள ஒரு பிரகாசம். உடனே தன் மொத நாவல எழுத ஆரம்பிச்சிட்டான். அந்த நாவல் கடித வடிவுல, வட்டாரப் பேச்சு வழக்குல அமைஞ்சது. இதுதான் முதல் நவீன நாவல்”. சொல்லிட்டு, “அந்த நாவலாசிரியர் பேரு மறந்து போச்சி. இன்டர்நெட்ல இருக்கும் தேடிப் பாரு”ங்குறாரு.

அப்புறம் வெளிய வந்ததும் தேடிப் பாத்தேன். அவரு சொன்ன மாதிரி ஒண்ணும் தகவல் கெடைக்கல. ஒருவேள பெருசு தன் சொந்த சரக்க எடுத்து விட்டுருக்காரோ என்னவோ. அப்பிடியே அது நெசமா இருந்தாலும் பள்ளிக்கூடப் பக்கமே போகாத இவருக்கு ஒரு ஆங்கில நாவல் தூண்டுதலா இருந்துருக்கும்னு நம்ப முடியல.

அப்புறந்தான் ஒருநா தற்செயலா இன்டர்நெட்ல பாத்தேன். சாமுவேல் ரிச்சர்ட்சன் தான் அந்த ஆங்கில நாவலாசிரியர். அவருதான் ஆங்கிலத்துல மொத மொதலா நாவல் எழுதுனாராங்குறது உறுதியாத் தெரியலன்னாலும், அவரு எழுதுன பமீலா-ங்குற நாவலோட வடிவம் கிரா ஐயா சொன்ன மாதிரிதான் இருக்கு. ஆங்கிலத்துல அத epistolary-ங்குறாங்க. அதுக்கு அர்த்தம், கடித வடிவுல கதை சொல்றது. ஆனா அது வட்டார வழக்குல இருக்கா இல்லயான்னு சொல்லமுடியல (அதுல ஒண்ணு ரெண்டு பக்கம் வாசிக்க இன்டெர்நெட்ல கெடைக்குது)

ஐயாகிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது, ஒரு கேள்விக்காக, ஏதோ ஒரு ஆங்கில வார்த்தைய தமிழ்படுத்தத் தெரியாம முழிச்சேன். அத சமாளிக்க, அந்தக் கேள்விய விட்டுட்டு, ஆங்கிலத்துல ஒரளவு வாசிக்கிறதால, வேலையிலும் ஆங்கிலத்துல புழங்குறதால இந்த தடுமாற்றம்னு காட்டுறதுக்காக, தமிழ விட ஆங்கில நாவல்கள் அதிகமா வாசிச்சிருக்கேன்னு சொன்னேன். தஸ்தாவ்யேஸ்கி, ஹெர்மன் ஹெஸ்சே, பாவ்லோ கொயெல்ஹோ, ஜாக் லண்டன் அப்பிடின்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போது, ஜாக் லண்டனா? என்ன நாவல்னு கேட்டாரு. “Call of the wild”, “White Fang”, “Sea Wolf” அப்புறம் “Adventure” அப்படின்னதும், “ரெம்ப சுவாரஸ்யமா எழுதுவாரு”ன்னாரு. ஜாக் லண்டனோட நாவல்கள் தமிழ் மொழியாக்கமா வந்துருக்கு. அவரு தமிழ்ல வாசிச்சாரா ஆங்கிலத்துலயான்னு கேக்காம விட்டுட்டேன். ஃபாக்னர், எம்மிங்வே எல்லாம் வாசிச்சிருக்காரு.

அப்றம் மெதுவா, சமகால எழுத்தாளர்கள்ல யார வாசிக்கலாம்னு தெரிஞ்சிக்கிறதுக்கு, உங்களுக்கு பின்னால வந்ததுல யாரு நல்லா எழுத்துறாங்கன்னு கேட்டேன். “ரொம்ப பேரு இருக்காங்க, தி.ஜா, சு.ரா எழுத்து எனக்கு பிடிக்கும்”. “எழுத்து எப்பிடி இருக்கணும்”னு கேட்டதுக்கு ஒரே வரியில “சுவாரசியமா இருக்கணும்”னு சொல்றாரு. அவர மாதிரி நம்ம சுத்தி நடக்கிற சுவாரசியங்கள நம்மால அவதானிக்க முடிஞ்சா நாமளும் அப்பிடி எழுதலாம்னு நெனச்சிக்கிட்டேன். இப்பெல்லாம் புது புதுத் தகவல், புது செய்திகள், அப்புறம, shock-value கதைகளுக்குத்தான மரியாத. புனைவுகளுக்கு இல்ல

நான் அவருகிட்ட பேசிக்கிட்டு இருந்த நேரத்துல அவரு வீட்டுக்காரங்ககிட்டயும் பேசிட்டு இருந்தேன். எல்லாரும் அவரு கதயில வர்ற பாத்திரங்கள் மாதிரி இயல்பா இருக்காங்க. அப்பிடி இல்லென்னாதான் ஆச்சரியம். கணவதி அம்மா இருக்கும்போது போயிருக்கலாமோன்னு தோணுது. ஆனா, அங்க இருந்தப்ப,  அதப்பத்தி துக்கம் விசாரிக்கக்கூட எனக்கு ஏனோ தோணல. என்னோட மனசுல அவரு வயசு காரணமாவோ அம்மாவோட இழப்பு காரணமாவோ ரெம்ப நெகிழ்வா இருப்பாருங்குற எண்ணம். ஆனா அவரு இவ்வளவு தெளிவா தெம்பா இருக்குறதப் பாத்ததும், அவரோட எழுத்துலக சாதனவிட இந்த வயசுலயும் இவ்வளவு தீர்க்கமா தெளிவா இருக்குறதுதான் சாதனைன்னு தோணுது. ஒரு நல்ல  வாழ்க்கைதான் மிகப்பெரிய சாதனை. 98 வயசானாலும் Alchemist கதயில வர்ற ஆடு மேக்கிற பய மாதிரிதான் எனக்கு தெரியிறாரு. எடதுகையில சின்ன பிரச்சனை இருந்தாலும் வலதுகை வழக்கம்போல எழுதிக்கிட்டுதான் இருக்கு. எழுத்துன்னு ஒண்ணு இருக்குறவரைக்கும் இவரும் இருப்பாரு. இல்ல, அதுக்கு மேலயும் இருப்பாரு. இப்பதான் ஒரு விசயம் இப்ப ஞாபகத்துக்கு வருது. Visual StoryTelling (இதத்தான் தமிழாக்க முடியாம தட்டழிஞ்சேன்) பல வருசத்துக்கு முன்னால youtube-ல ஒரு முயற்சி செஞ்சிருக்காரு. தேடிப் பாருங்க.

பார்த்தா

முந்தைய கட்டுரைஆதி இந்தியர்கள் – ஒரு நச்சுநூல்-கடலூர் சீனு
அடுத்த கட்டுரைநமது சமரசங்கள்