யுவன் 60

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி

இன்று [14-12-2020] காலையில் எழுவது மிகவும் பிந்திவிட்டது. மும்பையில் மகாராஷ்ட்ரா கிரிக்கெட் அசோஷியேஷனின் மாபெரும் விடுதியில் இருக்கிறேன். ஓர் இந்திப்படம். சரத்பவாரால் உருவாக்கப்பட்ட இந்த மையம் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம், தங்கும்விடுதி, உணவகங்கள் ஆகியவை கொண்டது. மும்பையின் உயர்குடி மையங்களில் ஒன்று.

காலையில் எழுந்ததும் முதல் அழைப்பை கண்டேன், யுவன். கூடவே ஒரு குறுஞ்செய்தி. மோகன், நான் அறுபதில் நுழைகிறேன். மனம் மலர்ந்துவிட்டது. எண்ணினாலே மலரவைக்கும் முகம் அவனுடையது. அழகன். சிரிப்பதற்குத் தெரிந்தவன். குறும்புக்காரன். நான் அவனை ஃபோனில் அழைத்தேன். ”டேய், இங்கபார் அறுவது ஆயிட்டுது. இனிமேலாவது புத்தியோட இருக்கப்பாரு” என்றேன்.

“நாங்க என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்?” என்றான்.

வழக்கமான நையாண்டி நக்கலுடன் அரைமணிநேரம் பேசிக்கொண்டோம். செல்லவேண்டிய பயணங்களைப் பற்றித்தான் மிகுதியும். வழக்கமான நெகிழ்வுகளும் உண்டு. நூறாண்டு வாழ்க என வாழ்த்தினேன்.

எழுத்தாளனாக யுவன் பற்றி நிறையவே எழுதிவிட்டேன். ஒரு நூலாக ஆக்கமுடியும். இன்னமும் அவன் கதைகளைப் பற்றி நிறைய எழுதவேண்டும். மனிதனாக எனக்கு தெரிந்த யுவன் இத்தருணத்தில் உடன் நினைவிலெழுகிறான்.

யுவன் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவன். அவன் மனைவியும் தபால்நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மிக இளமையிலேயே நல்ல வேலைக்குச் சென்றவன். இன்னொரு பக்கம் கஞ்சன் என்று சொல்லத்தக்க சிக்கனவாதி. அவன் செலவுசெய்வது முக்கியமாக காலணிகளுக்காக மட்டும்தான். அவன் கால்களில் பிறவியிலேயே வந்த தோல்தடிப்பு நோய் உண்டு. விரைந்து நடக்கமுடியாது. நீண்டநேரம் நடந்தால் கொப்புளங்கள் வரும். பயணங்களில் நான் பணிவிடைகள் செய்யவேண்டியிருக்கும். ஆகவே செருப்புகள்மேல் ஒரு பற்று.

ஆனால் யுவனிடம் பெரிய சேமிப்புகள் ஏதுமில்லை. அவன் மகனும் மகளும் அபாரமாக படித்து நல்லவேலைக்குச் சென்றமையால் பொருளியல் சிக்கல்களும் இல்லை. அவன் சேமிக்க முடியாமல் போனமைக்குக் காரணம் வாழ்நாள் முழுக்க தன் உறவினர்களை பேணியவன் என்பதுதான். அவற்றை இங்கே சொல்வது தனிப்பட்ட செய்தியாகிவிடும். ஆனால் இளமையிலேயே மறைந்த அவன் தந்தை இருந்திருந்தால் என்னென்ன செய்திருப்பாரோ அதையெல்லாம் வாழ்நாள் முழுக்க செய்துகொண்டிருந்தான்.

அவன் எழுத்தில் வந்துகொண்டே இருப்பவர் அவன் அப்பா. வைகைக்கரையில் கரட்டுப்பட்டி என்ற ஊரில் மிகச்சிறிய உணவகம் நடத்தியவர். அங்கே ஒரு சிறு ஆலயத்தில் பூசையும் செய்தார். இளமையிலேயே குடல் சிக்கல் வந்து இறந்தார். யுவன் குடும்பம் பலவாறாக அலைக்கழிந்து மதுரை வந்து அவனுக்கு வேலைகிடைத்ததும் மீண்டது.

யுவன் இளமையில் வறுமையை அறிந்தவன். அவனுடைய நையாண்டிப்பேச்சுக்கான ஒரு காரணத்தை ஒருமுறை சொன்னான். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒற்றைவேட்டி கட்டிக்கொண்டு வகுப்புக்குச் சென்றவன் அவன். அந்த தாழ்வை மறைக்க சுவாரசியமான அரட்டையாளனாக, பிறர் விரும்புபவனாக, பாடகனாக தன்னை அவன் ஆக்கிக்கொண்டான்.

யுவனின் வாழ்க்கை என்பது அவனுடைய தந்தைக்கு அவன் செய்யும் கடன் என அமைந்ததோ என எண்ணுவதுண்டு. அவரை நினைத்துக்கொண்டே இருக்கிறான். அவரைப்பற்றி எழுதிக்குவித்திருக்கிறான். அவர் விட்டுச்சென்ற எல்லா கடமைகளையும் மிகச்சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறான். அவர் பூசைசெய்த அந்த பிள்ளையார் கோயிலுக்குச் சென்று ஒருநாள் பூசாரியாக இருந்தான். அன்று கண்ணீர் விட்டு அழுததாகச் சொன்னான். பலவகையிலும் அசோகமித்திரனின் வாழ்க்கை.

சிற்றிதழ் இலக்கிய மரபில் தந்தையுடனும் குடும்பத்துடனும் முரண்படுவது, எங்கும் பிடிப்பில்லாமல் அலைவது, ‘கலகக்காரனாக’ இருப்பது போன்றவை ஒரு வகையான கவற்சியுடன் எப்போதுமே பேசப்படுகின்றன. இளைஞர்களுக்கு அவை பிடித்திருக்கின்றன — வாசிக்கவரும் வயதில் இளைஞர்கள் அந்த மீறல் மனநிலையில் இருக்கிறார்கள். எரிச்சலும் ஆற்றாமையும் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் பார்வையில் யுவனின் வாழ்க்கை ‘குமாஸ்தாத்தனம்’ கொண்டது என்று தோன்றலாம். ’தயிர்சாத வாழ்க்கை’ என்று பழிக்கப்படலாம். ஆனால் அதில் அடங்கியிருப்பது ஒரு மிகப்பெரிய விழுமியம். அந்த வாழ்க்கையில் ஆன்மிகமான உறுதியும் கடந்துசெல்லும் நிமிர்வும் உள்ளது. அதை காணும் கண் இல்லாதவர்கள் இந்தியாவை காண முடியாதவர்கள்தான்.

நம் நாடு மாபெரும் பஞ்சங்கள் வழியாக கடந்து வந்தது. நம்மில் பெரும்பாலானவர்கள் அடித்தள வாழ்க்கையிலிருந்து மேலெழுந்து வந்தவர்கள். யுவன் கதைகள் ஒன்றில் மாலையில் மிஞ்சிய உணவுடன் வீடுதிரும்பும் அப்பாவை திருடன் வழிமறிக்கிறான். கத்தியை காட்டி மிரட்டுகிறான். “ஒரேயடியா போட்டுடா. புண்ணியமாப்போகும். தாங்கமுடியலை” என்கிறார். அவன் கத்தியை தாழ்த்திவிடுகிறான். அந்த நிலையிலிருந்து நம் குடும்பங்கள் மேலெழுந்து வந்தது ஆழமான குடும்பப்பற்றினால். எவரேனும் சிலருடைய தியாகத்தால்.

என் வாழ்க்கையில் அவ்வண்ணம் நிகழவில்லை. ஆனால் என்னைச்சூழ்ந்து அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நாஞ்சில்நாடன் இல்லையேல் அவருடைய பெரிய குடும்பம், அவருடைய தம்பியர் என்ன ஆகியிருப்பார்கள்? ஒருவகையில் பெருங்கொடையாளர்கள் இவர்கள். இந்த விழுமியம் கொஞ்சம் கொஞ்சமாக தேவையில்லாமல் ஆகிக்கொண்டிருக்கிறது. உடன்பிறந்தார், உடன்பிறந்தாரின் மைந்தர்கள் ஆகியோருடன் இன்று பலருக்கு தொடர்பே இல்லை. இப்படியெல்லாம் வாழ்க்கை இருந்தது என்று சொன்னால் வரப்போகும் தலைமுறை வியக்கக்கூடும்.

குடும்பப்பற்று என்னும் விழுமியம், குடும்பப்பொறுப்பு என்னும் நெறி இந்தியாவை அதன் இடர்களில் இருந்தெல்லாம் காப்பாற்றியிருக்கிறது. பலகோடி பெண்களுக்கு வாழ்வளித்திருக்கிறது. பலகோடி குழந்தைகளை பட்டினியில்லாமலாக்கியிருக்கிறது. அதைப்பற்றி நம் இலக்கியங்களிலேயே குறைவாகத்தான் பேசப்பட்டிருக்கிறது. ஏனென்றால் நவீன இலக்கியத்திற்கு ஒரு எதிர்மறைத்தன்மை உண்டு. பொதுவாக நம்பப்படுவனவற்றுக்கு எதிராக, மாறாக அது பார்க்க விழைகிறது. விடுபடல்கள் திரிபுகள் கள்ளங்களை மட்டும் அடிக்கோடிட்டுச் சொல்கிறது. உயர்விழுமியங்கள் மேல் அதற்கு மாறாத ஐயம் உள்ளது. மானுடமேன்மைகள் மீதே ஐயம் உள்ளது.

எண்ணிப்பார்க்கையில் வியப்பு. அந்த விழுமியங்களை வாழ்நாளெல்லாம் கடைப்பிடித்தவர்கள் கூட அவ்விழுமியங்களை உயர்த்தி எழுதவில்லை. அவற்றை மெல்லிய கசப்புடன், கிண்டலுடன், மறுப்புடனேயே எழுதியிருக்கிறார்கள். அசோகமித்திரன் எழுதியதில்லை. யுவன் கதைகளில் அவன் வாழ்க்கையின் இந்த பொறுப்புகளும் சிக்கல்களும் வந்ததே இல்லை. அவனுடைய தேடலென்பது மானுடர் கொள்ளும் மாறுவேடங்கள், திரிபுநிலைகள் சார்ந்தே இருந்து வந்துள்ளது

ஆனால் இது நவீனத்துவத்தின் சிக்கல். லா.ச.ரா எழுதியிருக்கிறார். பாற்கடல் போன்ற ஒரு கதை இந்த விழுமியத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு. அதை நவீனத்துவ மனம் ‘செண்டிமெண்ட்’ என்று சொல்லிவிடக்கூடும். அப்படி சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சியே மகத்தான பலவற்றை தவிர்த்து சிறியவற்றை பொறுக்க ஆரம்பித்தனர் நவீனத்துவர். நவீனத்துவத்தை கடக்கும் யுவன் அந்த உன்னதத்தை இசை, நாடோடிஆன்மிகம் என்னும் இரண்டு களங்களிலேயே சந்திக்கிறான். குடும்பத்துக்குள் அல்ல.

இன்று காலை நிறைந்து ததும்பிக்கொண்டிருக்கிறேன். என் நண்பனின் பிறந்தநாள் என்பதற்காக மட்டுமல்ல. நாம் எதை இந்த மண்ணின் உயிர்ப்பு என நினைத்திருக்கிறோமோ அது இன்னும் அதே அழகுடன் இங்கே பொலிகிறது என்ற எண்ணத்தாலும்.

நூறாண்டு வாழ்க!

யுவன் சந்திரசேகரின் புனைவுலகம்- உரைகள்
யுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்
நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்
யுவன் சந்திரசேகரின் ஊர்சுற்றி – கடலூர் சீனு
யுவன்
யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் ஒரு மதிப்புரை
சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்
யுவன் வாசிப்பரங்கு
மாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்
கதையாட்டம்- யுவன் சந்திரசேகரின் கதைகள்
கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘
பகடையாட்டம் – சௌந்தர்

முந்தைய கட்டுரைமிட்டி இத்தர்- [நாடகம்] ஸ்வேதா
அடுத்த கட்டுரைநீலமும் இந்திய மெய்யியலும்