யானைடாக்டர்- கடிதம்

திரு.ஜெயமோகன் அவர்கட்கு,

வணக்கம். ‘யானை டாக்டர்’ கதையை மீண்டும் ஒருமுறை படித்தேன். ‘யானை டாக்டர்’ தொன்மம் என்ற தங்கள் பதிவு குறித்த எனது கேள்வியுடன் அனுப்பிய சிறு கடிதம் எவ்வளவு அபத்தமானது என்று எனக்கே புரிகிறது. மன்னியுங்கள். அக்கதையை சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. கடிதம் எழுதும் முன் மீண்டும் ஒருமுறை படித்திருக்க வேண்டும்.

காட்டில் வீசப்படும் மது குப்பிகளால் யானைகள் பாதிக்கப்படுகின்றன என்ற ஒற்றைச் செய்தியைச் சொல்லும் அல்லது வலியுறுத்தும் ஒரு கதை இல்லை அது. பலரால் அவ்வாறு புரிந்து கொள்ளப்படலாம். நான் உட்பட அப்படித்தான் புரிந்து கொண்டேன்.

அது மட்டும்தான் நோக்கமாக இருந்திருந்தால், யானை டாக்டர் குறித்து உங்கள் ஒரு கட்டுரையே போதும். காட்டில் வாழ்ந்து காட்டை நேசித்து அதில் ஒரு அங்கமாக மாறிவிட்டார் டாக்டர்.கே. அவரும் அந்தக் காட்டின் ஒரு துளி.

நடிப்பில் சாதிப்பது பற்றி ‘காவியத் தலைவன்’ படத்தில் ஒரு உரையாடலில் எழுதியுள்ளீர்கள் காளி கூறுவான் ‘கைதட்டல் எல்லாம் வேண்டாம், அந்த இடத்திற்கு போய்விட்டேன் என்று எனக்குத் தெரிந்தால் போதும்’. அந்த இடத்தில் வாழ்ந்தவர்தான் டாக்டர்.கே. அந்த இடத்தில்தான் நீங்களும் வாழ்ந்து கொண்டு இருக்குறீர்கள். நீங்களும் ஒரு ‘யானை டாக்டர்’தான்.

வலிகளை கவனிக்கறது ரொம்ப நல்ல பழக்கம்அதைமாதிரி தியானம் ஒண்ணும் கெடையாதுநாம யாருநம்ம மனசும் புத்தியும் எப்டி ஃபங்ஷன் பண்ணறது எல்லாத்தையும் வலி காட்டிரும்வலின்னா என்னசாதாரணமா நாம இருக்கறத விட கொஞ்சம் வேறமாதிரி இருக்கற நிலைமைஆனால் பழையபடி சாதாரணமா ஆகணும்னு நம்ம மனசு போட்டு துடிக்குது

அதுதான் வலியிலே இருக்கற சிக்கலே….பாதி வலி வலிய கவனிக்க ஆரம்பிச்சாலே போயிடும்” ரமண மகரிஷி ‘யாருக்கு வலினு’ கவனினு சொன்ன போதனையை நினைவுபடுத்தியது.

உண்மையிலே மனுஷன்தான் இருகக்றதிலேயே வீக்கான மிருகம்மத்தமிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்கறதில இருக்கிற கம்பீரத்தைப்பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும்” 

 உண்மைதான் உலகம் தோன்றியதில் இருந்து விலங்களும் செடி கொடிகளும் எப்படி வாழ்ந்தனவோ அப்படியே வாழ்ந்து வருகின்றன. ‘ஆறாம் அறிவு’ மனிதனை இயற்கைக்கு எதிராகவே போரிட வைக்கிறது. மரபணு மாற்றம் செய்து கொண்ட ஒரே பிராணி மனிதன்தானே. தனக்கு மட்டுமல்ல மற்ற ஜீவராசிகளுக்கும் மனிதன் மரபணு மாற்றம் செய்ய விழைகிறான். இயற்கை விதிகளுக்கு எதிராக இயங்க மனிதனால் மட்டுமே முடியும்.

நான் யோசித்துப் பார்த்து இருக்கிறேன். உலகின் மொத்த மனித இனத்தையும் அழித்துவிட்டால் உலகம் காடுகளால் விலங்குகளால் நிரம்பும். உலகம் அதன் முழு கொள்ளவில் வாழும். தன் மீட்சி பெரும். பூமிபந்துக்கு அந்நியமாய் மாறிவிட்ட ஒரே உயிரி மனிதன். அவன் ஒரு செல் உயிரிக்கும் கீழானவன்.

 புழுக்களை பாத்தாலே பெரும்பாலானவங்களுக்கு பயம்… அந்த பயம் எதுக்காகன்னு எப்பவாவது கவனிச்சா அதை தாண்டி போயிடலாம்பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும்அப்டியே உதுந்துடும். ..” 

உண்மைதான். வலி, பயம், அவமானம், பெருமை, புகழ் அனைத்தும் மனதின் உருவகங்களே அன்றி உண்மையில்லையே.

 நான் என்ற நினைப்பே என்னை கூசச்செய்ததுஎன் உடம்பே அழுக்குபட்டு நாறிக்கொண்டிருப்பது போலிருந்ததுஅழுக்குச்சட்டையை கழற்றிவீசுவதுபோல என்னை உதறிவிட்டு நான்குகால்களுடன் அந்த அதிதூய பசுமைவெளியில் பாய்ந்துசெல்லவேண்டும்இந்த காற்றும் இந்த வெயிலும் என்னை அன்னியமென ஒதுக்காமல் அணைத்துக்கொள்ளும்அங்கே வலி உண்டு நோய் உண்டு மரணம் உண்டுஆனால் கீழ்மை இல்லைஒருதுளிகூட கீழ்மை இல்லைஉன்னை நன்கறிந்த எவரும் அருவருத்து விலகுவர்உயிர் கொண்ட கீழ்ததரப் புழுதியே நீ’”

இயற்கையை பார்த்து வியந்து ஒருவன் மேற்கண்ட வரிகளை உணர்ந்தால் அவனது வாழ்வு அந்த இடத்தில் வேறு திசையில் பயணப்படும். யானை டாக்டர் இயற்யாகவே மாறிவிட்ட மனிதப் பிரக்ஞையின் உச்சம். அதனை இயற்கையும் மற்ற உயிர்களும் சுவீகரித்துக் கொள்ளும். அந்த மனிதப் பிரக்ஞை இயற்கையால் ஏற்றுக் கொள்ளவோ நிராகரிக்கப்படாமலோ அன்றி தன்னில் ஒரு அங்கமாகவே சேர்த்துக் கொள்ளப்படும். யானைகள் வாழ்வு குறித்து எளிமையாக எழுதப்பட்ட சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய கதை என்று சொன்ன எனது கீழ்மையை மன்னியுங்கள். இது அறியாமை.

எனது கடிததிற்கு வழக்கமான எழுத்தாளர்களைப் போல் ‘நன்றி. தொடர்ந்து என் கதைகளை படியுங்கள்’ என்று நீங்கள் இரண்டு வரி பதில் எழுதியிருந்தால் நான் உங்களை கடந்து போயிருப்பேன் என் அறியாமையை உணராமல். நின்று உங்களையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். தினமும் உங்கள் வலைதளத்தில் உங்கள் எழுத்துக்களை வாசித்து கொண்டே இருக்கிறேன். எத்தனை கோணங்களில் எத்தனை பதிவுகள். ஒன்றில் இருந்து ஒன்று அதிலிருந்து ஒன்று என்று பின்தொடர்ந்து கொண்டே செல்லலாம். உங்களோடு மனதில் உரையாடிக் கொண்டே இருக்கிறேன்.

நான் இமயமலை முன்பு நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். பெரிய மலை என்று பார்க்காமலே கேள்விப்பட்டேன். தூரத்தில் இருந்து பார்த்து அப்படி ஒன்றும் பெரியமலை இல்லை என்கிறேன். ஏறிவிடலாம் என்று நினைக்கிறேன். சிறிது பக்கத்தில் பார்த்து வியக்கிறேன். அருகே வந்து இரு கைகூப்புகிறேன். இது கடந்து விடமுடியாதது என்று புரிகிறது. என் அவதானிப்புகள் இமயமலைக்கு ஒரு பொருட்டே அல்ல. ‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்பது போல் உங்கள் எழுத்தை புரிந்து கொள்ள என்னை தாங்கள் ஆசிர்வதிக்க மனதாற வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆர்.பிரேம் ஆனந்த்.

அன்புள்ள பிரேம் ஆனந்த்

அத்தனை பெரிய சொற்களெல்லாம் தேவையில்லை. பொதுவாக ஆழமாக எழுதப்பட்ட எந்தக்கதையும் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் கொண்டிருக்கும். அந்தக்கதை யானையைப் பற்றியது என்றால் ஏன் புழுக்கள் அத்தனை பேசப்பட்டிருக்கின்றன, ஏன் செந்நாய்கள் வருகின்றன. அது யானைடாக்டரைப்பற்றிய கதை என்றால் ஏன் விலங்குகளும் காடும் அந்த அளவுக்கு பேசப்பட்டுள்ளது? அந்தக்கேள்விகள்தான் கதையின் அடுத்த தளத்துக்கு கொண்டுசெல்பவை. எப்போதும் எளிய வாசிப்பிலிருந்து அந்த மேலதிக வாசிப்பைநோக்கிச் செல்லவே நான் வாசகர்களை தூண்டுவேன்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசும் குழந்தையும்
அடுத்த கட்டுரைதாண்டிக்குடி கல்வட்டங்கள்- ராஜமாணிக்கம்-2