மிட்டி இத்தர்- [நாடகம்] ஸ்வேதா

(இருட்டினில் குரல்கள் கேட்கின்றன)

இப்னு  : மிஹிர் உன்-நிசா! இங்கு அந்த முட்டாள் இல்லை. அவன் போய்விட்டான்!

நூர் : ப்ச்ச்! அவர் மட்டுமே என்னை அப்படி அழைக்கலாம்! உங்களுக்கும் இவர்களுக்கும் நான் எப்போதும் நூர் ஜஹான்!

(கதவு திறக்கும் ஒலி கேட்கிறது. ஓர் ஒல்லி இளைஞன் அறையின் விளக்குகளைச் சொடுக்கிவிட்டு வந்த வழியே ஓடி மறைகிறான். அழுக்கு மஞ்சள் நிறத்தில் முழுச் சுவரை மறைக்கும் ஒரு சுவரொட்டி வெளிச்சத்தில் மெல்ல தெரிகிறது. சாம்பல் நிற சிமெண்ட் சுவர் அதன் கிழிந்த ஓரங்களிலிருந்து எட்டிப்பார்க்கிறது.

வெண் பச்சை அங்கி அணிந்து, அடர் பச்சையில் முண்டாசு கட்டிய ஒரு தாடிக்காரர் தன் கூரிய பார்வையை வலப்பக்கம் செலுத்தியபடி சட்டகம் ஒன்றிலிருந்து எட்டிப்பார்க்கிறார். மரத்திற்கும் சித்திரத்திற்கும் இடையே ஆங்கிலத்தில் ஒரு பெயர் தட்டுப்படுகிறது Ibn-Sena (980-1037AD). வலப்புறம் மற்றொரு சதுரத்தில், ஒற்றை ரோஜா மலரை நாசி அருகே பிடித்தபடி நடுத்தர வயது ராணி ஒருத்தி வீற்றிருக்கிறாள். அவளது பெயர் அங்கு எங்கும் தென்படவில்லை. “அக்பருதீன்” என்னும் நாமம் மட்டும் ஓரத்தில் சற்று சறுக்கலாகத் தீட்டப்பட்டிருக்கிறது. “அனைத்து வகையான டெபிட்/க்ரெடிட் கார்டுகள் இங்குப் பெற்றுக்கொள்ளப்படும்” என்னும் அறிவிப்பும் அவர்களோடு அங்கு மாட்டப்பட்டிருக்கிறது.)

இப்னு : கொஞ்ச நாளாக மழையே பெய்வதில்லை!

நூர் : மழை பெய்து ஓய்ந்தபின் கமழும் மணம்… ஏன் என்னால் இப்போது நினைவுகூர முடியவில்லை? (சிணுங்கி) என்ன பயங்கர நெடி!

(கீழே கருப்புப் பலகைகள் மீது ஏழெட்டு கண்ணாடிப்புட்டிகள் சரிவர மூடாமல் வைக்கப்பட்டிருக்கின்றன. அருகில் புட்டிகளை அடைத்து வைக்கப் பயன்படும் டப்பாக்கள் விரல் பட்டுத் தவறிச் சரிந்தவைபோல் சிதறிக்கிடக்கின்றன)

இப்னு : பாரசீகத்தில், எங்கள் முன்னோடி ஜபீர் எழுவித்த பட்டறைக்கு நீ வந்திருக்க வேண்டும். இதை விட நூறு மடங்கு வலுவான நெடி உன் சிறிய நாசிகளை துளைத்திருக்கும். (நெஞ்சாங்கூடு தெரியும்படி மூச்சிழுத்து) லட்ச நறுமணங்கள் ஒன்றோடொன்று முட்டி மோதி முயங்கி எழுப்பிய சுகந்தம் அல்லவா அது! (இடக்காலைப் புட்டிகள் திசையில் நீட்டி) வெறும் கழுநீரைச் செய்கிறார்கள்! செய்முறையில்  எத்தனை பிழைகள்! அந்நாளிலிருந்தே.. இதே கன்னூஜ் நகரில் விமர்சையாக நடந்த வேள்விகள் அனைத்திலும் ஊற்றப்பட்ட வாசனைத் திரவியங்கள் எங்கள் பட்டறையில் காய்ச்சி செய்தவை. இருபதாயிர எருதுகளைத் தீயிலிட்டால் என்னவாகும்? இரண்டு லட்ச ரோஜா மொட்டுகளின் மணம் வருமம்மா! இரண்டு லட்சம்! ஹா!

நூர் : பிழைகளா? பட்டறைகளா?

இப்னு : அது… ? எட்டு மாடுகள் கொள்ளும் கொட்டகையளவு இருக்கும். அந்த மடையன் இக்பால் இருக்கிறானே! அவன் தந்தை அக்பருதீன் அவனைப் போலில்லை, கண்ணியவான். கனவான். கொஞ்சம் கனமானவனும் கூட. அங்கே தன் முன்னோர் படங்களின் வரிசையில் முதலாவதாக என்னை மாட்டியிருந்தான். அவன் முன்னோர்களுக்குத் தான் எத்தனை பொறாமை! என் பக்கம் திரும்பி சதா வசைகளைப் பொழிந்து கொண்டிருந்தார்கள். இத்தர் மணத்தில் திளைக்கவும், என் அன்பு அக்பருதீன் அருகிலிருக்கவும் அவர்களைப் பொருட்படுத்தாமல் அங்கேயே வெகு நாட்கள் கழித்தேன். அக்பருதீன் என் மருத்துவ ஏடுகளைப் படித்திருந்தான். நான் எழுதிய தத்துவ நூல்களையும் படித்திருந்தான். ஆனால் அவன் பட்டறையில் இத்தர் காய்ச்சி தயாரிக்கும் முறை நான் கண்டுபிடித்தது என நினைத்திருந்தான்! தனது செய்முறை ஆயிரம் ஆண்டுப் பழமையானவை எனப் பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிப் புளகாங்கிதமடைந்தான். உண்மையில் அவன் என்னை விடப் பின்தங்கியிருந்தான்! (ஆவேசமாய்) மிஹ…நூர்? நூர்? எங்கே சென்றாய்?

நூர் : அந்த மலர் மணம் இழந்து விட்டது. அதை மாற்றினேன் (மலரை இன்ஹேலர் வாக்கில் மீண்டும் முகர ஆரம்பித்தாள்) மேலே சொல்லுங்கள்.

இப்னு : நல்லது. ரோஜாக்கள் மணமிழக்கக்கூடாது. குறிப்பாக இதய நோயாளிகளின் கையில் இருப்பவை.

(சிந்தனையில் ஆழ்ந்து) மலர், மரம் மற்றும் நீர் கலவையைப் பெரிய பெரிய செம்பு பானைகளில் கொதிக்க விடுவார்கள். சில மணிநேரங்களில் ஆவி மேலெழுந்து நீண்ட மூங்கில் குழாயின் வழி வெளியேறி, சந்தன எண்ணெய் கொண்ட குவளைகளில் சென்று சேரும். அவ்வாறு கிடைக்கும் இத்தரிலிருந்து நீரைப் பிரித்து, மாட்டுத் தோல் குப்பிகளில் நிரப்பி வெயிலில் உலர்த்துவார்கள். இது என் காலத்திலேயே மிகவும் பழைய செய்முறை. இதில் நான் ஒரு சிறிய மாற்றமே கொண்டுவந்தேன். நீராவியை மட்டும் வெளியேற்றி, நறுமண மூலக்கூறுகள் சிதறுண்டு போகாமல் திரவமாக மாற்றும் ஒரு நீண்ட குழாயை வடிவமைத்தேன். அறுதியாக எஞ்சும் எண்ணெய்யின் செறிவையும் கூடவே நறுமணத்தையும் இருபது மடங்கு அது பெருக்கியது. ரோஜா இதழ்களைக் கொண்டு உருவாக்கிய இத்தகைய கரைசல்களைப் பெரும்பாலும் என் மருத்துவ முயற்சிகளுக்கே பயன்படுத்தினேன். பாரசீக பட்டறைக்காரர்கள் என் வழிமுறையைப் பின்பற்றிப் பல மலர்களையும், இலைகளையும் கொண்டு இத்தர்களை காய்ச்சினார்கள். தன் இந்திய எகிப்திய சகாக்களை சில ஆண்டுகளிலே பின்னிற்குத் தள்ளினார்கள்.

நூர் :(கொட்டாவியை அடக்கியதால் துளிர்த்த கண்ணீரைத் துடைத்து) பிறகு பட்டறையிலிருந்து இந்தச் சுவருக்கு எதற்காக வந்தீர்கள்?

இப்னு : (சோகம் கவ்வியதால் துளிர்த்த கண்ணீரைத் துடைத்து) அக்பருதீனிற்கு முதலில் அசல் சந்தன எண்ணெய் கிடைப்பதில் சிக்கலாயிற்று. சூரிய உதயத்திற்கு முன் ரோஜா, மரிக்கொழுந்து மற்றும் மல்லிகை மலர்கள் பறிக்கும் ஆட்களும் வேறு இந்தியப் பெருநகரங்களுக்குக் குடி பெயரத் தொடங்கினர். பிற இத்தர் தயாரிப்பாளர்கள் சந்தன எண்ணெய்க்குப் பதில் மலிவான ரசாயனங்களையும், அன்று பறித்த பூக்களுக்கு மாறாக உலர்ந்த பூக்களையும் பயன்படுத்தத் தொடங்கினர். அவர்களது வாசனை மிகுந்த செயற்கை இத்தர்களுக்கு முன் அவனும் அவனது இத்தரும் வெறுமே வெயிலில் காய்வதை என்னால் வேடிக்கை காண முடியவில்லை. அவனிடம் என் நுட்பங்களைப் பகிரத் துடித்தேன். வெயில் பொழிந்த ஒரு மதிய வேளையில், அவனது பிரம்மாண்ட உருவம் தோல் குப்பிகளுக்கருகே தனியாய் நின்றிருந்தது. பிற இடங்களில் அல்லாமல் அவன் முதுகில் மட்டும் நிழல் படிந்து அவன் கம்பீரத்தைக் குலைப்பது போல் எனக்குத் தோன்றியது. உள்ளுணர்வு உந்த, “அக்பருதீன்!” என்று உரக்கக் கூவி விட்டேன். அவன் அழைத்தது நான் என்று உணர்ந்த மறுகணம் மூர்ச்சையாகி விட்டான். பத்து நாட்களில் அவன் முன்னோர்களின் உற்சாக வரவேற்புடன் படமாக வந்து சேர்ந்தான். அவனிடம் என் தரப்பைக் கூறுவதற்குள் என்னை கழட்டி இங்கே விட்டு விட்டார்கள்! (விசும்பல் அதிகரித்து)என் ஒரே ஆறுதல் இன்று நீயும் மழையும் தான்.

நூர் : மனிதர்கள் முன் அசைவதே விதிமீறல். இதில் பேச வேற முயன்றீரோ?! இன்னும் ஒரு முறை விதி மறந்தீர்களென்றால் (சட்டகத்தைக் காட்டி) இது உயிரற்ற ஓவியமாகத் தான் எஞ்சும், தங்கள் உறைவிடமாக இருக்காது!

இப்னு : (சில நிமிட அமைதிக்குப் பின்) அப்படி ஒன்று நிகழ்ந்தால்… சவூதியில் மட்டும் இருநூற்றைம்பது ஓவியங்கள் இருக்கின்றன. இல்லை இங்கே லக்னோ அருங்காட்சியகத்தில் நீல நிற அங்கியில் நான் புத்தகங்களுடன் வீற்றிருக்கும் ஓவியம் ஒன்றிருக்கிறது. அதில் புகுவேன். என்ன… சற்று வயதானவனாக வரைந்துவிட்டிருப்பான். தலை முழுதும் நரைத்திருக்கும்.

(முகம் மலர்ந்து)அதே அருங்காட்சியகத்தில் நீயும் இருப்பாய். ஆனால் எனக்கு உன் கணவன் முன் அளவளாவ முடியாதே!

நூர் :(நாசிகள் பிளக்க) நான் என் கணவரிடம் விடைபெற்று இங்கு அவ்வப்போது வருவது மழைக்காகத் தான் ஒழிய உங்களுக்காக அல்ல! (ரோஜாவை மீண்டுமொருமுறை முகர்ந்து) மன்னிக்கவும். நீங்கள் என் தந்தை அல்ல… பாட்டனாரை ஒத்தவர். நான் என் காலத்தில் உங்கள் நூல்களைப் படித்ததில்லை. என் கணவருக்கு அவர் சிறு வயதின் கசந்த நினைவுகளில் ஒன்றாக உங்கள் ஏடுகள் இருப்பதால் தங்கள் மீது எந்தவொரு நன்மதிப்பும் இல்லை. ஆனால் என் மாமனாருக்கு உங்கள் தத்துவ நூல்கள் மீது பெரும் மோகம். எங்கள் அரண்மனை வைத்தியர் கூட உங்கள் மருத்துவக் குறிப்புகளை மனனம் செய்து தான் காலத்தை ஓட்டினார். உங்களை இவ்விதம் அறிந்த எனக்கு என்னிடமும் இக்பாலிடமும் நீங்கள் நடந்துகொள்ளும் முறை-

இப்னு : (இடைமறித்து) நான் வாழ்வின் நீளத்தை விட அகலத்தைக் கணக்கில் கொள்பவன். நூறாண்டுகளுக்கு ஒரு முறை தான் உன் மாமனார், அக்பருதீன் போன்ற அபிமானிகள் அமைகிறார்கள். இக்பால் போன்ற மடையர்கள் தருவிக்கும் சோர்வை அகற்ற என் நெறிகளைத் தளர்த்துவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நீ தவறாக நினைக்காதே! நீ மழையை ஒத்தவள்! உன் இருப்பை நான் மிகவும் விரும்புகிறேன்.

(வெளியே பேச்சுக் குரல்கள் கேட்கின்றன. கதவு திறக்கிறது. ஒல்லி வாலிபனுடன் ஓர் இளம்பெண் நுழைகிறாள். வெளிர் நிற சட்டையும், பாவாடையோ என்று ஐயப்பட வைக்கும் விசாலமான காற்சட்டையும், எட்டு கோணங்கள் கொண்ட கருப்பு கண்ணாடியும் அணிந்திருக்கிறாள். பேசும் ஆங்கிலத்தில் ஸ்காட்டிஷ் வாடை அடிக்கிறது)

ஜஸ்மின்  :  (மூக்கை மறைத்து) என்ன பயங்கர நெடி!

இக்பால் : மன்னிக்கவும். தமிழ் நாட்டிலிருந்து ஒருவன் வந்தான். அனைத்து புட்டிகளையும் திறக்கச் சொல்லிக் குறிப்புகள் எடுத்துக் கொண்டு என் குடும்ப வரலாற்றை பற்றி ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தான். எதுவும் வாங்கவில்லை. இப்னு-சீனா இத்தர் பற்றி இப்படிச் சொன்னாரே, காளிதாசன் அப்படிச் சொன்னாரே எனக் கேட்டு குடைந்துவிட்டான். எழுத்தாளனாக தான் இருக்க வேண்டும். அவனை விரட்டி விட்டேன். எழுத்தாளர்களுக்கு அனுமதியில்லை என்னும் பலகையை இன்றே மாட்ட வேண்டும். (அவசரமாகப் புட்டிகளை அப்புறப்படுத்தி) இரண்டு நிமிடம் வெளியில் இருங்கள். அதற்குள் நெடி வெளியேறிவிடும்.

(ஜஸ்மின் வெளியே செல்கிறாள். மின்விசிறியைப் போட்டுவிட்டு, நான்கு சிறிய ஜன்னல்களைத் திறந்துவிட்ட பின்னர் இக்பாலும் வெளியேறுகிறான்)

நூர் : பாவம் எப்படிப் பதற்றமடைகிறான்!

இப்னு : உனக்கு ஏன் அவனிடம் இத்தனை பரிவு?

நூர் : என் மருமகன் சாயலில் உள்ளான்… அவரைக் கொன்று விட்டார்கள்.

இப்னு : அது ஒன்றே காரணம் என எனக்குத் தோன்றவில்லை.

நூர் : (பொறுமை இழந்து) நீங்கள் நினைப்பது போலில்லை. எனக்கு இந்த ரோஜாவை ஒவ்வொரு முறை முகரும் போதும் மனம் கனக்கிறது. நான் நீராடுகிற குளத்திற்கு பொழுது சாய்ந்ததும் அரண்மனை வைத்தியர் வருவதும் செல்வதுமாக இருந்திருக்கிறார். என் கணவர் இதையறிந்து அவரை உடனே கொல்ல உத்தரவிட்டு விட்டார். எங்கள் தோட்டத்திலுள்ள அத்தனை ரோஜா இதழ்களையும் சுடு நீரில் அமிழ்த்தி தொட்டியில் விட்டிருப்பார்கள். தொடர் வெயில் பட்டு அந்தியில் குளம் முழுதும் எண்ணெய் நீரின் மேல் மிதந்தபடி இருக்கும். உங்கள் ஏடுகளைப் படித்துப் பயின்று வந்ததால் தான் எங்கள் வைத்தியர்-

(இக்பாலும் ஜஸ்மினும் உள்ளே நுழைகிறார்கள். ஜஸ்மின் அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தபடி மஞ்சள் நிற சுவரருகே வந்து, இப்னுவின் முன் நிற்கிறாள்)

இக்பால் : இந்த ஓவியத்தை வரைந்தது என் தந்தை.

ஜஸ்மின் : அழகாக இருக்கிறது.

இக்பால் : இவர் ஒரு பாரசீக மருத்துவராம். பெரிய ஞானி. (அவள் அருகே சென்று)இவள் நூர் ஜஹான். உலகின் ஒளி! ஜஹாங்கிர் மாமன்னரின் மனைவி. முகலாயப் பேரரசி. இவள் தான் ரோஜா இதழ்களைக் கொண்டு இத்தர் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தாள். கன்னூஜ் இன்று இந்தியாவின் நறுமணத் தலைநகரமாக திகழ இவள் தான் காரணம்.

ஜஸ்மின் : அழகாக இருக்கிறாள்.

(நூரின் முகம் அவள் கையில் உள்ள மலர் நிறத்திற்கு மாறுகிறது. இப்னுவின் முகத்தில் மாறுதலில்லை. இக்பால் ஒரு புட்டியைத் திறந்து ஜஸ்மினிடம் நீட்டுகிறான்.)

ஜஸ்மின் : (முகர்ந்து)  மல்லிகை

(இக்பால் மற்றொன்று நீட்டுகிறான்)

ஜஸ்மின் :(கொஞ்சம் யோசித்து)  ஹென்னா!

இக்பால் : என் தந்தை இறுதியாகத் காய்ச்சிய இத்தர் வரிசையில் இன்னும் சிலது மீதி இருக்கிறது. எடுத்து வருகிறேன்.

(இக்பால் படிக்கட்டுகளில் ஏறி மறைகிறான். ஜஸ்மின் தன் கண்ணாடியைக் கழட்டுகிறாள். பாதாம் வடிவ கண்களில் கருப்பு கோஹ்ல் இழைந்தோடுகிறது)

ஜஸ்மின் : (கைப்பேசியில்) ஹலோ.. ஹில்டன் பார்க் லேன்? 103யுடன் இணைக்க முடியுமா. ஆம்… Dr. ஜலால் அக்பரி..அவர் மகள் நான்.. ஜஸ்மின் நன்றி.. ஹலோ அப்பா. நான் இப்போது கன்னூஜில் ஓர் இத்தர் கடையில் இருக்கிறேன். இங்கே யார் இருக்கிறார் தெரியுமா? உங்கள் பி.ஹெச்.டியிற்கு வழிவகுத்தவர். உங்கள் கனவு நாயகன்…. ஆம் அவர் தான். நம் க்லாஸ்கோ வீட்டில் நான் வரைந்த ஓவியம் போலவே தான் இங்கும் உள்ளது. இதில் சற்று வயதானவராகத் தெரிகிறார். இங்கு இவரைப் பற்றி அதிகம் யாருக்கும் தெரிவதில்லை போல… இல்லை இன்னும் நான் எதுவும் வாங்கவில்லை. நம் குடும்ப மூக்கிற்குப் பிடித்த மாதிரி வாங்க வேண்டுமே…! ஆம் நான் நாளை மறுநாள் கிளம்புகிறேன்.. க்லாஸ்கோவில் சந்திப்போம்..”

(இக்பால் ஒரு பெரிய குப்பியுடன் நுழைகிறான். அதை அவள் முன்னாலுள்ள கருப்புப் பலகையின் மேல் வைக்கிறான்)

இக்பால் : என் தந்தை வடக்கிலிருந்து வரவழைத்த களிமண்ணைச் சேர்த்துக் காய்ச்சிய இத்தர். எல்லோருக்கும் நான் காட்டுவதில்லை. இதை மிட்டி இத்தர் என்றழைப்போம்.

(இக்பால் முடிச்சை அவிழ்த்து மூடியை வெளியே எடுக்கிறான். அறை முழுவதும் மெல்லிய துணி போல் நறுமணம் மெல்ல படர்கிறது)

ஜஸ்மின்  : (துள்ளலுடன்) மழை!

இப்னு  : (துள்ளலுடன்)  மழை!

(இக்பாலும் ஜஸ்மின்னும் திடுக்கிட்டு மேலே பார்க்கிறார்கள். இப்னுவின் பச்சை நிற அங்கி ஒவ்வொரு இழையாக மங்கி உறைகிறது. அருகிலிருந்து மூச்சு இழுபட்டதா அல்ல விடப்பட்டதா எனத் தெரியாதபடி ஒரு ஒலி எழுந்து அடங்குகிறது.

நூர் ஜஹானின் மலரிலிருந்து சில இதழ்கள் கீழே விழுந்திருக்கின்றன)

முந்தைய கட்டுரைகருவேலம்- கடிதம்
அடுத்த கட்டுரையுவன் 60