மலையாள எழுத்தாளர் யூ.ஏ.காதர் சென்ற 12-12-2020 அன்று காலமானார். அவருக்கு வயது 85. காதர் மலையாளத்தில் இஸ்லாமிய இலக்கியத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவராகவே அறிமுகமானார். வைக்கம் முகமது பஷீர் இஸ்லாமிய இலக்கியவாதிகளின் ஒர் அலையையே கேரளத்தில் உருவாக்கினார். என்.பி.முகம்மது, வி.ஏ.ஏ.அசீஸ், புனத்தில் குஞ்ஞப்துல்லா, யூ.ஏ.காதர் ஆகியோர் அவருக்கு இரண்டாம் தலைமுறையினர். டி.வி.கொச்சுபாவா போன்றவர்கள் மூன்றாம் தலைமுறை
காதர் தன்வரலாற்றுத்தன்மை கொண்ட சங்கல[சங்கிலி, 1966] என்ற நாவல் வழியாக கவனிக்கப்பட்டார். ஒரு முஸ்லீம் பிரபுகுடும்பத்தின் சரிவின் சித்திரம் இது. பின்னர் அவ்வகைப்பட்ட பலநாவல்கள் வந்தன. வி.ஏ.ஏ.அசீஸின் துறமுகம், புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ஸ்மாரகசிலகள்[தமிழில் மீசான் கற்கள்] ஆகியவை அவ்வகைப்பட்டவை. தமிழில் தோப்பில் முகம்மது மீரானின் சாய்வுநாற்காலி அந்நாவலின் பாணியில் அமைந்தது.
காதர் பின்னர் தன் எழுத்துக்களை ஒருவகையான கேரள மாய யதார்த்தப் புனைவாக ஆக்கிக்கொண்டார். அவருடைய திருக்கோட்டூர் ஊரை ஒரு கற்பனை நிலமாக மாற்றினார். அங்கே பொடிபோட்டு தும்மல் போட்டே அந்த விசையில் ஒருவன் சந்தைக்குச் சென்று திரும்ப முடியும். கள்ளருந்தி எடையில்லாமலாகி கோவணத்தின் சிறகால் ஒருவன் பறக்கமுடியும். திருக்கோட்டூர் கதைகள் என்னும் வரிசையில் வந்த குறுநாவல்களும் கதைகளும் காதருக்கு முக்கியமான இலக்கிய இடத்தை அளித்தன.
நகைச்சுவையும் விமர்சனமும் கலந்த எழுத்து அது. சொற்றொடர்கள் பழைய ஆவணமொழி, தொன்மையான நாட்டுப்புறக்கதைகளின் மொழி என பலவகையான மொழிகளைக் கலந்து உருவாக்கப்பட்டவை. மலையாளத்தின் தனித்துவமான ஒரு புனைவுமொழியை அவர் உருவாக்கினார். பின்னர் அதிலிருந்தும் வெளிவந்து எளிமையான நேரடிக்கதைகூறலை கையாண்டார்.
காதர் பர்மாவில் ஐராவதி நதிக்கரையில் பிறந்தவர். அவருடைய தந்தையார் மொய்தூட்டி [முகைதீன் குட்டி]பர்மாவுக்கு புலம்பெயர்ந்தவர். அங்கே பர்மியப்பெண்ணை மணந்தார். காதரின் அன்னை மமைதியைப்பற்றி காதர் எழுதியிருக்கிறார். காதருக்கு 2009 ஆம் ஆண்டு சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டது
எண்பதுகளில் அவர் கதைகளால் கவரப்பட்டு அவருக்கு வாசகர்கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன். ஒருமுறை நேரில் சந்தித்து ஓரிரு சொற்கள் பேசவும் முடிந்திருக்கிறது
யூ.ஏ.காதர் அவர்களுக்கு அஞ்சலி