விதிசமைப்பவர் பற்றி மீண்டும்

விதிசமைப்பவர்கள்

அந்தச்சிலர்

தன்வழிகள்

அன்புள்ள ஐயா,

நான் வேதியியல் மாணவர்; வயது 21. ஐன்ஸ்டீன் அல்லது ஆர்.பி. உட்வார்ட் போன்ற அறிவியலுடன் தொடர்புடைய Genius-களை நான் காணும்போது, ​​அவற்றின் உயரங்களை எட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது, ஆனால் இதுவரை நான் ஒருபோதும் Prodigy போன்ற உள்ளார்ந்த குணங்களைக் கொண்டிருக்கவில்லை.

விதி தயாரிப்பாளர்கள் தொடர்பான உங்கள் கடிதங்களை நான் படித்தேன். ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமான உண்மை, ஆனால் என்னால் அதை நிராகரிக்கவும் முடியாது. இந்த உண்மையை நான் இறுதியில் ஏற்றுக்கொள்வேன் என்று கருதுகிறேன்

அ. ஒருவர் விதி தயாரிப்பாளர் என்பதை ஒருவர் எப்படி அறிவார்?

ஆ. அவர் ஒரு விதி சமைப்பவர் அல்ல என்ற முடிவுக்கு ஒருவர் வந்தால், அவர் தனது வாழ்க்கையை, குறிப்பாக அறிவியல் போன்ற துறைகளில் என்ன செய்ய வேண்டும்?

இ.  வாழ்க்கையின் மையப்பகுதியைப் பெற முடியாவிட்டால், வாழ்க்கையின் அர்த்தத்தை அவர் எவ்வாறு உணர முடியும்?

(விஞ்ஞானம் நிறைய படைப்பாற்றல் மற்றும் ஆர்வத்தை உள்ளடக்கியது என்ற முன்னறிவிப்புடன் இவை அனைத்தையும் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்)

நான் ஒரு விதிசமைப்பவனாக இருக்கப் போவதில்லை என்றால், என் இருப்பு முழுவதிலும் எந்த அர்த்தமும் இல்லை என்ற உணர்வு எனக்கு இருக்கிறது.

கோதேவின் மிகவும் பிரபலமான மேற்கோள் ஒன்று உள்ளது:

“Whatever you can do, or dream you can, begin it. Boldness has genius, power and magic in it.”

இது அனைவருக்கும் பொருத்தமானதா?

இது உங்கள் கருத்துக்கு எதிரான ஒன்றைக் குறித்து, மேலும் அவர்கள் உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால் ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியதை அடைய முடியும் என்று கூறுகிறதா?

பெரிய செயல் குறித்து நீங்கள் எழுதிய கட்டுரை எல்லோருக்குமான அறிவுரையா?

ஒரு விதி தயாரிப்பாளராக மாற வேண்டும் என்று கனவு காண்பது சரியானதா அல்லது விதி சமைப்பது  மக்கள் மீது ஊடகங்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டதா?

இறுதியாக, ஒரு விஞ்ஞானிக்கும் எழுத்தாளர் அல்லது ஓவியர் போன்ற ஒரு படைப்பாற்றல் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமைகள் (மற்றும் வேறுபாடுகள்) என்ன?

ராகவன் நரசிம்மன்

அன்புள்ள ராகவன் நரசிம்மன்,

இந்தவகையான கடிதங்கள் பலரிடமிருந்தும் வருகின்றன. பொதுவாக இளைஞர்களிடமிருந்து. இதற்கு திரும்பத்திரும்ப விளக்கம் அளிக்கிறேன்

விதிசமைப்பவர்கள் அல்லது தேர்வுசெய்யப்பட்ட சிலர் என்று நான் சொல்லும்போது அசாதாரண மனிதர்களை, மேதைகளை, தலைவர்களை பற்றி மட்டும் சொல்லவில்லை. அவ்வண்ணம் அனைவரும் ஆவது இயல்வதுமல்ல.அவ்வண்ணம் ஒருவர் ஆவதில் அவருடைய பிறவி இயல்பு, பெருமுயற்சி ஆகியவற்றுக்கு மேலாக ஊழின் இடமும் உள்ளது

நான் சொல்வது சாமானியர்- அல்லாதவர் என்னும் பிரிவினை. எளிய அன்றாடவாழ்க்கையின் இன்பங்களும் அதன் வெற்றிகளும் மட்டுமே போதும், அதுவே உயர்வு என எண்ணி வாழ்பவர்கள் சாமானியர்கள். அதற்கப்பால் அறிவியக்கத்தில், மானுடசேவையில் ஏதேனும் செய்யவேண்டுமென நினைப்பவர் சாமானியரல்லாதவர். அவர்கள் அனைவருமே விதிசமைப்பவர்கள்தான்.

அந்த சாமானியரல்லாதவர்களில் மிக எளியநிலையில் பணியாற்றுபவர் உண்டு. மாமனிதர்கள் உண்டு. வேறுபாடு பெரிதுதான். ஆனால் ஒட்டுமொத்தமான மானுடப்பேரியக்கத்தில் அவர்கள் இருசாராருமே துளிகள்தான். அவர்கள் அனைவரும் சேர்ந்தே அதை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஐன்ஸ்டீனும் ஓர் எளிய ஆராய்ச்சியாளனும் விதிசமைப்பவனே. தல்ஸ்தோயும் உள்ளூரிலிருந்து இலக்கியத்தை ஆர்வத்துடன் படித்து சிந்தனைசெய்து எழுதும் இளைஞனும் விதிசமைப்பவனே

நான் அக்கட்டுரைகளை எழுதியது அசாதாரணமானவர்கள் மட்டுமே இங்கே வாழவேண்டும், மாமனிதர்களே மானுடர்களில் பொருட்படுத்த்தக்கவர்கள் என்று சொல்வதற்காக அல்ல. திறமையும் அறிவும் கொண்டவர்கள் தங்களுக்கு இருப்பது தகுதி மட்டும் அல்ல பொறுப்பும்கூட என உணரவேண்டும் என்பதற்காக. அந்தப்பொறுப்பை தயக்கம், தாழ்வுணர்ச்சி, வெறுமைச்சிந்தனைகளால் அவர்கள் வீணடிக்கலாகாது என்பதற்காக. வீண்கேளிக்கைகள் வெற்று ஆணவச்செயல்பாடுகளல திசைதிரும்பலாகாது என்பதற்காக.

சாமானியர்களில் ஒருவராக இல்லாமலிருக்கவேண்டும் என்னும் உங்கள் விழைவே உங்களை அவர்களில் ஒருவராக அல்லாமலாக்கிவிட்டது. எந்த சாமானியனும் தன்னை சாமானியன் அல்லாதவனாக எண்ணுவதில்லை. அப்படி ஆக முயல்வதுமில்லை. அந்த விழைவு உங்களுக்கு இருந்தால்போதும். சோர்விலா தொடர்முயற்சி உங்களை விதிசமைப்பவராக ஆக்கும். உங்கள் தளம் என்ன அதில் உங்கள் தனித்திறன் என்ன என்று கண்டுபிடியுங்கள்

விதிசமைப்பவர்கள் என்னும் கட்டுரை அறிவாளர்,திறனாளர் இருவருக்கும் அவர்களுக்கு தேவையான தன்னம்பிக்கையை உருவாக்கிக்கொள்ளும்பொருட்டு அறிவுறுத்துகிறது. சாமானியர் அவர்களைச் சூழ்ந்திருக்கிறார்கள். எங்களைப்போல இரு என அவர்கள் சொல்லிக்கொண்டெ இருக்கிறார்கள். இல்லையேல் கேலிசெய்கிறார்கள், பழிக்கிறார்கள். நீயும் சாமானியனே என்றும், சாமானியனுக்கு அப்பால் எவருமில்லை எல்லாரும் சமமே என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்கொண்டு தன்னை நிறுவிக்கொள்ள சிந்தனையாளனுக்கும் செயல்வீரனுக்கும் அந்த தன்னுணர்வு இன்றியமையாதது

உண்மையில் இந்தியசூழலில் இதைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஆகவேதான் பத்தாண்டுகளாக இந்த தளத்தில் வெவ்வேறு சொற்களில் இதை சொல்கிறேன். இருந்தும் ஒவ்வொரு இளைஞரும் என்னைச் சந்திக்கையில் இதைக் கேட்கிறார்கள். ஏனென்றால் இங்கே பணிவு, தன்னடக்கம் ஆகியவை உயர்ந்த விழுமியங்களாகச் சொல்லப்படுகின்றன. தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வது ஒரு நற்பண்பாக கற்பிக்கப்படுகிறது.

நம் கல்விக்கூடங்கள், குடும்பங்கள் எல்லாமே அதைத்தான் சொல்லி நிலைநாட்டுகின்றன. அந்த மனநிலை நம் திறன்களை நம்மிடமிருந்தே மறைக்கின்றது. நம்மை சிறுசிமிழ்களில் அடைக்கிறது. பெரிய பணிகளை, பெரிய அறைகூவல்களை ஏற்கவிடாமல் செய்கிறது.பெரிய இலட்சியங்களும் கனவுகளும் உருவாகாமல் ஆக்குகிறது

தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளுதல், எங்கும் பணிவு  போன்ற விழுமியங்கள் அமைப்புக்குள் ஒடுங்கிப் பணியாற்றவேண்டிய ஊழியர்களுக்குரியவை. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் ஒவ்வொரு சாமானியனுக்கும் வலியுறுத்தப்பட்டவை. மரபான ஒழுக்கவியல் அவற்றை ஒருவகை சான்றோரியல்பாக ஆக்கி நமக்கு காட்டுகிறது. அது நம்மை தாழ்வுணர்ச்சியும் வெறுமையுணர்ச்சியும் கொண்டவர்களாக ஆக்குகிறது.

அறிவியக்கத்தில் ஈடுபடுபவர்கள் அந்த போலிப்பணிவிலிருந்தும் தன்னடக்கத்திலிருந்தும் வெளிவந்தே ஆகவேண்டும். தான் எவர் என்று ஒர் அறிவியக்கத்தவன் அறிந்திருக்கவேண்டும். தன் பணியின் இடமென்ன தன் தகுயென்ன என்னும் தெளிவும் அது அளிக்கும் நிமிர்வும் அவனிடம் இருக்கவேண்டும். இல்லையேல் அவனால் சூழ்ந்திருக்கும் சராசரித்தன்மையை, அவர்களின் அன்றாட அற்பத்தனத்தை எதிர்கொள்ள முடியாது. ஆகவேதான் தன்னை விதிசமைப்போன் என அறிவியக்கத்தவன் உணர்ந்திருக்கவேண்டும் என்று சொல்கிறேன்

ஆனால் அது கண்மண் தெரியாத தருக்கு அல்ல. பணியவேண்டிய இடத்தில் பணிவதற்கு நம்மை தூண்டுவதும் நாம் எவர் என்னும் தன்னுணர்வுதான். ஞானம், தியாகம், பேரன்பு ஆகியவற்றின் முன் பணிவதே பண்பு. அவற்றின்முன் மட்டுமே பணிவதுதான் பண்பு.

இந்த தன்னுணர்வும் நிமிர்வும்கூட மரபிலுள்ள சிந்தனைதான். ஞானம்தேடுபவனுக்குரியது நாமார்க்கும் குடியல்லோம் என்னும் நிமிர்வு. அரவிந்தர் அவருடைய எழுத்துக்களில் இந்த படைப்பூக்கம்கொண்ட, உலகைச் சுமக்கிற, மெய்யறிஞனைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். நான் கூறுவதும் அதையே.

ஜெ

சராசரிகள்

தேர்வு செய்யப்பட்ட சிலர் 

தேர்வு செய்யப்பட்ட சிலர் – மேலும்

முந்தைய கட்டுரைநிலத்தை வாசிப்பது- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழக வரலாறும் பண்பாடும்- ஒரு முழுச்சித்திரம்