விடுதல்

William Blake

 திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். உங்களின் தீவிர வாசகி நான்.

வெண்முரசில் தொடர்ந்து வந்த துறவு , துறத்தல் எந்தளவு பெண்களுக்கு சாத்தியம்? அந்த துறவு என்பது ஞான மார்க்கமாய், ஒரு தேடலாய்,  சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது என் எண்ணம்.

குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும், நானில்லாமல் குடும்பம் சமாளித்துக்கொள்ளும் என்ற நிலைமை வந்ததும், குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி விட வேண்டும் என்பது என் பல வருட கனவு.

இப்பொழுது எனக்கு வயது 58. உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.இது கனவாகவே போகாமல் சாத்தியப்படுத்துவது எப்படி? காதல்- ஒரு கடிதத்திலும் வாழ்வின் லட்சியத்தையும் தேடலையும் சொல்லியிருக்கிறீர்கள்.

உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

அன்புடன்,

என்

***

அன்புள்ள என்,

பெண்கள், ஆண்கள் எவருக்கானாலும் ஒரு கட்டத்தில் குடும்பவாழ்க்கை- உலகியல் வாழ்க்கையிலிருந்து முடிந்தவரை துண்டித்துக்கொள்வதே சிறந்த வழி. இதை நம் மரபில் வானப்பிரஸ்தம் என்கிறார்கள். வனம்புகுதல்.

உலகியல் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களைச் சமாளிக்கும் ஆற்றலும் உள்ளமும் சென்றுவிட்டபின்னரும், அடுத்த தலைமுறையின் வாழ்க்கையில் உள்ள இக்கட்டுகளை புரிந்துகொள்ளும் ஆற்றலை இழந்தபின்னரும் அங்கே சுற்றிக்கொண்டிருப்பது மிகவும் துயரையே அளிக்கும். நம்மால் அறியமுடியாத , நம்மால் கையாளமுடியாத பிரம்மாண்டங்களுடன் போரிடுவது அது.

ஆற்றவேண்டியவற்றை ஆற்றுவதற்கு ஒரு காலம் உண்டு. அங்கே தவறவிடுவது ஒரு பெரும்பிழை, பின்னர் வருந்தவேண்டியிருக்கும். ஆற்றியவை முடிந்தபின் விடுபடுவது இன்னொரு காலம். நீடித்தால் வீண்சுமைகளைச் சுமக்கவேண்டியிருக்கும். விடுபட்டாகவேண்டும், எழுதிமுடித்த நாவலில் இருந்து வெளியேறுவதுபோல.

நான் உளப்பூர்வமாக அந்த நிலைக்கு வந்துவிட்டேன். வெண்முரசு முடிவு அதை நோக்கிச் செலுத்தும் விசையாக இருந்தது.அதற்கான சில ஏற்பாடுகளைச் செய்வதிலேயே இப்போது முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறேன். அத்தகைய ‘துறவை’ மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பேன். ஆகவே உங்களுக்கும் அதையே சொல்வேன்

இங்கே துறவு என நான் உத்தேசிப்பது காவியுடையை அல்ல. முழுத்துறவை அல்ல. உலகியலை துறப்பதை. ஆனால் அதையே ஒருநாளில் ஒரே கணத்தில் முடிவெடுத்துச் செய்யலாகாது. உண்மையில் அப்படி எந்த குருநிலையிலும் வழக்கமில்லை. எல்லா அமைப்புக்களிலும் துறவு என்பது படிப்படியாக நிகழும் நிலைதான். துறவு என்னும் தகுதி இறுதியில் எய்தப்படுவது

முதலில் நமது ஈடுபாடுகளை பரிச்சீலிக்கவேண்டும். விடுபடுவது பற்றிய நம் எண்ணங்கள் என்ன? அவை வெறும் கற்பனாவாத மனமயக்கங்களா? நம்மைப்பற்றியும் புறவுலகு பற்றியும் நாம் கொண்டிருக்கும் மிகையான, தவறான புரிதல்களிலிருந்து எழுவனவா? உண்மையிலேயே நாம் என நாமே நம்பும் ஆளுமைதானா நம்முடையது?.நம்மால் நம்மை பிறிதொருவராக ஆக்கிக்கொள்ள முடியுமா?

“ஆத்மாவை ஜேபடிக்க உடலில்தான் எத்தனை கைகள்” என்று ஜே.ஜே,சிலகுறிப்புகளில் சுந்தர ராமசாமி வியக்கிறார்.நாம் மிக அதிகமாக ஏமாற்றிக்கொள்வது நம்மைத்தான். “எனக்கு கம்ஃபர்ட்ஸ் எல்லாம் முக்கியமே இல்லீங்க” என்று ஒருவர் சொல்வார். ஆனால் வசதிகளில்லாமல் சிலநாட்கள்கூட இருக்கமுடியாது. “என்னாலே எங்கயும் தனிமையா இருக்கமுடியும். எனக்கு தனிமைதான் புடிக்கும்” என்பார். ஆனால் இணையத்தொடர்பில்லாத ஒருநாள் என்பது அவருக்கு ஒரு குட்டிச் சாவாக இருக்கும்.

“கொஞ்சம் புக்ஸ், கொஞ்சம் மியூசிக், எனக்கு வேறே ஒண்ணுமே வேணாம்’என்பவர்கள் பக்கத்தில் மனிதர்கள் இல்லாமல், வம்புகளில்லாமல் வாழவே முடியாதவர்களாக இருப்பார்கள். சமூகவலைத்தளங்களில் வம்புகளை தேடி அலைந்துகொண்டும் இருப்பார்கள்.சமூகசேவை, இயற்கைவேளாண்மை, ஆன்மிகத்தேடல் போன்றவற்றில் எல்லாம் தனக்கு ஆர்வமுண்டு என்பவர்கள் பெரும்பாலும் அவற்றை ஒருவகை  பகற்கனவாகவே வைத்திருப்பார்கள். அவர்களின் யதார்த்தம் வேறு.

தங்களைப்பற்றி பலசமயம் சாமானியர்களுக்கு தெரியாது.அவர்கள் அவ்வண்ணம் வந்து வாழத்தொடங்கும்போதே உண்மையில் அவர்களின் இயல்பென்ன, தேவைகள் என்ன என்று தெரியவருகிறது. “சும்மா அப்டியே துண்டை உதறிப் போட்டுட்டு கிளம்பிடணும் சார்” என்று சொன்ன ஒருநண்பர் எங்கள் பயணங்களில் ஒருமுறை ஓர் ஒட்டுத்திண்ணையில் இரவு தங்கவேண்டியிருந்தபோது உளம்நொந்து தொடர்பையே விட்டிருக்கிறார்.

துறப்பதிலுள்ள இன்னொரு முக்கியமான கூறு, அது ஒரு நம்பிக்கைநிறைந்த, உற்சாகமான, இன்னொரு வாழ்க்கைக்கான தொடக்கமாக இருக்கவேண்டும் என்பது. எதிலிருந்தாவது ’துண்டித்துக்கொண்டு’ துறப்பவர்கள் அந்த துண்டுபட்ட புண்முனை சீழ்கட்டி நோயாவதையே காண்பார்கள். எதற்கும் எதிர்வினையாக துறக்கலாகாது. மெட்ரிகுலேஷன் வகுப்பு முடித்து கல்லூரிக்குச் செல்வதுபோல இயல்பான ஒரு படிநிலையாக இருக்கவேண்டும்.

சலித்தும் கசந்தும் வெறுத்தும் துறப்பவர்கள் உண்மையில் துறப்பதே இல்லை. அவர்கள் உதறுகிறார்கள். உதறப்பட்டவை பற்றிய எண்ணமும் ஏக்கமும் அவர்களிடம் நிறைந்திருக்கும். எதைத்துறக்கிறோமோ அதில் மேற்கொண்டு வாழவே முடியாது என்னும் நிலை உருவாகி, இயல்பாகவே அடுத்த நிலைக்குச் செல்வதே துறவு எனக்கொள்ளப்படும்.

ஏனென்றால் நம்முள் துளி எதிர்நிலை இருந்தால்கூட தனிமையில் அது வளரும். ஒரு சொட்டு கசப்பு போதும் நாம் நம் சூழலை, நம் அகத்தை கசப்பு நிறைந்ததாக ஆக்கிக்கொள்வோம். துறவுசார் அமைப்புகளிலேயே இதை நான் அடிக்கடிக் கண்டிருக்கிறேன்.

அதேபோல மிகையான எதிர்பார்ப்பும் இலட்சியமும் கொண்ட துறவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. துறவு ஒரு பயிற்சி அல்ல. ஒரு பாதை அல்ல. அது இன்னொருவகை வாழ்க்கை. அது ஒருவகை ’திகழ்தல்’ மட்டுமே. அந்த வாழ்வே அதன் இலக்கு. அதனூடாக நாம் சென்றடையும் இடங்கள் இயல்பாக அமையவேண்டும். நம் இயல்புக்கும் தகுதிக்கும் ஏற்ப தானாக வரவேண்டும். ஒரு கல்லூரி வகுப்பில் சென்றுசேர்ந்து பட்டம் வாங்குவதுபோல அல்ல அது. அவ்வண்ணம் ‘ஞானியாக’ ஆகும்பொருட்டு துறந்தவர்கள் மிக விரைவிலேயே  ஏமாற்றமும், அதன் விளைவான கசப்பும் தனிமையும் அடைந்திருக்கிறார்கள்.

ஆகவே நாம் முதலில் நம்மை அறியவேண்டும். அதற்கு ஒரே வழி நாமே அனுபவித்து அறிவதுதான். நாம் விழையும் வாழ்க்கையின் ‘சாம்பிள்’களை வாழ்ந்து பார்க்கவேண்டும். நித்யா இருந்தபோது குருகுலத்தில் நாளுக்கு ஒருவராவது துறவுபூணுவதற்காக வருவார்கள். முதற்சிலநாட்களிலேயே தங்களை தாங்களே கண்டு திரும்பிச் சென்றுவிடுவார்கள். சிலர் பிரம்மசாரி வாழ்க்கையிலேயே துறவை முடித்துக் கொள்வார்கள். நித்யா வேடிக்கையாகச் சொல்வதுண்டு “பல லட்சம் விந்துத்துளிகள். எல்லாமே துடித்து துடித்து நீந்துகின்றன. ஒன்றுதான் மகாசக்தியின் கருவறையை அடைகிறது”

ஆகவே நாம் நம்மை பரிசீலித்துக்கொள்ளவேண்டும். இதுவரை நாம் உலகியல் தளத்தில் மட்டுமே நம்முடைய இன்பங்களையும் நிறைவையும் அடைந்திருந்தோம் என்றால் அதை இனிமேல் விட்டுவிடுவது எளியது அல்ல. பக்தியே ஆனாலும்கூட அது உலகியலுக்கு மாற்று அல்ல. உலகியலில் இருந்து நாம் பயின்றிருப்பது ’உலகியல் பக்தி’ தான். வேண்டுதல் என்று அதற்குப் பெயர்.

உலகியலில் புழங்கியவர்கள் துறந்தால் துறந்தவாழ்க்கையை இன்னொரு வகை உலகியலாக ஆக்கிக்கொள்வார்கள். அதையும் கண்டிருக்கிறேன். விவசாயிகளான, தொழிலதிபர்களான, வணிகர்களான துறவிகளை சாதாரணமாக காணலாம். துறந்து சென்றவர்கள் சென்ற இடங்களை குடும்பச்சூழலாக, வணிகச்சூழலாக மாற்றிக்கொண்டு உழல்வது மிகமிக சாதாரணமாகக் காணக்கிடைப்பது.

உலகியலுக்கு அப்பால் சென்று செயல்படும் உள்ளம் உங்களுக்கு உள்ளதா, அதில் மெய்யான நிறைவை அடைகிறீர்களா என்பதை நீங்கள்தான் உங்களை ஆராய்ந்து கண்டறிய வேண்டும். அதற்குரிய வழி இதுவரை என்ன செய்தீர்கள் என்று பார்ப்பதுதான். இதுவரை நீங்கள் உலகியலுக்கு அப்பாலுள்ள எவற்றையெல்லாம் செய்தீர்கள்? எவற்றிலெல்லாம் மெய்யான இன்பத்தை கண்டடைந்தீர்கள்? அவற்றை நம்பி எஞ்சிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உங்களால் முடியுமா?

உலகியலுக்கு அப்பாலுள்ள வாழ்க்கை இரண்டுவகையானது. அறிவுத்தள வாழ்க்கை, சேவைத்தள வாழ்க்கை. அறிவியக்கத்தில் முழுமையாக ஈடுபடலாம். சேவையில் மூழ்கலாம். மூன்றாவது ஒன்றுண்டு, அது மெய்மைநாட்டம், அதற்கான ஊழ்கம். ஆனால் அது அடுத்தநிலை மட்டுமே. அறிவுச்செயல்பாடோ சேவையோதான் முதலில் செய்யப்படவேண்டும். அவற்றில் கனிந்தபின்னரே ஊழ்கம் நிகழவேண்டும். அவையிரண்டும் இல்லாத ஊழ்கமோ ஆன்மிகப்பயிற்சியோ வெற்றுச் சடங்காக மாறிவிடும்.

அறிவியக்கம்,சேவை இரண்டில் எது உங்களுக்குரியது? ஏற்கனவே எதை செய்துபார்த்திருக்கிறீர்கள்? எதில் மெய்யான இன்பத்தை ஏற்கனவே கண்டடைந்திருக்கிறீர்கள்?

உதாரணமாக என்னை பார்த்தால் எழுதுவது, பயணம்செய்வது, படிப்பது ஆகியவற்றில் நான் நிறைவடைகிறேன், அவையே எனக்கு முதன்மையானவை, அவற்றின்பொருட்டு என்னால் உலகியலை முற்றாகத் துறக்கமுடியும் என்று இத்தனை ஆண்டுகளில் கண்டடைந்திருக்கிறேன். என்னால் இயற்கையின் மடியில் வெறுமே இருக்கமுடியும் என்று நானே நிரூபித்துக்கொண்டிருக்கிறேன். ஆகவே நான் அதைநோக்கிச் செல்லமுடியும்.

ஆனாலும் நான் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டேன். சிறிய அளவில் செய்துபார்ப்பேன். என் இயல்கைகள் என்ன, என் தடைகளென்ன,என் எல்லைகள் என்ன என்று பார்ப்பேன். நான் மெய்யாகவே மகிழ்ச்சியாக இருக்கிறேனா, நிறைவடைகிறேனா என்று கூர்ந்து நோக்குவேன். மெல்லமெல்ல மேலும் என்னை முன்னகர்த்திக்கொள்வேன். மிக எச்சரிக்கையாக, மிகச் சிறிய அளவிலேயே செய்வேன். நாம் எவர் என அறிவதே முக்கியம்.

நாம் நன்கறிந்த இடங்களில் மேலே பாயலாம், அல்லாத இடங்களில் பதுங்கியாகவேண்டும். வெண்முரசை எழுதுவதற்கு நான் முன்பின் நோக்காமல் துணியலாம், அது என்னால் இயலுமென நான் அறிந்திருந்தேன். ஆனால் இன்னொரு செயலைச் செய்ய நான் ‘சாம்பிள்’ செய்துபார்ப்பேன். அதைக்கொண்டு என்னை அறிவேன். அதன்பின்னரே முடிவுசெய்வேன்.

இப்போது என்னால் ஒரு நகரத்திற்கு வெளியே, ஒரு காட்டில் வாழமுடியும் என எனக்கே நிறுவிக்கொள்கிறேன்.அதற்கான பயிற்சிகளில் இருக்கிறேன். அதன்பின்னரே அடுத்தநிலைகள். அதையே உங்களுக்கும் சொல்வேன். நீங்கள் எண்ணும் வாழ்க்கையின்  ‘சாம்பிள்களை’ வாழ்ந்து பாருங்கள். அவற்றில் மெய்யான மகிழ்ச்சியும் நிறைவும் இருந்தால் சிறிது சிறிதாக அதை கூட்டிக்கொண்டே செல்லுங்கள்.

உலகியலில் எழும் சலிப்பினால் அதைத் துறக்க முடியாது. ஏனென்றால் துறவு அச்சலிப்புக்கான மாற்று அல்ல. துறவு இன்னும் சலிப்பை அளிக்கக்கூடும். உலகியல் அளிக்கும் சலிப்புக்கான மாற்று என்பது அச்சலிப்பை நீக்கும்தன்மைகொண்ட எளிய, செயலூக்கம் கொண்ட செயல்களே. கொஞ்சம் கேளிக்கையுடன் கலந்தவை. பல முதியவர்கள் ஆலயவழிபாடு, பக்திப்பணி போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அதைப்போல பல செயல்பாடுகள் உள்ளன

உலகியல் அளிக்கும் சோர்வை வெல்ல  ஓரளவு உலகியல் விலக்கம் மட்டும் போதும். உணர்வுரீதியான விலக்கம், அல்லது செயல்சார் விலக்கம். முதியவர்களுக்குப் பரிந்துரைக்கவேண்டியது அதைத்தான். அதுவும் ஒருவகை துறவே. ஆனால் துறவு என்பது மேலும் பெரியவற்றை நோக்கிச் செல்வது. அதற்குத்தான் நான் சொன்ன படிநிலைகளும் தன்னறிதல்களும் தேவையாகின்றன

ஜெ

வனம்புகுதல்
துறவுத்தகுதி
வயதடைதல்
ஆன்மீகம், போலி ஆன்மீகம் 5
போரிலிருந்து மிஞ்சுதல்
துறவு-கடிதம்
முந்தைய கட்டுரையதி: தத்துவத்தில் கனிதல் – புத்தக முன்வெளியீட்டுத் திட்டம்
அடுத்த கட்டுரைநெல்லையில் பேசுகிறேன்