இளமை- கனவும் பயிற்சியும்

அன்புள்ள ஜெ,

ஐயா என் வயது 23 பெயர் எம். இலங்கை கொழும்பு என் வதிவிடம். நான் என் உயர்தரம் கணித பாட பிரிவை விரும்பி தேர்ந்தெடுத்து படித்தேன். காரணம் Quantity Surveyor ஆகவேண்டும் என்ற என் கனவு ஆனால் இங்குள்ள கல்வி திட்டதின் படி தேர்வில் போதிய மதிப்பெண் பெறாமல் தோற்றேன்.முடிவு வாழ்வே சூன்யமானது என்ன செய்வது என்றே தெரியவில்லை.

கூடவே என் நண்பணும் இதே போலவே தேர்வில் தோற்றான். நாங்கள் இருவருமே சினிமாவில் அறிவியலில் இலக்கியத்தில் ஆர்வம் மிகுந்தவர்கள் இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவும் உண்டு ஆதலால் தீவிர உலக சினிமா விசிறிகள் ஆனோம். காணும்போதெல்லாம் உலக சினிமா பற்றி விவாதிப்போம். குரசோவா தர்க்கோவ்ஸ்கி முதற்கொண்டு விவாதம் தொடரும்.

இலக்கிய அறிமுகம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் சுஜாதா விசிறிகள் ஆனால் எஸ் ரா திஜா சுந்தரராமாசாமி ஐயா ஜெயமோகன் பவா செல்லதுரை ஆகியோரை பிடிக்கும்.ஆனால் எங்கள் விடுமுறை காலத்தில் ஒருநாள்  Existensialism அறிமுகமானது.அதன் பின் டால்ஸ்டாய் தஸ்தோவ்ஸ்கியை தீவிரமாய் படித்து விவாதித்தோம்.அதற்கு திரு.மிஷ்கின் உம் ஒரு காரணம்.

பின் நான் தங்களின் இணைய கட்டுரைளை தொடர்ந்து வாசித்தேன்.தாம் என் ஆசான் ஆகிப்போனிர்கள்.எல்லாமே எனக்கு பிரமிப்பு ஊட்டின குறிப்பாக டால்ஸ்டாய் மீதும் காந்தியார் மீதும் இருந்த என் பார்வை மாறின.தங்களின் அனல் காற்று ஏழாம் உலகம் இரவு ஆகிய படைப்புகளை படித்து பிரமித்து போனேன்.நானும் காம இச்சை மிகுந்தவன் தான் ஆனால் பெண்ணியம் படித்து ஆணாதிக்கம் துளியும் இல்லாதவனாய் ஒரு maturity உள்ளவனாய் வாழ்பவன்.ஆனால் அனல்காற்று என்னை சுழற்றி அடித்தது.

வாழ்வில் என்ன செய்தாலும் ஒரு வெற்றிடமாய் உள்ளது எதிர்காலம் குறித்து பயமாய் உள்ளது படிக்க ஆசையாய் இருக்கிறது ஆனால் என்ன படிக்கிறது என தெரியவில்லை கணிதத்தில் தோல்வியாயிற்று ஆகவே மேற்கொண்டு பொறியியல் துறையில் போலாமா அல்லது சினிமா இலக்கிய துறையில் படிக்கலாமா படித்தால் தன்னிறைவுடன் வாழலாமா?

பெற்றோர் என் நிலையில் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.என்ன செய்வதென்று தெரியவில்லை தங்களை ஒரு ஆசானாகப் பாவித்து கேட்கிறேன்.வழி காட்டுங்கள்.நான் என்ன செய்ய என் வாழ்வின் அர்த்தம் என்ன?

நன்றி.

எம்

***

அன்புள்ள எம்,

உங்கள் கடித்த்திலுள்ள குழப்பங்கள் புன்னகையை வரவழைத்தன. ஆகவேதான் இந்தக்கடிதம். இந்த வயதில் இதேபோன்ற பலவகை குழப்பங்களுடன் நானும் இருந்தேன். இப்போது இக்கடிதம் வந்து நீண்டகாலமாகிவிட்டது, ஆகவே நீங்களே ஒருவகை தெளிவை இப்போது அடைந்திருப்பீர்கள் என ஊகிக்கிறேன். இருந்தாலும் உங்களைப் போன்றவர்களுக்காக இக்கடிதம்

பொதுவாக இரண்டுவகை இளைஞர்கள் உண்டு. நூல்பிடித்ததுபோல படிப்பு வேலை என்று சென்று அமர்பவர்கள் ஒருவகை. அவர்கள் பெரும்பாலும் இலக்கியத்திற்குள் வருவதில்லை. வேலையில் அமர்ந்தபின் ‘ரிலாக்ஸ்’ ஆகி கொஞ்சம் அரசியலும் சினிமாவும், மிக அரிதாக ஓரளவு இலக்கியமும் பேச ஆரம்பிப்பார்கள். இன்னொருவகை இளைஞர்கள் படிப்புக்காலகட்டத்திலேயே கவனச்சிதறல் கொள்கிறார்கள். தங்கள் அடையாளம் எதிர்காலம் பற்றிய குழப்பங்களை அடைகிறார்கள். அவர்களே தீவிரமாக இலக்கியத்துக்குள் வருபவர்கள். அவர்களுக்காகவே இதை எழுதுகிறேன்.

இந்த கவனச்சிதறல் இயல்பானது. இது அகத்தே விளையும் தேடலின் விளைவு.ஆனால் இதை ஒரு தோல்வியாக எடுத்துக்கொண்டு இப்படியே வாழ்க்கையை விட்டுவிட்டால் இழப்பது மிகுதி. இந்தக் கவனச்சிதறலை ஒருவகையான திசைதிரும்பல் என்றும் புதியவை தேடும் பயணம் என்றும் விளக்கிக்கொள்வது இன்னமும் ஆபத்தானது. அது பயனற்ற சிறு அலைச்சல்களையே உருவாக்கும். இதை புறவயமாக, தர்க்கபூர்வமாகப் புரிந்துகொள்ள முயல்வதே இன்றைய தேவை

இந்த சிதறல் ஏன் உருவாகிறது என்றால் நீங்கள் உங்களுக்கு சூழலும் பெற்றோரும் அளிக்கும் அடையாளத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதால்தான். நீங்களே உங்களுக்கான ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள். அதற்காகத் தேடுகிறீர்கள். நம் சூழல் பொதுவாக வேலைக்குச் செல்வதற்கான ஒருவராகவே குழந்தைகளை வடிவமைக்க முயல்கிறது. ஆகவே கலையிலக்கிய ஆர்வம் கொண்டவர்களே முதல் மீறலைச் செய்கிறார்கள். அடுத்தபடியாக வணிகம் செய்ய விரும்புபவர்களும் மீறமுயல்கிறார்கள்.

நம் சூழலில் கலையிலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் தொழிலாக, வாழ்வாக கருதப்படுவதில்லை. ஆகவே அவற்றுக்கு பெற்றோர் ஊக்கமளிப்பதில்லை. கல்விமுறையிலும் அதற்கான இடமில்லை. ஆகவே நீங்கள் இதைப்போல உதிரிமுயற்சிகள், உதிரிக்கனவுகளைச் சென்றடைய வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த கனவுகள் இன்று ஒருவகை முதிராநிலை கொண்டவை என்று உணர்ந்தீர்கள் என்றால் நீங்கள் உங்களை நிலைப்படுத்திக்கொள்ளமுடியும்

நீங்கள் உங்களை நிதானமாக மதிப்பிட்டுக்கொள்வதற்கான தருணம் இது என நினைக்கிறேன்.வாழ்க்கையில் நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்கள்? வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் வெற்றி என்பது என்ன? எதைச்செய்தால் அந்த ‘வெற்றிட’த்தை உங்களால் நிரப்பமுடியும்?

பணம், புகழ், சமூகநிலை ஆகியவையா?உடனே அவசரப்பட்டு ‘அதெல்லாம் இல்லை’ என மறுக்கவேண்டாம். அவை தீய விஷயங்கள் அல்ல. தேவையானவை. அந்த மூன்றையுமே நான் எனக்குத்தேவையான அளவுக்கு தேடிக்கொண்டிருக்கிறேன். புகழ்தேடுபவர்களே சிறந்த உலகியல்சாதனைகளைச் செய்கிறார்கள். வணிகத்தை நாடுபவர்களுக்கு பணவிருப்பம் அவசியம். சமூகநிலையை விரும்பாதவர்கள் இருக்கமுடியாது

அதுதான் என்றால் முழுமூச்சாக உங்களுக்கு உகந்த படிப்பில் ஈடுபட்டு வென்று முன்செல்லவும். ஒரு படிப்பில் முழுமூச்சாக ஈடுபட முடியவில்லை என்றால் உங்கள் இயல்புக்கு ஏற்ப இன்னொரு படிப்புக்குச் செல்லலாம். பட்டப்படிப்பின்போதுதான் நம் இயல்புக்கும் படிப்புக்குமான முரண்பாடுகள் தெளிவடைகின்றன.பலர் படிப்பை விட்டுவிட அதுவே காரணம். ஒரு குறிப்பிட்ட படிப்பு பொருந்தவில்லை என்பதற்கு படிப்பே பொருந்தவில்லை என்று பொருள் இல்லை.உங்களுக்குரிய படிப்பை தேர்வுசெய்யலாம்.

தர்க்கமனம் அமையாதவர்கள் கணிதம் அறிவியல் போன்றவற்றை வெற்றிகரமாக கற்க முடிவதில்லை. அவர்கள் தர்க்கத்தன்மை குறைவான, ஆனால் விளக்கத்தன்மை கூடிய சமூகவியல் வரலாறு இலக்கியம் போன்ற துறைகளுக்கு மாறலாம். அத்தகைய படிப்புகளில் எவை உங்களுக்கு பொருந்துவன என்பதை நீங்களே உங்களை கூர்ந்து கவனித்து தெரிவுசெய்துகொள்ளலாம். அதில் முழுத்திறனையும் செலுத்தி வெல்லலாம்.

உங்கள் அகவை பயிற்சிக்குரியது. கடுமையான பயிற்சிகள் வழியாக உள்ளத்தை, அறிவை தீட்டிக்கொள்வதற்குரியது. பயிற்சிக்கு இரண்டு இயல்புகள் தேவை. பயிற்சி ஒன்றில்தான் நிகழமுடியும். அதில் குவியவேண்டும். இரண்டு, பயிற்சி என்பது நம்முடைய இயல்பிலுள்ள சில எதிர்மறைப் பண்புகளை கடப்பதுதான். ஆகவே தடைகளே பயிற்சியை அளிக்கின்றன. அவற்றை வெல்வதனூடாகவே கற்கிறோம். அதற்கு பயின்றேயாகவேண்டும் என்னும் தளராத பிடிவாதம் தேவை

நம்முடைய முறைசார்ந்த கல்வியும் பயிற்சிதான். உலகியல் வாழ்க்கைக்கான பயிற்சி. அதை செய்தேயாகவேண்டும். அதைச் செய்யாதவர்கள் மாற்றுவாழ்க்கையை தேர்வுசெய்யவேண்டும். கலைகளில், இலக்கியத்தில். என்ன சிக்கலென்றால் முதல்வகைப் பயிற்சியை விட பலமடங்கு வலிமிக்க, தீவிரமான பயிற்சி இதற்குத்தேவை. ஒரு நல்ல வயலினிஸ்ட் ஆவதை விட ஒரு ஆடிட்டர் ஆவதற்கு குறைவான பயிற்சி போதும். இது பலருக்குத் தெரிவதில்லை.

இந்த வயதில் தேவையான பயிற்சியை தவிர்க்கும்பொருட்டு உங்கள் உள்ளம் அலைபாய்கிறது, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுகிறது என்றால் நீங்கள் உங்களுக்கான எதிர்காலத்தை இழந்துகொண்டிருக்கிறீர்கள் என்றுபொருள். ஆகவே இப்போது உங்கள்முன் இருக்கும் உலகியல் கல்வியை வெற்றிகரமாக முடியுங்கள். அது எளிதுதான். அதற்காக திட்டமிட்டு உள்ளத்தை அளிக்கவேண்டும், நேரம் ஒதுக்கி அமரவேண்டும், வென்றேயாகவேண்டுமென முடிவெடுத்துச் செயல்படவேண்டும்.

சரி, உங்கள் தளம் கலை- இலக்கியம் என்றால்? அதுவும் கடுமையான பயிற்சிக்குப்பின் சென்றடையவேண்டியதுதான். முந்தையதை விட கடுமையான பயிற்சி தேவை. அது எளிதானதோ வேடிக்கையானதோ அல்ல. அது அரட்டையடிப்பதோ மேலோட்டமாகத் தெரிந்துகொள்வதோ அல்ல. கலையிலக்கியக் கனவுகளுடன் வரும் பல இளைஞர்களைக் கண்டிருக்கிறேன். அவர்கள் எந்த தயாரிப்பும் இல்லாதவர்களாக, எந்த பயிற்சிக்கும் மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.

கலையிலக்கிய தளத்திலுள்ள பயிற்சிக்கு இரு நிலைகள் உண்டு. ஒன்று, இவற்றில் வெற்றி என ஒன்றைச் சென்றடைய நீண்டநாட்களாகும். அதுவரை பொருளியல் வாழ்க்கையை நடத்த இன்னொரு தொழிலைச் செய்தாகவேண்டும். அந்த தொழிலுக்குரிய பயிற்சியை அடைந்தாகவேண்டும். உண்மையில் அதுவும் கலையிலக்கியப் பயிற்சியின் ஒரு பகுதிதான். கலையிலக்கியம் நோக்கிச் செல்லும் மனதின் ஒரு பகுதியை பிரித்து அந்த தொழில்சார் பயிற்சிக்கும் கல்விக்கும் அளிக்கவேண்டும். பின்பு தொழிலுக்கு அளிக்கவேண்டும்.

தொழில்சார்ந்த அடித்தளம் கலையிலக்கியக் கல்விக்கு இந்தியாவில் தேவையாகிறது. இன்றைய அமெரிக்காவும் அப்படி ஆகிவிட்டது.அவ்வண்ணம் ஒரு தொழில் இல்லையென்றால், வருமானப்பிரச்சினை உள்ளத்தை அலைக்கழிக்கும். தனிமையையும் கழிவிரக்கத்தையும் அளிக்கும். அந்த உணர்வுகளால் உண்மையில் கலையிலக்கியத்தை கற்றுக்கொள்வது குறையும்.

இங்கே வரும் பலரை கவனிக்கிறேன், பொருளியல் சிக்கல்களால் சில ஆண்டுகளிலேயே நம்பிக்கையிழந்து கசப்படைகிறார்கள்.அக்கசப்பு ஒரு பெரிய சுவர்போல ஆகி அவர்களை சூழ்ந்து மேற்கொண்டு எதையுமே கற்கமுடியாதவர்களாக ஆக்கிவிடுகிறது. அதேபோல உளம்கசந்தவர்களின் கூட்டத்தை நாடச்செய்கிறது. எல்லாவற்றையும் ஏளனமும் நிராகரிப்புமாகப் பார்க்கச் செய்கிறது.

அது ஒரு பெரிய வீழ்ச்சி. அது செயலின்மையை உருவாக்கும். வாய்ப்புகளைக்கூட மறுக்கும் இடத்துக்கு கொண்டுசென்று சேர்க்கும். தங்கள் தோல்விகளையே கொண்டாட ஆரம்பிப்பார்கள். தங்கள் தோல்விகளுக்கு பிறர் காரணம் என புனைந்துகொள்வார்கள். தன்னிரக்கம் என்பது தன்ரத்தச்சுவை. அதையே சுவைத்து தனிமையில் வாழ்வார்கள்.

ஆகவே காலூனிறி நின்றிருக்கும் உலகியல் தளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதற்கும் இதே கல்வியும் பயிற்சியும் அவசியம். இதே போல தேர்வுகளை வெல்லவேண்டும். வெல்லுவதற்குரிய தேர்வுகளை கண்டடையவேண்டும். அதுவே அடித்தளம். அதன்மேல் நின்றுகொண்டு கலையை இலக்கியத்தை பயிலுங்கள். அது நீண்டகாலக் கல்வி என நினைவில்கொள்ளுங்கள். பொறுமையும் தீவிரமுமாக சிலகாலம் முயன்று, உங்களை நிறுவிக்கொள்ளுங்கள். அதன்பின்னரே வெற்றி என ஒன்றை உங்கள் கண்முன் காணமுடியும்

இயக்குநர் ஆவது பற்றிச் சொன்னீர்கள். இங்கே கலையிலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் இயல்பாகவே அக்கனவை சென்றடைகிறார்கள். ஏனென்றால் புகழும் வெற்றியும் கண்ணுக்குத்தெரியும் துறை அது. ஆனால் அத்தகைய கனவுடன் இருக்கும் பல்லாயிரவரில் மிகச்சிலரே வாய்ப்பை பெற்றார்கள். வாய்ப்பைப் பெற்றவர்களில் இருபதுக்கும் குறைவானவர்களே பெயருடன் வெற்றியுடன் இருக்கிறார்கள். எண்ணிப்பாருங்கள் ஒரு கோடியில் இருபதுபேர்

அந்த இருபதுபேரில் ஒருவராக இருக்கும் தகுதி உங்களுக்கு உண்டா என நீங்கள்தான் முடிவெடுக்கவேண்டும். அதற்கு என்ன தேவை என சொல்லிவிடுகிறேன். சினிமா என்னும் ஊடகம் மீது வெறிகொண்ட பற்று. அதிலேயே பல ஆண்டுகளை கழிக்கும் அளவுக்கு அர்ப்பணிப்பு. அதன்பொருட்டு துயர்களை சந்திக்கும் துணிவு. கூடவே இணைந்திருக்கும் நிர்வாகத்திறன். உலகியலை உடன் சமாளிக்கும் தன்மை. இவை உண்டு என்றால் மட்டுமே சினிமாவை தெரிவுசெய்யலாம்

இன்று சினிமாவுக்குள் நுழைய, வெல்ல பத்தாண்டுகள் பின்னணி உழைப்பு தேவை. அப்பத்தாண்டுகளை செலவிடமுடியுமா என பாருங்கள். அதன்பின் வெற்றியை உறுதியாக அடையமுடியுமா என்றுபாருங்கள். சற்றேனும் ஐயமிருந்தால் இது ஒருவகை பகற்கனவு என விலக்கிவிட்டு உங்களால் செய்யத்தக்கது என்ன என்று கவனியுங்கள். கலையிலக்கிய ஆர்வம்கொண்ட எல்லாருமே இயக்குநர்களாக வேண்டியதில்லை. நீங்கள் நாவலாசிரியராக இருக்கலாம். வரலாற்று ஆய்வாளராகக்கூட இருக்கலாம்.

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைவடக்குநாதனின் வாசலில்
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் வெளியீடு