நமது சமரசங்கள்

உலகுக்குப் புறம்காட்டல்

அன்பு ஜெ,

“உலகுக்கு புறம் காட்டல்”  படித்தேன் ஜெ. பேருந்தில் காலையில் அந்த ஜன்னலின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு தான் அந்த வார்த்தைகள் என்னுள் சென்றன. கலங்கிய கண்களோடு பயணப் பாதை முழுவதுமாக உங்களின் வரிகளை தியானித்திருந்தேன். பயிற்சியிலிருந்த ஆறு மாதங்களாக உறுத்திக் கொண்டிருந்தவைகளை நீங்களே கண்டறிந்து எனக்கு எழுதியது போன்றிருந்தது. அது எனக்கான பதில் கடிதம் தான். இதையெல்லாம் எழுதி அவர் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கையில் நீங்களே நான் கேட்காத ஒரு கேள்விக்கான பதிலாக, வரம் கேட்காத ஒரு பக்தனுக்கான தேவையான வரமாக இந்த பதில் கடிதம் அமைந்தது எண்ணி வியந்தேன்.

பயிற்சிக்கு சென்று ஆறு மாதம் முடிந்து விட்டது ஜெ. அறச்சிதைவும், சமரசம் செய்து கொள்ளாமை என்ற இந்த இரண்டும் தான் உறுத்தல் என்பதை இன்று கண்டறிந்தேன். என்ன செய்ய வேண்டும். எது கூடாது என்பது புரிந்தது ஜெ.

இந்த வரிகளுக்காய் நன்றி…

“எவராயினும் எழுதவேண்டுமென்றால் கொஞ்சம் சமரசம் செய்துகொள்ளவேண்டும். கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ளாதவர் எதையும் எழுதமுடியாது – சமரசம் செய்துகொள்ளாதவர் என்ற அடையாளத்துடன் வீணாகி அழியவேண்டியதுதான்.”

“….எழுதும்பொருட்டு வாழ்பவர் வாழும்பொருட்டு அதைச் செய்யலாம், பிழையில்லை. அதைச்செய்யாதவர் எவருமில்லை”

இறுதி அறிவுரை வரிகளில் மேலும் உணர்வு மேலோங்கி அழுதுவிட்டேன். அது நீங்கள் எனக்காக சொன்ன வரிகள் தான். “சரி ஜெ. நான் அப்படியே செய்றேன்” என்று சொல்லிக் கொண்டேன். இன்று அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது பாதுகாப்பாக உணர்ந்தேன். ஆம் உங்கள் வரிகள் அதை எனக்குத் தந்தது. இன்று  அலுவலகத்தில் அனல் பறக்க ஆடிட் செய்து கொண்டிருந்தார்கள். இறுகிய முகங்களுடன் பத்திரங்களுக்குள் முகம் புதைத்து எதையோ முடிவில்லாமல் தேடிக் கொண்டிருந்தனர். நான் மட்டும் அங்கே அவர்களை வேறெங்கோ இருந்து பார்த்துக்கொண்டிருப்பதாகப் பட்டது. நான் பறந்து கொண்டிருந்தேன்.

மூன்று மாத மாவட்டப் பதிவாளர் பயிற்சிக்குப் பின் நான்கு மாதப் பயிற்சிக்காக நான் தேர்ந்தெடுத்தது பழமையான, தூசி நிறைந்த சிவகிரியை தான். 1886 லிருந்து இருந்து வரும் ஒரு சார்பதிவகமாக, நூறு வருடங்கள் பழமையான இரு மரங்களும், அதற்கும் மேல் பழமையான ரெக்கார்ட் ரூமில் பல ரெக்கார்ட்களும் இருக்கின்றன. அந்தப் பழமையான அறைக்குள் அதிக நேரம் செலவு செய்யும் என்னை ஏதோ வித்தியாசமான பிராணியை போல் அவர்கள் பார்ப்பதுண்டு. போபியைப் பற்றிய கட்டுரையில் அப்பாவைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அதற்குப்பின்னான என் ரெக்கார்ட்ரூமின் வாசத்தில் அப்பாவை நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் கிடைக்கும் அரிய பெயர்கள், காலங்களின் சுவடுகளை சேமிக்கிறேன். தூசிகளை நானும் விரும்புகிறேன். இவற்றையெல்லாம் ஏற்கனவே நான் உங்களிடம் சொல்லிவிட்டேன். நித்தமும் உங்களின் தளத்தை வாசித்தபின் அதைப் பற்றி ‘அன்பு ஜெ’….. என ஆரம்பித்து உங்களுடன் பேசிக் கொண்டே தான் பயணப் பாதையைக் கடக்கிறேன். தேர்வில் இந்த முறையும் தோல்வி ஏற்பட்டது. அதை எழுதலாம் என்று நினைத்தும் வீணெனக் கருதி தவிர்த்துவிட்டேன். இரண்டு மாதமாக முதற்கனலுக்குள் இருந்தேன். முடித்து அனுப்பியபின், உங்கள் குறளினிது 6 பாகம் கொண்ட உரையை சுருக்கி எழுதலாம் என்று நினைத்து செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் வீடுறைவு கால நூறு சிறுகதைகளை தொகுத்து எழுதும் அவாவும் உள்ளது. ஆனால் அதை கடிதமாக எழுதுவதா இல்லை வேறு எவ்வாறு செய்வது என்று குழப்பமாக உள்ளது. அதற்கு உங்கள் வழிகாட்டுதல் தேவை. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையலாக உங்கள் தளத்திற்குள் நான் செல்லாத காலத்திற்குள் சென்று கண்டடைந்து கொண்டிருக்கிறேன்.

எனக்குள் இவ்வாறு கூறிக் கொண்டேன் ஜெ. ‘உலகுக்கு புறம் காட்டுகிறேன். அகச்சிதைவிலிருந்து தற்காத்து சமரசம்  செய்து கொள்ள முற்படுகிறேன். அலுவலகத்தில் எழுத்துலகையும், எழுத்துலகிற்குள் அலுவலகத்தையும் கரைக்கிறேன்’. இறுதி வரிகளுக்காய் நன்றி. ஆம் அது எனக்கும் தான் என்றே எடுத்துக் கொண்டேன் ஜெ.

நன்றி.

ஆர்.

அன்புள்ள ஆர்,

இலக்கியம் என்பது வாசகனுக்கும் ஆசிரியனுக்குமான மானசீகமான உரையாடல். இன்னொருபக்கம் ஆசிரியர்களுக்கு நடுவிலும் அத்தகைய மானசீகமான உரையாடல்கள் உண்டு.மூத்த எழுத்தாளர்களுக்கும் அடுத்த தலைமுறையினருக்குமான உரையாடல். இலக்கியவாதிகள் நடுவேயுள்ள உரையாடல்.

எனக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையே ஆசிரியர் – மாணவர் என்னும் வகையிலான உரையாடல் உண்டு. அவர் மறைந்ததமையால் அது பாதிக்கப்படவில்லை. அதை என் கட்டுரைகள், உரைகள் அனைத்திலும் காணலாம். எனக்கும் யுவன் சந்திரசேகருக்கும் நடுவே நட்பான உரையாடல் எப்போதும் உண்டு. எனக்கும் கல்பற்றா நாராயணனுக்கும் இடையே மிக அணுக்கமான ஓர் உரையாடல் உண்டு.

சொல்லப்போனால் இலக்கியம் இந்த மானசீகமான உரையாடல்களினாலேயே வாழ்கிறது. ஒட்டுமொத்தமாக நாம் வெளியே பார்க்கும் நூல்கள் ஒரு பருவடிவம் மட்டுமே. அகவயமாக நிகழும் உரையாடலே உண்மையான இலக்கிய இயக்கம்

சமரசங்கள் பற்றிச் சொன்னீர்கள். இதைப்பற்றி இங்கே எவரும் அறுதியாக ஏதும் சொல்லிவிடமுடியாது. ஏனென்றால் எல்லாருமே அறச்சிக்கலளை சந்திப்பவர்கள். குழப்பங்கள் வழியாக, தன்னைத்தானே ஆற்றிக்கொள்வதன் வழியாக முன்செல்பவர்கள்.சிலவற்றைச் சொல்லிப்பார்க்கலாம், சில குறைந்தபட்ச தெளிவுகளை அடையலாம், அவ்வளவுதான்.

சமரசங்கள் இன்றி இங்கே வாழமுடியாது. முனிவர்களன்றி எவரும்.புரட்சியாளர்கள் கூட சமரசங்களை நாடியாகவேண்டும். ஏனென்றால் நாம் சமூகம் என்ற ஒரு மாபெரும் அமைப்பின் உறுப்பினர்களாக அமைந்துள்ளோம். நாடு என்றும், அரசு என்றும், பொருளியல்கட்டுமானம் என்றும், அதன் பலநூறு நிறுவனங்கள் என்றும் பெருகியிருக்கும் அமைப்பின் உறுப்பினராகப் பணியாற்றி ஊதியம்பெற்று வாழ்கிறோம்.அதன் அநீதிகளுக்கும் சுரண்டல்களுக்கும் நாமும் பொறுப்பே.

அந்த பொறுப்பேற்றலே அறவுணர்ச்சியுள்ள குடிமகனை உருவாக்குகிறது. எழுத்தாளனின் ஆத்மாவாக திகழ்கிறது.நமது சமரசங்களால் நாம் அந்த பொறுப்பேற்றுக்கொள்ளுதலை, அதன் விளைவான குற்றவுணர்ச்சியை இழந்துவிடலாகாது. நாம் பங்குகொள்வதனாலேயே இந்த அமைப்பை ஏற்றுக்கொள்பவர்களாக, நியாயப்படுத்துபவர்களாக ஆகிவிடக்கூடாது.

என் இளமையில் இந்தியநிலத்தில் அலைந்தபோது வயிறுபொசுங்கும் பட்டினியை கண்டிருக்கிறேன். ஆனால் அப்போது நானே பட்டினிதான் கிடந்தேன். ஆனால் ஆழ்ந்த குற்றவுணர்ச்சியை அடைந்தேன். அதைப்பற்றி ஒருமுறை எண்ணிக்கொண்டபோது தோன்றியது, அது நான் என்னை இந்த அமைப்பிலிருந்து விலக்கிக் கொண்டமையால்தான் எழுகிறது என்று. அதை இழக்கலாகாது என்று எண்ணிக்கொண்டேன்.

ஆனால் இதைச் சொல்லுவதுபோல செயலில் நிறுத்துவது எளிதல்ல. காற்றில் கரைவதுபோல சூழல் நம் அறவுணர்வை கரைத்துக்கொண்டே இருக்கிறது. நமக்கு ஒவ்வொரு நியாயங்களும் விளக்கங்களும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. தெருவில் தூங்குபவர்கள் இன்றும் என்னை பதறச்செய்கிறார்கள்.நானும் தெருவில் தூங்கியவனே. ஆனால் இன்று அதற்கு பொறுப்பேற்றுக்கொள்பவனாகவே என்னை உணர்கிறேன்.

சாமானியர்கள் எதிலும் தங்கள் நலனை, தங்கள் சாதி மற்றும் குழுவின் நலனை மட்டுமே நாடுகிறார்கள். அதையே அறமென்றும் நியாயமென்றும் விளக்கிக்கொள்கிறார்கள். கொள்கை என்றும் கோட்பாடு என்றும் சொல்பெருக்குகிறார்கள்.இதில் அவர்களிடமிருக்கும் புத்திசாலித்தனம் திகைப்பூட்டுவது.

ஆனால் அதைவிடவும் கூர்மையானவர்கள் அறிவுஜீவிகள். தன்னுடைய சாதியின் நலனுக்காக மட்டுமே அத்தனை உலகப்பார்வையையும் திருத்தி வடித்துக்கொண்டு இரவுபகலாக களமாடிக்கொண்டே இருப்பவர்களைப் பார்க்கிறேன். அதை அரசியல் அறவேகம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். உண்மையிலேயே அப்படி நம்புகிறார்கள். அந்த நச்சுவட்டம் மிக கொடியது, வெளிவருவது கடினம். ஏனென்றால் நாமே நம் சொற்களால் உருவாக்கிக் கொண்டது அது

எவரானாலும் இன்று ஓர் அமைப்பின் பகுதியாக இருக்கையில் அறமீறல்களை, பொறுப்பின்மைகளைச் சந்திக்கநேரிடும். அவற்றுடன் எந்த அளவுக்கு மோதுவதென்பதை அவரே முடிவுசெய்யவேண்டும். நான் அலுவலகத்தில் பணியாற்றிய நாட்களில் ஒரு தலித் ஊழியர் ஊழலுக்கு எதிராக கொந்தளிப்பு கொண்டபோது அவரிடம் சமரசம்செய்துகொள்ளும்படிச் சொன்னேன். மிகமிக அடித்தளத்திலிருந்து வந்தவர் அவர். வேலையிழப்பை அவருடைய குடும்பம் தாங்காது.

நம் பின்னணி, நம் எல்லைகளுக்குள் நின்று நாம் சமரசங்களின் அளவை முடிவுசெய்தாகவேண்டும்.இதில் நாணம் கொள்ள ஏதுமில்லை. எல்லாருமே அப்படித்தான் வாழ்கிறார்கள். குடும்பத்துக்காக சமரசம் செய்துகொள்பவர்களே மிகுதி. எழுத்தாளன் எழுத்துக்காக சமரசம் செய்துகொள்ளலாம். ஓர் அரசியல்செயல்பாட்டாளன், ஒரு சமூகப்போராளி செய்வதை அவன் செய்யவேண்டியதில்லை. அவ்வாறுசெய்யப்போனால் அவன் மோசமான அரசியல்செயல்பாட்டாளனாகவும் சமூகப்போராளியாகவும் இருப்பான், இலக்கியவாதியாகச் செயல்படவும் முடியாது. இலக்கியவாதியின் பணி எழுதுவது, அதைச் சிறப்புறச் செய்யும்படி தன் புறவுலகை அவன் அமைத்துக்கொள்ளலாம்

நான் சொல்வது இன்றியமையாத சமரசம் பற்றி. தங்கிவாழ்வதற்காகவும் இடர்களில் சிக்கிக்கொள்ளாமலிருப்பதற்காகவும் செய்யப்படும் சமரசம் அது. சாரை தின்னும் நாட்டில் சாரையின் நடுத்துண்டை உண்பது பற்றி அல்ல. ஊர் ஓடும் பாதையில் ஓடுவதைப் பற்றி அல்ல. அதற்காகவே விலக்கத்தை சொன்னேன். கொஞ்சம் ஏளனம் வந்துசேரும். சில்லறை ஒதுக்குதல்களும் தண்டனைகளும்கூட வரலாம். ஆனால் லூசு என்ற பட்டத்துடன் ஆத்மாவை பாதுகாத்துக்கொள்வது எழுத்தாளராகச் செயல்படுவதற்கு மிக நல்லது.

போராடவேண்டியது நம் தனித்தன்மையை பாதுகாத்துக்கொள்வதற்கே ஒழிய நாம் உறுப்பினராக உள்ள அமைப்பை எதிர்த்து அல்ல. ஒருவகையில் நாம் அதை எதிர்க்கத்தான் செய்கிறோம், இன்னொரு விழுமியத்தை முன்வைத்து எழுதுவதே நம் எதிர்ப்பு. அதைச் செய்வதற்காகவே சமரசத்தைச் செய்துகொள்கிறோம்.ஆனால் அச்சமரசத்தைப் பற்றியும் நமக்கு ஒரு குற்றவுணர்ச்சி இருந்தாகவேண்டும். அது இருந்தால் முகநூலில் போலிப்போராளியாக வேடமிட்டு எம்பிக்குதிக்காமலிருப்போம்.

ரத்தத்தில் கைநனைக்கவேண்டும் என்பதில்லை.சாட்சியாக இருந்தாலே குற்றம்தான். ஆனால் ‘அப்ரூவர்’ மன்னிக்கப்படுவார். எழுத்தாளன் ஏற்புசாட்சிதான்

ஜெ

முந்தைய கட்டுரைகி.ரா- கடிதம்
அடுத்த கட்டுரையுவன் 60- கடிதங்கள்