தேர்வு செய்யப்பட்டவர்கள்- எதிர்வினைகள்

அன்புள்ள ஜெ.,

நிதர்சனமான உண்மை… ஆனாலும் ஒப்புக்கொள்ள மிகக் கடினமான உண்மை… மனதின் விசித்திரங்களுள் இதுவும் ஒன்று போலும்.

நம் இந்தியத் தத்துவ ஞானங்களில் சொல்லப்பட்ட உண்மைகளோடு ஒப்பிட்டால் இது ஒன்றும் அத்தனை குரூரமானதல்ல.

ஞானத்தைத் தேடிச் செல்லும் ஒருவன், காட்டில் தனியாக ஒரு குழந்தை சாகும் நிலையில் பசித்தழுதால் கூட அதைத் தாண்டிச் செல்லலாம் என்று கூட எழுதியிருக்கிறார்கள்.

பிரச்னைகள் எழுவது, எல்லாருக்கும் இந்த விஷயங்கள் சேரும் போதுதான் இல்லையா. நூல்களும் கல்வியறிவும் வளர வளர சீடனைத் தேர்வு செய்யும் (அல்லது விலக்கும்) வாய்ப்பு குருவுக்கு இல்லாமல் போய்விட்டது. இணையம் வந்தபிறகு இன்னும் மோசம்.

அதனால் இதைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்ளாதவர்கள்,

1) புரிந்துகொள்ள முயற்சிக்கலாம் – ஞானம் அடைய வாய்ப்பு உண்டு
2) அப்படியே உருத்தட்டலாம் – பேராசிரியராகும் வாய்ப்பு உண்டு
3) எதிர்த்து விலகலாம் – ஒரு வகையில் உத்தமம்
4) புரியவில்லை என்று சொல்லிவிட்டு அடுத்த கட்டுரைக்குப் போகலாம் – பரவாயில்லை
4) தன் அழுக்குகளை நியாயப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் – இதுதான் கொஞ்சம் இடிக்கிறது

ஒரு தளத்தில் சொல்லப்படும் வார்த்தைகளைக் கீழ்த்தளத்திற்கு இழுக்கும் ஆபத்தைத் தவிர்க்கவே முடியாது போலும்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் ‘தேர்வு செய்யப்பட்ட சிலர்’ பல சிந்தனைகளைத் தூண்டியது. பாரதியின் வரிகளில் சொல்லவேண்டுமானால் ,

தேடிச் சோறு நிதம் தின்று

பல சின்னம் சிறு கதைகள் பேசி

வாடித் துன்பமிகவுழன்று

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

கூடிக் கிழப்பருவமெய்து

கொடுங்கூற்றுக்கு இரை என ஆகும்

வேடிக்கை மனிதரைப் போலே

நான் வீழ்வேன் என நினைத்தாயோ?

உங்களின் பல படைப்புக்கள் இத்தகைய வேடிக்கை மனிதர்களைப் பற்றிய சமூக அக்கறையினால் உருவானது அன்றோ? அத்தகைய சாதாரண மனிதர்களின் வண்ணங்களும், எண்ணங்களும், உங்களின் பார்வை பட்டு இலக்கியம் ஆகின்றன? அத்தகையவர்களில் ஒருவராகத்தானே ‘கேத்தே சாஹிப்’ போன்றவர்களை அடையாளப்படுத்தி இருக்கிறீர்கள்.

உலகின் ஒவ்வொரு உயிரும் ஒருவகையில் unique identity தான். (ஒரு விசேஷ குறியீட்டுடன் கூடியது ) ஒவ்வொன்றின் படைப்பிற்கும் ஓர் காரணம் கண்டிப்பாக இருக்கும் . இயற்கையின் பரிணாம விதியில் , ஒன்றின் அழிவு , மற்றொன்றின் ஆக்கம். புழுவிலிருந்து, புண்ணிய புருஷர்கள் வரை, இந்த விதிப்படிதான், காலம் காலமாக, உயிரின் உயர்வு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு ராணித்தேனிக்காக கோடிக்கணக்கில சாதாரண தேனிக்கள் உழைக்கின்றன. உயிரை விடுகின்றன. அவற்றின் மடிவில் இருந்துதான் , புதிய ராணித் தேனிக்கள் உருவாகின்றன.

இராமகிருஷ்ண பரமஹம்சரின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஒரு படித்த மேதாவி படகில் ஏறுகின்றார். படகோட்டியிடம், அவர் படித்த காவியங்களை பற்றிக் கூறி, அவற்றைப் படித்திருகிறாயா? இல்லையென்றல் உன் வாழ்க்கையே வீண் என்று கூறுவார். அப்போது ஒரு சுழலில் படகு மாட்டிக்கொள்ள இருக்கும் போது, படகோட்டி அவரிடம் ‘நீச்சல் தெரியுமா? இல்லாவிட்டால் உனக்கு வாழ்க்கையே இல்லை’ என்று கூறி தண்ணீரில் குதித்து தப்பிப்பான்.

இன்னொரு கதையில் , ஒரு யோகி தண்ணீரின் மீது நடக்கும் வித்தையை, 13 ஆண்டுகள் கஷ்டப்பட்டு பயின்று தேர்ந்த்தாக கூறுவார். அதற்கு இராமக்ருஷ்ணர், ‘உன் வாழ்கையின் 13 ஆண்டுகளை வீணடித்து விட்டாயே ! காலணா கொடுத்தால், ஒரு படகோட்டி உன்னை மறுகரை கொண்டு சேர்த்து விடுவானே’ என்றாராம். பால் இருந்தால் தான் தயிர் கிடக்கும். தயிர் இருந்தால்தான், கடைந்து வெண்ணை எடுக்க முடியும். வெண்ணையை காய்ச்சித்தான் நெய் எடுக்கமுடியும்.

பலகோடி டன் மண்ணை அலசினால்தான், ஒரு அவுன்சு தங்கம் கிடைக்கும். உங்களைப்போல் ஒரு சிந்தனாவதி கிடைக்க வேண்டுமனால், எத்தனை கோடி டன் மண்ணை அலச வேண்டும்.
எந்த உயிருக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ , அது இயற்கையின் இரகசியம். எல்லா உயிர்களுக்கும் அதனதன் படைப்பில் ஒரு அவசியம் இருப்பதாகத்தான் எனக்குப் படுகிறது.

அன்புடன்,
சங்கரநாராயணன்

அன்புள்ள ஜெயன்,

“தேர்வு செய்யப்பட்ட சிலர்” கட்டுரை வாசித்தேன்.
அதன் தளம் முற்றிலும் ஒரு வித்தியாசமான கோணத்தில் இருந்தது.

எல்லா மனிதர்களும் நுண்ணுணர்வு கொண்டவர்கள் எனில்/சிந்தனை செய்பவர்கள் எனில் நம் தமிழ்நாட்டில்
ஜெயலலிதாவும், கருணாநிதியும் அடுத்து அடுத்து மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்க முடியாது.

எல்லா சீரழிவுகளும் ஒரு முன்னேற்றதைப்போல தொடர்ந்துகொண்டிருக்காது இல்லையா?

மறுப்பு சொல்லி வந்த கடிதங்களில் ஒரு வித அறிவுஜீவி தன்மையே வெளிப்படுகிறது.

உங்களின் “வாசகி” என்ற ஒரு பழைய கட்டுரை ஒன்றில் உங்களை விபசாரத்திற்கு அழைத்த பெண்ணின் குழந்தை மண்ணள்ளி தந்ததில்லையா?

அது குழந்தையின் இயல்பாக செய்கைஎனினும் நம் மனசாட்சி ஒரு கணம் துடுக்குறவில்லையா,,?
அதன் நுண்ணிய இயங்குதளம் போலத்தான் இந்த கட்டுரை சொல்லும் செய்தியும்.

“மனிதன் ஒரு சிந்திக்கும் நாணல்” என்று கூறிய அந்த கிரேக்க தத்துவச்சிந்தனையாளனை நினைத்துக்கொள்கிறேன்,,,

பேரன்பு,
சரவணன்

அன்புள்ள ஜெ,

God’s Children என்ற சொல்லாட்சி அவ்வப்போது மனதில் எழும். (இதனுடன் the Chosen ones, Blessed ones யும் சேர்த்துக் கொள்ளலாம்). முன்பெல்லாம் நம்மூர் சினிமா நடிகர்கள்தான் அவர்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

வேலையில் சேர்ந்த பிறகு, மீண்டும் அறிவியல் படித்தபோது அவர்கள் நியூட்டன், ஐன்ஸ்டீனைப் போன்றவர்கள் என்ற புரிதல் பிறந்தது. எல்லா துறைகளிலும் உள்ள முதன்மை சிந்தனையாளர்களையும் அவர்களுடன் சேர்த்துதான் சொல்கிறேன்.

பாமரர்களுக்கும் Original thinkers க்கும் உள்ள தூரம் மிகவும் பதபதைக்கச் செய்வது. ஆனால் இயல்பாக ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. ( முற்றிலும் அகங்காரம் அழிந்த செருப்பு தைப்பவனையும், அகங்காரமே உருவாய் கொண்ட அறிவிஜீவியை மட்டுமே ஏன் compare செய்கிறார்கள் என்று புரியவில்லை. If their opposites compared, the argument will kill itself.)

மிக அற்புதமான game. இவர்களிடம் நானும் ஐன்ஸ்டீனும் சமம் என்று சொல்லிப் பாருங்கள். அவ்வளவுதான்.

ஆம். நானும் ஐன்ஸ்டீனும் சமம் அல்ல. அவரும் பார்ப்பதறகு மனிதர் போலவே இருக்கிறார். நானும். என்பதில் வேண்டுமானால் ஒருவேளை சமத்துவம் மிளிறலாம்.

அன்புடன்,
ராஜா.

மரியாதைக்குரிய ஜெ ,
உங்கள் ‘தேர்ந்தெடுக்கபட்ட சிலர்’ படித்த நொடியில் செயல் மறந்த குற்ற உணர்வை தான் என்னில் உருவாக்கியது , அதனின்று மீண்டு உற்சாகத்தை மீட்டு அடுத்தது நகர்ந்து போய் விட்டிருந்தேன் ஆனால் இதற்கு இப்படியான அறிவுரைகள் உமக்கு வந்திருப்பதை காண்கையில்தான் எத்தனை குதர்க்கத்தில் கொண்டு போய்
சேர்க்கும் சிந்தனா தேக்கம் நிறைந்து சுழலில் தேர்ந்தெடுக்க பட்டவரில் ஒருவனான நான் மாட்டிகொண்டுளேன் என்பதையும் இந்நிலையின்று சமுகத்தை முன்னெடுக்க முயலாதிருப்பின் நிச்சயம் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல என்னிடம் ஏதும் இருக்காது என்பதையும் உணர்கிறேன்.
உங்கள் கட்டுரையின் கருத்தில் எனக்குப் பூரண உடன்பாடே.
என்ன செய்வது? புவி ஈர்ப்பு விசையின் வேகம் பள்ளி கூடத்தில் சொல்லியது போல் 9.81 metres per second every second என்று பள்ளி சிறுவரை போல ,இயற்பியலில் PhD கற்றவரால் சொல்ல இயலாது ஏனெனில் அவர்கட்கு இன்னும் கொஞ்சம் கூட தெரியுமே.என்ன செய்வது? எல்லா காலங்களிலும் பள்ளி ‘சென்றவர்களை’ விட PhD கற்றவர் எண்ணிகை சிறிதே . ஆதலில் முதலாமவர் இரண்டாமவரை புரிந்து கொள்ள இயலாது இருத்தல் இயல்பே.
ஏற்கனவே PhD வாங்கியவரை கைடாக கொள்ளுதலின் சூட்சுமம் PhD வாங்க விழையும் மாணாக்கன் ஏற்கனவே PhD வாங்கியவரை கைடாக கொள்ளுதலின் சூட்சுமம் PhD வாங்க விழையும் மாணாக்கன் இதனை நன்கு அறிந்திருப்பானஎப்படியோ என்னையும் உங்களுக்கு மடல் எழுத செய்த அந்த பள்ளி சிறார்க்கு எம் வந்தனம்.
பணிவுடன் ,

பா. சித்தார்த்தன்

 

 

 

 

முந்தைய கட்டுரைஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்
அடுத்த கட்டுரைஇன்று சென்னையில்…