அசோகமித்திரன் – கடிதங்கள்

நான் உங்களின் எழுத்துகள் மூலம் மூத்த எழுத்தாளர் அமரர் அசோகமித்திரனை அறிந்தேன் வியந்தேன்.

அவரது தனிப்பட்ட அறத்தையும், எழுத்தின் மீது கொண்ட எதிர்பார்ப்புகள் இல்லாத காதலும் என்னை அவர்மேல் அளவுக்கு அதிகமான மதிப்பும் மரியாதையும் உருவாக்கியது.

என் மகனுக்கு அவர் பெயரை வைத்தேன். தினமும் என் மகனை அவர் பெயரில் அழைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்!!!

ஒரு கேள்வி:

அசோகமித்திரன் என்ற பெயருக்கு பொருள் என்ன? அவர் எதனால் அந்த பெயரை சூட்டிக்கொண்டார்?

இப்படிக்கு,
தமிழ்ச்செல்வன் கோவை

***

அன்புள்ள தமிழ்ச்செல்வன்,

ஆச்சரியம்தான். அசோகமித்திரன் என்று எவரும் குழந்தைகளுக்குப் பெயரிட்டதில்லை

அசோகமித்திரன் எழுதிய குறிப்பின்படி அவர் இளமையில் ஒரு நாடகத்தில் நடித்தார். அக்கதாபாத்திரத்தின்பெயர் அசோகமித்திரன். அது ஒரு சின்ன கதாபாத்திரம். ஒரு துணைவன். கதைநாயகனோ தனித்தன்மைகொண்டவனோ அல்ல, வெறும் தோழன்.

தனக்கு அக்கதாபாத்திரத்தின் இயல்பும் பெயரும் பிடித்திருந்தமையால் அப்பெயரை சூட்டிக்கொண்டதாக அசோகமித்திரன் சொல்லியிருந்தார்

ஜெ

***

அன்புள்ள ஜெ

நான் உங்கள் வழியாகவே அசோகமித்திரனை அறிமுகம் செய்துகொண்டேன். ஆரம்பத்தில் அவர் கதைகளை படித்தபோது வெறும் நிகழ்ச்சிகளைச் சொல்கிறாரே என்று தோன்றியது. பிறகுதான் உங்கள் கட்டுரைகள் வழியாக அவருடைய கதைகளை எப்படி வாசிப்பதென்று புரிந்துகொண்டேன். அது எனக்கு அவரை மிக நெருக்கமாக ஆக்கியது

எனக்கு அவர் என் அப்பா போல. அப்பா ஒரு சின்ன அலுவலகத்தில் டெஸ்பாட்ச் கிளார்க் ஆக இருந்து ரிட்டயர் ஆனார். அதிர்ந்து பேசமாட்டார். தனியான மனிதர். ஆனால் நல்ல நகைச்சுவை உணர்வும் கனிவும் உண்டு. அவர் ஒதுங்கியிருந்து உலகைப் பார்த்தவர். அந்தப்பார்வையை அசோகமித்திரனில் கண்டேன்

ராஜேந்திரன்

***

அன்புள்ள ராஜேந்திரன்

சாமானியனின் பார்வை என ஒன்று உண்டு. உயர்ந்தவை என எதையும் ஏற்கவும் தாழ்ந்தவை என முற்றாக ஒதுக்கவும் தயங்கும் ஒரு பார்வை அது. மானுட வாழ்க்கையை அனுதாபத்துடன் அணுகுவது. அதுதான் அசோகமித்திரன்

ஜெ

முந்தைய கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 4
அடுத்த கட்டுரைசீன மக்களும் சீனமும்- விவேக் ராஜ்