தொள்ளாயிரம் மின்னஞ்சல்கள்

Nancy Rourke

அன்புள்ள ஜெ,

சென்ற மார்ச்சில் நான் எழுதிய கடிதத்திற்கு உங்கள் பதில் இன்று வந்தது. உண்மையில் எனக்கு ஓர் அதிர்ச்சி. நீங்கள்தான் எழுதினீர்களா அல்லது ஏதாவது ஆட்டமாட்டிக் பதிலா என்று குழப்பம். நீங்கள் எனக்காக, தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதம் என்று வாசித்ததும் நெகிழ்ந்துபோனேன்.

அந்தக்கடிதத்தை எழுதும்போது நான் உண்மையில் பதிலை எதிர்பார்க்கவில்லை. உங்களுடன் நான் ஒரு மானசீகமான உரையாடலில் இருந்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொருநாளும் உங்கள் உரைகளை இணையத்தில் கேட்பேன். திரும்பத்திரும்ப. உங்கள் குரல் காதில் ஒலிக்காத நாளே இல்லை. அந்த உரையாடலின் ஒரு பகுதியாகவே அந்தக் கடிதத்தை எழுதினேன். நீங்கள் படித்தால் போதும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது.

ஆனால் பதில் ஒருவேளை வரும் என்றும் நினைத்தேன். பதில்போடும் வழக்கம் உள்ளவர்தானே என்ற நினைப்பும் இருந்தது. பதில் வந்தது என்றும் கற்பனைசெய்துகொண்டேன். ஆனால் பதில் வராது என்றும் தோன்றியது. அதன்பின் மறந்துவிட்டேன். இன்றைக்கு பதில் ஒரு கொண்டாட்டம் போல இருந்தது. இந்த பூமியில் நானும் எங்கோ இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும் என்று இப்போது தெளிவாகிவிட்டது.இதுபோதும் ஜெ.

நான் அந்தக்கடிதத்தை எழுதும்போது சோர்வான மனநிலையில் இருந்தது உண்மை. பலகாரணங்கள். செய்வதற்கு ஏதுமில்லை என்பதுதான் முக்கியமான காரணம். வாழ்க்கை மிகச்சாதாரணமாக இப்படியே சென்றுகொண்டிருக்கிறதே என்ற எண்ணம் அளித்த சோர்வு. ஆனால் அதிலிருந்து மீண்டுவிட்டேன். வெண்முரசு சொல்வளர்காடு மீண்டும் வாசிக்கிறேன். இன்னொரு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

பெண்களுக்குரிய உலகம் மிகச்சிறியது என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அந்தக்கடிதத்தில் அதை எழுதியிருந்தேன். ஆனால் அதன்பிறகு ஆண்களின் உலகம் மிகச்சிறியது என்று நினைத்தேன். அதையே எழுதியிருக்கிறீர்கள். சிறிய உலகம் என்றால் பதற்றமில்லாமல் வாழலாமே என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். பெரிய உலகின் சுதந்திரங்கள் அவர்களுக்கு தெரியவில்லை என்பது உண்மைதான். என்னைப்போன்ற ஒருத்தி இந்த சின்ன உலகிலிருந்துகொண்டு வெளியே உள்ள உலகைப்பற்றிய கற்பனையிலாவது திளைக்கமுடிகிறது

நன்றி ஜெ

ஆர்.

அன்புள்ள ஆர்

சென்ற மார்ச்சில் வெண்முரசு முடியும் காலம். அது உருவாக்கிய அழுத்தம். கூடவே சினிமாவேலைகளும். சட்டென்று கொரோனா நோய்க்காலம் வந்துவிட்டது. வெண்முரசையும் புனைவுக்களியாட்டுக் கதைகளையும் ஒரே சமயம் எழுதிக்கொண்டிருந்தேன். கடிதங்கள் வந்து குவிந்தன. புனைவுக்களியாட்டுக் கடிதங்களை மட்டுமே படித்து பதிலெழுதிக்கொண்டிருந்தேன். மற்ற கடிதங்களை பின்னர் பார்க்கலாம் என நினைத்தேன்.

ஆனால் பின்னர் வேலைகள், பயணங்களில் மூழ்கி மறந்தேபோனேன். சிலநாட்களுக்கு முன் இன்பாக்ஸ் நிறைந்துவிட்டது என கூகிள் சொன்னபோதுதான் கவனித்தேன். கிட்டத்தட்ட தொள்ளாயிரம் கடிதங்கள் பதிலளிக்கப்படாமல் இருந்தன. ஒருகணம் மலைத்தேன். ஆனால் விடுவதில்லை என படித்து மறுமொழி அளிக்கத் தொடங்கினேன். இதில் பல சிக்கல்கள், சிலர் இரு மின்னஞ்சல்களுக்கும் ஒரே கடிதத்தை அனுப்பியிருந்தார்கள். ஆகவே சிலருக்கு ஒரு கடிதத்திற்கு இரு மின்னஞ்சல்கள் வந்திருக்கலாம். பாதிக்குமேற்பட்ட கடிதங்களுக்கு பதிலளித்துவிட்டேன்

பதில்கள் மூன்றுவகை. கடிதத்தை நான் பார்த்துவிட்டேன் என்று தெரிவிக்கும்படியான சுருக்கமான பதில்கள். அவர்கள் பேசியிருக்கும் விஷயம் சார்ந்து ஏதேனும் சொல்வதற்கிருந்தால் சுருக்கமான பதில்கள். விரிவாக விவாதிக்கவேண்டியவை என்றால் விரிவான பதில்கள். விரிவான பதில்களை கட்டுரைகளாக என் தளத்தில் பிரசுரத்திற்குச் சேர்த்தேன். அடுத்த பிப்ரவரி வரை இப்போது பிரசுரத்திற்கானவை ஒருக்கப்பட்டுவிட்டன. பிரசுரிக்கத்தக்க கடிதங்களையும் எடுத்து இணையதளத்தில் அமைத்தாகிவிட்டது. அவை தானாகவே பிரசுரமாகும்

நான் ‘டெம்ப்ளேட்’ பதில்களை அனுப்புவதில்லை. அது வாசகரின் தனிப்பட்ட ஆளுமைக்கு அவமதிப்பு என நினைக்கிறேன். மிகப்பொதுவாக எதையாவது எழுதிக்கேட்பவர்களுக்கும் பதிலளிப்பதில்லை- அவர்கள் என் வாசகர்கள் என எனக்குத் தோன்றவேண்டும். கடிதங்கள் சுருக்கமாக இருந்தாலும் அனைவருக்கும் அவர்களுக்குரிய பதில்களையே அனுப்பியிருப்பேன். ஒருவாரத்திற்கும் மேலாக ஒருநாளைக்கு எட்டுமணிநேரத்துக்கும் மேல் கடிதங்களுக்கு பதிலளிப்பதையே செய்துகொண்டிருக்கிறேன். இவற்றை அச்சில் கொண்டுவந்தால் இரண்டாயிரம் பக்கமாவது ஆகக்கூடும். தமிழிலக்கிய வரலாற்றில் இதுவரை எவரும் வாசகர்களுடன் இத்தகைய நீண்ட பெரிய உரையாடலில் இருந்ததில்லை என நினைக்கிறேன்.

உரையாடும் எழுத்தாளர்களும் உண்டு. உரையாடாதவர்களும் உண்டு. தல்ஸ்தோய் உலகத்துடன் உரையாடிக்கொண்டிருந்தார். எம்.கோவிந்தனும் சுந்தர ராமசாமியும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். கி.ராஜநாராயணன் சிலநாட்களுக்கு முந்தைய ஓர் உரையாடலில் அவர் எழுதியவற்றில் கடிதங்களே மிகுதி என குறிப்பிட்டார். நான் ஆற்றும் இவ்வுரையாடல்கள் எனக்கு முக்கியமானவை. நான் ஓர் அந்தரங்க உலகில் இல்லை. என் அந்தரங்க உலகு என் இலக்கிய ஆக்கங்களில் வெளிப்படுகிறது. ஆனால் இன்னொரு ஆளுமையால் நான் இக்காலகட்டத்துடன் பேசிக்கொண்டே இருக்கிறேன். பலதரப்பட்டவர்களுடன், அவர்களின் வெவ்வேறுவகையான பிரச்சினைகளுடன்.

பெரும்பாலானவர்களை மானசீகமாக அணுக்கமாக உணர்கிறேன். அவர்களாக மாறி நானும் வாழ்கிறேன். ஆகவே எனக்கு எழுதுவதற்கான பொருட்கள் குறைவதே இல்லை. ஒரு வாரம் என் மின்னஞ்சல்களில் இருந்தே நாலைந்து கதைக்கருக்களை எடுத்துவிடமுடியும். இவ்வுரையாடலே என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இத்தகைய ஓர் உரையாடலுக்கான தேவை அனைவருக்குமே உள்ளது. ஆகவேதான் அவர்கள் முகநூலில் பழியாகக் கிடக்கிறார்கள். ஆனால் என் உரையாடல்கள் அரட்டைகளாக மாறிவிடக்கூடாதென்பதில் கவனம் கொள்கிறேன். அவற்றில் வேடிக்கைக்கு இடமுண்டு. ஆனால் வெறும்பேச்சுக்கள், சமகால சினிமா அரசியல் வம்புகளுக்கு இடமில்லை.

ஆம், தொள்ளாயிரம் மின்னஞ்சல்கள் என்றால் அதேயளவுக்கு வெறுப்பு மின்னஞ்சல்களுமுண்டு. நான் மின்னஞ்சல்களை திறந்துபார்த்து அவற்றில் வசைகளின் தொனி இருக்குமென்றால் உடனே அழித்துவிடுவேன். பெரும்பாலும் ஓரிரு வரிகளையே வாசிப்பேன். அதோடு அவற்றை மறந்துவிடுவேன். ஒன்றுக்குமேற்பட்ட முறை வசைமின்னஞ்சல்கள் வருமென்றால் உடனே அவ்விலாசத்தை தடுத்துவிடுவேன். ஆனால் ஒரு சிறுமாற்றத்துடன் அதே மின்னஞ்சலில் இருந்து மீண்டும் வசை வரும். ஆனால் அதற்கு ஒன்றும் செய்யமுடியாது.

நான் வாசகர்கள் அல்லாதவர்களை தொடர்ச்சியாக விலக்கிக் கொண்டே இருக்கிறேன். தீவிரவாசகர்களாக இல்லாதவர்கள், அவ்வண்ணம் ஆக வாய்ப்பில்லாதவர்களை தடுத்துவிடுவேன். தொகைமின்னஞ்சல்களை உடனே நிறுத்திவிடுவேன். என்னுடன் பேசவிழைபவர்களுக்கு பேசுவதற்கு உண்மையிலேயே ஏதேனும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதிய ஒருவனிடம் அவனுடைய எழுத்துக்களை படிக்க ஆர்வமில்லாதவர்கள் பேசமுன்வரலாகாது இல்லையா?

பெரும்பாலான மின்னஞ்சல்கள் தொடக்கத்தில் தயக்கமான உரைநடையுடன், பிழைகள் கலந்த தட்டச்சுடன் இருக்கும். பலர் ஆங்கிலத்திலும் எழுதுவதுண்டு. கடிதங்களை வெளியிடும்போது பெரும்பாலும் கொஞ்சம் சீர்ப்படுத்தவேண்டியிருக்கும். ஆனால் தொடர்ச்சியாக அதேபோன்ற பிழையான மொழியில், அக்கறையில்லாமல் அனுப்பப்படும் கடிதங்களை பொருட்படுத்துவதில்லை. தயக்கமான நடையில் எழுதிய பலர் இன்று தேர்ந்த உரைநடையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நல்ல எழுத்தாளர்களாகவும் ஆகியிருக்கிறார்கள்.

அரிதாக உங்களைப்போன்றவர்களின் மின்னஞ்சல்கள். இவை நீண்ட வாசிப்புப் புலத்தை காட்டுகின்றன. தொடர்ச்சியாக இந்த தளத்தையே வாசித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அது மேலதிக மகிழ்ச்சியை அளிக்கிறது. படிப்படியாக இந்த தளத்தில் பெண்களின் பங்களிப்பு மிகுந்திருப்பதையும் ஒரு சிறந்த விஷயமாகவே நினைக்கிறேன். வழக்கமாக பெண்களுக்கு ஆர்வமூட்டுபவை என்று கருதப்படும் எதுவுமே இங்கே இல்லை. இங்கு இலக்கியம், தத்துவம், அரசியல் மட்டுமே பேசப்படுகிறது. இவற்றை வாசிக்க வரும் பெண்கள் ஒரு படி மேலானவர்கள், வேறுபட்டவர்கள். அவர்களை நான் கண்டடைந்திருக்கிறேன். அவர்களுடன் உரையாட வாய்க்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியதே.

அவ்வண்ணம் நான் பதிலளிக்கவேண்டும் என சேர்த்துவைத்தவை இந்த தொள்ளாயிரம் மின்னஞ்சல்களும். இன்னும் ஒருவாரத்தில் அனைவருக்கும் மின்னஞ்சல் செய்துமுடித்துவிடுவேன் என நினைக்கிறேன். தாமதமான மின்னஞ்சல்களுக்கு வாசகர்கள் மன்னிக்கவேண்டும். இக்காலகட்டத்தில் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதே முக்கியம்.

உங்கள் கடிதத்தில் என் பயணங்களில் மானசீகமாக உடனிருக்கிறீர்கள் என எழுதியிருந்தீர்கள். இந்நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு இணையம். அதுவே இலக்கியத்தை இப்படி ஒரு மாபெரும் உடனிருத்தலாக ஆக்கிவிட்டிருக்கிறது

உடனிருங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைவாசிப்பவர்கள்- கடிதம்
அடுத்த கட்டுரைகி.ரா.உரையாடல்