இருபெண்களின் கடிதங்கள்


ஓராண்டுக்கு முன் என நினைக்கிறேன் உங்கள் தளத்தில் “யானை”என்றொரு சிறுகதை எழுதியிருப்பீர்கள் .அது அப்படியே என் கதையே. அதன் முடிவு போலாயிருக்கும் எனக்கும்.

எத்தனையோ உளச்சோர்வுகளுக்கு ஆளாகி நானும் எனது மகனும் சென்னையின் அபார்ட்மெண்ட் ஒன்றில் …அவர் தன் வேலையின் பொருட்டு நாடுநாடாகவும் மாநிலங்களுக்கிடையேயும் பயணப்பட்டுக் கொண்டேயிருப்பார்.பெற்றோர்களுக்கும் பல்வேறு கடமைகள் .அண்டைவீட்டு பெண்கள் அனைவரும் வேலைக்கு செல்பவர்கள். நின்று பேசக்கூட பாவம் அவர்களுக்கு நேரமிருக்காது.

என் மகளின் வரவு அடுத்த அழகான அத்தியாயத்தை கொடுத்தது அதன்பின் 2016ல் உங்கள் தளத்தின் அறிமுகத்தாலேயே இன்றுவரை எனது தனி உலகம் அழகாக்கப்பட்டிருக்கிறது. இன்று அவருக்கும் வேலைச்சுமை குறைவே. இன்று குழந்தைகள் வளர்ந்து நிற்கிறார்கள் நானும் மீண்டுவிட்டேன். நான் மீண்டதற்கு காரணம் பாப்பாவும் உங்கள் எழுத்துக்களும் மட்டுமே.

இன்று வாசக நட்பு வட்டம் ஒன்று உருவாகி வந்துள்ளது. உங்கள் கதைகளை பற்றி நித்தம் விவாதிக்கிறோம் .இந்த இணை வாசிப்புக்கான நூல்களை நண்பர்கள் விவாதங்களுனூடே பகிர்கிறார்கள் .இசையை பற்றிய அறிமுகங்களை அதன் தரவுகளை அள்ளி வீசுகிறார்கள். எனது ஒவ்வொரு நாளையும் பகுதிகளாக பிரித்து இலக்கியவாசிப்பு ,அதற்கிணையான இணைவாசிப்பு ,இசையை புரிந்துக்கொள்ளவும் மற்றும் பயிற்சிக்காகவும், ஸ்லோகங்களை புரிந்துக்கொள்ளமாகவும் மாற்றிக்கொண்டுயிருக்கிறேன். அத்தனையும் நீங்கள் தான் அளித்தீர்கள் . இத்தனை தெளிவையும் உங்கள் எழுத்துக்கள் எனக்கு கொடுத்துச் சென்றன.

அம்மச்சி பசுவின் அகிடு போல கைகள் முழுவதும் எழுத்துக்களையும் சொற்களையும் நிரப்பி என் போன்றவர்களின் சிந்தனையை வளப்படுத்துகிறீர்கள். இன்று நான் சொற்களால் நிரப்பப்பட்டிருக்கிறேன். அனைத்தும் உங்களிடமிருந்து நான் எடுத்துக்கொண்டவை .எத்தனை பெரிய உலகின் வாசலுக்கு கை பிடித்து அழைத்துச் சென்றீர்கள் .அப்படிப்பட்ட உங்களின் அப்பதிவை படித்துவிட்டு சிறிது நேரம் கண் தட்டியது போல் அமர்ந்திருந்தேன். சமீபத்தில் ஒரு ஒன்பதாம் வகுப்பு பெண் எழுதியிருந்தாள் .இன்னும் அது போல் பலர் வர வேண்டியிருக்கிறது ஜெ.

இன்று நான் எனக்கான பயணங்களில் இறங்க முடியும் .என் குழந்தைகளையும் குடும்பத்தையும் சரிவர நிர்வகிக்க முடியும் .நல்ல எழுத்துக்களில் மூழ்கி திளைக்க முடியும் ,அதன் நுணுக்கங்களை அலசி ஆராய்ந்து தெளிந்துக்கொள்ள முடியும் .அதற்கு ஒவ்வொரு கதையையும் கேள்விகளாக கேட்டு துளைத்தெடுத்து அதன் மையத்தை சரிவர விளக்க கூடிய அருமையான நண்பர்கள் கிடைத்துள்ளனர். இலக்கிய வாசகர்கள் என்பதலேயே விவாதத்தை சரிவர புரிந்துக்கொள்ளும் மேம்பட்டவர்களாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தனை முடியும்களை ஒரு 5 வருடங்களுக்கு முன் நான் எழுதியிருக்கமாட்டேன்.

அனைத்திற்கும் நன்றி ஜெ.
இப்படிக்கு
வி. ஆர்

அன்புள்ள வி. ஆர்

உண்மையான இன்பம் என்பது கற்றல்- விவாதித்தல்- கற்பித்தலிலேயே உள்ளது என்பது கீழைமேலைத்தேய மரபுகளிலுள்ள நம்பிக்கை. கலைமகளே நீடித்த இன்பத்தை அளிக்கமுடியும். குறிப்பாக அறிவுத்திறனும் ஆளுமையும் உடையவர்களுக்கு. ஆனால் இங்கே உலகியல் மட்டுமே போதும் என்னும் எண்ணம் சூழலில் வலுவாக உள்ளது.

அத்தகைய சூழலில் நாம் நம்மை தனிமையாக்கிக்கொள்கிறோம். சோர்வடைகிறோம். நாம் நம்மை மீட்டுக்கொள்ளவேண்டும். நம்மை உண்மையிலேயே மகிழ்விக்கும் அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். எழுதுவதும் படிப்பதும் உங்களை நிறைக்கட்டும்.

ஜெ

கனம் ஜெயமோகன் அவர்களுக்கு ,

உங்களை எப்படி விளிப்பதென்று எனக்கு தெரியாது. அதற்கான அறிமுகமும் இல்லை. அனுபவமும் இல்லை. நான் நீண்ட நாட்களாக எதனையோ ஒன்றினை தேடிக்கிட்டு இருக்கேன்.உங்கள் சிறுகதைகளை வாசிக்க தொடங்கின பிறகு அதில் பாதி அளவை கண்டடைந்த ஒரு நிம்மதி கிடைத்திருக்கு.

எனக்கு கேரள வரலாறு மற்றும் வாழ்க்கை முறை பற்றி அறய ஆசை .உங்கள் எழுத்துக்கள் மூலமாக ஏதாே அதனை தொட்டு விட்ட உணர்வு. இன்னும் உங்கள் சிறுவயது நினைவுகளை எழுதுவீர்களா? அந்த அழியாத நினைவுகளுக்குள் நானும் வாழ்ந்தயாய் எண்ணிக்கொள்கிறேன்.

எனக்கு வாசிக்க பிடிக்கும். வாங்கி படிக்கும் அளவுக்கு வசதிகள் இல்லை. இலங்கையில் இருந்து நன்றி கூறிக் கொள்கின்றேன் உங்கள் நினைவுக் கதைகளுக்கு.
நன்றி

ஆர்

அன்புள்ள ஆர்

என் எழுத்துக்களில் பெரும்பகுதி என்னுடைய இணையதளத்திலேயே இலவசமாக படிக்கக் கிடைக்கிறது. படியுங்கள்.

என்னுடைய எழுத்துக்கள் எவருக்கும் கிடைக்கமுடியாதவையாக இருக்கக்கூடாதென்பது என் எண்ணம். ஆகவே அச்சில்வந்த நூல்களுக்கும் இலவசப்பிரதி இணையத்தில் உண்டு

வாழ்க்கையில் எதையாவது தேடுபவர்களுக்கு துயரும் சலிப்பும் உண்டு. ஆனால் அந்த தேடல் இல்லாதவர்களுக்கு இருக்கும்அர்த்தமின்மை இருக்காது என நினைக்கிறேன்

நீங்கள் உங்கள் எண்ணங்களை எழுதலாம். எழுதுவது உங்களை தொகுத்துக்கொள்ள உதவும். கதைகள் கூட எழுதலாம்

ஜெ

முந்தைய கட்டுரைஎண்ணும்பொழுது -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிரதம்