இலக்கியத்தின் நிலக்காட்சிகளை காண…

ராஜமகேந்திரபுரி [அரசப்பெருநகர்] இன்றைய ராஜமந்த்ரி. ஷண்முகவேல் ஓவியம் வண்ணக்கடல்

அன்புள்ள ஜெ

தொடர்ச்சியாக தங்கள் தளத்தில் வெளிவரும் வெண்முரசு வினாக்கள் பகுதியை படித்து வருகிறேன். இன்றைய பகுதியில் சுபஸ்ரீ அவர்களின் நிலக்காட்சி தொடர்பான கேள்விக்கு தாங்கள் அளித்த பதிலை ஓட்டி என்னுள் தோன்றிய சிறு கேள்வியே இங்கு பகிர நினைப்பது.

இந்த கேள்வி பெரும்பாலும் அபத்தமானதாக இருக்கலாம்.இப்போதைக்கு எனக்கு தெரியவில்லை இது அபத்தமானதா என்று. ஏனென்றால் வெண்முரசை இன்னும் வாசிக்க தொடங்கவில்லை. நேற்று தான் இணையத்தில் முதற்கனலை பதிவு செய்தேன். முன்பு ஒருமுறை இணையத்தில் வாசிக்க முயன்றேன். ஆனால் அது சாத்தியப்படவில்லை. ஒரு புத்தகத்தை கையில் எடுத்து வாசிக்கும் போது உள்ள ஒருமை கூடவில்லை. ஆகவே விட்டுவிட்டேன்.

வெண்முரசின் நிலக்காட்சிகளுக்காக அக்கனவு எழுந்த நாளில் இருந்து இருபத்தைந்தாண்டு காலம் இந்திய நில பயணம் மேற்கொள்வதை கூறியிருந்தீர்கள். பின் அப்படி பயணம் ஏதும் செய்யாதவர் சற்று திகைப்போடு இப்படியும் இருக்குமா என சந்தேகம் கொள்ளும் நிலக்காட்சிகளை கூறி அவை உண்மையில் உள்ளவை. அங்கு செல்லாதவருக்கு அது திகைப்பாகத் தான் இருக்கும் என பதில் சொல்லியிருந்தீர்கள்.

என் கேள்வி என்னவெனில் வெண்முரசு வாசிக்கும் எத்தனை பேர் இந்திய நிலப்பயணத்தை மேற்கொண்டு இருப்பார்கள். அவ்வெண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கும் என்பது என் அபிப்பிராயம். இது தவறாக அரைவேக்காட்டுத்தனமாக கூட இருக்கலாம். இப்படி நிலக்காட்சிகளை நேரடியாக காணமல் போவதனால் ஒரு வாசகர் இழப்பது என ஏதேனும் உள்ளதா ? அப்படியெனில் அவை என்ன ?

இன்னொன்று இக்கடிதத்தை எழுத தொடங்குவதற்கு முன் வெண்முரசை ஓட்டி மட்டுமே ‌இச்சந்தேகம் இருந்தது. இப்போது கடைசியாக படித்த தஸ்தாயெவ்ஸ்கின் குற்றமும் தண்டனையும் நாவலின் சித்திரங்கள் மனதில் எழுகின்றன. நாவல் முழுக்க ரஸ்கோல்னிகோவ் கடந்து செல்லும் காமென்னி பாலம் அதன் கீழ் ஒடும் நதி, தூரத்து தீவு, வாஸ்லென்ஸ்கி தெரு, வைக்கோல் போர் சந்தை என பல நிலக்காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன.

அந்நாவல் உலகம் முழுக்க பல்லாயிரம் பேரால் வாசிக்கப்பட்டு அவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்றும் தொடர்ந்து வாசிக்கப்படுகிறது. அவர்களில் எத்தனை பேர் இரஷ்யாவை கண்டிருப்பர். எனினும் வாசிப்பவரில் அந்நாவல் இன்றியமையாத ஒரு தாக்கத்தை செலுத்துகிறது.

என் கேள்வியை இப்படி சுருக்கி கொள்கிறேன். ஒரு நாவலின் நிலக்காட்சிகளை நேரில் அறியாத வாசகர் மையமாக இழப்பது என ஏதேனும் உள்ளதா ? அப்படியெனில் நிலக்காட்சிகளை அறிவது எத்தனை அவசியமானது ?

இக்கடிதம் தகுதியானதா என்று தெரியவில்லை. தவறாயிருந்தால் மன்னிக்கவும் ஜெ.

அன்புடன்
சக்திவேல்

ஆஸ்டர்விட்ஸ் போர், போரும் அமைதியும் நாவலில் சித்தரிக்கப்பட்டது. ஓவியம்  François Gérard

அன்புள்ள சக்திவேல்,

நீங்கள் ஒருபோதும் சென்றிராத நிலக்காட்சிகளை கனவில் கண்டதில்லையா? திகைப்பும் பிரமிப்பும் ஊட்டும் இடங்கள்? விசித்திரமான மலைகள், ஆறுகள்? எனக்கு அப்படி பல இடங்கள் கனவில் வருவதுண்டு

அவை எப்படி வருகின்றன? நாம் செல்லாத இடங்களை அத்தனை துல்லியமாக எப்படி கனவில் காணமுடிகிறது? அந்த துல்லியம் திகைக்கச்செய்வது. உண்மையில் ,கனவில் நாம் காணுமளவுக்கு அத்தனை கூர்மையாக நிஜமான நிலக்காட்சிகளை நேரில் காண்பதில்லை.

ஆய்வாளர்களின் விளக்கம் இது. ஒரு நிலக்காட்சியில் நீங்கள் பலவற்றை கூர்ந்து பார்க்கிறீர்கள். அவை தர்க்கபூர்வமாக உங்களுக்கு தேவையானவை, நீங்கள் நினைவில் நிறுத்திக்கொள்பவை. இவற்றுக்குச் சமானமாகவே உங்கள் ஆழுள்ளமும் நிலக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. கண்கள் பார்ப்பவற்றில் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கமுடியாது. ஆகவே நடைமுறைக்குத் தேவையானவற்றை மட்டும் நினைவாக சேமித்துவிட்டு எஞ்சிய பெருந்தரவுகளை மூளை ஆழுள்ளத்திற்கு செலுத்திவிடுகிறது

அதாவது முக்கியமான தரவுகள் அல்ல, முக்கியமல்லாதவையே பெரும்பாலும் ஆழுள்ளத்திற்குச் செல்கின்றன. ஆழுள்ளம் மிகப்பிரம்மாண்டமானது. அது தகவல்களின் கிடங்கு. அங்கே அவை ஒன்றோடொன்று தன்னிச்சையாக இணைவுகொள்கின்றன. அதன்வழியாக குறியீட்டுப்பொருள் கொள்கின்றன. ஒரு அகன்ற நிலம் விடுதலை என்றோ பாதுகாப்பின்மை என்றோ தனிமை என்றோ உங்களுக்குள் பொருளேற்றம் செய்யப்பட்டிருக்கும்

கனவுகள் ஏதோ வகையில் துயில்கொள்ளும்போதிருக்கும் உணர்வுகளின் நீட்சிகள். அந்த உணர்வுகளுக்குரிய படிமங்களை ஆழுள்ளமென்னும் கிடங்கிலிருந்து கனவுகள் எடுத்துக் கொள்கின்றன. மேதை ஒருவன் கைபோனபோக்கில் எடுத்து இணைத்து ஓவியமொன்றை அமைப்பதுபோல.அது தற்செயல்களின் கலைடாஸ்கோப் கலை என்று தோன்றும். ஆனால் உண்மை அது அல்ல. அந்த இணைப்பை நிகழ்த்துவதில் உணர்வுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. அந்த உணர்வுகளுடன் இணைந்த நிலக்காட்சிகள் வருகின்றன. உள அழுத்தத்தில் இருப்பவர் உயர்ந்த பாறைகள் நிறைந்த விசித்திர நிலவெளியில் எவராலோ துரத்தப்பட்டு மூச்சுவாங்க ஓடுவதுபோல கனவு காண்கிறார்.

கனவில் இருக்கும் இந்த படைப்பூக்கநிலையே வாசிப்பதிலும் உள்ளது. நான் மீண்டும் மீண்டும் சொல்லிவருவதுபோல மொழிவழியாக ஒரு கனவை உருவாக்கிக்கொள்வதற்குப் பெயர்தான் இலக்கியவாசிப்பு. இலக்கியப்படைப்புகள் அவற்றைக்கொண்டு கற்பனைசெய்துகொள்ள தெரிந்தவர்களுக்காகவே எழுதப்படுகின்றன.புனைவுமொழி கற்பனையை தூண்டிவிடுகிறது.

நாம் தெரிந்த தகவல்களைக் கொண்டோ, அதன் அடிப்படையிலான தர்க்கத்தைக்கொண்டோ ஓர் இலக்கியப்படைப்பை வாசிப்பதில்லை. சொந்த அனுபவங்களைக்கொண்டுகூட இலக்கியப்படைப்பை வாசிப்பதில்லை. தகவல்களும் தர்க்கமும் அனுபவங்களும் எல்லாம் ஒரு சிறு துளி போதும். ஒரு தொடக்கம்தான் அவை. இலக்கியப்படைப்பு அவற்றை தூண்டி வளர்க்கிறது. கற்பனையில் முழுமையானதொரு வாழ்க்கைச்சித்திரத்தை உருவாக்குகிறது. நிலக்காட்சியை உருவாக்குகிறது

யசுநாரி கவபாத்தாவின் பனிநிலம் நாவலுக்கான சித்தரிப்பு ஓவியம்

1978 ல், என் பதினாறாவது வயதில் நான் முதல்முறையாக ஒரு ருஷ்யநாவலை வாசித்தேன். ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் எடுத்து வழியெங்கும் வாசித்துக்கொண்டே வந்தேன். மிகயீல் ஷோலக்கோவின் டான் நதி அமைதியாக ஓடுகிறது என்னும் நூலின் மலையாள வடிவம். எனக்கு அது அளித்த கனவை இப்போதும் நினைவுகூர்கிறேன். நான் அதுவரை பனிவெளியை சினிமாக்களில்கூட பார்த்ததில்லை- அன்றெல்லாம் சினிமா பார்ப்பதே மிக குறைவு. கல்லூரி வரும்வரை நான் பார்த்த சினிமாக்கள் முப்பதுக்கும் குறைவாகவே இருக்கும்.

பனிவெளியில் நான் நடந்தேன். என் உடல் நடுங்குவதுபோல குளிரை உணர்ந்தேன். மேலும் ஐந்தாண்டுகளுக்குப் பின் வீட்டைவிட்டு ஓடிப்போய் இமையப்பனியை பார்த்தேன். நான் அதை துல்லியமாக முன்னர் கண்டிருந்தேன். இப்போது நிறைய பனியை பார்த்துவிட்டேன். நான் அன்று கண்ட அதேவெளிதான். எவ்வகையிலும் வேறொன்று அல்ல.

அந்தப்பனிவெளியை எனக்குக் காட்டியது எது? அதை நான் நிறைய யோசித்திருக்கிறேன். ஸ்புட்னிக், சோவியத் லாண்ட் போன்ற அன்றைய இதழ்களில் வந்த சில வண்ணப்படங்களாக இருக்கலாம். குமுதம் அட்டையில் ஒரு துறவி எடுத்த பனிவெளியின் படம் ஒன்று வந்திருந்தது. அதில் ஒரு யாக் நின்றிருக்கும். உள்ளே ‘அட்டையில் கரடிவிடவில்லை’ என்று அந்த யாக் பற்றி எழுதியிருப்பார்கள். அந்தப்படமாக இருக்கலாம். ஏனென்றால் அதை பின்னர் நான் நினைவுகூர முடிந்தது

ஆனால் அவ்வளவுதான். அதுவே போதுமானதாக இருந்தது. அந்த எளிய புகைப்படங்களிலிருந்து கனவு கிளம்பி பெரும்பனிப்பாலையையே எனக்குக் காட்டியிருக்கிறது. அவ்வாறு நான் கல்கத்தாவின் தெருக்களில் அலைந்தேன். பதினெட்டாம் நூற்றாண்டின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கை கண்டேன். கடலடியில், நிலவில் ,செவ்வாய்கோளில் நின்றிருந்தேன். எல்லாமே சாத்தியம்தான்.

அங்கு சென்றிருந்தால்தான் காட்சியை காணமுடியுமென்றால் இலக்கியம் எதற்காக? அந்தக்கலையின் தேவையே இல்லையென்றாகிவிடுகிறதே. சரி, உண்மையான நிலக்காட்சிகளுக்குச் செல்லலாம். கற்பனையான நிலக்காட்சிகளுக்கு எப்படி வாசகன் செல்லமுடியும்? சென்ற நூற்றாண்டின் மாஸ்கோவை எப்படி நான் தல்ஸ்தோய் கதைகளில் பார்க்கமுடியும்? மூவாயிரமாண்டுகளுக்கு முந்தைய அஸ்தினபுரியை எப்படி பார்க்கமுடியும்? அயல்கோள்களின் நிலங்களை எப்படி பார்க்கமுடியும்?

இலக்கியம் இதழியல் அல்ல. அது யதார்த்தத்தை காட்டவில்லை. யதார்த்தம் அதற்கு மூலப்பொருட்களையே அளிக்கிறது. அதைக்கொண்டு இலக்கியம் தன் கற்பனையால் நிகர்வாழ்க்கை ஒன்றை உருவாக்கிக்கொள்கிறது. தன் கற்பனையால் அக்கற்பனையை தொடர்ந்து சென்று வாசகனும் நிகர்வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுகிறான். அதற்கு அவனுக்கு துளியளவுக்கு செய்திகள்போதும். ஒரு தொடக்கமாக அமையத்தக்க காட்சியனுபவம்போதும். எப்படி கனவு துளியை பெருக்குகிறதோ அப்படி வாசிப்பெனும் கனவும் துளியை பெருஞ்சித்திரமாக ஆக்கும்

அப்படி ஆகாதவர் என்ன செய்வது? அது அடிக்கடி கேட்கப்படுகிறது. அது எதனால் நிகழ்கிறது? ஒன்று, தவறான நம்பிக்கைகளால். இரண்டு, தவறான வாசிப்புமுறையால். மூன்று. குறைவான முதலறிதல்கள் மற்றும் முதலனுபவங்களால்.

இலக்கியப்படைப்பு அளிப்பது ஒரு தகவல்தொகுப்பை என்றும், அதை தெரிந்துகொள்வதே வாசகனின் பணி என்றும் நம்பும் பலர் உண்டு. நம் கல்விமுறை அப்படித்தான் பயிற்றுகிறது.இந்த நம்பிக்கையால் இலக்கியத்தை ஒரு பாடபுத்தகம்போல, ஓர் அறிவியல் நூல் போல படிக்கிறார்கள். ஆகவே கற்பனை நிகழாமலாகிறது. அப்படி கற்பனைசெய்வது பிழை என நினைப்பவர்களும் உண்டு

இலக்கியப்படைப்பை படிக்கையில் உங்கள் கற்பனை விரியட்டும். சொற்களிலிருந்து நீங்கள் உங்களால் முடிந்த அளவுக்கு உச்சகட்ட கற்பனையைச் செய்துகொள்ளுங்கள். நிலங்களை, இடங்களை, மனிதர்களை, நிகழ்வுகளை. அக்கற்பனையில் கதையை உண்மையான வாழ்க்கையென நிலமென நிகழ்த்திக்கொள்ளுங்கள். வாசிக்கையிலேயே அது நிகழவேண்டும். கொஞ்சம் பயின்றால் அதன்பின் வாசிப்பதே மறந்து அந்தக் கற்பனைமட்டும் நிகழ்ந்தபடியே இருக்கும்.ஒரு கனவென நீங்கள் அந்தக்கதையை கண்டு, அதற்குள் இருப்பீர்கள். அதுவே உண்மையான இலக்கியவாசிப்பு.

ஆனால் செயற்கையாக முயன்று கற்பனைசெய்யப்போனால் சம்பந்தமில்லாத கற்பனைகளுக்குச் செல்வீர்கள். அது பிழையான வாசிப்பு. தன்னியல்பாக கற்பனை விரியவையுங்கள். உதாரணமாக, பனிவெளியில் சூரியன் செக்கச்சிவந்த கனிபோல் எழும் காட்சியை நீங்கள் தல்ஸ்தோய் நாவலில் வாசித்தால் நீங்களறிந்த சூரிய உதயத்துடன் இணைந்து அக்காட்சி இயல்பாக விரியவேண்டும். செயற்கையாக செய்யப்போனால் சூரியன் உதயமாவதற்கு ஏதாவது அர்த்தம் கற்பிப்பீர்கள். அல்லது வேறெதையாவது எண்ணிக்கொள்வீர்கள்.

செவ்வாய் கிரகத்தின் நிலம். Gregory Benford எழுதிய The Martian Race என்னும் அறிவியல்புனைவுக்கான சித்தரிப்பு

தவறான வாசிப்புமுறை என்பது இலக்கியப்படைப்பை ஓர் ஆய்வாளனாகவோ மாணவனாகவோ தன்னை நிறுத்திக்கொண்டு வாசிப்பது. ஆய்வாளர்களும் மாணவர்களும் பெரும்பாலும் இலக்கிய அனுபவம் அடைவதில்லை என்பதற்குக் காரணம் இதுவே. ஆய்வாளரோ மாணவரோ அல்லாதவர் அந்தப் பாவனையில் வாசித்தால் அதைவிட அசட்டுத்தனம் வேறில்லை.

வாசகன் படைப்பாளியின் இணைப்படைப்பாளி. படைப்பாளி சொல்லில் அளிப்பதை மீண்டும் காட்சியாக ஆக்கவேண்டியது வாசகனின் வேலை. அவன் அதற்கு மறுத்துவிட்டால் ஆசிரியன் சொன்னவை வெறும் சொற்களாக, வெறும் செய்திகளகா நின்றிருக்கும். வாசகன் எழுத்தாளனுடன் இணையாக எழுந்து கற்பனையில் திளைக்கவேண்டியவன், அதற்காகவே புனைவுகள் எழுதப்படுகின்றன.

அரிதாக நமக்கு சிலவிஷயங்கள் பற்றிய போதிய தகவல்களும், சொந்த அனுபவங்களும் குறைவாக இருக்கும். நான் யூரி பலாயன் எழுதிய தூந்திரப்பிரதேச கதைகளை வாசித்தபோது அவ்வாறு உணர்ந்தேன். அதற்கு தூந்திரப்பிரதேசம் பற்றிய கொஞ்சம் புகைப்படங்களை தேடிப் பார்த்தேன். கொஞ்சம் செய்திகளை வாசித்துக்கொண்டேன்.

பிமல் மித்ராவின் கல்கத்தா- காட்சி சித்தரிப்பு

ஐரோப்பாவின் பழங்காலம் சார்ந்த படைப்புக்களை வாசிப்பதற்கு அக்கால ஓவியங்களுடன் ஓர் அறிமுகமிருப்பது மிகப்பெரிய உதவியை அளிக்கிறது. நம் கற்பனையை தூண்டி மிகவிரிவான சித்திரத்தை அளிக்கிறது. உலகின் செவ்வியல் படைப்புகளுக்கு மிகச்சிறந்த ஓவியச்சித்தரிப்புகள் வந்துள்ளன. ஓரளவு திரைக்காட்சிகளையும் இணைத்துக்கொள்ளலாம். இவ்வாறு நம்முள் ஒரு அனுபவத்தளத்தை உருவாக்கிக்கொண்டால் நம் கற்பனையில் விரிவாக ஆக்கிக்கொள்ளலாம்

இலக்கியம் ஒரு கனவு. மொழிவழிக்கனவு. மொழியை கனவாக ஆக்குவது வாசகனின் கையிலிருக்கிறது. அதன்பெயர்தான் வாசிப்பு, அதற்கு நாம் முயன்றால் போதும்

ஜெ

முந்தைய கட்டுரைதாகூர், நவீன இந்தியச் சிற்பியா?
அடுத்த கட்டுரைஅஞ்சலி:டொமினிக் ஜீவா