வெங்கட்டாம்பேட்டை – கடலூர் சீனு

இனிய ஜெயம்,

என் அகத்தின் நிலையை நோய்ச் சூழலுக்கு முன் பின் என பிரித்து விடலாம். துயரும் துயர நிமித்தமும் என்று மட்டுமே வந்தணையும் அனுபவங்கள். நான் பேசக் கசக்கும் சொல்லெல்லாம் என் அகத்தின் இருள்.எனதிந்த முகம் எவரும் அறியக் கூடாதது நான் உட்பட. வெளியேற வேண்டும். மெல்ல மெல்ல. அப்படியே அனைத்தையும் விட்டு வெளிறிவிட விடும். ஆம் வெளியேறிவிட வேண்டும்.

உடைக்குள் புட்டு போல உடலை வேக வைக்கும் ஊமை வெயில். கிழக்கே தூரத்தில் இருட்டி இறங்கிகொண்டிருக்கும் மழையை வெறித்தபடி குறிஞ்சிப்பாடி ரயிலடி விலக்கில் நின்றிருதேன். மழை, எங்கெங்கோ பெய்கிறது என் தலைமேலன்றி. கடந்த ஆறு மாதத்தில் முதன் முறையாக ஏதேனும் கோவிலுக்கு செல்வோம் என முடிவு செய்திருந்தேன்.

குறிஞ்சிப்பாடிக்கு அருகே ஏழு கிலோமீட்டரில் பண்ரூட்டி சாலையில் வெங்கடாம்பேட்டை. நான் இறங்கவேண்டிய கிராமம். நோய் சூழல் நிலவரம். பேருந்து வரவு குறைவு. விலக்கின் தேநீர் கடையில் தேநீர் அருந்தியபடி, யாரேனும் கிராமத்துக்குள் இருசக்கரத்தில் தனியே செல்வோர் உண்டா என விசாரித்தேன். ஏழு கிலோமீட்டரில் வெங்கடாம்பேட்டை என்றார். சரிதான் என நடக்க துவங்கினேன்.

மதியம் மூன்று முப்பத்துக்கான சூரியன், மேகங்கள் விலகிய வெளிர் வானை சுட்டு, திசைகளை சுட்டு, பூமியை சுட்டு, என்னையும் சுட வேக நடையில் கிராமம் வந்திருந்தேன். சிறிய கிராமம் அதிகபட்சம் இருநூறு வீடு. ஒரு ஆரம்ப பள்ளி. கோவிலை சுற்றித்தான் ஊரே. கோவிலை நோக்கி திரும்பிய பாதை கோவிலின் பின் பக்கம் கொண்டு சேர்த்து. பிரத்யேகமாக ஒளிரும் பொன் மஞ்சள் வண்ணம் பூசிய ஏழு நிலை ராஜகோபுரம், நாலே கால் மணி வெயிலை ஏந்தி, மெய்யாகவே ஒரு கணம் பொற்கோபுரம் போல துலங்கியது ராஜ கோபுரம்.

கோவிந்தராஜப் பெருமாள் கோவில். கதைகளின் ஒன்றின் படி, தில்லை திருச்சித்ரகூடத்தில் இருந்து, பன்னிரண்டாம் நூற்றாண்டில் அகற்றிய கோவிந்தராஜப் பெருமாள் திருமேனி இங்குதான் உள்ளது. அகற்றிய திருமேனியை மீண்டும் தில்லை கருவறைக்குள் வைக்க இயலாதபடி கருவறை மாற்றி அமைக்கப்பட்டுவிட, அளவு குறைந்த அந்த கருவறைக்கு இயைந்த திருமேனியை அங்கே பதிட்டை செய்து விட்டு, மீண்டும் அங்கே வைக்க முடியாத முந்தய கோவிந்தராஜப் பெருமாள் திருமேனியை இங்கே இருந்த வனத்துக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

இப்படி வேறு வேறு வடிவில் இலங்கும் மூன்று கதைகளில் எனக்குப் பிடித்தது மேற்கண்ட கதை. ஷடமர்ஷணர் தவத்துக்கு காட்சி தந்த பெருமாள், அவர் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, தனது பத்து அவதாரங்களையும் அவருக்கு காட்டிய ஸ்தலம் இது என்பது, ஸ்தல புராணம்.

சீதையை மீட்ட பிறகு, எந்த வழியெல்லாம் சீதையை தேடி ராமேஸ்வரம் வரை வந்தடைந்தாரோ, அந்த பாதையை சீதைக்கு காட்டிய படியே திரும்ப அந்த பாதை வழியாகவே அயோத்தி செல்கிறார் ராமர். இந்த வனத்தில்தான் பிரிந்த சீதையை எண்ணி துயரத்தில் சரிந்தார் ராமர். துயிலற்ற நாட்கள். இந்த வனத்தில் வந்து இப்போது லட்சுமணன் மடியில் தலை வைத்து, சீதை காலடியில் பணிவிடை செய்ய, அனுமன் துணையிருக்க ஆனந்த சயனம் கொள்கிறார். இக்கோவிலின் தொன்மக் கதை இது.

பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் வேங்கடப்ப நாயக்கர் என்ற செஞ்சி நாயக்க மன்னர்கள் வரிசையில் வந்த மன்னன் கட்டிய கோவில். புதுவை அனந்தரங்கப் பிள்ளை,இந்த ஊர் மீதும் கோவில் மீதும் தனித்த கவனம் கொண்டிருந்தார் என்று புதுவையில் அனந்தரங்கப் பிள்ளை குறித்த கூடுகை ஒன்றில் முனைவர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன்.

கோவிலின் முன்பு நிற்கும் ஊஞ்சல் மண்டபம், நாயக்கர் கலையின் சாட்சியம். தரை முதல் விதானம் வரை நாற்பது அடி. கருங்கல்லில் கடைந்த யாளித் தூண்கள். மண்டபம் இடிந்து விட்டதால் அருகே செல்ல முடியாது. மெல்ல ஊஞ்சல் மண்டபத்தை சுற்றி வந்தேன். ஒரு கணம் உளம் மயங்கி, ஹம்பி நிலத்தில் நின்றிருந்தேன்.

யாரோ அல்லது எந்த அமைப்போ ராஜ கோபுரத்தை மட்டும் ஒளிரும் மஞ்சள் வண்ணம் பூசி சிறப்பித்திருக்குகிறார்கள். ராஜ கோபுரம் மட்டுமே கொண்ட சிறிய கோவில். மதில் வளைப்புக்குள் மூன்று சிறிய சுதை விமானங்கள் கொண்ட, ஒரே கோட்டம். இடது புறம் செங்கமல வல்லித் தாயார், வலதுபுறம் ஆண்டாள், மூலவர் பாமா ருக்மணி சமேத வேணு கோபாலன், அவரது வலது புறம் வைகுண்டப் பெருமாள்.

கொடிமரத்தின் கீழ் பத்மாசனத்தில் அமர்ந்து கரம் கூப்பி வணங்கி நிற்கிறார் கருடாழ்வார். அகலின் ஒற்றை சுடரில், பத்மாசனத்தில் அமர்ந்திருந்த தாயாரின் மூக்குத்தி வளையத்தின் கற்கள் சுடர்ந்தன. மேலிரு கைகளில் கஞ்ச மலர். அபய கரம் வரத கரம்.

பாமா ருக்மணி சமேத வேணு கோபாலன். மனித உயரமே கொண்ட திரு உருவங்கள், அடுத்த சிறிய சன்னதியில் ஐந்தலை அரவம் குடை பிடிக்க அமர்ந்த கோலத்தில் வைகுந்தப் பெருமாள். ஆண்டாள் சன்னதி முற்றிருளில் விழுந்து விளக்கின் சுடர் அணையப் போகும் இறுதி நிலையில் நின்றிருந்தது. மொத்த கோவிலுக்கும் மையத்தில் ஒரே ஒரு வெள்ளை led பல்பு எரிந்து கொண்டிருந்தது.

வெளியே வந்து யவருமற்ற கோவிலை ஒரு சுற்று வந்தேன். கோவிலின் வலது பக்கம் தனியே அனந்த சயன ராமர் சன்னதி. சென்று எட்டிப் பார்த்த முதல் கணம் திடுக்கிட்டுப் போனேன். உள்ளுக்குள் எங்கோ தூரத்தில் திருமேனியின் மத்திய பாகம் மட்டுமே தெரியும் கருவறையை எதிர்பார்த்திருந்தது அகம். கடல் விரிவையே ஒரு கணத்தில் காண நேர்ந்தது போல, என் முன்னால் தொட்டு விடும் தூரத்தில் நெடுங்கிடையில் கார்வண்ணன் திருமேனி. ஸ்தம்பித்து விட்டேன்.

எங்கும் எவரும் இல்லை. அவரும் நானும் மட்டுமே.

சென்றால் குடையாம்
இருந்தால் சிங்காதனமாம்
நடந்தால் மரவடியாம்
நீள்கடலுள் என்றும் புனையாம்
மணிவிளக்காம்
பூம்பட்டாம்
திருமால் புல்கும் அணையாம்
ஏழு தலை அரவம் கண்டேன்.

வடதிசை பின்பு காட்டி
தென்திசை இலங்கை நோக்க
குடதிசை முடியை வைத்து
குணதிசை பாதம் நீட்டி
அரவம் அணைத்துத் துயிலும்
எந்தை …
கருநிறக் கடவுள் கண்டேன்.

ஜெ …ஜெ… இதை எப்படிச் சொல்வேன் என்றே தெரிய வில்லை ஆம் கடவுளைத்தான் கண்டேன். நிலவொளி துலங்கும் விளிம்புக் கோடுகள் கொண்ட கொழுங் கன்னங்கள், உயிரையே முத்தமாக இட்டாலும் போதாதே. கருந்தாமரை மொட்டுக்கள் கண் வளர கோடி முத்தம் போதாதே. குழலழகன் வாயழகன், தோள் கண்டார் தோளே கண்டார் என்று நிற்க வைக்கும் தோளழகன். விரிமார்பில் சரிந்து கிடக்கும் யக்ஞோபவீதம். பத்ம பாதம். கோடிப் பிறப்பில் ஒன்றிலேனும் என் சென்னி பதிய வேண்டிய பத்ம பாதம். தலை அறைந்து விழுந்து சாக வேண்டிய பத்ம பாதம். கரியவன். கருமையின் பேரெழில்.

கடலூர் சீனு

மீண்டு பண்ரூட்டி செல்கையில், ஜன்னல் வழியே தெரிந்த செம்மண் நிலம் எல்லாம் அவன்தான். முந்திரிக் காடெல்லாம் அவனே. வியூகமும் அவனே விபவமும் அவனே. அனந்த சயன ராமர். காலருகே சீதாப்பிராட்டியார். கீழே அனுமன். இருபது அடி நீள திரு உருவம் .தொண்டமாதேவி எனும் கிராம நிறுத்தத்தில் நின்றது பேருந்து. இடதுபுறம் செம்மண் நிலத்தில் இரண்டு ஏக்கர் அளவில் கம்மாய். தளும்பி நிற்கும் கலங்கிய மஞ்சள் வண்ண நீர். ஊர் நுழைவில் பெரிய ஆலமரம். பின்னணியில் அந்திச் சூரியன். சூரியன் மறைந்து ஒரு கணம் வானமும் பூமியும் செம்மை கொண்டு பூத்தது. நீர் விரிவு மொத்தமும் செந்தூர வண்ணம் கொண்டு ஒளிர்ந்தது. அந்தர்யாமி.

கடலூர் சீனு

கடலூர் சீனுவின் பயணங்கள்

ஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு
தொல்பழங்கால அரியலூர் – கடலூர் சீனு
சமண வழி – கடலூர் சீனு
கிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு
முழுதுறக்காணுதல் – கடலூர் சீனு
பண்ருட்டி நூர்முகமது ஷா அவுலியா தர்க்கா
முந்தைய கட்டுரைஎண்ணும்பொழுது- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுனைவு வாசிப்பு தவிர்க்கமுடியாததா?