நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-3

நவீன இந்தியாவின் சிற்பிகள் வாங்க

நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள் பகுதி 2 [தொடர்ச்சி]

குகா அவருடைய நூலில் இந்தியாவைப்பற்றிய அறிமுகமாக ஒன்று சொல்கிறார், இந்தியாவில் ஒரே நேரத்தில் ஐந்து புரட்சிகள் வெடித்தன. நகர்ப்புறப் புரட்சி, தொழிற்புரட்சி, தேசியப்புரட்சி, மக்களாட்சிக்கான புரட்சி. இதுவே இந்தியாவின் வரலாற்றை உலக அளவிலேயே மிகமுக்கியமான ஒன்றாக ஆக்குகிறது என்கிறார்

குகாவின் புகழ்பெற்ற நூலான ‘காந்திக்குப்பின் இந்தியா’வில் தொடக்கத்தில் ஒன்று சொல்லப்படுகிறது. 1947ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது மிகவிரைவிலேயே இந்தியா உடைந்துவிடும் என்னும் எதிர்பார்ப்பு நிலவியது. ஒவ்வொரு பத்தாண்டிலும் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா உடைந்துவிடும் என அயல்நாட்டு அரசியல்நோக்கர்கள் ஆரூடம் சொன்னார்கள்.

ஆனால் இந்தியா நீடித்தது. நீடித்தது ஏன் என குகா அந்நூலில் ஆராய்கிறார் ஆனால் அப்படி ஆரூடம் சொல்ல காரணமாக அமைந்தது இந்தியாவில் இடைவிடாமல் நிகழ்ந்த கிளர்ச்சிகள், உள்நாட்டு முரண்பாடுகள். அவை ஏன் நிகழ்கின்றன? இந்தியா மாபெரும் முரண்பாடுகளின் தொகுப்பு. அவை மோதலாகவும் முரணியக்கமாகவும் நிகழ்ந்து இந்தியாவை முன்னெடுக்கின்றன

அந்த முரண்பட்ட தரப்புகளின் தொடக்கப்புள்ளிகளை ஆராய்கிறார் குகா. அவர்களை இந்தியாவின் சிற்பிகளாக காட்டுகிறார். அவ்வகையில் நவீனஇந்தியாவின் சிற்பியாக முகமது அலி ஜின்னாவை குகா முன்வைக்கிறார்.வரலாறு என்பது முரணியக்கத்தாலானது என்பதனால் ஜின்னா ஒரு விசை என எடுத்துக்கொள்ளலாம். அவர் உருவாக்கிய விளைவுகள் இன்றளவும் இந்தியாவை ஆட்டிப்படைக்கின்றன. ஆனால் எல்லாவகையிலும் ஓர் எதிர்மறைச்சக்தி என்றே ஜின்னாவை கருதமுடிகிறது.

ஜின்னா இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கக்கூடும் என்பதை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே ஊகித்தார். அல்லது, அது பிரிட்டிஷாரால் அவருக்கு சொல்லப்பட்டிருக்கலாம். அந்த இந்தியாவில் இந்து அரசே அமையும் என்றும், இஸ்லாமியர் இரண்டாம்குடிகளாக நேரிடும் என்றும் சொல்லி இஸ்லாமியரை தேசியப்போராட்டங்களிலிருந்து பிரித்தார். பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்து நேரடியான வன்முறைக்கலவரங்கள் வழியாக அதை ஏற்கச்செய்தார். தேசப்பிரிவினையின் மாபெரும் வன்முறைக்கு இந்த தனிமனிதரின் அதிகாரவெறியே காரணம் என்று சொல்லலாம். இன்றும் தொடரும் அத்தனைபூசல்களும் தொடங்குவது ஜின்னாவிடம் இருந்தே.

பாகிஸ்தானியராக ஜின்னா பாகிஸ்தானியர்களால் போற்றப்படலாம். ஆனால் இந்தியாவுக்கு அவர் மாபெரும் அழிவுச்சக்தி. உலகப்பண்பாட்டுக்கும் அவர் அழிவுச்சக்தியே. இந்தியாவின் சிற்பி என அவரைச் சொல்லலாம் என்றால் எதிர்மறைவிசையும் ஆக்கத்தில் ஒரு தரப்பு என்பதனால் மட்டுமே.

முரண்பாடுகளை உருவாக்கிய ஆளுமைகளில் இன்னொருவர் ஈ,வே.ராமசாமி. தமிழகத்தில் இந்தியதேசிய காங்கிரஸுக்கு எதிரான குரலாக ஒலித்தவர். மூன்று தளங்களில் அவருடைய செயல்பாடு இருந்தது. காங்கிரஸ் முன்வைத்த ஒருங்கிணைந்த இந்தியா என்னும் கருத்துக்கு எதிராக ஆரிய -திராவிடவாதத்தின் அடிப்படையில் திராவிட இனவாதத்தை முன்வைத்தார். பிராமணர்களுக்கு எதிரான பிராமணரல்லாதார் சார்ந்த அரசியலை முன்னெடுத்தார். இந்தியாவின் ஆன்மிக கொள்கைகளுக்கு எதிராக நாத்திகசிந்தனைகளை முன்வைத்தார்

குகா சாதகமான முன்குறிப்புடன் தொகுத்தளிக்கும் இந்நூலிலுள்ள குறிப்புகளில் ஈ.வே.ரா நன்னம்பிக்கையுடன், நேர்நிலை உள்ளத்துடன் சொன்ன ஒரு வரிகூட இல்லை. அவநம்பிக்கையும் கசப்பும் எதிர்ப்பும் மட்டுமே காணக்கிடைக்கின்றன. இந்நூலில் முகமது அலி ஜின்னா, ஈவேரா இருவரும்தான் இத்தகைய கோணத்தில் தென்படுகிறார்கள்.

கமலாதேவி சட்டோபாத்யாய

இப்பட்டியலில் குகா முன்வைக்கும் இன்னொருவர் கமலாதேவி சட்டோபாத்யாய. இந்த தெரிவு வியப்பாகவே இருக்கிறது. இந்திய அரசியலில் சோஷலிஸ்டுகளின் இடம் முக்கியமானது. அவர்கள் இந்தியாவை ஒரு ஜனநாயக சோஷலிச குடியராக நிலைநிறுத்த போராடியவர்கள். ராமச்சந்திர குகா கமலாதேவி சட்டோபாத்யாயவை அத்தரப்பின் முதன்மைப் பிரதிநிதியாக முன்வைக்கிறார்.

கமலாதேவி இளம்வயதிலேயே விதவையானார் .சரோஜினிநாயிடுவின் மூத்தவரான ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயவை மணம்புரிந்துகொண்டார். காந்தியின் உப்புசத்யாக்கிரகத்தில் முதன்மையான பங்குவகித்தார்.சிறைசென்றார். ஆனால் சுதந்திரத்துக்குப்பின்னர் அரசியலில் ஈடுபடவோ, பதவிகள் வகிக்கவோ மறுத்துவிட்டார். டெல்லியில் இந்தியா இண்டர்நேஷனல் செண்டர் உட்பட பல கலாச்சார அமைப்புகளை உருவாக்கினார். கைவினைப்பொருட்களுக்கான நிறுவனங்களை அமைத்தார். அகதிகளின் மறுசீரமைப்புக்காக பாடுபட்டார்

கமலாதேவியின் குறிப்புகள் இந்நூலில் உள்ளன. அன்றைய சோஷலிஸ்டுகளின் பொதுவான எண்ணங்களையே இதில் காண்கிறோம். பண்பாட்டுப்பிரச்சினைகளை பொருளியல் நோக்கில் அணுகுவது, நல்லெண்ணம்கொண்ட அரசால் பொருளியல் கட்டுப்பாடுகள் வழியாக செல்வம் சீராக வினியோகம் செய்யப்படுவது ஆகியவற்றைப் பற்றி அவர் பேசுகிறார். அனைவரும் பயன்பெறும் ஓர் அமைப்பிலேயே உற்பத்தி பெருகும் என நினைக்கிறார்

கமலாதேவி சட்டோபாத்யாய தொடங்கி இந்நூலில் இந்திய சிற்பிகளாகச் சொல்லப்படும் பலர் நேருயுகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நூலில் நேரு இடம்பெறும் விதமே இதை முக்கியமான ஆக்கமாக மாற்றுகிறது என நான் நினைக்கிறேன். இந்தியாவின் மறுமலர்ச்சியின் அடித்தளம் அமைத்த சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நேருவரை ஒரு நீட்சி உள்ளது. நேரு ராம்மோகன் ராயின் நேரடி நீட்சி என்றால் அது மிகையல்ல. அவர் காந்தியின் மாணவர். அதேசமயம் நவீன இந்தியாவில் உருவான அத்தனை முரண்பாடுகளையும் போராட்டங்களையும் சமரசம் செய்பவராக, அவற்றுக்கிடையே நிகழ்ந்த மோதல்களை உரையாடல்களாக ஆக்கி முரணியக்கமாக உருமாற்றி இந்தியாவை முன்னெடுப்பவராக இருந்தார்

ஐயமே இல்லாமல் இந்நூலின் கதைநாயகன் நேருதான். ஒரு வரலாற்றுநூலை உச்சகட்ட உளஎழுச்சியுடன், கிட்டதட்ட விழிநீருடன் படித்தேன் என்றால் இதில் நேரு குறித்து சொல்லப்படும் பகுதிகளைத்தான். இத்தனைக்கும் சுருக்கமான ஒரு வாழ்க்கைக்குறிப்பும், நேருவின் உரைகள் மற்றும் நூல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளும்தான் இந்நூலில் உள்ளன. உணர்ச்சிகரமாக ஏதுமில்லை.

கொந்தளிப்பு உச்சத்திலிருந்த ஒரு உள்நாட்டுச்சூழலில், பலமுனை நெருக்கடிகள் கொண்ட அயல்நாட்டுச் சூழலில், நேரு இந்தியாவை தலைமைதாங்கி நடத்தினார். தேசப்பிரிவினை உருவாக்கிய உளக்கசப்புகள், மொழிவழிமாகாணப் பிரிவினை உருவாக்கிய பிளவுகள், வங்கத்திலும் பிகாரிலும் உருவான பஞ்சங்கள் என நேரு சந்தித்தவை மிகப்பெரிய சவால்கள்.

ஆனால் சீராக ஒரு தேசத்தின் அடிப்படைகளை கட்டி எழுப்பினார். உலகிலேயே முற்போக்கானது என்று சொல்லத்தக்க அரசியல்சாசனம் ஒன்றை இந்தியாவுக்கு உருவாக்கி அளித்தார். அதிலிருந்த ஆணைகளுக்கு எதிராக நிகழ்ந்த போராட்டங்களை வன்முறை இல்லாமலேயே அணைத்தார். அதில் அத்தனை மக்களுக்கும் இணையான உரிமையும், சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் சலுகைகளும் அளிக்கச்செய்தார்.

நேருவின் சமகாலத்தில் புதியதாக அமைந்த நாடுகளிலெல்லாம் பெருகிய ரத்தவெள்ளத்துடன் இந்தியாவை ஒப்பிடவேண்டும். இந்தியாவில் அங்கிருந்தவற்றைவிட பெரிய அவநம்பிக்கைகள், பிளவுகள், கொந்தளிப்புகள் இருந்தன. கலவரங்களும் அரசுநடவடிக்கைகளும் இருந்தாலும் மாபெரும் ரத்தப்பெருக்கு இங்கே நிகழவில்லை. அதற்குக் காரணம் நேரு. இடதுசாரிகளும் வலதுசாரிகளும் அடிப்படையில் அவர்மேல் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவருடைய நேர்மை மற்றும் ஜனநாயகத்தன்மைமேல். அவரால்  எவ்வகையிலோ அவர்கள் அனைவரையும் பேச்சுவார்த்தைக்கும் சமரசத்திற்கும் கொண்டுவர முடிந்தது.

காந்தி கொலைக்கு அடித்தளமிட்ட வலதுசாரிகளும் அவருடன் பேச முன்வந்தனர், அவர் அவர்களுக்கும் ஜனநாயக உரிமையை அளித்தார். இந்தியாவின் அடித்தளத்தையே அழித்து புரட்சியைக் கொண்டுவர முயன்ற இடதுசாரிகளுக்கும் அதே நம்பிக்கை அவர்மேல் இருந்தமையால்தான் இங்கே ஆயுதப்புரட்சி கைவிடப்பட்டது, ஜனநாயக வழி தெரிவுசெய்யப்பட்டது. இடது வலது தரப்புகளின் பெருந்தலைவர்கள் நேரு மேல் பெருமதிப்பை பதிவுசெய்திருக்கிறார்கள்.

அணைக்கட்டுக்கள், அடிப்படைக்கட்டுமானங்கள் வழியாக தேசத்தின் பொருளியல் அடித்தளத்தை நிறுவினார். ஜனநாயக அமைப்புக்களை நிறுவி, அவற்றை சுதந்திரமாகச் செயல்படச்செய்து, அவற்றிற்கு தானே முன்னுதாரணமாக அமைந்து இன்று இந்தியா என எதையெல்லாம் பெருமிதமாகச் சொல்லமுடியுமோ அனைத்தையும் உருவாக்கினார். அனைத்துக்கும் மேலாக ஆசியாவின் முகமாக இந்தியாவை அறியப்படச்செய்தார்.

இந்த நூல் அளிக்கும் குறிப்புகளிலேயே நேருவின் தெளிவு பிரமிக்கச் செய்கிறது. பொருளியல் குறித்த ஒரு கடிதத்தில் கம்யூனிசம் நிலவும் நாடுகளில் சர்வாதிகார ஆட்சி வழியாக உருவாக்கப்படும் பொருளியல் மாற்றத்தை இந்தியாவில் கொண்டுவருவது எளிதல்ல என அவர் உணர்ந்திருப்பதாக சொல்கிறார். ஆனால் இலட்சியவாதம் மூலம் உருவாகும் ஒருங்கிணைவால் அதை சாதிக்கலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். ஏறத்தாழ அவர் அதை சாதித்தார் என்பது வரலாறு. அதற்குச் சான்றாக நம் மாபெரும் பாசனக்கட்டுமானங்களும் பொதுத்துறையும் நிலைகொள்கின்றன

ஆசியநாடுகளின் ஒருமைப்பாட்டை பற்றிப் பேசும்போது ஒரே உலகம் என்னும் கருதுகோளைநோக்கி ஐநா சபை நகர்வதை ஊக்குவிக்கும்பொருட்டே அந்த ஒருமைப்பாடு அமையவேண்டும், தனியான ஒரு குழுவாக நாடுகள் மாறலாகாது என்று சொல்கிறார். “நாம் விரும்புவது குறுகிய தேசிய உணர்வு அல்ல. ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய உணர்வு தேவைதான், ஆனால் அது உலக ஒற்றுமைக்கு எதிரானதாக அமையலாகாது” என்கிறார்.

இந்நூலில் அளிக்கப்பட்டிருக்கும் நேருவின் குறிப்புகள் மட்டுமே அவர் எவரென்று காட்டப்போதுமானவை. இந்தியா இந்தியதேசியத்திற்கு மட்டுமல்ல உலக ஜனநாயகத்திற்கும் அளித்த பெருங்கொடை என நேருவை எவரும் சொல்லமுடியும். இந்தியாவின் உருவாக்கத்திலிருக்கும் அத்தனை முற்போக்கான அம்சங்களையும் நேரு பிரதிபலிக்கிறார். இந்தியதேசியக் கட்டமைப்பில் இஸ்லாமியருக்கு இருக்கும் குறைவான இடம்குறித்த அவருடைய கவலையில் அவர் சையத் அகமது கானின் குரலை எதிரொலிக்கிறார். பெண்ணுரிமையைப் பேசும்போது ராம்மோகன் ராயை.

ஐரோப்பாவின் வளமான ஜனநாயக- பண்பாட்டு விழுமியங்களை இந்தியா ஏற்றுக்கொண்டு முன்னகரவேண்டும் என்னும் கனவு கொண்டிருந்தார் நேரு. அவர் உருவாக்கிய கலாச்சார, கல்விநிறுவனங்களின் பொதுவான கொள்கை அதுவாகவே இருந்தது. இந்தியாவின் சீர்திருத்தவாதிகள் அனைவரின் குரலையும் நாம் நேருவின் குறிப்புகளில் வாசிக்க முடிகிறது.

அத்தனை கொள்கைமுரண்பாடுகளையும் ஜனநாயக விழுமியங்களைக் கொண்டே நேரு எதிர்கொண்டார். அத்தனை முரண்பட்ட ஆளுமைகளுடனும் நல்லுறவிலும் இருந்தார். அவர்காலத்தைய கொள்கைத்தரப்புகளைச் சேர்ந்தவர்களை குகா தொடர்ந்து முன்வைக்கிறார். மாதவ சதாசிவ கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவர். அவ்வமைப்பின் கொள்கைகளை எழுதி நிலைநாட்டியவர். அதை நாடெங்கிலும் வளர்த்தவர்.

காந்தியின் கொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு மறைமுகப் பங்குண்டு. அதை அவர்கள் மைய அரசில் அதிகாரத்துக்கு வரும்வரை மறைத்துவாதாடி இன்று ஓரளவு ஏற்கத்தொடங்கியிருக்கின்றனர். ஆனால் அன்றைய சூழலில் ஆர்.எஸ்.எஸ் மீது நாடெங்கும் உச்சகட்ட கசப்பு நிலவியது. அதை பயன்படுத்தி அவ்வமைப்பை நசுக்க நேரு முயலவில்லை.நீதியை அடைய அவர்களுக்குரிய வாய்ப்பை வழங்க அவருடைய ஜனநாயகப்பற்று இடமளித்தது. இந்தியாவின் சிற்பிகளில் ஒருவராக கோல்வால்கரை குகா குறிப்பிடுகிறார்.

மாதவ சதாசிவ கோல்வால்கர்

இந்நூலில் எடுத்தளிக்கப்பட்டிருக்கும் கோல்வால்கரின் வரிகள் இன்று மைய அரசியல்களத்தில் பேசுபொருளாகிவிட்டிருக்கின்றன. நேரு முன்னின்றுநடத்திய இந்திய ஜனநாயகம் சிறுபான்மையினரை தாஜா செய்யும்போக்கு கொண்டிருக்கிறது என்பதே முதன்மைக் குற்றச்சாட்டு.”இது இந்து ராஜ்யம் என்பதை நாம் தொடக்கம் முதலே அறிந்திருக்கிறோம். ஆனால் இப்போது அதை மதவுணர்வு குறுகிய உணர்வு என்றெல்லாம் சொல்லி மறக்க முயற்சிக்கிறோம்.இதன் காரணமாகத்தான் இன்று இத்தனை இன்னல்களை அனுபவிக்கிறோம்” என்று கோல்வால்கர் இந்நூலில் உள்ள உரை ஒன்றில் சொல்கிறார். ஒரு எதிர்காலக் கனவு கோல்வால்கரால் முன்வைக்கப்படுகிறது, ஆனால் அது பிளவுபடுத்தும் அரசியலின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சோஷலிஸ்டு இயக்கத்தை மிதவாத இடதுசாரி இயக்கம் என்று சொல்லலாம். கம்யூனிஸ்டுகளை இந்தியச்சிற்பிகள் என்னும் பட்டியலில் இருந்து விலக்கும் குகா மூன்று சோஷலிஸ்டுகளை சேர்த்துக்கொள்கிறார். அவர்களின் சிந்தனை என்பது முழுக்கமுழுக்க ஒரு இந்திய உருவாக்கம் என்பதே காரணம். இந்தியாவில் அரசியல் பிறந்ததுமே ஜனநாயக வேட்கை கொண்டிருந்தது. இந்திய மக்களும் ஜனநாயகத்தை இயல்பாக ஏற்றுக்கொண்டார்கள். இந்தியாவின் தலைவர்களிடையே கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பொதுவாக அனைவருமே ஜனநாயகத்தை ஏற்றவர்களே. ஈ.வே.ராவும் கோல்வால்கரும் அம்பேத்கரும் சந்திக்கும் புள்ளி ஜனநாயகம் என்பதுதான்.

ஆகவே இங்கே இடதுசாரிகளிலும் ஜனநாயகத்துக்கான குரலே ஓங்கியிருந்தது. இந்தியக் கம்யூனிஸ்டுகளும் மிகச்சில ஆண்டுகளிலேயே ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டார்கள். லோகியா ஐரோப்பாவில் கற்றவர். அங்கிருந்து சோஷலிசக் கருத்துக்களை பெற்றுக்கொண்டார். காந்திக்கு அணுக்கமானவராகவும், காங்கிரஸ் செயல்பாட்டாளராகவும் இருந்த லோகியா பின்னர் நேருவுடன் முரண்பட்டு சோஷலிஸ கட்சியை நிறுவி எதிர்கட்சியாகச் செயல்பட்டார்.

ராம் மனோகர் லோகியா

லோகியா முன்வைக்கும் சோஷலிசம் என்பதை ஜனநாயகத்தை உள்ளடக்கிய மார்க்சிய அணுகுமுறை எனலாம். மார்க்சியத்தின் மையப்படுத்தப்பட்ட அதிகாரம், கட்சியின் ஆதிக்கம், வன்முறை ஆகியவற்றை லோகியா ஏற்கவில்லை. ஆனால் முதலாளித்துவத்தை ஒழிக்கவேண்டும் என்னும் கருத்தும் கொண்டிருந்தார்.

லோகியாவின் அரசியலை ஒருவகை இலட்சியவாதம் என்றே சொல்லவேண்டும்.அவருடைய செயல்பாடு பெரும்பாலும் பாராளுமன்றப் பேச்சு வடிவிலேயே இருந்தது. ஓர் உதாரணம், இந்நூலில் இருந்தே சொல்லத்தக்கது. லோகியா சாதியொழிப்பைப் பற்றிப் பேசும்போது “உயர்சாதி இளைஞர்கள் இனியாவது விழித்தெழவேண்டும்.இந்த இளைஞர்கள் தாழ்ந்த சாதிக்காரர்கள் முழு மேம்பாடு அடையும்பொருட்டு தங்களையே தியாகம் செய்ய தயாராக இருக்கவேண்டும்” என்கிறார்

சாதியொழிப்புக்கு அவர் சொல்லும் திட்டம் இதுதான். ஊதியம், சமூக அந்தஸ்து ஆகிய அனைத்திலும் தாழ்ந்த சாதியினரை மேலே கொண்டுவருவது. அதற்காக உயர்சாதியினர் தங்கள் நலன்களை முழுமையாக விட்டுக்கொடுப்பது. இப்படி தாழ்ந்த சாதியினர் மேலே வந்தால் ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் உயர்சாதியினருக்கும் நன்மை உண்டு. மாறாக நடந்தால் பெரும்பான்மையினராகிய தாழ்ந்த சாதியினர் வன்முறையால் உயர்சாதியினரை ஒழிக்கக்கூடும். அனைவரும் மேம்பட்டால் தாழ்ந்த சாதியினர் நிர்வாக அதிகாரத்தையும் உயர்சாதியினர் அறிவார்ந்த அதிகாரத்தையும் அடையமுடியும் என்கிறார் லோகியா

லோகியாவின் கருத்துக்கள் கொஞ்சம் விசித்திரமானவை, ஆனால் ஒருவகை நடைமுறைத்தன்மை கொண்டவை. லோகியா இந்தியா வேகமாக ஆங்கிலமயமாக்கப்படுவதைக் கண்டார். ஆங்கிலம் பொதுமொழியாக ஆனால் இந்தியாவின் உயர்மட்டமே அதனால் ஆதிக்கம்பெறும், எளியமக்களுக்கு ஆங்கிலம் அன்னியமாகவே இருக்கும் என்று கருதினார். ஆகவே ஆட்சிமொழி உட்பட அனைத்திலும் ஆங்கிலம் தவிர்க்கப்படவேண்டும் என்றும், தாய்மொழியே எளியமனிதர்களின் அதிகாரம் என்றும் வாதிட்டார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன்

குகா இன்னொரு சோஷலிஸான ஜெயப்பிரகாஷ் நாராயணனை இந்தியச் சிற்பிகளில் ஒருவராக முன்வைக்கிறார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். இந்திய ஜனநாயகம் ஆபத்திலிருந்த நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் களத்திலிறங்கி அதை மீட்டவர் என்பதனாலேயே வரலாற்றில் தவிர்க்கமுடியாத இடம்கொண்டவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

ஆனால் போராட்டங்கள் வழியாக அவரை நினைவுகூரலாகாது என்று குகா கருதுகிறார். இருபதாண்டுகள் பூதான் இயக்கம் போன்றவற்றில் ஈடுபட்டு கிராமப்புறங்களில் சேவைசெய்தவர். அதனூடாக இந்தியாவின் அடித்தளத்தை உருவாக்குவதில் பங்கெடுத்தவர் என்பதே ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பங்களிப்பு என்கிறார்

ஆனால் பூதான் இயக்க நிறுவனர் வினோபா இந்நூலில் சொல்லப்படவில்லை. இது குகாவின் ஒரு பார்வை என்றே கொள்ளவேண்டும். வினோபா மரபான காந்திய சிந்தனைகளை முன்வைத்தவர். ஜெயப்பிரகாஷ் நாராயணன் நவீன இந்தியாவைப்பற்றிய அசலான சிந்தனைகளை முன்வைத்தவர். இந்த வேறுபாட்டை குகா கருத்தில்கொண்டிருக்கலாம்.

இக்கட்டுரைகளில் இருவகையான பார்வைகளை ஜெயப்பிரகாஷ் நாராயணன் வெளிப்படுத்தியதை காணமுடிகிறது. ஒன்று அதிகாரப்பரவலாக்கம், அரசு கூடுமானவரை அதிகாரங்களை வட்டார அளவில் பகிர்ந்தளிப்பது. இன்னொன்று சமரசநோக்கம் கொண்ட வெளியுறவு. இரண்டுமே அதிகாரக்குறைப்பை வலியுறுத்துபவை

ராஜாஜி

லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகிய இருவருக்கும் நேர் எதிர்த்தரப்பாக இருந்தவர் ராஜகோபாலாச்சாரி. ராஜாஜி அன்றைய சூழலில் வெறுக்கப்பட்ட ஒரு அரசியல்- பொருளியல் கொள்கையை நம்பியவர். அன்று கம்யூனிஸ்டுகள், மென்மையான கம்யூனிஸ்டுகளான சோஷலிஸ்டுகள், சோஷலிசத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் என இந்தியாவின் எல்லா அரசியல் தரப்புமே இடதுசாரிப்பார்வை கொண்டவை. ராஜாஜி பொருளியலில் வலதுசாரிப்பார்வை கொண்டவர். தனியார்மயம், பெருமுதலீடு, மையப்பொருளியல் ஆகியவற்றை ஆதரித்தவர்.

இந்நூலில் ஒரு செய்தி பலருக்கும் வியப்பளிக்கலாம். ராஜாஜி 1959ல் ,அவருடைய எண்பதாவது வயதில், தொடங்கிய சுதந்திரா கட்சி ஒரு மாநிலக்கட்சியோ சிறிய அமைப்போ அல்ல. அது கூட்டணிகளில் இடம்பெற்று பல மாநிலங்களில் ஆட்சியமைத்திருந்தது. 1960 பொதுத்தேர்தலில் அது 22 பாராளுமன்ற இடங்களை பெற்றது. 1967ல் 44 பாராளுமன்ற இடங்களைப் பெற்றது. நேருவின் ஆதிக்கம் உச்சத்திலிருந்த நாட்களில் இது மிகப்பெரிய வெற்றிதான். 1971ல்தான் அது செல்வாக்கிழந்தது. வெறும் ஏழு இடங்களே கிடைத்தன. பின்னர் அது கலைக்கப்பட்டது

ராஜாஜியை ஒருவகையில் காலத்திற்கு சற்று முந்திய சிந்தனையாளர் என குகா முன்வைக்கிறார். ராஜாஜி அன்றிருந்த நன்னம்பிக்கை- இலட்சியவாதம் இல்லாத யதார்த்தவாதி. பலவிஷயங்களை முன்னுணர்ந்தவர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் இஸ்லாமியரை அன்னியப்படுத்தும் என்றும், தனிநாடு உருவாகும் என்றும் அவர் முன்னுணர்ந்து சொன்னார். இந்தியாவின் சோஷலிசக் கனவு அதிகாரிவர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்கும் ‘லைசன்ஸ் ராஜ்’ அமைப்பையே உருவாக்கும் என்று சொன்னார். அவையெல்லாமே நிகழ்ந்தன.

இந்நூலிலுள்ள கட்டுரைகளில் ராஜாஜி அதிகாரப் பரவலாக்கம் பற்றி பேசுகிறார். நாடெங்கிலுமுள்ள அரசுஅதிகாரிகள் ஒரு பொதுவான ஆட்சிக்குழுவால் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்றும், உள்ளூர்செல்வாக்குக்கு அப்பால் அவர்கள் செயல்படவேண்டும் என்றும் சொல்கிறார். அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட மதம், சாதி ஆகியவற்றைச் சார்ந்தவர்களாக அமையாமல் அத்தனை சாதியினரும் பங்கேற்கும்படி அந்த அமைப்பை நடத்தவேண்டும் என்கிறார்.

அதாவது, தெளிவாகவே இந்திய ஆட்சியதிகாரத்திலிருக்கும் உயர்சாதி ஆதிக்கம் களையப்படவேண்டும் என்கிறார். 1957ல் இந்தியாவின் நிர்வாக அமைப்பில் சீர்திருத்தங்கள் தொடங்கப்படுவதற்கு முன்னரே சொல்லப்பட்ட இக்கருத்து மிகமுன்னோடியான ஒன்று. ராஜாஜி பழங்குடிகள், தலித்துக்கள் மற்றும் பிற்பட்டோருக்கான சிறப்புச்சலுகைகளுக்காக மிக தீவிரமாக குரலெழுப்பியிருக்கிறார். தாராளவாதப் பொருளியலில் அவர் விதிவிலக்காகச் காட்டுவது அரசு எடுக்கவேண்டிய இந்நடவடிக்கைகளைத்தான்.ராஜாஜி பற்றி இங்கே திராவிட இயக்கம் உருவாக்கியிருக்கும் சித்திரத்திற்கும் அவருடைய இக்கருத்துகளுக்கும் சம்பந்தமே இல்லை.

பொருளியல் தாராளமயமாக்கல் பற்றிய ராஜாஜியின் கருத்துக்களை படிக்கையில் அரைநூற்றாண்டு கடந்து காங்கிரஸ் அவர் சொன்னவற்றை சொல்லுக்குச் சொல் அப்படியே கடைப்பிடிக்க ஆரம்பித்தது என்று சொல்லத் தோன்றுகிறது. தனியார்துறையை வலுப்படுத்துவது, அவர்கள் மூலதனம் திரட்டிச்செயல்பட தடையற்ற சூழலை உருவாக்குவது, அவர்கள் லாபமடைய அனுமதிப்பது, அன்னியமுதலீடுகளை ஈர்ப்பது, எல்லா துறைகளிலும் போட்டியை உருவாக்குவது என அவர் ஒரு நவீன வலதுசாரிப்பொருளியலை தீர்க்கமாக முன்வைக்கிறார்.

ராஜாஜியின் இக்குறிப்புகளில் பலவரிகள் அனுபவம் வழியாக இந்தியா இன்று கண்டறிந்துவிட்டவை. ராஜாஜி பெருந்திட்டங்களில் அரசு முதலீடுகள் குவியக்கூடாது என்கிறார். சிறிய செயலூக்கம்கொண்ட ஏராளமான திட்டங்கள் தேவை என்கிறார். பாசனக்கட்டமைப்புக்களைக்கூட மாபெரும் திட்டங்களாக வகுக்கக்கூடாது என்கிறார்.உற்பத்தியே மாபெரும் திட்டங்களின் வழியாக அன்றி, நாடெங்கும் பரவியிருக்கும் பல்லாயிரம் சிறுதொழில்முனைவோர் வழியாக நிகழவேண்டும், அவர்களுக்கு எவ்வகை தடையும் அரசில் இருக்கலாகாது என்கிறார்

ராஜாஜி மொழிவழி மாநிலப்பிரிவினையை எதிர்த்தார், அது நீண்டகால பிரிவினை போக்குகளை உருவாக்குமென நினைத்தார். ஆனால் இணைப்புமொழியாகவும் ஆட்சிமொழியாகவும் ஆங்கிலமே இருக்கவேண்டுமென்றும், எதிர்காலத்தின் மொழி ஆங்கிலமே என்றும் கருதினார்.”இந்தியாவை ஆக்ரமித்த வெளிநாட்டினரின் மொழிதான் ஆங்கிலம் என்பது சரியே. ஆனால் அது நம் நாட்டில் வேரூன்றி தழைத்து வளர்ந்திருக்கிறது. அதன் ரகசியம் இதுதான். நம்மைப்பொறுத்தவரை ஆங்கிலம்தான் நமது முன்னேற்றத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறது” என்று அவர் சொன்னார். இதுவும் ராஜாஜி பற்றி தமிழகத்தில் உருவாக்கப்பட்ட சித்திரத்திற்கு நேர் எதிரானது.

வெரியர் எல்வின்

குகா மேலும் இருவரை சுட்டிக்காட்டுகிறார். ஒருவர் வெரியர் எல்வின். இந்தியப்பழங்குடியினரை ஆராய்ச்சி செய்யவந்தவர். இந்தியப் பழங்குடிக்கொள்கையை வடிவமைப்பவராக ஆனார். இந்தியாவுக்கு ஒரு பார்வையாளராக வந்த எல்வின் இங்கேயே தங்கிவிட்டார். காந்தியிடமிருந்து ஆதர்சத்தைப் பெற்றுக்கொண்டார். பழங்குடிகளை கிறிஸ்தவராக மாற்ற அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதனால் கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பழங்குடிகளை இன்னொருவராக ஆக்குவதை எல்லாவகையிலும் அவர் எதிர்த்தார், அதுவே அடிப்படையில் எல்வின் கொள்கை

இந்தியாவை ஒட்டுமொத்தமாக கருத்தில்கொண்ட காந்தி பழங்குடிகளை மறந்தேவிட்டார் என்று குகா சொல்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக உருவாகி வந்த அம்பேத்கர் பழங்குடிகளை தன் மக்கள் என கருதவில்லை. அரசியல் சாசன வரைவில் அவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டபோதும் அவ்வொதுக்கீட்டை அடைய அவர்கள் தகுதிபெறவில்லை என்று சொல்லி எதிர்த்தார். அச்சூழலில் வெரியர் எல்வின் அம்மக்களின் குரலாகவே ஒலித்தார்

இத்தொகுதியில் உள்ள ஒரு கட்டுரையின் தலைப்பே வெரியர் எல்வினின் பழங்குடிக்கொள்கையை அறிவிக்கிறது. ‘உள்ளிழுத்தலும் அல்ல, ஒதுக்குதலும் அல்ல’ பழங்குடிகளை வாழவிடுதலே அவர்களுக்கு நலம் பயப்பது. ஒரு குறிப்பில் பழங்குடிகளின் வாழ்விலுள்ள கொண்டாட்டங்களை இல்லாமலாக்கிவிட்டால் அவர்கள் அழிந்துவிடுவார்கள் என்கிறார் எல்வின். ‘நாகரீக’ மக்களின் கடும் உழைப்பு, சேமிப்பு, கல்வி ஆகியவை அவர்களுக்குச் சுமைகள் என்கிறார்

ஹமீத் தல்வாய்

மகாராஷ்டிர மாநிலத்தவரான ஹமீத் தல்வாய் பற்றிய இறுதிக்கட்டுரை இந்நூலை புரிந்துகொள்ள முக்கியமானது. ஹமீது தல்வாய் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிற இரு இஸ்லாமியர்களிடமிருந்து பெரிதும் வேறுபட்டவர். சையத் அகமது கான், முகமது அலி ஜின்னா இருவருமே மதத்தை ஓர் அரசியல்கருவியாக கருதியவர்கள். இஸ்லாமியர்களை அவர்களின் மதம்வழியாக அணுகியவர்கள். ஹமீத் தல்வாய் நேர்மாறாக இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமும் அதன் உறுப்பினர்களின் தனிப்பட்ட நம்பிக்கையாக மட்டுமே இருக்கவேண்டும் என்றும், அதை ஒருபோதும் பொதுவெளிக்கோ அரசியலுக்கோ கொண்டுவரக்கூடாது என்றும் வலியுறுத்தியவர்.

ஒருவகையில் மதச்சார்பற்ற முஸ்லீம் என்னும் கருதுகோளின் ஆசிரியர் என தல்வாயைச் சொல்லலாம். அவர் குர்ஆனின் புனிதத்தை ஏற்றுக்கொண்டவர் அல்ல. இஸ்லாமிய மதக்கருத்துக்களுக்கு சமூகவியலில், அரசியலில் எந்த இடமும் இல்லை என எண்ணியவர். அதே அளவுகோலை எல்லா மதங்களுக்கும் முன்வைத்தவர். “இந்துக்களையும் நாட்டையும் புதிய மாறுபட்ட பாதையில் அழைத்துச்செல்ல விரும்பும் இந்துக்கள் முஸ்லீம் மதவாதிகளை ஆதரிப்பது வருந்தத்தக்கது” என்று ஹமீத் தல்வாய் [காந்தியைப்பற்றி?] குறிப்பிடுகிறார்

தல்வாய் முன்வைக்கும் அந்த நவீனக்கல்வி பெற்ற, மத அடையாளத்தை பொதுவெளிக்கு கொண்டுவராத, தனிமனிதனாகவே அறவுணர்வும் அரசியலுணர்வும் கொண்ட இஸ்லாமியர் சிலர் சென்ற தலைமுறையில் இருந்தனர். இத்தலைமுறையில் உலகளாவிய இஸ்லாமிய அடிப்படைவாதமும், அது உருவாக்கும் நெருக்கடிகளும் அந்த அடையாளம் கொண்டவர்களை மிகமிக அரிதாக ஆக்கிவிட்டன. மறுபக்கம் இந்துக்களும் விரைவாக அடிப்படைவாதம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இச்சூழலில் நவஇந்தியாவை உருவாக்கியவர்களில் ஒருவராக தல்வாயை கூறும் குகாவின் நூல் ஒரு கவலையை, அச்சத்தையே முன்வைக்கிறது

ஒரு பரந்தநோக்கில் இருநூறாண்டுகளில் இந்தியா முரண்பாடுகள் வழியாக, நம்பிக்கைகள் வழியாக, இலட்சியவாதம் வழியாக உருவாகி வந்த வரலாற்றுப்பெருக்கை காட்டும் நூல் இது. வரலாறு இருவகை. நிகழ்வுகளாலான வரலாறு புறவயமானது. இது சிந்தனைகளின் வரலாறு, ஆகவே அகவயமானது. நாம் இந்தக்கோணத்தில் இந்திய வரலாற்றை எண்ணியிருக்கமாட்டோம். அவ்வகையில் மிக முக்கியமான ஒரு நூல் இது

ஒரு வரலாற்று நாயகன்

காந்தியும் லோகியாவும்

ராமச்சந்திர குகா குகா-இந்திரா

காந்தியும் மேற்கும் -ராமச்சந்திர குகா

மபொசி,காமராஜ், ராஜாஜி..

காந்தியின் கையில் இருந்து நழுவிய தேசம்- இந்திய வரலாறு-காந்திக்கு பிறகு பகுதி ஒன்று- ராமச்சந்திர குகா

முந்தைய கட்டுரைநற்றுணை கலந்துரையாடல்
அடுத்த கட்டுரைஐந்நிலமும் ஆனவள்