நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-2

நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-1

குகா நவீன இந்தியாவின் சிற்பிகள் என்ற அவருடைய நூலில் கம்யூனிஸ்டுகள் எவரையும் சேர்த்துக்கொள்ளவில்லை. அது ஏன் என்பதை அவரே முன்னுரையில் சொல்கிறார். இந்தியாவின் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு, ஜனநாயகச் செயல்பாடுகளுக்கு, உரிமைப்போர்களுக்கு இடதுசாரிகளின் பங்கு முக்கியமானது. ஆனால் அவர்கள் எதையும் அசலாக சிந்திக்கவில்லை, இந்தியாவுக்கான எந்த தீர்வையும் உருவாக்கவில்லை. அவர்கள் ஐரோப்பாவுக்காகவும் சீனாவுக்காகவும் அந்தந்த நாடுகளில் உருவாக்கப்பட்ட கொள்கைகளையும் நடைமுறைகளையும் அப்படியே இந்தியாவிற்கு கொண்டுவர முயன்றனர்.

ஆகவே இந்தியாவின் சிற்பிகளென இருபதாம்நூற்றாண்டில் குகா கருத்தில்கொள்பவர்களின் முதல் தகுதி என்ன என்று எளிதில் ஊகிக்கமுடிகிறது. குகா இந்தியாவுக்கான தீர்வுகளைச் சிந்தித்தவர்களையே முன்வைக்கிறார். அவர்களில் முதலாமர் காந்தி. இந்நூலை வாசித்துக்கொண்டு வருகையில் குகா ஒரு கோணத்தில்  காந்தியை அற்புதமாக வரையறை செய்வதைக் கண்டேன்.

கோகலேயின் மாணவராகத்தான் காந்தி இந்திய அரசியலில் நுழைந்தார். காந்திக்கு கோகலே மேல் இருந்த ஈடுபாட்டுக்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று, அவர் கோகலேயைப்போலவே ஜனநாயகத்துக்கான போராட்டம் ஜனநாயகமுறைப்படியே நிகழவேண்டுமென எண்ணினார். இன்னொன்று, கோகலே காந்தியின் தென்னாப்ரிக்கப் போராட்டங்களை அங்கீகரித்து நேரில் சென்று வாழ்த்தியவர்.

காந்தி தன்வரலாற்றிலும் தனக்கு திலகருடன் இருந்த முரண்பாட்டையும் கோகலேயுடன் இருந்த உறவையும் தன் வரலாற்றிலேயேகூடச் சொல்கிறார். காந்தியை கோகலேயின் தொடர்ச்சியாகத்தான் அனைவரும் அறிமுகம் செய்வார்கள்.

கோகலே சுதந்திரத்துக்காக மக்களை திரட்டிப் போராடுவதை நம்பியவர் அல்ல, அவர் மக்களைநோக்கிப் பேசவில்லை, மாணவர்களைநோக்கியே பேசினார். கல்வி, பொதுவாழ்க்கையில் பயிற்சி ஆகியவையே கோகலே சுட்டிக்காட்டிய வழிமுறைகள். காந்தி கோகலேயின் பல நம்பிக்கைகளை ஏற்றுக்கொண்டார். பிரிட்டிஷ் சட்டம் மற்றும் கல்விமேல் நம்பிக்கைகொண்டிருந்தார். பொதுநிர்வாகத்தில் பிரிட்டிஷார்கொண்டுவந்த வழிகளை ஏற்றுக்கொண்டார்

கோகலேக்கு மாறாக திலகர் மக்கள்போராட்டங்களை ஒருங்கிணைக்க விரும்பினார். காந்தி இந்த விஷயத்தில் கோகலேயை அல்ல திலகரையே ஏற்றுக்கொண்டார். மக்களை திரட்டி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடவே அவர் விரும்பினார். காந்தி திலகரின் இறுதிச்சடங்கில் பெருந்துயரத்துடன் கலந்துகொண்டார். மக்கள் பங்கேற்கும் பெரிய போராட்டங்களை காந்தி திலகரிடமிருந்தே பெற்றுக்கொண்டார். காந்தி வந்தபின்னரே காங்கிரஸ் உண்மையில் திலகரின் போராட்டப்பாதைக்கு திரும்பியது.

அத்துடன் இந்திய மறுமலர்ச்சியாளர்களில் திலகரே இந்தியாவின் பண்பாட்டுப் பெருமிதத்தை முன்வைத்தவர். காந்தி அதைப் பெற்றுக்கொண்டார். நவீன இந்தியா ஐரோப்பிய ஜனநாயகவிழுமியங்களை கொண்டதாக இருக்கவேண்டும் என்றும், அதேசமயம் அது தன் பாரம்பரியத்தை பேணி முன்னெடுக்கவேண்டும் என்றும் காந்தி எண்ணினார். திலகரின் ஆசாரவாதத்தை ஏற்காத காந்தி திலகரின் மரபுசார்ந்த அணுக்கத்தை ஏற்றார். பகவத்கீதை திலகரைப்போலவே காந்திக்கும் வழிகாட்டிநூலாக அமைந்தது. காந்தியை கோகலே, திலகர் இருவருக்கும் நடுவே வைத்து வகுக்க முயலும் குகாவின் இந்தப்பார்வை முக்கியமானது.

காந்தியின் எழுத்துக்கள் தொண்ணூறு தொகுதிகளாக, எழுபதாயிரம் பக்கங்களுக்கு தொகுக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் கே.சுவாமிநாதன் தலைமையிலான குழு அப்பணியைச் செய்தது.அதிலிருந்து குகா தொகுத்தளித்திருக்கும் குறிப்புகள் ஆச்சரியமான ஒரு தொடர்ச்சியை காட்டுகின்றன. காந்தி ராஜா ராம்மோகன் ராய், சையத் அகமதுகான், ஃபுலே, தாராபாய் ஷிண்டே ஆகியவர்களின் கருத்துக்களின் வாரிசாகவும் திகழ்கிறார். அவர்கள் சொன்ன அனைத்தையும் அவர் மேலும் விரிவாக, மேலும் நடைமுறைநோக்குடன் பேசியிருக்கிறார்.

காந்தியின் குறிப்புகள் காட்டும் இந்தியா என்பது ஐரோப்பிய ஜனநாயகப் பார்வைகொண்ட, இந்துமெய்ஞானத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கும், இஸ்லாமியருக்கு இடமுள்ள, தலித் மற்றும் பெண்களுக்கு நிகரிடம் உள்ள ஒரு சமூகமாக இருந்தது. சுதந்திர இந்தியயாவில் பெண்கள் எவ்வகையிலும் ஆண்களுக்கு குறையாமல் பொதுவாழ்க்கையில் ஈடுபடவேண்டும் என அவர் கனவுகண்டார். தாராபாய் ஷிண்டே காட்டும் அடிமைப்பட்ட பெண்களில் இருந்து வெறும் முப்பபதாண்டுகளில் சுதந்திரத்திற்காக சிறைசென்ற பெண்களை உருவாக்க காந்தியால் இயன்றது.

காந்தியிடம் இல்லாத ஒன்று, அழகியல். எளிமை, பயனுறுத்தன்மை ஆகியவற்றாலன ஓர் நாட்டுப்புற அழகியல் காந்தியிடமுண்டு, அதற்கு இந்திய துறவியர்மரபிலும் சமணத்திலும் வேர்கள் உண்டு. ஆனால் இந்தியா உருவாக்கியெடுத்த மாபெரும் செவ்வியல், நாட்டாரியல் அழகியல்களுடன் காந்திக்கு தொடர்ச்சியான உறவேதும் இருக்கவில்லை.அந்த இடைவெளியை நிரப்புபவர் காந்தியின் நண்பரும் அழகியலிலும் ஆன்மிகத்திலும் வழிகாட்டியான ரவீந்திரநாத் தாகூர்.

தாகூர் இந்தியாவின் சிற்பிகளிலேயே மிகுந்த அளவுக்கு உலகப்பயணம் மேற்கொண்டவர் என்கிறார் குகா.ஐரோப்பா அவருக்கு பிடித்தமான இடம். ஐரோப்பாவை தாகூர் அதன் ஒளிமிக்க பகுதியைக்கொண்டே மதிப்பிடுகிறார். ஐரோப்பா உலகின்மேல் ஆதிக்கம் செலுத்துவது அதன் ராணுவ வல்லமையால் அல்ல, அதன் ஆன்மிக வல்லமையால் என்று இந்நூலில் உள்ள ஒரு கட்டுரையில் தாகூர் சொல்கிறார். இந்தியா அந்த ஆன்மிக வல்லமையை தானும் அடையவேண்டும், மரபிலிருந்தும் ஐரோப்பாவின் அறிவொளிக்காலத்திலிருந்தும் அதைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் சொல்கிறார்

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை தாகூர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இந்தியர்கள் பிரிட்டிஷாரை வெறுக்கலாகாது என்றும், இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆட்சி வந்தது ஒரு நல்லூழ் என்றும் நினைக்கிறார். பிரிட்டிஷ் அரசுமேல் தாகூர் இறுதிவரைக்கும் பக்தியுடனேயே இருக்கிறார். ஜாலியன் வாலாபாக் கொலைக்காக கண்டனம் தெரிவித்து தன் சர் பட்டத்தை அவர் திருப்பியளித்தாலும் பிரிட்டிஷ் எதிர்ப்புநிலையை எடுக்கவில்லை. ஒத்துழையாமை இயக்கம் பிரிட்டிஷாரை எதிரிகளாக கட்டமைக்கிறது என்று நினைத்து அதை கண்டிக்கிறார்

இந்தியா பிரிட்டிஷார் அளித்த கல்வியைக்கொண்டு தன்னை மறுகட்டமைப்பு செய்துகொள்ளவேண்டும் என்பதே தாகூரின் எண்ணம், அவர் அமைத்த பல்கலைக்கழகமான விஸ்வபாரதியின் நோக்கமும் அதுவே. தன் குறிப்புகளில் தாகூர் ‘மேலைநாட்டினரிடமிருந்து முழுவதாக வேறுபட்டு தனியாக நிற்க முயற்சிப்பது ஆன்மிகத்தற்கொலைக்குச் சமம்’ என்று ஆழமாக குறிப்பிடுகிறார். மேலைநாடுகளிடையே இந்தியாவைப்பற்றிய நற்புரிதலை உருவாக்கமுடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

காலனியாதிக்கம் வங்காளத்தில் உருவாக்கிய மாபெரும் பஞ்சத்தை தாகூர் கண்டிருந்தார். அவர் உயர்குடியைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, அப்பஞ்சத்தில் பொருளீட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவரும்கூட. ஆனால் உண்மையில் அவருடைய சிக்கல் அதுவல்ல. அன்று அப்பஞ்சத்துக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்கும் இருந்த தொடர்பு ஆய்வுசார்ந்து நிறுவப்படவில்லை. பஞ்சம் மழைபொய்த்தமையால் வந்தது, பிரிட்டிஷார் அதைச் சமாளிக்கவே முயன்றனர் என்னும் எளிய சித்தரிப்பே அறிஞர்களிடமும் இருந்தது. பிரிட்டிஷாரின் உருவாக்கமே பஞ்சங்கள் என்பது பின்னர் பிரிட்டிஷ் ஆவணங்கள் வழி, மேலை ஆய்வாளர்களால்தான் நிறுவப்பட்டது.

இவ்விருவருக்கும் எதிரான தரப்பாக பி.ஆர்.அம்பேத்கரை குகா முன்வைக்கிறார்.இந்தியாவின் அரசியலில் நிகழ்ந்த எழுச்சி காந்தி. பண்பாட்டின் எழுச்சியின் அடையாளம் தாகூர். அவர்களுக்கு எதிராக அல்லது மாற்றாக உருவான அடித்தளம் சார்ந்த அறம் ஒன்றின் அடையாளம் அம்பேத்கர். அம்பேத்கரை தாகூருடன் ஒப்பிட்டபடி [இருவருமே பதினோராவது குழந்தைகள். அது ஒன்றெ பொது] குகாவின் விவரிப்பு தொடங்குவது கவனத்திற்குரியது.

முந்தைய தலித் செயல்பாட்டாளர்களைப்போலஅம்பேத்கரின் அரசியல் சேவையில் தொடங்கவில்லை. கல்வி வழியாக தன்னை அவர் தன் சமூகப்பின்னணியிலிருந்து மேலே எடுத்துக்கொண்டார். ஆங்கிலக்கல்வி பெற்று உயர்பட்டம் பெற்றார். வழக்கறிஞராக செல்வமீட்டினார். அதன்பின்னரே அரசியலுக்கு வந்தார். அவருக்கு கோலாப்பூர் மகாராஜாவின் உதவி இருந்தமையால் அவரால் இதழ்தொடங்கி நடத்த முடிந்தது.பிரிட்டிஷார் அவரை ஒரு தரப்பாக ஏற்றமையால்தான் அரசியல் மையத்திற்கு வரவும் முடிந்தது

இந்நூலில் உள்ள அம்பேத்கரின் குறிப்புகளிலிருந்து அம்பேத்கரின் மையமான சில கருத்துக்களை தொகுத்துக்கொள்ள முடிகிறது. முந்தைய சீர்திருத்தவாதிகளைப்போல சாதிச்சமத்துவம், உரிமை ஆகியவற்றை அம்பேத்கர் முன்னிலைப்படுத்தவில்லை. சாதியொழிப்பை முன்வைத்தார். இந்துசமூகம் என்பதே தோராயமான ஓர் உருவகம்தான் என்றும், அது வெவ்வேறு அடையாளங்கள் வழியாக உருவாக்கப்பட்டது என்றும், சாதி என்பது அதிலொன்று மட்டுமே என்றும் அவர் கருதினார். சாதியை ஒரு ஒரு சமூக அமைப்பாக எண்ணாமல் ஒரு கட்டமைப்பாக கருதி அதன் தோற்றம் செயல்பாடு ஆகியவற்றை வரலாற்றுரீதியாக ஆராய்ந்தார். இதுவே அவருடைய தனித்தன்மை

காந்தி தலித் விடுதலைக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள்மேல் அம்பேத்கர் நம்பிக்கை கொள்ளவில்லை. அவை வெற்றிபெறவில்லை என நினைத்தார். காந்தி ஒத்துழையாமை, சத்யாக்கிரகம் போன்ற போராட்டங்கள் அயலவருக்கு எதிராக நிகழ்த்தப்படவேண்டியவை, இந்திய மக்கள் தங்களுக்குள் செய்துகொள்ள வேண்டியவை அல்ல, அது இந்தியர்களை பலவீனப்படுத்தும் என்று எண்ணம்கொண்டிருந்தார். அதை சுட்டிக்காட்டும் அம்பேத்கர் காந்தி உயர்சாதி இந்துக்களுக்கு நல்லவராக இருக்க முயல்கிறார், அவர்களிடம் தலித்துகளுக்காக பேசுகிறாரே ஒழிய அவர்களை வலியுறுத்தவில்லை, அவருடைய நோக்கம் உண்மையான விடுதலை அல்ல என்று சுட்டிக்காட்டுகிறார்

அந்த அறச்சிக்கல் அம்பேத்கருக்கே பின்னர் வந்தது என்பது வரலாறு. மகர்களுக்கு பிற தலித் சாதிகளுக்கும் இடையேயான பூசல்களின்போது அம்பேத்கரின் அதே சமரசநோக்கையே கைக்கொண்டார். தலித் மக்களுக்கிடையே போராட்டம் இருக்கலாகாது என்றார். ஆனால் காந்தியின் காலகட்டத்தில் அம்பேத்கர் பொறுமையிழந்தவராகவும் காந்திக்கு எதிரான கடும்நிலைபாடு கொண்டவராகவுமே இருந்தார்.

அம்பேத்கர் காந்தியின் முயற்சிகள் வீண் என்கிறார். ஆனால் காந்திய இயக்கம் உருவாக்கிய கிட்டத்தட்ட நான்காயிரம் பள்ளிகள் தலித் கல்விக்காக பெரும்பங்களிப்பாற்றின- தமிழகத்திலேயே அத்தகைய நூறு கல்விநிலையங்களுக்குமேல் உள்ளன என்பது வரலாறு. மாறாக அம்பேத்கரின் இயக்கம் கருத்துநிலைச் செயல்பாடாக மட்டுமே இருந்தது. மகாராஷ்டிரத்திற்கு வெளியே அவர் காலத்தில் அது பரவவுமில்லை

காந்தியின் ஹரிஜன இயக்கம் உருவாக்கிய மனநிலை மாற்றங்களாலேயே பின்னர் சுதந்திர இந்தியாவில் தலித்துக்களுக்கான இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை பெரும்பாலும் உயர்சாதியினராலான காங்கிரஸ் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டது. இந்திய தலித் வாழ்க்கைநிலையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தவை தலித் கல்வியும் இட ஒதுக்கீடும்தான். அவ்வகையில் காந்தியே இந்திய தலித்துக்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியவர்.

ஆனால் அம்பேத்கரின் பொறுமையின்மையை புரிந்துகொள்ளமுடிகிறது. அன்றைய ஒட்டுமொத்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அம்பேத்கர் கருத்தில் கொள்ளவில்லை, அவர் தலித் விடுதலையை தனிப்பிரச்சினையாக கண்டார்.அதன்பொருட்டு மட்டும் பேசினார். இக்கட்டுரைகளில் இந்தியாவுக்கு பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை கிடைக்கும் என அவர் 1940களில்கூட நம்பவில்லை என்பது தெரிகிறது.

குகா இம்மூவரையும் மூன்று புள்ளிகளாக்கி அக்காலத்தைய மறுமலர்ச்சியின் சித்திரத்தை வரைந்தளிக்கிறார். இந்தியா கட்டப்பட்ட அடிப்படைக்கொள்கைகளை முதலில் சொல்லி அந்த இந்தியாவின் பரிணாமத்தை உருவாக்கிய கொள்கைநிலைகளை மூன்று சரடுகளாக உருவாக்கிக் காட்டுகிறார். காந்தி அம்பேத்கர் என்னும் முரணியக்கம் பலரும் அறிந்ததே. காந்தி-அம்பேத்கர்- தாகூர் என்னும் மும்முனை முரணியக்கம் யோசிக்கத்தக்கது

இந்தியாவின் சிந்தனையாளர்களை இந்த மூன்றுசரடுகளில் எதில் பொருத்தமுடியும் என யோசிக்கலாம். பெரும்பாலானவர்களிடம் இந்த மூவரின் செல்வாக்கும் இருக்குமென்றாலும் ஓங்கியிருப்பவற்றை வைத்து சிலவற்றை வகுக்கலாம். அரசியல்தளத்தில் செயல்படுபவர்கள் பெரும்பாலும் காந்தியர் அல்லது அம்பேத்கரியர்களாக இருக்கலாம். ஆனால் அதேயளவுக்கு தாகூரின் செல்வாக்குள்ள, அல்லது தாகூர் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்பின் செல்வாக்குள்ள கலையிலக்கியச் செயல்பாட்டாளர்களும் உண்டு. ஐரோப்பிய நவீனசிந்தனைகளையும் இந்தியாவின் தத்துவசாரத்தையும் இணைக்கமுயன்றவர்கள் அவர்கள்.

 

நவீன இந்தியாவின் சிற்பிகள் வாங்க

முந்தைய கட்டுரைகதைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு- கதைமாந்தரின் முழுமை