எழுத்தாளர் பூமணி எழுத்துலகில் இடையறாது இயங்கி வரும் ஓர் உன்னத படைப்பாளி. அவர் எழுத்து புனைவாக இருந்தாலும் படைப்பில் காணப்படும் மனிதர்கள் அசலாக இருப்பார்கள். கரிசல் காட்டு மனிதர்களே கதை மாந்தர்களாக உலா வருகிறார்கள். பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால், வார்ப்புகள், அஞ்ஞாடி உள்பட பூமணி பல்வேறு தொகுப்புகளைத் தந்துள்ளார்.கருவேலம் பூக்கள் என்னுமொரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
பூமணியின் புனைவுலகு குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய தொகுப்பு ‘ பூக்கும் கருவேலம்’. எழுத்தாளர் ஜெயமோகன் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் சக படைப்பாளிகளைச் சலிக்காமல், சளைக்காமல் எழுத்தில் கொண்டாடும் கலைஞனாக விளங்குகிறார். பூமணியைக் குறித்து அவர் எழுதியிருக்கும் பூக்கும் கருவேலம் தொகுப்பே ஒரு சான்றாவணம்.
பூமணியின் புனைவுலகு குறித்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் பொருட்டும் 2011ஆம் ஆண்டு விஷ்னுபுரம் விருது பூமணிக்கு வழங்குவது முன்னிட்டும் இத்தொகுப்பு எழுதப்படுகிறது என்று தெரிவித்துள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். ஒரு படைப்பாளனுக்கு இதை விட வேறு என்ன விருது இருக்க முடியும்? வெகுமதி வழங்க இயலும்?
எழுத்தாளர் பூமணியின் சந்திப்புடனே தொகுப்பு தொடங்கியுள்ளது. பூமணியின் வயதான தோற்றம் ஜெயமோகனை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கோவில்பட்டி உருவான வரலாற்றைக் கூறியுள்ளார். கோவில்பட்டியில் உள்ள இடைசெவல் பகுதி கி. ராஜநாராயணன், கு. அழகிரிசாமி என்னும் இரண்டு ஆளுமைகளைத் தந்ததையும் கரிசல் இலக்கியம் என்னும் சொல்லாட்சி உருவானதையும் அவ்வகையான கரிசல் எழுத்தாளர்களில் ஒருவரே பூமணி என்று அடையாளப்படுத்துகிறார்.
தலித் என்றாலும் தலித் எழுத்தாளர் என பூமணி தன்னை அறிவித்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் பின்புலத்தை விரிவாக எழுதி அவர்களும் நிலவுடைமையாளர்களே என்கிறார். நில அடிமைகளை எழுதாமல் வறட்சியாலும் வேறுகாரணங்களாலும் கூலி வேலைக்குச் செல்லும் நில உடைமையாளர்களே பூமணியின் கதை மனிதர்கள் என்கிறார். சமூக மோதல்களைக் கூட மனித வாழ்க்கைக்குள் கொண்டு வந்து உறவுகளின் சிக்கலாக மட்டுமே காட்டுவது பூமணியின் சிறப்பம்சம் என்கிறார். சாதியினருக்கான ஒரு நுட்பமான மோதல் இருந்தாலும் அது நிலவுடைமையாளர்களுக்கும் கூலிகளுக்குமான மோதலாகக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார் ஜெயமோகன்.
ஒரு நல்ல புனைவு எழுத்தாளரான பூமணி தன் அம்மாவைப் பற்றிய உண்மைச் சித்திரம் ‘ எலேய்’. அம்மாவிடம் எட்டு வயது வரை பால் குடித்த கடைக்குட்டி பூமணி. அம்மா ஒரு முழுமையான ஆளுமையாக கட்டுரையில் காட்டி இருந்தாலும் புனைவுலகில் அம்மா போன்ற பாத்திரங்களை உருவாக்கவில்லை என்பது ஜெயமோகனின் விமர்சனம். அப்பா இறந்த பிறகு தனியாளாக நின்று ஆறு பிள்ளைகளை வளர்த்த பாட்டையும் விவரித்துள்ளார். அம்மா இறந்தாலும் பூமணியின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது ‘ எலேய்’ என்பது நெகிழ்ச்சியான பதிவு.
பூமணியின் புனைவுலகுக்குள் தீண்டாமையைக் காண முடியாது என்கிறார் ஜெயமோகன். பூமணியின் நினைவுகளில் சாதி சார்ந்த ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் சகஜமான சாதியச் சித்தரிப்பை எதார்த்தத்தில் இருந்தே பெற்றுக்கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிவித்துள்ளார். தாமரைப் போன்ற இதழ்களில் எழுதினாலும் முற்போக்கு முகாமுக்கு வெளியேயே இருந்துள்ளார் பூமணி என்று அவரின் எழுத்து நிலைப்பாட்டைக் காட்டுகிறார். வாசிப்பவனே சமூகச் சித்திரங்களாக விரித்துக் கொள்ள முடியும் என்கிறார்.
தாழ்த்தப்பட்ட சாதிக்குள் இருந்து தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து எழுதினாலும் படைப்புக்கு வெளியிருந்து பெறப்பட்ட புரட்சிக்கர யதார்த்தங்களை பூமணி முன்வைக்க வில்லை என்றும் கூட்டு அரசியல் குரல்களின் எதிரொலியாகவமில்லை என்றும் அறிவித்தவர் தமிழ் மட்டுமல்ல இந்திய மொழிகளிலும் இதுவோர் ஆச்சரியமே என வியந்துள்ளார்.
பூமணியின் புனைவுலகம் வெற்றிப் பெற அவர் வாழ்வில் கதை சொல்லிகள் இருந்துள்ளனர். முதலில் அம்மா ஒரு தேர்ந்த ஒரு கதை சொல்லி. கல்லூரி சென்ற போதோ மு. வரதராசன் அறிமுகமானார் பின்னர் சி. என். அண்ணா துரை அறிமுகம். எனினும் இரண்டாம் வழிகாட்டி சி. கனகசபாபதி. முன்னத்தி ஏராக கி. ராஜநாராயணன் இருந்துள்ளார். எழுத்துப்பயணத்தைத் தொடங்கி ‘ அறுப்பு’ முதல் சிறுகதை வெளியானதைக் குறிப்பிட்டுள்ளார். கி. ரா. வுடனான நெருக்கமும் அதிகரித்தது.
பூமணியின் இலக்கிய வட்டமும் எழுத்து உலகமும் 1500 பக்கங்கள் கொண்ட ‘அஞ்ஞாடி’ என்னும் நாவலை எழுத வைத்திருக்கிறது என்கிறார். இத்தொகுப்பு வெளிவரும் போது அஞ்ஞாடி நாவல் வெளியாகவில்லை. ‘ தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்’ என பூமணி தன்னம்பிக்கையுடன் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். பூமணியின் வாழ்நாள் சாதனையாக அஞ்ஞாடி இருக்கும் என நம்பிக்கையுடன் ஜெயமோகன் தெரிவித்தது போல சாகித்திய அகாதெமியின் விருதும் பெற்றது.
பூமணி எழுத்தாளராக இலக்கிய உலகம் அறியப்பட்டாலும் கூட்டுறவுத்துறையில் தணிக்கையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரின் பணிக்காலம் இடமாற்றங்கள், விசாரணைகள் என்றே கழிந்துள்ளது. எழுத்துக்குப் பணி இடையூறாகவே இருந்துள்ளதையும் தெரிவித்துள்ளார். இருந்தும் பணிக்காலத்திலேயே படைப்புகள் பல தந்துள்ளார்.
ஒரு தாத்தா, ஒரு தாத்தி, ஒரு சிறுவன் களத்து மேட்டில் உழைத்த காட்சியே ‘ பிறகு’ நாவல் எழுத காரணமாயிற்று என்றவர் ஒவ்வொரு படைப்பைப் பற்றிக் கூறும் போதும் உணர்ச்சிக் கொந்தளிப்பு அடைகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் பூமணி ஒரு கவிஞராகத்தான் இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்துள்ளார். தீபம் இதழில் வெளியானது. கருவேலம் பூக்கள் என்னும் திரைப்படத்துக்கான குறிப்பையும் கவிதையாகவே எழுதி வைத்துள்ளார் கவிதையை வாசிக்கத் தந்துள்ளார். திரைப்படம் வெற்றிப்பெறவில்லையாயினும் விருது பெற்றது ‘ யோக்கியமான’ படம் என சுஜாதாவால் பாராட்டப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.
கரிசல் காட்டு எழுத்தாளர்கள் என ஒரு பட்டியலே உள்ளது. கரிசல் மனிதர்களைக் காட்சிப்படுத்துபவர்கள் குறைவு. கி. ரா. முதன்மையானவர் என்றாலும் பூமணி அவரிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறார் என்பதைக் காட்டியுள்ளார். கி. ரா. வினுடையது கற்பனாவாத எதார்த்தம், பூமணியினுடையது இயல்புவாதத் தன்மைமிக்கது என்கிறார்.
கி. ரா. வின் எதார்ரத்தத்திற்கு நேர் எதிரானது பூமணியின் எதார்த்தம் என்று எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் கூறியதாகவும் ஒரு பதிவு உள்ளது.
கரிசல் மண்ணில் எது விளைகிறதோ இல்லையோ இலக்கியம் நன்றாக விளைந்துள்ளது. கரிசல் மண்ணில் கி. ரா. உள்பட பல படைப்பாளிகள் இலக்கியத்தை அறுவடைச் செய்திருக்கிறார்கள். கரிசல் இலக்கியவாதிகளுக்கு நன்றாக கை கொடுத்துள்ளதோ. இலக்கியத்திலிருந்து கரிசலைப் பிரித்தால் எதுவும் மிஞ்சாது.
கரிசலே பூமணியின் மொழியாகவும் இலக்கியமாகவும் ஆகியிருக்கிறது என்றும் கரிசலின் சுவையை அவரின் படைப்புலகத்திலும் காண முடிகிறது என்கிறார் ஜெயமோகன். கரிசல் மண்ணைத் தமிழ் இலக்கியத்தில் ஒர் உயிர்ப்படலமாகப் பரப்புவதில் வெற்றி கொண்ட கலைஞர் பூமணி என்று பாராட்டியுள்ளார்.
கரிசலின் இரு கதை சொல்லிகள் கி. ராஜநாராயணனும் பூமணியும் என்றவர் மிக நெருக்கமானவர்கள், மிக தூரமானவர்கள் என்று கூறியதைச் சிந்திக்க வேண்டியதாக உள்ளது. மேலும் ஒருவரை ஒருவர் நிரப்பிக்கொள்ளும் இரு கலைஞர்கள் என இருவரையும் ஒரு சம அளவில் வைத்துப்பார்த்துள்ளார். கரிசலைத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறச் செய்த இவர்கள் தமிழ் இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளனர் என்பது முக்கியத்துவமானது.
சிற்றிதழ் உலகில் மட்டுமே வெகுவாக அறியப்பட்டவர் பூமணி. சிற்றிதழ்கள் வழியாகவே அவரின் படைப்புகளும் வெளியாயின. பேசவும் பட்டன. பொது வாசகர்களும் அவரின் படைப்புகளை அறிந்துள்ளனர் என வியந்துள்ளார் ஜெயமோகன்.
பூமணியின் சிறுகதைகள் குறித்த கட்டுரையில் அவர் சிறுகதைகளை எல்லாம் ஆய்வுச் செய்து எழுதி அவரின் முடிவுகளை ஆங்காங்கே பதிவிட்டுள்ளார். 1. சிறுவர்கள் பெரும்பாலான கதைகளில் இடம் பிடித்துள்ளனர். 2. தேவையற்ற வார்த்தைகள் தேடினாலும் தென்படாது. 3. கதாபாத்திரத்தின் மீது கருத்துகளையும் உணர்வுகளையும் ஏற்றிச் செல்லும் தன்மை இல்லை. 4. தீவிரமான மானுட அவலம் கதைகளில் தவறாது காணப்படும். இறுதியில் இன்னொரு கரிசல் எழுத்தாளரான பா. செயப்பிரகாசம் அவர்களின் கூற்றை எடுத்துக் காட்டியுள்ளார். ” கரிசலின் மணம் கொண்டவை பூமணியின் கதைகள். கரிசலில் பெய்யும் புதுமழையின் மணம் கொண்டவை கி. ராஜநாராயணனின் கதைகள்” என்பதாகும் அது.
பூமணியின் நாவல்கள் குறித்தும் விரிவாக அலசியுள்ளார். அவரின் நாவல்களில் முதன்மையானது ‘பிறகு’. தமிழில் எழுதப்பட்ட செவ்விலக்கியப் பிரதி பூமணிக்கு அடையாளம் தந்த ஒரு வரலாற்று நாவல் என்கிறார். ஒரு பகடையை நாயகனாக்கிய முதல் நாவல். வெக்கை நாவல் வடிவம் மொழி ஆகிய தளங்களில் நவீனத்துவ தன்மைக் கொண்டது. குறுநாவல் என்றே கூற முடியும். இலக்கியக் கலையை உருவாக்குவதில் தகவல்களுக்கிருக்கும் பங்கு என்பதைக் காட்டும் படைப்பு. நைவேத்யம் படைப்பூக்கம் பெறவில்லை என்று கூறியவர் வாய்க்கால்கள், வார்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை. அச்சில் இருந்த அஞ்ஞாடி ஓர் ஆவணம் என்று தெரிவித்துள்ளார்.
பூமணியின் வழியில் அடுத்த தலைமுறையினரின் புனைவுலகு உருவாகி வந்திருக்கிறதென உறுதியாகக் கூறியுள்ளார். கரிசலின் வாழ்வும் வரலாறும் இலக்கியமாகும் அளவிற்கு வளமிக்க தஞ்சை பாடல் பெறவில்லை என்கிறார்.
பூமணியின் பிறகு நாவல் குறித்த எழுத்தாளர் பாவண்ணனின் கட்டுரை ஒன்றும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. கல்வியின் பிறகாவது அடித்தள உழைப்பாளி மக்களின் வாழ்க்கையில் வெளிச்சம் படரக் கூடும் என்னும் நம்பிக்கையைக் காணமுடிகிறது என்பது நாவல் குறித்தான பார்வை.
பூமணியின் குடை என்னும் ஒரு சிறுகதையை வைத்து அ. ராமசாமி ஒரு கட்டுரையில் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் லஞ்சம் வாங்காதவராக இருப்பதுடன் உடன் பணிபுரிபவர்களையும் வாங்காமல் இருக்கச் செய்ய வேண்டும் என்று கதை சொல்கிறது என்று சொல்கிறார். . பூமணி கூட்டுறவுத்துறையில் தணிக்கையாளராக இருந்தும் லஞ்சம் பெறாதவர் என்பது குறிக்கத் தக்கது.
செந்தில் குமார் தேவன் என்பவர் பூமணியைச் சந்தித்து விட்டு வீட்டுக்குச் சென்று அவர் தாயிடம் தங்களுடன் பணிபுரிந்த மாணிக்கவாசகம் சாரைச் சந்தித்ததாக கூறுகிறார். அவர் தாய் அவரை நன்றாகவே தெரியுமே என்று சொல்லி விட்டு ஆமாம் பூமணியைத்தானே சந்திக்கப்போவதாக சொன்னாய் என்பதுடன் கட்டுரை நிறைவடைகிறது. பூ. மாணிக்கவாசகம் என்னும் அதிகாரிக்கும் பூமணி என்னும் எழுத்தாளருக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
பூக்கும் கருவேலம் என்னும் தொகுப்பு மூலம் பூமணி குறித்த ஒரு சித்திரத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் இதன் வாயிலாக பூமணியை மேலும் வாசகன் கண்டடைய வேண்டும் என்பது எழுத்தாளர் ஜெயமோகனின் வேண்டுகோள். பூமணியின் புனைவுலகிற்குள் மிக எளிதாக பிரவேசித்து புனைவின் பல்வேறு பரிமாணங்களை வாசகர்கள் அறியச் செய்துள்ளார். பூமணியின் பூர்வீகத்தில் தொடங்கி அவர் எழுத்து பயணிக்கும் திசையை அறியச்செய்துள்ளார்.
கரிசல் மண்ணிலேயே பூமணியின் புனைவிற்கான வேர்கள் உள்ளது என்கிறார். பூமணியின் எழுத்துகளுடன் பல்வேறு எழுத்தாளர்களைத் தொடர்பு படுத்தி பேசினாலும் கி. ரா. விற்கும் பூமணிக்குமான ஒப்பீடாக இத்தொகுப்பை அமைத்துள்ளார். இருவரையும் விட்டுக்கொடுக்கவில்லை.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுத வேண்டும் என்பதற்காக எழுதியதாக தெரியவில்லை. ஒரு படைப்பாளியை எப்படி வாசிக்க வேண்டும், எப்படி உள்வாங்க வேண்டும், எப்படி விமர்சிக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்தவராக ஜெயமோகன் உள்ளார் என்பதையும் காட்டுகிறது. எழுத்தாளர் ஜெயமோகனைத் தவிர எவர் ஒருத்தராலும் பூமணியைப் பூரணமாகக் காட்ட முடியாது. எழுத்தாளர் பூமணிக்கு விருதை விட பூக்கும் கருவேலம் பெருமையளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
– பொன். குமார்