நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்

நவீன இந்தியாவின் சிற்பிகள் வாங்க

தமிழகத்தில் அரசியல்பேசுபவர்கள் மிகுதி, சினிமா சாப்பாடு ஆகியவற்றுக்குப் பின் இங்கே சாமானியர்கள் ஆர்வம்கொண்டுள்ளது அரசியல். ஆனால் அரசியலை உண்மையான சாராம்சத்துடன் பேச தேவையானது ஒரு வரலாற்றுப் பார்வை. அது சில இடதுசாரிகளுக்கு அன்றி எவரிடமும் இருப்பதில்லை. பத்தாண்டுகளுக்கு முந்தைய வரலாறுகூட தெரியாதவர்களே இங்கே அடிவயிற்றை எக்கி ஆங்காரமாக அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

[சில ஆண்டுகளுக்கு முன் திராவிட அரசியலின் எழுச்சியிலும், அண்ணாத்துரை தலைமைவகித்த திமுகவின் வெற்றியிலும் எம்.ஜி.ஆருக்கு உள்ள பங்கைப்பற்றி எழுதியபோது எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியும் கொந்தளிப்பும் அடைந்து எழுதப்பட்ட பல கடிதங்கள் வந்தன. அவர்களுக்கு எந்த வரலாறும் தெரியவில்லை. ஆகவே கூலி இதழாளர்களை வைத்து எந்த வரலாற்றையும் எழுதி நிறுவிவிடலாமென்ற எண்ணம் அரசியலாளர்களுக்கு வருகிறது.

இந்த வரலாற்றழிப்பு இருமுனைகொண்ட கத்தி. நாளை இவர்கள் வரலாற்றையே அழிக்கும். தமிழகத்தில் காங்கிரஸின் வரலாற்றை பாடபுத்தகங்கள் உட்பட அனைத்திலும் அழித்து, கல்வித்துறையை ஊடுருவி தங்கள் சொந்தப் புனைவுவரலாற்றை நிறுவிய திராவிட இயக்கத்தவர்கள் இன்று இந்துத்துவர்கள்  அதையே தாங்கள் செய்யும்போது “அய்யய்யோ வரலாறு! வரலாறு!” என்று பதறுகிறார்கள்]


இந்தியவரலாற்றின்மேல் பெருந்தாக்குதல் நிகழும் காலம் இது. இன்று முறையான, தரவுகள்செறிந்த வரலாறுகளுக்கான தேவை உள்ளது. ஆய்வுநூல்கள் அல்ல, பிரபல நூல்கள். எவரும் வாசிக்கத்தக்கவை. ராமச்சந்திர குகாவின் ‘காந்திக்குப் பின் இந்தியா’இரு தொகுதிகளும் ஆர்.பி.சாரதி மொழியாக்கத்தில் கிழக்கு பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. தமிழில் முக்கியமான நூல்கள் அவை. பரவலாக படிக்கவும்பட்டன. அவ்வரிசையைச் சேர்ந்த நூல் ராமச்சந்திர குகாவின் ‘நவீன இந்தியவின் சிற்பிகள்’.தமிழில் வி.கிருஷ்ணமூர்த்தி சரளமாக மொழியாக்கம் செய்துள்ளார்.

ராமச்சந்திர குகா இந்தியாவின் வரலாற்றை உருவாக்கிய ஆளுமைகள் என 21 பேரை இதில் பட்டியலிடுகிறார். அதற்கு அவர் சில அளவுகோல்களை வைத்திருக்கிறார்.

அ. அவர்கள் சொந்தமான சிந்தனை கொண்டவர்களாக இருக்கவேண்டும். வெளியே இருந்தோ மரபிலிருந்தோ ஏதேனும் சிந்தனையை எடுத்து வைத்தவர்களாக இருக்கலாகாது

ஆ. அவர்கள் இந்தியாவின் பண்பாடு சிந்தனை ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கு நேரடியான பங்களிப்பு ஆற்றியிருக்கவேண்டும்

இ. அவர்களின் பங்களிப்பு கூடுமானவரை வட்டார தன்மைகொண்டதாக, சாதிமத எல்லைக்குள் நிற்பதாக அல்லாமல் அனைவருக்கும் உரியதாக இருக்கவேண்டும்

ராம் மோகன் ராய்

இந்த அளவுகோல்களின்படி அவர் முதன்முதலில் தெரிவுசெய்பவர் ராஜா ராம்மோகன் ராய். தமிழில் ராம்மோகன் ராய் பற்றி ஒரு நல்ல வரலாற்றுநூல் இன்றுவரை எழுதப்படவில்லை, மொழியாக்கம் செய்யப்படவுமில்லை. ஆனால் தமிழ்ப்பண்பாட்டின் மறுமலர்ச்சியிலேயே ராம்மோகன் ராய் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அவர் உருவாக்கிய பிரம்மசமாஜம் தமிழகத்திலும் ஏராளமான கிளைகளுடன் இயங்கியிருக்கிறது.

அதன் தமிழக ஆளுமையாக இருந்த பகடாலு நரசிம்மலு நாயிடு தமிழ் உரைநடையின் உருவாக்கத்திலும், இந்துமதச் சீர்திருத்தத்திலும், தமிழகத் தொழில்வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றியவர். பிரம்மசமாஜ வழிபாட்டுக்காக அவர் எழுதிய ஹிந்துபைபிள் என்ற நூலே இந்துமதத்தை அறிவார்ந்த கொள்கைகளைக்கொண்டு மட்டும் தொகுப்பதற்கான முதல் முயற்சி.[ஹிந்து பைபிள்]

ராம்மோகன் ராய் அவர்களின் பங்களிப்பை சுருக்கமாகச் சொல்லி அவருடைய குறிப்பிடத்தக்க கட்டுரைகளில் சிலவற்றை எடுத்து அளித்திருக்கிறார் ராமச்சந்திர குகா. இக்கட்டுரை காட்டும் ராம்மோகன் ராய் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அணுக்கமானவராகவும், இந்தியர்களுக்கும் பிரிட்டிஷாருக்குமான உரையாடலுக்கு உதவுபவராகவும் இருந்தவர். பலமொழி அறிஞர். பண்டைய நூல்களை ஆழ்ந்து கற்றவர். அவருடைய சொல்லுக்கு பிரிட்டிஷாரிடம் செல்வாக்கு இருந்தது. ஆகவே அன்று பிரிட்டிஷ்கல்வியால் படித்து மெலே வந்த உயர்வர்க்கமும் அவரை செவிகூர்ந்து கவனித்தது.

பிரிட்டிஷ் [ஐரோப்பியப்] பண்பாட்டின் ஆக்கபூர்வ அம்சமான தர்க்கபூர்வ அறிவியல்நோக்கு, பொதுச்சட்டங்கள், ஆசாரங்களுக்கு அப்பாற்பட்ட நவீன வாழ்க்கைமுறைகள், ஜனநாயகப்பண்புகள் ஆகியவற்றை இந்துமதத்திற்குள் கொண்டுவர முயல்கிறார் ராம்மோகன் ராய். இந்துமதத்தின் சாராம்சமாக உள்ளது பிரம்மம் என்னும் அருவமான இறை பற்றிய உருவகம் என்று எண்ணி, அதை ஐரோப்பாவின் அறிவொளிக்கால விழுமியங்களுடன் இணைத்து ஒரு புதிய இந்துக் கிளைமதத்தை நிறுவ முயல்கிறார்.

இந்நூலிலுள்ள ஒரு கட்டுரையில் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கான கல்வியை அளிக்கும் பொறுப்பை இங்கிருக்கும் பாரம்பரியக் கல்வியமைப்புகளுக்கு கொடுப்பதற்கு எடுத்த முடிவை மிகக்கடுமையாக கண்டித்து மன்றாடுகிறார் ராம்மோகன் ராய் . இந்துக்களுக்கு இன்று தேவை சம்ஸ்கிருதக் கல்வி அல்லது சாஸ்திரக்கல்வி அல்ல, அந்த யுகம் முடிவுற்றுவிட்டது, இந்தியர்களுக்கு ஆங்கிலேயரைப் போலவே அறிவியல்கல்வியே தேவை என வாதிடுகிறார். சம்ஸ்கிருதக் கல்வியால் இனி நடைமுறைப்பயன் ஏதுமில்லை என்றும், அது குடிகளை மேலும் பழமையிலேயே ஆழ்த்தும் என்றும் கூறுகிறார். அவருடைய சிந்தனையை வெவ்வேறு வகையில் பின்னர் வந்த சீர்திருத்தவாதிகள் அனைவருமே முன்வைத்திருக்கின்றனர்.

சையத் அகமது கான்

இந்திய மறுமலர்ச்சிச் சிந்தனை என்பது ஒரே வரியில் ‘ஐரோப்பிய அறிவொளிக்கால விழுமியங்களை நோக்கி பழமையான பண்பாட்டை நகர்த்த முயல்தல் ’என்று சொல்லலாம். அந்த வகையில் ராம்மோகன் ராய் இந்தியமறுமலர்ச்சியின் முன்னோடி என்பது சரியே. ராம்மோகன் ராய் அவர்களின் இஸ்லாமிய வடிவம் என அலிகர் பல்கலையை நிறுவிய சையது அகமது கானை குறிப்பிடலாம். அவரும் ராம்மோகன் ராய் போலவே கல்வியாளர், பன்மொழி அறிஞர். இஸ்லாமிய சமூகம் மதம்சார்ந்த ஆசாரங்கள், மதகுருக்களின் ஆதிக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடவேண்டும், நவீனக்கல்வி வழியாகவே அது இயலும் என்று சையத் அகமது கான் வாதிட்டார்

ஆனால் இதிலுள்ள கட்டுரைகளிலேயே பின்னர் உருவான எல்லா முரண்களின் விதைகளையும் காண்கிறோம். சையத் அகமது கான் பிரிட்டிஷ் ஆதரவாளர். ஆகவே காங்கிரஸை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறினால் இந்தியா எவரிடம் செல்லும்?’ என்று ஒரு கட்டுரையில் அவர் கேட்கிறார். இந்தியாவை முந்தைய காலகட்டத்து அரசர்களும் நவாபுகளும் ஆள்வார்கள் என்றால் பழைய இருண்டகாலத்துக்கே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் என ஐயுறுகிறார்.

பிரிட்டிஷாரின் ஆட்சி அகலும் என்றால் பத்தான்கள் பாலையிலிருந்து வெட்டுக்கிளி போல வந்து இந்தியாவை சூறையாடுவார்கள், சிந்துவிலிருந்து கங்கைவரை ரத்த ஆறுதான் ஓடும் என்கிறார்.காங்கிரஸ் என்பது ஒரு இந்துமீட்புக் கட்சி என நினைக்கிறார். அந்த ஐயம் காந்தி வரும்வரை நீடித்தது. கிலாஃபத் போராட்டத்தை காந்தி ஆதரித்தது அதனால்தான். காந்தியின் போராட்டம் உச்சமடைந்தபோது அந்த ஐயத்தை வளர்த்து பிரிட்டிஷார் இந்தியாவை உடைத்தனர்.

ஃபுலே

இவ்விருவர் பேசிய தொனியும் மேலிருந்து மக்கள் என்னும் தொகுப்படையாளம் நோக்கியதாக இருந்தது.ஆனால் அந்த ஒட்டுமொத்தத்தில் உள்ளடங்கியிருந்த ஒடுக்கப்பட்ட, குரலற்ற மக்களின் உரிமைக்கான குரல்கள் பின்னர் எழத்தொடங்கின. அவர்களில் தலித் மக்களின் முதற்குரல் என்று சொல்லத்தக்க ஜோதிராவ் ஃபுலே முக்கியமானவர். தலித் மக்களின் கடைப்பட்ட நிலைமை, அவர்கள் உச்சபட்சமாகச் சுரண்டப்படுதல் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவர்களின் வாழ்வுரிமை, கல்வி ஆகியவற்றுக்காக பேசுபவராக இருந்தார் ஃபுலே.

ஃபுலே எழுதிய குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு தலித் குடும்பம் கிராமத்தின் வாழ்க்கைச் சித்திரம் ஒன்றை மிகத்தேர்ந்த புனைவெழுத்தாளருக்கு நிகரான சொல்வன்மையுடன் எழுதுகிறார். குப்பைமேட்டில் புழுக்களைப்போன்ற வாழ்க்கை. அழுக்கு, நோய் என்ற அறிவுகூட இல்லை. சாவு ஒவ்வொரு கணமும். உழைப்பும் சுரண்டலுக்குட்பட்ட அடிமைத்தனமுமே வாழ்க்கை.

இக்குறிப்புகள் பெரும்பாலும் பிரிட்டிஷாரை நோக்கி செய்யப்பட்ட கோரிக்கைகள். ஃபுலே பிரிட்டிஷார்தான் இந்தியாவின் தலித் மக்களுக்கு காவல் என நினைக்கிறார். ஆனால் இந்த குறிப்புகள் காட்டும் சித்திரம் பிரிட்டிஷார் தலித் மக்களுக்காக எதையும் செய்யவில்லை, செய்யத்தயாராகவும் இல்லை என்பதே.

பிரிட்டிஷாருக்கு இந்தியாவை ஆள உயர்குடிகளின் ஆதரவு தேவையாக இருந்தது. நிர்வாகத்தில் பிராமணர்களும் நிலவுரிமையில் பிராமணரல்லாத சாதியினரும் அவர்களுடன் நின்றாகவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் உயர்சாதி நிலப்பிரபுக்களை உருவாக்கி, அவர்களிடம் மொத்த நிலவுரிமையையும் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தையும் அளித்து, அவர்களை தங்களுக்கு விசுவாசமாக வைத்திருப்பதே பிரிட்டிஷாரின் ஆட்சிமுறை. அந்த உள்ளூர் பிரபுக்களின் கொடிய சுரண்டல், அடிமைமுறை பற்றித்தான் ஃபுலே சொல்கிறார், பிரிட்டிஷாரிடம் முறையிடுகிறார்.

பிரிட்டிஷாரின் ஆட்சியின் அடித்தளமே அந்த சுரண்டல் நிலப்பிரபுக்களால் ஆனது என்பதை ஃபுலே உணர்ந்ததாக தெரியவில்லை. கிராமங்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சென்று பார்க்கவேண்டும் என்று ஃபுலே கெஞ்சிக்கொண்டே இருக்கிறார். ஆங்கிலேயருக்கு ராணுவத்திலும் வெளியிலும் சில வகையான வேலைகளுக்கு தாழ்த்தப்பட்டவர் தேவைப்பட்டனர். அவர்களுக்கு அவ்வாய்ப்பை அளித்தனர். அவ்வாய்ப்பு பெற்றவர்கள் சாதியமைப்பின் அடக்குமுறையில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் தங்கள் குலத்தவருக்காக குரலெழுப்பினர்.

அவ்வாறு இந்தியாவில் தலித் குரல் எழ பிரிட்டிஷார் வழிவகுத்தனர்.ஆனால் அம்மக்களுக்காக எதையும் செய்யவில்லை. சட்டபூர்வமாகவும், நிர்வாக அடிப்படையிலும். தீண்டாமை ஒழிப்புக்குக்கூட எதையும் செய்யவில்லை. இந்திய தலித் வாழ்க்கையில் மெய்யான மாற்றங்கள் உருவாகத் தொடங்கியது மேலும் அரைநூற்றாண்டுக்குப்பின் தேசிய எழுச்சி உருவானபின்னர்தான்.

இன்னொரு ஒடுக்கப்பட்ட வர்க்கம் பெண்கள். அவர்களுக்காகக் குரல்கொடுத்த தாராபாய் ஷிண்டேயின் வாழ்க்கையையும் குறிப்புகளையும் குகா அளிக்கிறார். ஆனால் தாராபாய் ஷிண்டே சேவை என எதையும் செய்யவில்லை. அவருடைய எழுத்துக்களை பெண்களோ அக்கால செயல்வீரர்களோ படிக்கவுமில்லை. அவருடைய குறிப்புகள் ஒரே ஒரு நூலை ஆங்கிலத்தில் எழுதினார், அவ்வளவுதான்.எனில் எப்படி அவர் தாராபாய் ஷிண்டேயை தேர்வுசெய்தார்? பெண்ணுக்காகப் பேசிய முதல் பெண்நிலைவாதி என அவர் தாராபாய் ஷிண்டேயை மதிப்பிடுகிறார்

தாராபாய் ஷிண்டே

தாராபாய் ஷிண்டே அன்றைய பெண்களின் கீழ்நிலையை விரிவாக சித்தரிக்கிறார். கல்வியறிவு உலகப்பழக்கம் ஆகியவை பெண்ணுக்கு மறுக்கப்படுகின்றன. அதன்பின் அவளுக்கு கல்வியறிவுக்கோ உலகப்பழக்கத்திற்கோ தகுதி இல்லை என்பது திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டப்படுகிறது. தாராபாயின் எழுத்துக்கள் கூர்மையான அங்கதமும் சீற்றமும் கொண்டவை. இந்திய ஆண்கள் மட்டும் அப்படி என்ன கல்வியறிவும் உலகியல்திறனும் கொண்டவர்களா என்ற கேள்வியை அன்றைய சூழலில் வைத்துப்பார்த்தால் உண்மை என்றே உணரலாம்

குகா இந்திய மறுமலர்ச்சியின் சிந்தனைவிதைகளை உருவாக்கியவர்கள் என இந்நால்வரையும் காட்டி அவற்றை முளைக்கவைத்தவர்கள் என இருவரை எடுத்துச்சொல்கிறார். கோபாலகிருஷ்ண கோகலே, பாலகங்காரதர திலகர். ஒருவருக்கொருவர் மாறுபடுபவர்கள். பின்னாளில் காங்கிரஸில் உருவான மிதவாதி, தீவிரவாதி என்னும் பிரிவினைக்கு ஆதாரமான கொள்கைகளை உருவாக்கியவர்கள்.

இவர்களில் கோகலே அடிப்படையில் ஆசிரியர். பிரிட்டிஷ் ஆட்சியின் நலம்நாடும் நோக்கு மேல் நம்பிக்கை கொண்டவர். பிரிட்டிஷ் ஆட்சியின் கல்விக்கொடை, நிர்வாக உருவாக்கம் ஆகியவை சிறப்பானவை என நம்பியவர்.அதேசமயம் பிரிட்டிஷ் ஆட்சி ஒடுக்குமுறைத்தன்மை கொண்டது என்று எண்ணினார்.

கோகலே

கோகலேக்கு ஐரோப்பாவின் ஜனநாயக விழுமியங்கள் மேல் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. இந்தியாவில் கல்வி பரவலாக ஆகி, அந்த ஜனநாயக விழுமியங்கள் அறிமுகமாகி, மெல்லமெல்ல இந்தியர்களே இந்தியாவை ஆளும்நிலை வரவேண்டும் என நினைத்தார். ஜனநாயகத்துக்கான போராட்டம் என்பது ஜனநாயகமுறைப்படியே நடக்கவேண்டுமென நம்பினார்.

கோகலே இளம் மாணவர்களிடையே நிகழ்த்திய உரை ஒன்றை குகா எடுத்து அளித்திருக்கிறார். அதில் ஐரோப்பாவின் சிறப்பு என்ன என்பதை சுட்டிக்காட்டுகிறார். அங்கே மாபெரும் கல்விநிலையங்கள் உருவாகி கல்வி பரவலாக அளிக்கப்படுகிறது. அங்கிருந்து சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள் உருவாகிறார்கள். ஆனால் அதைவிட முக்கியமானது தன் ஜனநாயக உரிமை, தன் ஜனநாயகக் கடமை ஆகியவற்றை உணர்ந்த சாதாரணக்குடிமகன் உருவாகி வந்திருக்கிறான். அவனே எதிர்காலக்குடிமகன் என்கிறார். கோகலே உருவாக்க விரும்பிய மாற்றம் என்பது இதுதான்

திலகர்

நேர்மாறாக திலகர் பாரம்பரியத்தை நோக்கி திரும்பினார். எல்லா விழுமியங்களும் இங்கு ஏற்கனவே இருந்தன, அவை அழிக்கப்பட்டன, அவற்றை மீட்கவேண்டும் என்னும் பழமைவாத நோக்கு கொண்டிருந்தார். பழைய இந்துமுறைகளைப் பயன்படுத்தி இந்துக்களை ஒருங்கிணைக்க முயன்றார், அதன்பொருட்டே அவர் பிள்ளையார் ஊர்வலம் என்னும் திருவிழாவை உருவாக்கினார்.

இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து உடனே விடுதலைபெறவேண்டும், இந்தியர்களுக்கு தங்கள் பொற்காலத்தை மீட்டெடுக்கும் தகுதி உண்டு என நினைத்தார். சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழக்கமிட்டவர் பர்மாவில் ஏழாண்டுகள் சிறைவாசம் முடிந்து மீண்டபோது சற்றுமென்மையாகி நிபந்தனைக்குட்பட்ட தன்னாட்சிக்காக குரலெழுப்பினார்

திலகரின் கட்டுரைகள் இங்கே அளிக்கப்பட்டிருப்பவை ஒரு பழமைவாத தலைவரையே காட்டுகின்றன. ஐரோப்பா இருநூறாண்டுகளாக அடைந்த மறுமலர்ச்சியைப்பற்றிய எந்தச் சிந்தனையும் திலகரிடம் இல்லை. ஜனநாயகம், மானுட சமத்துவம், மனித உரிமைகள் ஆகியவற்றை அவர் ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தொழில், வணிகம் ஆகியவற்றில் ஐரோப்பா அடைந்த வெற்றிகளைக்கூட அவர் புரிந்துகொள்ளவில்லை. அவர் சாதிமேட்டிமைவாதம், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை ஆசாரம் பேணுவதன் பகுதியாக ஏற்றுக்கொள்பவராகவே தெரிகிறார்.

திலகரின் கட்டுரைக் குறிப்புகள் காட்டுவது அவருடைய பங்களிப்பு பிரிட்டிஷ் ஆட்சியின் கல்விமுறையாலும், அன்று ஓங்கியிருந்த மதப்பிரச்சார அலையாலும் இந்தியாவின் மரபுமேல், இந்தியவரலாற்றின்மேல் இந்தியாவின் சாமானியர்களுக்கு உருவாகியிருந்த ஐயத்தையும் அவநம்பிக்கையும் அகற்றி தன்னம்பிக்கையையும் இந்தியா என்னும் தேசம் மற்றும் பண்பாடு பற்றிய உணர்வையும் உருவாக்க திலகரால் முடிந்தது என்பதே. அதற்காக அவர் விமர்சனமில்லாத பழமை வழிபாட்டை மேற்கொள்கிறார்

தமிழகத்தின் சீர்திருத்தவாதிகளான பாரதியும் வ.உ.சிதம்பரம் பிள்ளை வ.வே.சு.அய்யர் போன்றவர்கள் திலகரை தலைமையாக ஏற்றனர் என்றாலும் அவர்கள் திலகரின் ஆசாரவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியப் பண்பாடு சார்ந்த பெருமிதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டனர், விமர்சன நோக்குடன் மரபை அணுகினர். பெண்ணுரிமை, மானுட சமத்துவம் ஆகியவற்றையே முன்னிறுத்தினர்.

இந்நூல் அடுத்து காந்தியை நோக்கிச் செல்கிறது.ஐநூறு பக்கமுள்ள இந்நூலின் முதல் இருநூறு பக்கங்களுக்குள் குகா இந்தியாவின் எழுச்சியை உருவாக்கிய அடிப்படையான கருத்துநிலைகளை முழுமையாகவே அடையாளப்படுத்திவிட்டார். இத்தெரிவை நிகழ்த்தி, சுருக்கமான குறிப்புகள் வழியாக இந்த சித்திரத்தையும் அளித்திருப்பது இந்நூலை தமிழில் சமீபத்தில் வந்த சிறந்த அரசியல்வரலாற்று நூல்களில் ஒன்றாக ஆக்குகிறது. அரசியலின் அடிப்படைகளை, இந்தியாவின் பண்பாட்டு மறுமலர்ச்சி மற்றும் அரசியல் உருவாக்கத்தின் பரிணாமத்தை அறியவிரும்புபவர்களுக்கான அரிய ஆவணம் இது

[மேலும்]

முந்தைய கட்டுரைஇரவுமழை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு- ஒரு வாசிப்பு