வெட்டிப்பூசல்,கமல்- கடிதங்கள்

கமல்ஹாசனும் வெட்டிப்பூசலர்களும்

அன்புள்ள ஜெ

இது உங்களுக்கு தெரிந்திருக்க கூடும்

மூத்த எழுத்தாளர், திரு. ரா.கி.ரங்கராஜன் பின்1990 சமயங்களில் (1998 என நினைக்கிறேன்) “நான் கிருஷ்ணதேவராயன்” – என்கிற கதை எழுதுகிறார்.

புத்தக வெளியீட்டு தருணத்தில், திரு. கமல்ஹாசனுக்கு நன்றி கூறுகிறார். அன்றைய ஐந்து வருடங்களுக்கு முன் I, Claudius புத்தகத்தை பரிசாக தந்து அது போல ஒரு படைப்பிற்கு தூண்டுதலாக இருக்கட்டும் என ஊக்குவித்தார் – என பதிவு செய்கிறார்.

அந்த பக்கத்தை இணைத்துள்ளேன்.

இலக்கியத்தின்பால் (பரப்பிலக்கியமாக இருப்பினும்) எழுத்தாளர்களின் பால் நேசத்துடன் வெகுகாலமாக கமலஹாசன் இருந்திருப்பதை நினைவு கூற வேண்டிய தருணம் என தோன்றியது.

ஒரு வேளை ராகிரா.. இன்று இருந்தால்.. 🤔🤔 அவரது கதைக்கு வித்திட்டவர் கமலஹாசன் என்ற நன்றி நவிலலுக்கு நிறைய பதில்கள் எழுத வேண்டியிருக்கலாம்.

எம்.முரளி

***

அன்புள்ள ஜெ

நான் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் உண்டு. சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்களின் தன்னம்பிக்கை. எப்படி அந்த தன்னம்பிக்கையை அடைகிறார்கள், உண்மையில் என்னதான் இவர்கள் தங்களைப்பற்றி நினைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுவேன். கமலஹாசனுக்கு ஒன்றுமே தெரியாது மடையன் என்று எழுதுவார்கள். ரஜினிகாந்த் அசடு என்பார்கள். எதையாவது தப்பு கண்டுபிடித்து கெக்கலிப்பார்கள். இவர்களில் எவரையாவது நேரில் கண்டால் ‘ஏண்டா வெண்ணை, உனக்கு என்ன தெரியும்னு இப்டி பேசிட்டிருக்கே?” என்று கேட்க ஆசை.

சமூகவலைத்தளங்களில் ஆண்டுக்கணக்கில் அலைந்தால்கூட ஒரு நல்ல கட்டுரை அல்லது ஒரு பொருட்படுத்தும்படியான குறிப்பு கண்ணில்படாது. புத்தகம் படிக்கிறவர்களே அபூர்வத்திலும் அபூர்வம். படித்தான் புரிந்துகொள்பவர்கள் யாராவது உண்டா என்று தேடித்தான் பார்க்கவேண்டும். சினிமா பற்றி எழுதுவார்கள், பேத்தலாக இருக்கும். அரசியல் என்றால் வெறும் விதண்டாவாதம்தான். சிலருக்கு கொஞ்சம் தகவல்கள் ஞாபகம் இருக்கும்.

ஆனால் ஒன்றுமே தெரியாமலிருப்பதனால்தான் இந்த தன்னம்பிக்கை வருகிறதா? தான் ஒரு மடையன் என்று தெரிந்துகொள்ளவும்கூட ஒரு அறிவு வேண்டும் அல்லவா? கமல்ஹாசன் பற்றி ‘அந்தாள் சும்மா படம் காட்டுறான்’ என்று ஒருவர் எழுதுகிறார்.அவரிடம் ‘நீ கமல் சொன்ன ஏதாவது புக்கை படிச்சிருக்கியா?” என்று கேட்டுவிட்டேன். உடனே கூச்சல், வசை.

நல்லவேளை இங்கே இந்த முட்டாள்கூட்டம் முகநூல் என்ற ஜெயிலில் கிடக்கிறது. அந்தக்காலத்தில் பைத்தியங்களை பிடித்து கப்பலில் ஏற்றி நடுக்கடலில் கொண்டுசென்றுவிட்டுவிடுவார்களாம். பைத்தியங்களை பேய்பிடித்தவர்கள் என்று நினைத்திருக்கிறார்கள். பைத்தியங்களை பிடித்த பேய்கள் அவர்கள் செத்தால் இன்னொருவரிடம் போய்விடாமலிருக்க இந்த ஏற்பாடு. Katherine Anne Porter ஒரு நாவல் எழுதியிருக்கிறார். A Ship of Fools. மிகச்சரியாக நம் முகநூலுக்கு பொருந்தும்

எம்.பாஸ்கர்

முந்தைய கட்டுரைவெண்முரசில் இசை
அடுத்த கட்டுரைகி.ராவுடன் ஒரு நாள்