பன்முகராமன்

அ.கா.பெருமாள் பற்றி அறிய

அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க

அன்பு ஐயா.

தமிழ் தட்டச்சு சரிவர பழகிவருகிறேன் பிழை இருப்பின் பொறுத்துக்கொள்ளகவும்.
மகாபாரதத்தை இன்றய சூழலோடு பொருத்தி அணைத்து கதைமாந்தர்களின் அனைத்துப் கோணங்களையும் எடுத்துக்காட்டிய நிகழ்காவியமான வெண்முரசால் பயனடைந்த ஆயிரக்கணக்கான வாசகர்களில் ஒருவன் நான்.

இதுபோலவே இராமாயணத்தையும் புரிந்துகொள்ள விழைகிறேன். எனவே, ராமாயணத்தையும் அதன் கதாபாத்திரங்களின் வெவ்வேறு கோணங்களையும் தர்க்கரீதியான உறவுச்சிக்கல்களையும் புனைந்துள்ள தழுவல் நூல்கள் தமிழிலோ,அல்லது வேறு மொழிகளிலோ இருப்பின் அதை எனக்கு தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இப்படிக்கு.
அரவிந்த்,
சென்னை


அன்புள்ள அர்விந்த்,

பொதுவாக மகாபாரதம் அளவுக்கு ராமாயணம் மீயுருவாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு ராமாயணத்தில் அத்தனை நாடகீய தருணங்கள், அறச்சிக்கல்கள் இல்லை என்பதே காரணமாக இருக்கலாம்.

தமிழில் அவ்வாறு குறிப்பிடத்தக்க ராமாயண ஆய்வுகள் இல்லை. ஆனால் நாட்டார்மரபிலுள்ள வெவ்வேறு ராமன்களை ஆராயும் அ.கா.பெருமாளின் ராமன் எத்தனை ராமனடி என்ற நூல் மிக முக்கியமான ஒன்று.

ராமனின் வெவ்வேறு முகங்களை ஆராய்வது இந்திய நாட்டார் மரபு ராமனை எப்படி புரிந்துகொண்டிருக்கிறது என்பதற்கான சான்று. பொதுவாக எங்குமே ராமன் எதிர்மறைக் கோணத்தில் பார்க்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மகாபாரதக் கதாபாத்திரங்கள் அப்படி அல்ல. துரியோதனனை நாயகனாக்கி எழுதப்பட்ட நாட்டார் பாடல்களில் மகாபாரத கதைமாந்தர் மட்டுமல்ல கிருஷ்ணன்கூட எதிர்மறையாகக் காட்டப்பட்டதுண்டு.

ராமன் எதிர்மறையாகக் காட்டப்படுவது நவீன இலக்கியம் உருவானபின்னர்தான். அதற்குச் சிறந்த உதாரணம் குமாரன் ஆசான் எழுதிய ‘சிந்தாவிஷ்டயாய சீதா’ என்னும் மலையாள குறுங்காவியம். அது ராமனை ஆணாதிக்கப்போக்கு கொண்டவனாக காட்டுகிறது. ஆனால் அதுகூட உத்தர ராமாயணத்தின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லப்படுவதுண்டு

அ.கா.பெருமாளின் ராமன் எத்தனை ராமனடி நூல் இந்தப்பின்னணியில் மிக மிக முக்கியமான ஓர் ஆய்வு. நாட்டார் பிரதிகளில் ராமன் எப்படியெல்லாம் சித்தரிக்கப்படுகிறான் என்பதை அதில் காண்கிறோம்.அந்த மாறுபாடுகள் எதனால் எப்படி உருவாகின்றன என்று ஆராய்வதென்பது ஒரு முக்கியமான பண்பாட்டுப்பார்வையை அளிக்கும்

ராமன் நமக்கு இரண்டு மையப்படுத்தப்பட்ட ஆளுமைப்புனைவுகளின் வடிவம். ஒன்று, அவன் ‘நற்குணநாயகன்’. அப்படித்தான் அவனை வான்மீகி ராமாயணம் முன்வைக்கிறது. மானுடனுக்கு இயல்வதான அனைத்து நற்குணங்களும் கொண்டவன்- நல்ல மகனாக, நல்ல உடன்பிறந்தானாக, நல்ல கணவனாக, நல்ல வீரனாக, நல்ல காவலனாக, நல்ல அரசனாக திகழ்ந்தவன்.

ராமன் அடையும் சிக்கல்கள் எல்லாமே இந்த ஆளுமை உச்சத்தில் நிற்பவர் அடைவதே. அந்நிலையில் நின்றுகொண்டு அன்றாடவாழ்க்கையை எதிர்கொள்வதன் சிக்கல்கள் ஒருபக்கம். ஒர் உச்சநிலைக்கும் இன்னொரு உச்சநிலைக்குமான மோதல்கள் இன்னொருபக்கம். ராமனின் சரிவுகள் என சொல்லப்படுவன அனைத்தும் இரண்டாவது சிக்கலில் இருந்து எழுபவை

உதாரணமாக, அவன் மிகச்சிறந்த அரசன். ஆகவே குடிகளின் சொல்லுக்கு மதிப்பளித்து சீதையை காட்டுக்கு அனுப்புகிறான். அரசி ஐயத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறான். அது கணவன் என்னும் நிலையில் அவனை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. அதையே அவன் வீழ்ச்சி என்று சிந்தாவிஷ்டயாய சீதா பாடுகிறது

ராமன் வேதகாவலன். முனிவரின் புரவலன். அதன்பொருட்டு அவன் சம்புகனைக் கொல்கிறான். அது இன்னொரு கோணத்தில் குடிமக்களில் எளியவனைக் கொன்ற பழியாக ஆகிறது. போரில்கூட ராவணனிடம் இன்றுபோய் நாளை வா என்றவன் வாலியை மறைந்திருந்து கொல்கிறான். ஏனென்றால் வாலி குரங்கு. விலங்குகளுடன் செய்வது போர் அல்ல, வேட்டை. அதில் நெறிகளேதும் இல்லை. இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம்.

வான்மீகி ராமாயணத்தில் ராமனின் இத்தகைய விழுமியச்சிக்கல்கள் எளிமையாக நேரடியாகச் சொல்லப்படுகின்றன. இந்த சிக்கல்கள் அறம் என பேசும் எவருக்கும் உரியவை. இன்றுகூட ஒரு நல்ல ஆட்சியாளன் நல்ல தந்தையாக இல்லாமலிருக்க நேரிடும். நல்ல தந்தைகள் மோசமான ஆட்சியாளர்களாக ஆகக்கூடும். நல்ல படைவீரன் கருணையற்றவனாக இருக்க நேரிடும். கடமையும் மானுடஅறமும் முரண்படலாம். பாசமும் சமூக உணர்வும் முரண்படலாம். பேரிலக்கியங்கள் எப்போதுமே இந்த முரண்பாடுகளைப் பேசுபவையே

இவை விழுமிய முரண்பாடுகள் என்ற புரிதல் இல்லாமல் இவை ராமனின் முரண்பாடுகள் என்று எடுத்துக்கொண்டு பேசும் நவீன எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் உண்டு. அது ஒருவகை தத்துவநோக்கில்லாத உணர்ச்சிப்பார்வை, அல்லது முதிராநோக்கு. அக்கால விழுமியங்களை கருத்தில்கொண்டு ஒவ்வொன்றும் அதன் உச்சத்தில் இன்னொன்றை எப்படி மறுக்கின்றன என்பதை எடுத்து ஆராய்ந்தால் மட்டுமே ராமனை புரிந்துகொள்ள முடியும்.

பின்னாளில் நற்குணநாயகனாகிய ராமனை மேலும் உச்சப்படுத்தி ‘அறத்தின் மூர்த்தியானாக’ ஆக்கிக்கொண்டனர். அவன் அரசன். இந்தியாவில் பேரரசுகள் உருவாகி, அரசன் தெய்வவடிவமாக ஆகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அரசனின் இலட்சியவடிவமாக ராமன் மாறினான். அந்த ராமனையே நாம் கம்பராமாயணத்தில் காண்கிறோம்.

நாட்டார் கலைகளுக்கு ஓர் இரட்டைத்தன்மை உண்டு. அவை எவருக்காகச் சொல்லப்படுகின்றனவோ அவர்களின் ரசனை, அவர்களின் கருத்துநிலையை அவை பிரதிபலிக்கும். அப்படிப்பார்த்தால் நாட்டார்கலைகள் எல்லாமே பக்தி இயக்கத்தைச் சேர்ந்தவை, பக்தியை முன்வைப்பவை. அப்படித்தான் அவை ராமகதையைப் பாடுகின்றன.

ஆனால் அவற்றை பாடுபவர்கள் பெரும்பாலும் சமூகப்புறனடையாளர்கள், பாணர்கள் கூத்தர்கள் மண்டிகர்கள் போன்ற நாடோடிச் சாதியினர். அவர்களுக்கு இந்த மையச்சமூகம் மீது எதிர்ப்பும் விமர்சனமும் ஏளனமும் உண்டு. அவையும் நாட்டார்க்கலைகளில் வெளிப்படும். ஒரேசமயம் இந்த இரண்டு பார்வைகளின் இரண்டு உணர்வுநிலைகளின் கலவையாகவே நாட்டார்கலைகள் இருக்கும் .

தெருக்கூத்து போன்ற கலைகளில் கட்டியங்காரன், கோமாளி, குறவன் போன்ற கதாபாத்திரங்கள் வந்து சமூக அறங்களை, ஒழுக்கநெறிகளை ஏளனம் செய்வதை காணலாம். அவை புராணப்பாத்திரங்களையும்  தெய்வங்களையும்கூட கேலியும் விமர்சனமும் செய்வதுண்டு.

நிலப்பிரபுத்துவச் சூழலில் பார்வையாளர்களிலேயே இந்த புறனடை விமர்சனப்பார்வைக்கு ரசிகர்கள் உண்டு. சிறுவர்கள், இளைஞர்கள் போன்று மீறல்போக்கு கொண்டவர்களும் வேலையாட்கள் போன்ற அடிமைப்பட்டவர்களும் அதை ரசிப்பார்கள். பெண்களும் கூட அடிமைப்பட்டவர்களாகையால் அதை ரசிப்பதுண்டு. பல இடங்களில் நாட்டார்கலைகளில் இந்த கீழிருந்து எழும் பார்வை மிதமிஞ்சிப்போய் ஊர்த்தலைவர்கள், பூசாரிகள் கோபம்கொண்டு ஆட்டத்தை நிறுத்திய கதைகளும் உண்டு.

நாட்டார் கலைகளில் ராமன் இவ்விரு கோணங்களிலும் வெளிப்படுகிறான். நற்குணநாயகன் என்று அவனை முன்வைக்கும்போதே அந்த நற்குணங்கள் மீதான எள்ளலையும் நாட்டார்க்கலை முன்வைக்கும். ஏனென்றால் நாட்டார்கலையில் எப்போதுமே ஒரு துடுக்குத்தனம் [நேர்நிலைப் பொருளில், இதை பொறுக்கித்தனம் என்பேன்] உண்டு. அது ராமனுக்கு எதிராக முட்களை நீட்டிக்கொண்டே இருக்கும்.

ராமனை முன்னுதாரணமான அரசன் என்று முன்வைக்கும்போது நாட்டார்கலையில் ஒலிக்கும் புறனடையாளனின், அடித்தளத்தவனின் குரல் அவனை கேலிசெய்யவும் விமர்சனம் செய்யவும் இயல்பாக எழுகிறது. அரசன், ஆட்சி மீதான கசப்புகளும் எள்ளல்களும் அவன்மேல் படிகின்றன. அவையும் நட்டார்கலையின் ஓர் அம்சமாகவே வெளிப்படுகின்றன

நாட்டார்கலைகள் பொதுவாக உக்கிர அம்சத்தை முதன்மைப்படுத்துகின்றன. ஆகவே எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் வருகிறது. துரியோதனன், ராவணன் போன்றவர்கள் முக்கியமான கதைமாந்தர்களாக வெளிப்படுகிறார்கள். நாட்டார் அம்சம் மேலோங்கிய கதகளியிலும் இவ்வியல்பு உண்டு

இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று கலை சார்ந்தது. சற்றேனும் எதிர்மறைத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களுக்கே நாடகீயத்தன்மை மிகுதி. அவர்களே மேடையில் உக்கிரமாக வெளிப்பட முடியும். இரண்டு, நாட்டார் வழிபாட்டில் இருக்கும் தெய்வங்கள் பெரும்பாலும் உக்கிரமூர்த்திகளே. நாட்டார்கலைகளில் ராவணனும் துரியோதனனும் வெளிப்படுகையில் வேடம் முதற்கொண்டு அவர்களில் முனியாண்டி, அய்யனார், மாடன் உட்பட நாட்டார்தெய்வங்களின் சாயல் திகழ்கிறது.

ஆனால் ராமனில் உக்கிரம் இயல்வதல்ல. முழுக்கமுழுக்க சாத்விகமான கதாபாத்திரம். ஆகவே நாட்டார் கலைகளில் ராமன் அவ்வளவு சுவாரசியமான கதாபாத்திரம் அல்ல. ராமன் மாறுதல்கள் அற்ற ஒற்றை ஆளுமை. உக்கிரவெளிப்பாடு அற்றவன். ஒரு அசைவற்ற தெய்வ முகம். அந்த வகையில் வெளிப்படும் கதாபாத்திரத்தை அவ்வப்போது சீண்டி சுவாரசியப்படுத்த நாட்டார்கலை முயல்கிறது.

நான் பார்த்த ஒரு தோல்பாவைக்கூத்தில் உச்சிக்குடும்பன் ராமன் சிறுவனாக இருந்த காலம் முதல் பட்டாபிஷேகம் வரை வருகிறான். ராமனை நையாண்டி செய்துகொண்டே இருக்கிறான். ராமன் வில்லை ஒடிக்கும்போது “ஏ, அது ஆளுவச்சு முன்னாடியே ஒடிச்சு வச்சிருந்ததுல்லா?”என்கிறான்.

ராமன் அவசரத்திற்கு உச்சிக்குடும்பனிடம் ஒருபைசா கடன்வாங்கிவிடுகிறான். விடாது தொடர்ந்து அந்த ஒருபைசாவை திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறான் உச்சிக்குடும்பன். என்ன வேடிக்கை என்றால் நல்லரசனும் கொடைவள்ளலுமாகிய ராமன் அந்த ஒரு பைசாவை திரும்பக் கொடுக்கவே இல்லை. அந்தக்கோரிக்கை ராமனின் காதில் விழவே இல்லை. அனுமார், லட்சுமணன், விபீஷணன், பரதன் போன்ற அடுத்தகட்ட தலைவர்களால் உச்சிக்குடும்பன் துரத்திவிடப்படுகிறான். ஏழை சொல் அம்பலம் ஏறவே இல்லை.

ராமன் எத்தனை ராமனடி நாட்டார் மரபு ராமகதையில் உருவாக்கும் நுட்பமான வேறுபாடுகளைப்பற்றி பேசும் ஆக்கம். அதே பார்வையில் நம் செவ்வியல்படைப்புக்கள், பின்னர் வந்த நவீன ஆக்கங்கள் ராமனின் கதையில் உருவாக்கிய நிறபேதங்களைப்பற்றியும் ஆராயலாம்.

ஜெ

அ.கா.பெருமாள்- மக்களைக் கலைப்படுத்துதல்- சுரேஷ் பிரதீப்
அ.கா.பெருமாள் ‘வயக்காட்டு இசக்கி’
அ.கா.பெருமாள்:குமரி
பண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம், அ.கா.பெருமாள்
அ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி
முந்தைய கட்டுரைநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனில் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைகதாபாத்திரங்களின் உருமாற்றம்