தமிழ் வணிக எழுத்தின் தேவை

தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு

அன்புள்ள ஜெ

உங்கள் வலைப்பதிவில் பல பதிவுகளில் பொழுது போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளைக்  கடந்து  இலக்கிய வாசிப்பிற்கு வருவது  பற்றி நீங்களும், பிறரும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

வாசிப்புத்தேடல் உள்ளவர்களைப் பொறுத்த அளவில் (என்னைப்போல் குறைவான வாசிப்பு உள்ளவர்களுக்கும் ) அது உண்மைதான். தேடல் உள்ளது. தொடர்கிறது. முன்பு விழுந்து விழுந்து படித்த பல படைப்புகள், மற்றும் சில எழுத்தாளர்கள் பக்கமே போக நாட்டமில்லை.

இப்பதிவுகளில் சுஜாதா, பாலகுமாரன் பெயர்கள் அடிக்கடி (எள்ளலாக ) சுட்டிக்காண்பிக்கப் படுவதைப் பார்த்திருக்கிறேன்.ஏற்கனவே படித்துக் கடந்து வந்தவர்கள் சரி. இது புதிய வாசகர்கள் இவ்வகை எழுத்தாளர்கள் அனைவரையும்  முற்றிலும் ஒதுக்கி வைக்கத்  தூண்டுவது அல்லவா.

வித்தியாசமான நடைகளின் வாசிப்பனுபவம்  , மற்றும் சில குறிப்பிட்ட நல்ல அம்சங்களை ரசிப்பது, இவையோடு ஒப்பீட்டு  அனுபவத்துக்கும் உதவுமே. (தேர்ந்து எடுத்த படைப்புகள் மூலம் ). உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்.

சில (சுஜாதா ) உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. சுஜாதா ஒரு ஆணாதிக்கவாதி எழுத்தாளர் என்பதான அபிப்பிராயம் முன்பு உலவியதுண்டு. அவர் எழுதிய “ஓடாதே” எனும் நாவல் படித்திருக்கிறேன். புதிதாகக் கல்யாணம் ஆகி தேனிலவுக்குப் புறப்படும் ஒரு தம்பதியில் கணவன் ஒரு சராசரி இளைஞன். மனைவி மிகுந்த தன்னம்பிக்கை மிகுந்த இளம்பெண். முழுக்க அவைளை சுற்றிச் சுழலும் நாவல். அவர்கள் பயண ஆரம்பத்தில் இருந்து எதிர் கொள்ளும் எதிர் பாராத சிக்கலான பிரச்சனைகளைத் தன் அசட்டுக் கணவனையும் அரவணைத்துக்கொண்டே சாதுர்யமாக சமாளிப்பது பற்றிய மிக வித்தியாசமான நாவல். கணேஷ், வஸந்த் இறுதியில் கொஞ்சமாக வருவார்கள்.

2. சுஜாதாவின் “வைரங்கள்” எனும் நாவலில்  ஒரு அத்தியாயத்தில் பிரச்சினையில் தவிக்கும் ஒரு ஏழைத்  தம்பதியோடு பயணப்படும் அவர்களின் காது கேளாத  ஊமைக்குழந்தையின் பார்வையில் அந்த அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும். பல வருடங்களுக்கு முன் வாசித்தது. அப்போது என் மனதை மிகவும் சலனப்படுத்தியது. இப்போதும்  மனதின் முலையில் இருக்கிறது.

பொழுது போக்கு எழுத்தாளர்கள் என வகைப் படுத்தப்பட்டவர்களின் படைப்புகளில் வாசிக்கத்தகுந்தவற்றை (குறைந்ததாயினும்) சுட்டிக் காட்டுவதும் பரந்த இலக்கிய வாசிப்பின் ஒரு பகுதி ஆகாதா.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன்

அன்புள்ள ரமேஷ்கிருஷ்ணன்,

நான் இலக்கியத்திற்குள் நுழைந்தபோது பொழுதுபோக்கு எழுத்து அல்லது வணிக எழுத்து அல்லது பொதுவாசிப்பு எழுத்து என்பது இலக்கியச் சூழலில் கிட்டத்தட்ட தீண்டத்தகாத ஒன்றாக ஒதுக்கப்பட்டிருந்தது. அது புதுமைப்பித்தன், க.நா.சு முதல் சுந்தர ராமசாமி வரை மூன்று தலைமுறைகளாக முதிர்ந்து வந்த பார்வை. அதன் தீவிரம் உச்சத்திலிருந்தபோது நான் எழுதவந்தேன்

எண்பதுகளின் இறுதியில் வணிக எழுத்தை நிராகரிக்கும்போக்கு உச்சத்திலிருந்தமைக்கு ஒரு காரணமும் இருந்தது. இன்று வணிக எழுத்தாளர்களை எவரும் இலக்கியமேதைகள் என்று சொல்வதில்லை. ஆனால் அன்று அகிலன் ஞானபீட விருது பெற்றிருந்தார். கோவி.மணிசேகரன் ஞானபீடம் தவிர எல்லா விருதுகளையும் பெற்றிருந்தார். அவர்களே இலக்கியத்தின் உச்சங்கள் என அவ்வாசகர்கள் நம்பினர்.

ஐம்பது அறுபதுகளில் தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன் போன்ற இலக்கியவாதிகள் வணிக இதழ்களில் எழுத வாய்ப்பளிக்கப்பட்டனர். ஆனால் அன்றைய வணிக இலக்கிய நட்சத்திரங்களுக்கு முன் அவர்கள் ஒளி குன்றிப்போனார்கள்

பெரிய இதழ்களில் வாய்ப்பு கிடைத்தாலும் அங்குள்ள வாசகர்களிடம் இலக்கியமேதைகளால்கூட உரையாட முடியாது என்று நிரூபணமாயிற்று. அந்த வாசகன் அவனுக்கு பழகிய சுவையை அவர்களிடம் எதிர்பார்க்கிறான். அவனுக்குப் பிடித்ததுபோல இலக்கிய எழுத்தாளன் எழுதவேண்டுமென கோருகிறான். இலக்கிய ஆசிரியன் உருவாக்கும் உலகுக்குள் கொஞ்சம் முயற்சி எடுத்து நுழைய அவனால் இயலவில்லை

இக்காரணத்தால் வணிக இலக்கியம் என்பது முற்றிலும் வேறு, அதற்கும் இலக்கியத்திற்கும் தொடர்பே இருக்கவியலாது என்னும் எண்ணம் உறுதிப்பட்டது. சுந்தர ராமசாமிகூட தொடக்கத்தில் கல்கியில் எழுதியிருக்கிறார். ஆனால் எண்பதுகளில் வணிக எழுத்துடன் எந்த தொடர்பையும் வைத்துக்கொள்ளக்கூடாது, எவ்வகையிலும் அதனுடன் சமரசம் செய்துகொள்ளக்கூடாது, இலக்கியம் தூயவடிவிலேயே முன்வைக்கப்படவேண்டும் என்னும் கருத்து ஓங்கியிருந்தது.அதன் முன்னணிக்குரலாக அவர் திகழ்ந்தார்.

வணிக எழுத்தை வாசிப்பவர்கள் வேறொரு அறிவுப்புலத்தில் இருக்கிறார்கள், அவர்களை அங்கிருந்து இலக்கியத்தின் அறிவுப்புலத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்று சுந்தர ராமசாமியின் தலைமுறை நம்பியது. அதற்கு முதலில் தாங்கள் வாசித்துக்கொண்டிருப்பவை இலக்கியங்கள் அல்ல என்று அந்த வாசகர்கள் உணரவேண்டும். இலக்கியம் என இன்னொன்று உள்ளது என அவர்கள் தெளிவடையவேண்டும். அப்போதுதான் அவர்கள் வணிக எழுத்தின் புலத்திலிருந்து இலக்கியப்புலத்திற்கு வரமுடியும்.

ஆகவே வணிக எழுத்தின் புலத்தை ஒட்டுமொத்தமாகவே நிராகரிக்கும் போக்கு உருவாகியது. அதை முற்றிலும் ஒதுக்கி அதற்கு மாறாக இலக்கியத்தை முன்வைக்கும் நிலைபாடு எடுக்கப்பட்டது. சுந்தர ராம்சாமி, பிரமிள், வெங்கட் சாமிநாதன், வேதசகாயகுமார் என அன்று எழுதிக்கொண்டிருந்த அத்தனை விமர்சகர்களும் இதில் ஒரே நிலைபாடுகொண்டிருந்தனர்

வணிக எழுத்து மிகப்பெருவாரியாக வாசிக்கப்பட்டது. ஒருசெயல் பெரும் எண்ணிக்கையில் செய்யப்படும்போது அதற்கு  ‘பெருந்திரள் மனநிலை’ என ஒன்று உருவாகிவிடுகிறது. பெருந்திரள் தன்னை தொகுத்துக்கொண்டே செல்லும் தன்மைகொண்டது. தொகுக்கத் தொகுக்க அது ஆற்றல்மிக்கதாக ஆகும். காலப்போக்கில் ஒற்றை உருவாக அது மாறிவிடும். ஒருவரை கொண்டாடுவதென்றால் அத்தனைபேரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும்.பல்லாயிரம்பேர் கொண்டாடும் ஒருவரை எவரும் மறுக்கமுடியாது.

அப்படித்தான் அரசியலில் தலைவர்களும் சினிமாவில் நாயகர்களும் உருவாகிறார்கள். பன்முக சுவைகள் பலவகைப்போக்குகள் உள்முரண்பாடுகள் உள்விவாதங்கள் பெருந்திரள்சூழலில் உருவாவதில்லை. ஒரு காலகட்டத்திற்கு ஓரிரு நட்சத்திரங்கள் எழுந்து ஒளிர்வார்கள். எண்பதுகளில் சுஜாதா ,பாலகுமாரன்.

அவ்வாறு எழுபது எண்பதுகளில் வணிக எழுத்து ஒற்றைப்பேரமைப்பாக ஆகிவிட்டிருந்தது. பல கதையாசிரியர்கள் வழியாக ஒரே உள்ளம் அத்தனை கதைகளையும் எழுதுவதுபோல. அதை வாசிப்பவர்களும் ஒட்டுமொத்தமாக ஒற்றை வாசகமனம்தான். உண்மையில் அந்த ஒற்றை வாசகமனம்தான் முதலில் உருவாகிறது. பல்லாயிரம் மனிதர்களின் மனங்கள் இணைந்த அந்த பேருருவ மனம் ஒரு தெய்வம்போல. அது எழுத்தாளனிடம் ஆணையிடுகிறது, அது கோருவதை அவன் எழுதியாகவேண்டும்.

இலக்கியவாதி அந்தப் பேருருவனிடம் சென்று உரையாடமுற்படுகிறான். அதை தன்னை நோக்கி இழுக்க முயல்கிறான், அது முடிவதில்லை. அழகிரிசாமி அதில் அடைந்த தோல்வியெல்லாம் மிகப்பரிதாபகரமானவை.ஆகவேதான் அந்தப் பேருருவனை அப்படியே விட்டுவிலகி வந்துவிடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. அந்த ராட்சதனுடன் தனிமனிதர் போரிடவே முடியாது. கலாச்சார இயக்கங்களால் மட்டுமே அவனை எதிர்க்கமுடியும்.

நான் இலக்கியத்திற்குள் நுழைந்தபோது இலக்கியத்திற்குரிய அந்த வேகத்தை முன்னோடிகளிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அதற்குமுன்பு பிரபல ஊடகங்களில் கிட்டத்தட்ட நூறுகதைகள் வரை எழுதியிருந்தேன். பின்னர் பேரிதழ்களை முழுக்க நிராகரித்து சிற்றிதழ்களில் மட்டும் எழுதலானேன். என் முதல்தொகுதியின் முன்னுரையிலேயே அதை குறிப்பிட்டிருந்தேன்.வணிக எழுத்தை இடதுகாலால் எற்றித்தள்ளுவேன் என்று ஒருவகை அறைகூவலாக. அதை அன்று சுஜாதா அவருடைய மதிப்புரையில் மெல்லிய கிண்டலுடன் குறிப்பிட்டிருந்தார்

ஆனால் இலக்கியவிமர்சனம் எழுதியபோது வணிகஎழுத்து என்னும் புலத்தில் உருவான குறிப்பிடத்தக்க ஆக்கங்களை சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஜெயகாந்தன் பொதுவான இதழ்களில் எழுதியமையாலேயே இலக்கியவாதிகளால் ஒதுக்கப்பட்டார். அவர் தமிழின் முதன்மை இலக்கியவாதிகளில் ஒருவர் என நான் திரும்பத்திரும்ப எழுதினேன். சுஜாதாவின் சிறுகதைகள் நாடகங்கள் பற்றி குறிப்பிட்டேன்

வணிக எழுத்தின் புலத்திற்குள் வெளியான முக்கியமான நூல்களின் பட்டியலையும் என் விமர்சனச்செயல்பாட்டின் ஒரு பகுதியாக வெளியிட்டிருக்கிறேன். அவற்றை சிற்றிதழ்சார்ந்த உலகில் கவனிக்கவைக்க என்னால் முடியவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். அப்பட்டியல் அப்படியேதான் இருக்கிறது

ஆனால் ஒன்றை வலியுறுத்தவிரும்புகிறேன். வணிக எழுத்தின் களத்திற்குள் சுவாரசியமான படைப்புக்கள் உண்டு. அவற்றை அவ்வப்போது நான் சுட்டிக்காட்டி எழுதுவதுமுண்டு. ஆனால் அவை வணிகப்படைப்பு என்னும் பொது இயல்புக்குள் வருகின்றனவே ஒழிய இலக்கியத்திற்குள் வரவில்லை. வணிக எழுத்தில் சுவராசியமான புதிய களம் உடையவை, சில நல்ல வாழ்க்கைத்தருணங்கள் கொண்டவை உண்டு. ஆனால் ஒட்டுமொத்தமான இயல்பை நான் மேலே சொன்ன ஒற்றைப்பேருருக்கொண்ட வாசகனே தீர்மானிக்கிறான்.

தமிழ்ச் சிற்றிதழ்ச்சூழலில் ஒரு  ‘சோனித்தனம்’ குடியேற அந்த சிற்றிதழ்சார்ந்த ‘இலக்கியப்பிடிவாதம்’ வழிவகுத்தது. ஒரு குறிப்பிட்டவகை எழுத்து, ஒரு குறிப்பிட்டவகை மனநிலை மட்டுமே இலக்கியம் என்னும் புரிதல் இங்கே உருவானது. இன்றைக்கும் பல மொக்கைகள் இலக்கியம் என்றால் அது தன்வரலாற்றுக்குறிப்பு மட்டுமே என நம்பிக்கொண்டிருக்கின்றன. எழுத்தை எழுத்தாளனின் வாழ்க்கையாகவே பார்க்கின்றன.

நேரடி வாழ்வனுபவங்களை யதார்த்தமாக எழுதுவது மட்டுமே இலக்கியம் என்று எண்ணிக்கொண்ட விமர்சகர்களும் பலர் உண்டு. ஆகவே எந்தப்படைப்பையும் அப்படைப்பாளியின் தனிப்பட்ட அனுபவ உலகுக்கு நெருக்கமாக உள்ளதா என்று பார்த்து மதிப்பிட்டனர். அப்படைப்பு அந்த அனுபவங்களின் புறவுலகுக்கு எந்த அளவுக்கு அணுக்கமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு யதார்த்தமானது என்று கணித்தனர்.

’யதார்த்தம்’ என்பதும் ’கலை’ என்பதும் சமமான சொற்களாக புழங்கலாயின. யதார்த்தம் என்பது ‘நம்பக’மானதாக இருக்கவேண்டும் என்ற பிடிவாதம் நோயுற்ற சிற்றிதழ் வாசகர்களிடையே இருந்தது. அதாவது இலக்கியம் என்பது வாசிப்பவரும் ஏற்கனவே அறிந்து, உண்மைதானா என்று பரிசீலித்து ஏற்கத்தக்கதாக இருக்கவேண்டும் என நம்பப்பட்டது

கொஞ்சம் கற்பனை இருந்தால்கூட ‘கற்பனையானது’ என்று சொல்லி படைப்பு நிராகரிக்கப்பட்டது. கொஞ்சம் உணர்வுவெளிப்பாடு இருந்தால்கூட ‘செண்டிமெண்டல்’ என விலக்கப்பட்டது. அதாவது இலக்கியத்திலிருந்து இலக்கியச்செயல்பாட்டின் அடிப்படையான கற்பனையையும் உணர்ச்சிகரத்தையும் அகற்றும் முயற்சி நடைபெற்றது.

இதன் விளைவாக மிகமிக சுவாரசியமற்ற தட்டையான யதார்த்தச்சித்தரிப்புகள் இலக்கியத் தகுதி பெற்றன. உணர்ச்சிகள், காட்சிநுட்பங்கள், மொழிவளம், வடிவக்கட்டமைப்பு, நாடகீய உச்சங்கள், சிந்தனைகள், தரிசனங்கள் என இலக்கியத்துக்கு இன்றியமையாதவை என உலகமெங்கும் கருதப்பட்ட எந்த இயல்பும் அற்றவை அவை. அவ்வாறு எண்பது தொண்ணூறுகளில் கொண்டாடப்பட்ட வெற்று யதார்த்தச் சித்திரங்கள் பல உண்டு.

இதை நிராகரித்தாகவேண்டிய சூழல் எண்பதுகளின் இறுதியில் நான் எழுதவந்தபோது இருந்தது. இலக்கியம் என்பது பலவகையான எழுத்துமுறைகள் கொண்டது. யதார்த்தவாதம் அதில் ஒருவகை அழகியல் மட்டுமே. புறவயமான யதார்த்ததுடன் அணுக்கமாக நிலைகொள்ளும் இயல்புவாதம் அதைவிட குறுகலான ஓர் அழகியல்முறை. அந்த இடுங்கின பாதை மட்டுமே இலக்கியத்தின் வழியாக இருக்கவேண்டியதில்லை என்று நாங்கள் சொன்னோம்

துப்பறியும்கதை, பேய்க்கதை, மாயாஜாலக்கதை, சாகசக்கதை என இலக்கியம் எல்லா கதைவடிவங்களையும் கொள்ளலாம். உலக இலக்கியத்தில் இதில் ஒவ்வொன்றிலும் செவ்வியல் படைப்புக்கள் உள்ளன என்று நாங்கள் சொல்லவேண்டியிருந்தது. யதார்த்தவாதம் மட்டுமல்ல கற்பனாவாதம், மிகைபுனைவு, மாயயதார்த்தம் எல்லாமே கலைதான் என்று சொன்னோம்.அக்காலத்தில் பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா ஏன் ஒரு கிளாஸிக் என்று நான் ஒரு கட்டுரை எழுதியது நினைவுள்ளது. ஓர் உரையின் எழுத்துவடிவம் அது.

ஆகவே ‘யதார்த்தவாதம் செத்துவிட்டது’ என்று ஓங்கிக் குரல்கொடுத்தோம். இலக்கியப்பெறுமதி என்பது படைப்பின் யதார்த்தமதிப்பில் இல்லை, அது உருவாக்கும் வாழ்க்கைத்தருணங்களின் நுட்பம், சிந்தனைகளின் ஆழம், தரிசனங்களின் முழுமை ஆகியவற்றில் உள்ளது. ஆழம் என்பது அதுதானே ஒழிய வாசகன் பார்த்து ‘ஓக்கே’ சொல்லும் புறவய யதார்த்தம் அல்ல என்று வாதிட்டோம்.

இன்னொன்றையும் இங்கே சொல்லவேண்டும். வணிகஎழுத்துக்கு எதிரான ஒட்டுமொத்த நிராகரிப்பு நிகழும்போதுகூட தமிழ்ச்சிற்றிதழ்ச் சூழல் ஆண்பெண் உறவு சார்ந்த மென்கிளுகிளுப்பை எழுதுவதில் தமிழ் வணிக எழுத்தின் அதே மனநிலையையே கொண்டிருந்தது.

இங்கே அதிகமாக வாசிக்கப்பட்டது, வாசிக்கப்படுவது, ஆண்பெண் சரசமாடுவதைப்பற்றிய எழுத்துதான். காதல்கள், கள்ள உறவுகள், பாலியல் மீறல்கள். குபரா முதல் ஜானகிராமன் வழியாக வண்ணநிலவன் வரை. இன்றும்கூட அதுவே மைய ஓட்டம்.அவற்றின் ஆழமின்மையும் மேலோட்டமான ஜிலுஜிலுப்பும் எவருக்கும் ஒவ்வாமையை அளிக்கவில்லை. அவற்றை ‘நுட்பமான’ இலக்கியப்படைப்புக்கள் என்று கொண்டாட தயக்கமும் இல்லை. விமர்சகராக சுந்தர ராமசாமிதான் இதை கடுமையாகச் சுட்டிக்காட்டிவந்தார்.

இந்தப் பின்னணியிலேயே என்னுடைய படுகை, மாடன் மோட்சம், மண், மூன்று சரித்திரக்கதைகள், பாடலிபுத்திரம், ரதம், ஆயிரங்கால் மண்டபம் போன்ற கதைகள் வெளிவந்தன. அவை எல்லாமே கற்பனையை விரித்து, புறவயமான நம்பகத்தன்மையை உதறி ,எழுதப்பட்டவை. அன்று கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் எல்லாருமே அப்படித்தான் எழுதினோம்.

எழுத்தாளன் தான் தன் தனிவாழ்வில் அனுபவித்து அறிந்ததை மட்டுமே எழுதவேண்டும் என்ற அசட்டுத்தனமான ஒரு நம்பிக்கை இலக்கியச் சூழலில் இருந்தமையால் தமிழ்வாழ்வின் பல தளங்கள் தொடப்படவே இல்லை.  கற்பனையின் துணைகொண்டு வேறுவேறு உலகங்களை படைப்பது, ஆராய்ச்சி செய்து எழுதுவது எதுவும் ஏற்கப்படவில்லை. அச்சூழலில்தான் முழுக்கமுழுக்க கற்பனைப்படைப்பான விஷ்ணுபுரம் வந்து இலக்கியத்தில் மைய இடம் பெற்றது. வரலாற்றையே அது கற்பனையால் உருவாக்கியது.

இலக்கியம் என்பது சூம்பிப்போன தன்வயக்குறிப்பு அல்ல, அது பண்பாட்டின்மீதான ஒட்டுமொத்தவிமர்சனம், பண்பாட்டை மறு ஆக்கம் செய்யும் முயற்சி, வரலாற்றுக்கு இணையான மறுவரலாற்றை உருவாக்கும் மாபெரும் அறிவுச்செயல்பாடு என்று நிறுவியதில் விஷ்ணுபுரத்திற்கு பெரும்பங்கு உண்டு. தன்னறிதலும் விரிவான ஆராய்ச்சியும் கற்பனையும் வடிவபோதமும் இணையும் ஒருபுள்ளியிலேயே பெரிய படைப்புக்கள் உருவாகமுடியும் என அது காட்டியது. பின்னர் வந்த ஜோ.டி.குரூசின் ஆழிசூழ் உலகு, சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் போன்ற நாவல்களின் வழியை உருவாக்கியது விஷ்ணுபுரம்தான்.

இச்சூழலில் எல்லாவகையான புனைவுமுறைகளையும் பரிசீலிக்கும்போது தமிழில் அந்த புனைவுமுறையில் முன்னர் என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்று ஆராயவேண்டியிருந்தது. அவ்வாறுதான் வணிக எழுத்துநோக்கி கவனம் சென்றது. அப்படிப் பார்க்கையில் முன்னோடியான புதுமைப்பித்தன் எல்லாவகை கதைகளையும் எழுதியிருந்தமை தெரியவந்தது. பின்னர் அவ்வகைமைகள் வணிக எழுத்துக்கே சென்றன, இலக்கியம் தெரிந்த யதார்த்தம் என்ற அசட்டு இடுங்கலுக்குள் சிக்கிக் கொண்டது

வணிக இலக்கியத்திலேயே தமிழ்வாழ்க்கையின் பல்வேறு களங்கள் பேசப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றச் சூழலில் ஒரு நாவல் என்றால் அது பிவி.ஆர் எழுதிய மிலாட் மட்டுமே. பஞ்சாப் பிரச்சினை பின்னணியில் ஒரு நாவல் என்றால் வாசந்தி எழுதிய மௌனப்புயல் மட்டுமே. இலக்கிய எழுத்து என்பது ஒருவகையில் கற்பனைத்திறனும் ஆராய்ச்சிக்கான அறிவும் இல்லாதவர்கள் எழுதும் தோற்றுப்போன புனைவுகள் என்ற நிலையே உருவாகிவிட்டது. பலவீனத்தையே பலமாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

வணிக எழுத்தில் கற்பனை என்பது வாசகனை சுவாரசியப்படுத்த மட்டுமே பயன்பட்டது. ஆகவே கற்பனை என்பதே வாசகனை சுவாரசியப்படுத்த ‘பொய்’ சொல்வது என்ற எண்ணம் இலக்கியச் சூழலில் உருவானது. ஆனால் கற்பனை என்பது அன்றாடம் கடந்த, ஆழ்மன உண்மைகளைச் சொல்வதற்கான வழிமுறை என்பதே இலக்கியத்தின் அடிப்படைக்கொள்கை.

உதாரணம் புதுமைப்பித்தனின்  ‘கபாடபுரம்’ ‘பிரம்மராக்ஷஸ்’ போன்ற கதைகள். சுந்தரராமசாமி உட்பட புகழ்பெற்ற புதுமைப்பித்தன் ரசிகர்கள் அவற்றை புதுமைப்பித்தன் ‘எழுதிப்பார்த்த’ கதைகள் என்றே நினைத்தனர். அவர்கள் அவருடைய சாதனைகளாக கருதிய கதைகள் சாபவிமோசனம், மனித இயந்திரம் போன்றவையே.  கபாடபுரம் புதுமைப்பித்தனின் சாதனை ,மறு எல்லையில் செல்லம்மாள் இன்னொரு சாதனை என தமிழில் சொல்லி ஒருவகையில் நிலைநிறுத்திய விமர்சகன் நான்.

ஆனால் கபாடபுரத்தின் புனைவுநீட்சி சிற்றிதழ்சார் இலக்கியத்தில் நிகழவில்லை. அது வணிக எழுத்திலேயே நிகழ்ந்தது. கண்ணதாசன் உட்பட பலர் குமரிக்கண்டம் போன்றவற்றை எழுதினர். ஆனால் வெறும் கேளிக்கையெழுத்தாகவே எழுதினர். மீண்டும் கபாடபுரத்தின் நீட்சி இலக்கியத்தில் நிகழ்ந்தது கொற்றவை வழியாகத்தான்.

இந்த நீட்சிக்காக, வணிக எழுத்தை ஆராயவேண்டியிருந்தது. பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டாலும்கூட வணிக எழுத்தின் களம் மிகப்பெரிதாக இருந்தமையால் அவர்களுக்கு புதியபுதிய களங்கள் தேவை என்னும் நிலை இருந்தது. ஆகவே வரலாறு, உளவியல்சிக்கல்கள் என பல தளங்களில் புனைவுகளை அவர்கள் எழுதினர். ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா ஒரு வணிக எழுத்து. ஆனால் ஒரு பெரும்நாவலுக்குரிய கருவும் களமும் கொண்டது. பி.வி.ஆர் எழுதிய கூந்தலிலே ஒருமலர் இலக்கியப்படைப்பாக ஆகவில்லை. ஆனால் எந்த சிற்றிதழ் இலக்கியத்திலும் இல்லாத களமும், கற்பனைவீச்சும் உள்ளது

இன்னும்கூட தமிழ்ச் சிற்றிதழ்சார் எழுத்தில் முன்னோடிகள் உருவாக்கிய குறுகல் உள்ளது. புதியகளங்களை நாடுவது, அவற்றில் புதிய உளநிகழ்வுகளையும் உணர்வுமுடிச்சுகளையும் கற்பனையால் உருவாக்குவது, தத்துவதரிசனங்களை நிகழ்த்துவது, வரலாற்றில் ஊடுருவுவது, பண்பாட்டை விரித்துரைப்பது இங்கே நடைபெறவில்லை. ஆகவே சிற்றிதழ்சார் எழுத்தில் ஒருவகையான சலிப்பூட்டும் தன்மை இன்றும் நீடிக்கிறது. இன்றுகூட நேற்றைய வணிக எழுத்தை சிற்றிதழ் சார்ந்த படைப்பாளிகள் கவனித்தால் வீச்சுடன் மேலே செல்லமுடியும்.

உதாரணமாக, சித்தர்களின் உலகம் தமிழ்ச்சூழலுக்கே உரிய ஒரு மாயவெளி. ஆலயச்சிற்பங்களின் மர்மங்கள் இன்னொரு வெளி. இந்திரா சௌந்தரராஜன் இவற்றை வணிகப்புனைவாக எழுதியிருக்கிறார். ஏன் ஒரு படைப்பாளி அவற்றை ஆழமான மெய்யியல் உசாவல்கள் கொண்ட ஒரு நாவலாக எழுதக்கூடாது? ஏன் தன் கொல்லைப்புறத்தில் நிகழ்பவற்றை மட்டுமே எழுதவேண்டும்?

ஜெ

இருவகை எழுத்து

பாலகுமாரனும் வணிக இலக்கியமும்

விற்பனையும் இலக்கியமும்

எல்லாமே இலக்கியம்தானே சார்?

வணிக எழுத்து தேவையா?


இலக்கியமும் அல்லாததும்


கேளிக்கை எழுத்தாளர்- சீரிய எழுத்தாளர்

வணிக எழுத்து ஒரு கடிதம்

இலக்கியமும் அல்லாததும்

வணிக எழுத்து- இலக்கியம்

அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய எழுத்தாளர்களும்

சாதாரண வாசிப்பில் இருந்து இலக்கியவாசிப்புக்கு

வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்

சிறிய இலக்கியம் பெரிய இலக்கியம்

சல்லாபமும் இலக்கியமும்

பகற்கனவின் பாதையில்
ஆழமும் அலைகளும்

முந்தைய கட்டுரைஉருகும் உண்மைகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநீலம்- வாசிப்பனுபவம்- மரபின் மைந்தன் முத்தையா.