சமணத்தில் இந்திரன்

அன்புள்ள ஜெயமோகன்,

குறள் குறித்து நாம் முன்னரும் பேசியிருக்கிறோம். நீங்கள் சிங்கப்பூர் வந்திருந்தபோது குறள் குறித்து சொன்னவை எல்லாம் இப்போதும் சொல் மாறாமல் நினைவில் உள்ளன.

குறிப்பாக “தொட்டனைத்தூறும் மணற்கேணி” குறளுக்கு பல உரை நூல்களும் நேரடியான பொருளைத்தாம் தருகின்றன. தோண்டத் தோண்ட ஊறும் மணற்கேணியைப் போல கற்கக் கற்க அறிவு பெருகும் என்ற இந்த விளக்கத்தைத்தான் நான் அதுவரை கேட்டும், வாசித்தும் வந்தேன். இக்குறள் குறித்து நீங்கள் மேலதிகமாக ஒன்றைச் சுட்டினீர்கள். ஏன் மணற்கேணி என்ற உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கமாக நீங்கள் சொன்னது: மணற்கேணி ஒன்றுதான் தோண்டுவதை நிறுத்திவிட்டால் மீண்டும் மூடிவிடும். இக்குறளின் நேரடியான பொருளைக் காட்டிலும் நீங்கள் கொடுத்த இக்குறிப்பு இந்தக் குறளின் கவித்துவ ஆழத்தைச் சுட்டி அதன் அர்த்தத்தைப் பன்மடங்கு என்னுள் அதிகரிக்கச்செய்தது.

கடவுள் வாழ்த்துப் பகுதியில் முதல் குறளில் ஆதிநாதர் சுட்டப்படுவது போலவே நீத்தார் பெருமை அதிகாரத்தின், “ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி” என்ற குறளில்  “அகல்விசும்புளார் கோமான் இந்திரன்” என்று  வருகிறது.  “இந்திரன்”  என்று இங்கே சுட்டப்படுபவரும் சமணர் தானா அல்லது இந்துபுராணங்களில் வரும் தேவேந்திரனா?

மிக்க அன்புடன்,

கணேஷ் பாபு

சிங்கப்பூர்

அன்புள்ள கணேஷ் பாபு,

இன்றைய சூழலில் ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வைதிக- அவைதிக மதங்களின் வளர்ச்சியை ஒருவகை முரணியக்கமாகப் புரிந்துகொள்வதே தெளிவை அளிக்கும். முரண்பட்டும், உரையாடியும் வளர்ந்தவை. அவற்றை வேறுவேறு போக்குகள் என்றோ முற்றாக மறுப்பவை என்றோ கொண்டால் நாம் அறிவு உருவாக்கும் அறியாமையைச் சென்றடைவோம்.

இன்று நம் சூழலில் இருவகை போக்குகள் உள்ளன. முதற்தரப்பு, வேறுபாடுகளையும் முரண்களையும் மழுங்கடித்து எல்லாமே ஒன்றுதான் என்று சொல்லும் ஒரு போக்கு. அதன் உச்சியில் தற்பற்றும் எதிர்வெறுப்பும் கொண்டு நின்றிருப்பவர்கள் தங்கள் தரப்பே அந்த ஒற்றைப்பரப்பின் உச்சம் என்றும், உண்மையானது என்றும், மற்றதெல்லாம் திரிபுகள் அல்லது பிழைகள் என்றும் வாதிடுவார்கள்.

இன்னொரு தரப்பு,முரண்பாடுகளை மட்டும் கண்டடைந்து இங்கே ஒவ்வொரு சிந்தனையும் ஒவ்வொரு பண்பாட்டுக்கூறும் ஒன்றோடொன்று போரிட்டு அழிக்கமுற்பட்டது, கொன்றுகுவிக்க துடித்தது என்று நிறுவும் போக்கு. இது மார்க்ஸியர்களின் அரசியல்பார்வையை ஒட்டியது, பிறரால் கடன்கொள்ளப்பட்டது

இதில் எதைக் கைக்கொண்டாலும் நாம் மரபைப் புரிந்துகொள்வதில் எதிர்மறை அணுகுமுறையை சென்றடைகிறோம். எதிர்தரப்பை உருவாக்கி அரசியல்செய்வதற்கு உதவுமே ஒழிய மெய்யை சென்றடைய எவ்வகையிலும் வழிகோலாது.

இந்துமதம் என நாம் இன்றுசொல்லும் அறுமதத்தொகையும் மறுபக்கம் சமணம் பௌத்தம் போன்ற சிரமணமதங்களும் ஒன்றையொன்று கடுமையாக மறுத்து இயங்கின. அடிப்படையான தத்துவ வேறுபாடுகள், தரிசன முரண்பாடுகள் அவற்றுக்கிடையே இருந்தன. இந்துமதத்தின் தரிசன உச்சமாகிய வேதாந்தத்தின் சாரம் முழுமுதல்வாதம் என்று வரையறுக்கத்தக்கது. அந்த முழுமுதல்பொருள் என்பது பிரம்மம். சமணமும் பௌத்தமும் அத்தகைய முதன்மை விழுப்பொருளை மறுப்பவை. ஆகவே முற்றிலும் வேதாந்தத்திற்கு எதிர்நிலைகொண்ட தரிசனங்கள்

சமணத்துக்கும் பௌத்ததிற்கும் நடுவேகூட அப்படி எதிர்நிலைகள் உண்டு. சமணத்தின் சாரமான தரிசனங்களில் சர்வாத்மவாதம் ஒன்று. அனைத்துக்கும் சாரமுண்டு என்பது அந்த தரிசனம். பௌத்ததிற்கு அனாத்மவாதமே முதன்மைதரிசனம். எதிலும் சாரமில்லை என்பது அது.

பௌத்ததிலேயே ஆரம்பகால தேரவாத பௌத்ததில் சர்வாஸ்திவாதம் என்று ஒன்று உண்டு. அனைத்திருப்புவாதம். எல்லா பொருளும் இருக்கின்றன என்பது அது. அபிதர்ம மரபு எனப்படுகிறது. பிற்கால மகாயான பௌத்ததின் யோகாசார மரபில் அதை மறுத்து சூனியவாதமும் விக்ஞானவாதமும் எழுந்தன. பொருட்களென இருப்பு கொள்பவை பிரக்ஞைநிலைகளே என்று அவை கூறின

இந்துமரபிலேயே வேதங்களை முதனூலாகக் கொண்டவை உண்டு. அப்படிக் கொள்ளாத சாங்கியம், நியாயம், சார்வாகம் போன்ற பிரிவுகளும் உண்டு.

இப்படி பிரிந்து பிரிந்து கிளைகிளையாகப் பெருகி ஒன்றையொன்று மறுக்கும் இந்திய சிந்தனைமரபுகள் அனைத்தும் அடிக்கட்டுமானமாக ஒரே தொன்மக்கட்டமைப்பையும் தொல்படிமக் கட்டமைப்பையும்தான் கொண்டுள்ளன. இந்துமதத்தின் தொன்மங்கள், படிமங்கள் ஆகியவை பௌத்தம், சமணம் ஆகியவற்றுக்கும் பொதுவானவை. ஒரே விளைநிலத்தில் விளைந்த வெவ்வேறு பயிர்கள் இவை.

புத்த ஜாதகக் கதைகள் என்று சொல்லப்படும் கதைத் தொகுதி புத்தரின் பிறவிக்கதைகள் என மொத்த இந்துப்புராணங்களையே உள்ளிழுத்துக்கொள்கிறது. சமணத்தின் தொன்மங்களில் அடிப்படையானவை இந்து மரபு சார்ந்தவையே. அவர்களின் சிற்பங்களிலும் தெய்வஉருவகங்களிலும் இந்து மரபு அப்படியே தொடர்கிறது

பௌத்த மரபில் தாராதேவி வேத தெய்வமான வாக்தேவியின் இன்னொரு வடிவம். காலதேவர் அப்படியே சமணத்தில் பெருந்தெய்வமாக இருக்கிறார். பௌத்தத்தில் காலதேவர் முக்கியமான தெய்வம். திபெத்திய பௌத்தத்தில் காலதேவன் இல்லாத மடாலயம் இல்லை.போதிசத்வர்களில் இந்திரனின் செல்வாக்கு மிகுதி. இந்திரனின் கையிலிருக்கும் வஜ்ரமும் தாமரையும்தான் போதிசத்வ வஜ்ரபாணியும் போதிசத்வ பத்மபாணியுமாக மாறின

இந்திரன் சமண மதத்தில் முக்கியமான ஒரு துணைத்தெய்வம். ஏறத்தாழ இந்து மதத்திலுள்ள அதே வடிவில்தான் சமணத்தில் அவர் வருகிறார். புலனின்பங்கள், உலகின்பங்கள் ஆகியவற்றின் அடையாளம். ஆற்றலின் குறியீடு.சமணர்களின் நூல்களில் இந்திரன் சக்கரன் என்றும் விண்ணவர்தலைவன் என்றும் சொல்லப்படுகிறான். அரிதாக சிலநூல்களில் மாரன் என்பதும் இந்திரன் என்பதும் ஒரேபொருளில் மாறிமாறி பயன்படுத்தப்படுகிறது

சமண மதத்தில் இந்திரனின் இடமென்ன? ஓர் உதாரணம், சமணமதத்தின் நிறுவனரான வர்த்தமான மகாவீரர் பிறந்ததும் தீர்த்தங்காரரின் பிறப்பை அறிவித்தவன் இந்திரன். விண்ணில் இந்திரனின் வெண்குடை தோன்றியது. இந்திரன் அவரை பால்நீராட்டு செய்து முக்குடை வானில் திகழ அவர் அன்னையிடம் ஒப்படைத்தான். இதுதான் இந்திரனின் பணி. சமண தீர்த்தங்காரர்களை அடையாளம் காட்டுவது இந்திரன்.

சமண தீர்தங்காரர்களின் வாழ்க்கையின் ஐந்து மங்கல நிகழ்வுகளில் இந்திரன் முன்னிலைச்சான்றாக இடம்பெறுகிறான். ஏனென்றால் இந்திரன் அறத்தின் தெய்வம். சௌதர்மேந்திரன் என இந்திரன் சொல்லப்படுகிறான். தீத்தங்காரர்களின் வாழ்வில் சவன் கல்யாணம் [விண்ணிறங்கு மங்கலம்] ஜன்ம கல்யாணம் [பிறப்பு மங்கலம்] தீட்சா கல்யாணம் [மெய்தொடங்கு மங்கலம்] கேவலஞான கல்யாணம் [மெய்யறிதல் மங்கலம்] மோட்ச கல்யாணம் [வீடுபேறு மங்கலம்] என ஐந்து மங்கலக் கொண்டாட்டங்கள் உண்டு. ஐந்துக்கும் இந்திரனே முதல்வன்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்

இந்திரனே சாலும் கரி

[ஐம்புலன்களையும் அணைத்துவிட்டவனின் ஆற்றலுக்கு அகன்றவிண்ணில் வாழ்பவர்களின் தலைவனாகிய இந்திரனே தகுதிகொண்ட சான்று]

என்றகுறளின் பொருள் மிக எளிமையாக இதுதான்.பிற்காலத்தில் அகலிகை கதையுடன் இக்குறளை தொடர்புபடுத்தி ஐந்தவித்தான் என்பது கௌதம முனிவரை குறிக்கிறது என உரை எழுதிக்கொண்டனர். கௌதமன் ஐம்புலன்களையும் அடக்கியவர் அல்ல என்பது அகலிகை கதையிலேயே உள்ள செய்தி.

ஆனால் இந்திரன் சமணர்களால் வழிபடப்படும் தெய்வம் அல்ல. அவர்களுக்கு தேவர்கள் உண்டு. ஆனால் தேவர்களை அவர்கள் வழிபடுவதோ வேள்விகள் செய்வதோ இல்லை.அவர்களுக்கு ஆத்மாக்களின் நிலைகள் நான்கு. அதை கதிகள் என்கிறார்கள். திரியக்குகள் [அஃறிணைகள்] மனிதன், நரகர் [கீழ்தெய்வங்கள்] தேவர்.

தேவர்கள் நான்கு நிலை வைமானிகர் [வானில் வாழ்வோர். விண்ணிலுள்ள பதினாறு உலகங்களில் வாழும் தேவர்] ஜ்யோதிஷர் [ஒளியுடலர். சூரியன் சந்திரன் விண்மீன்கள் என ஒளியே உடலானவர்கள்] ஃபவனவாசிகள் [விண்ணிலுள்ள தனியுலகுகளில் வாழ்வோர்.இதில் வைகுண்டம் கைலாசம் எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்வதுண்டு] வ்யாந்தர்கள் [விண்ணிலும் மண்ணிலும் தோன்றி வாழ்வோர். யட்சிகளைப்போல]. இந்நால்வரும் வாழும் உலகமே அகல்விசும்பு. இந்நால்வருக்கும் ஒரு தலைவன், அவனே இந்திரன்.

வேதகாலம் முதல் இந்தியாவின் வெவ்வேறு குடிகளிடம் தோன்றிய தெய்வங்களும் ஆசாரங்களும் தரிசனங்களும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டபடியே இருக்கின்றன. அவை ஒரு பெரும்பரப்பாக மாறி இந்துத் தொன்மவியலாக, இந்து மெய்யியலாக உருக்கொண்டன. அந்த பெருந்தொகையிலிருந்து கிளைத்து அதன் பிற கிளைகளுடன் முரண்கொண்டு உரையாடி வளர்ந்தவையே சமணமும் பௌத்தமும்

ஜெ

முந்தைய கட்டுரைஅமெரிக்காவில் ஃபாஸிசம்
அடுத்த கட்டுரைநீலம் எழுதும் வழி