மலபார்- கடிதங்கள்

மீண்டும் மலபார்  

அன்புள்ள ஜெயமோஹன்,

BSNL ஊழியர்கள் பணி ஓய்வு தொடர்பான உங்கள் உருக்கமான  குறிப்பு மிகவும் சிந்திக்க வைத்தது.

ஆனால் BSNL SIM ஐ யாரும் தொடுவதில்லை என்ற மதிப்பீடு சரியல்ல. கடந்த பதினேழு வருடங்களாக கைபேசி உபயோகித்தவன் என்ற அனுபவத்தில் இதை எழுதுகிறேன். மற்ற அனைத்து நிறுவனங்களும் இன்று இருக்கும், நாளை காணாமல் போகும்.

45 நாள் உபயோகப்படுத்தவில்லை என்ற காரணத்தால் ஒரு பிரபல நிறுவனம் அறிவிப்பு இல்லாமல் SIM ஐ ரத்து பண்ணிவிட்டது, அதை குறை கூறவில்லை. ஆனால் 45 நாட்களுக்குபிறகு ஒரு வாரம் வேலை செய்து, ரீசார்ஜ் செய்தபோது அதை ஏற்று, சரியாக திருவனந்தபுரம் ரயிலில் ஏறியவுடன் கைபேசி செயலிழந்தது தான் கொடுமை. பின் அவர்களை தொடர்பு கொண்டு ரீசார்ஜ் தொகையை கேட்டபோது கை விரித்துவிட்டார்கள். “ஏன் ரீசார்ஜ் செய்தீர்? எங்களால் கண்டுபிடிக்கமுடியாது” என்பது அவர்கள் பதில்.

இது போல் இன்னம் எவ்வளவோ.

2005 முதல் இன்று வரை என் உபயோகத்தில் தொடர்ந்து இருப்பது இரண்டு BSNL prepaid இணைப்புக்களே. நான் பார்த்தவரை BSNL ஊழியர்கள் மட்டுமே வேலை தெரிந்து பணியாற்றுபவர்கள்.

தற்போது JIO உலக தரமான சேவையை உலகத்திலேயே மலிவான விலையில் வழங்குவது உண்மையே. ஆனால் தற்போதைய அரசு கவிழ்ந்தால் அதுவும் நின்றுவிடும்.

மோதி சேவைத்துறையில் பொதுத்துறைக்கு மாற்று இல்லை என்பதை உணர்ந்தவர். ஆகையால் பலர் நினைப்பது போல் BSNL மாற்றங்கள் அதை ஒழிக்க அல்ல, காப்பாற்றவே.

அன்புடன்

கிருஷ்ணன்

அன்புள்ள கிருஷ்ணன்

இந்தியாவின் பொதுத்துறைகள் பெரும் நஷ்டத்தில் ஓடிய காலம் உண்டு. அவற்றை தனியார்மயப்படுத்த சொல்லப்பட்ட காரணம் அது. இன்று தனியார்த்துறைகள் பெருநஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. பலநிறுவனங்கள் மூடப்படுகின்றன. வங்கிகள் திவாலாகின்றன.

இன்று இந்தியா ஒரு பொருளியல்பேரழிவின் விளிம்பில் உள்ளது. இன்று நம்மை காக்க உண்மையான பொருளியல் அறிவு கொண்டவர்கள் எவரும் அரசுத்தரப்பில் இல்லை

உங்கள் நம்பிக்கை உங்களை காக்கட்டும்

ஜெ

 

இனிய ஜெ சார்,

`மீண்டும் மலபார்` கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மலையாள மனோரமா பத்திரிக்கை குறிப்பில் உங்களை ‘எழுத்துகாரன்’ என்றல்லாமல்  ‘சாஹித்யகாரன்’ என்று குறிப்பிட்டுள்ள நுண்ணுர்வை எண்ணி வியப்பிலாழ்ந்தேன்.

ஏனெனில், இங்கே பத்திரிக்கைகளில் `எழுத்தாளன்` என்றே குறிப்பிடுவார்கள். இலக்கியவாதி என்றல்ல, ஆனால் அந்த வேறுபாடு அங்கே தெரிந்திருக்கிறது.

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.

 

அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்

மலையாளத்தில் இந்த வேறுபாட்டை இலக்கியமறிந்தவர்கள் கொஞ்சம் கவனமாகவே பேணுகிறார்கள்

இலக்கியவாதி புனைவிலக்கியம் எழுதுபவர். எழுத்தாளர் என்றால் எல்லாவற்றையும் எழுதுபவர். இதழியல் நூல்கள் எழுதுபவர், வரலாற்று நூல்கள் பயணநூல்கள் சமூகநூல்கள் எழுதுபவர் என அனைவரையும் உள்ளடக்கிய சொல் அது

ஜெ

 

முந்தைய கட்டுரைகிருஷ்ணனின் குருவி
அடுத்த கட்டுரைஎழுத்தின் இருள்- கடிதங்கள்