கமல்ஹாசனும் வெட்டிப்பூசலர்களும்

கமல், ஒரு வினா

அன்புள்ள ஜெ

நான் முகநூலில் இலக்கியத்தை அறிமுகம் செய்ததே கமல்தான் என்று ஜெமோ சொல்லிவிட்டார் என்று சிலர் கும்மியடிப்பதைப் பார்த்தேன். அவர்கள் எழுதியிருப்பதைக்கொண்டு ‘என்ன இப்படிச் சொல்லியிருக்கிறார்’ என்றுதான் நானும் நினைத்தேன். ஏனென்றால் நான் உங்களை இலக்கியவாதியாகவும் அவரை ஒரு நடிகராகவும்தான் பார்க்கிறேன்.

ஆனால் நீங்கள் விளக்கம் அளித்தபின் பார்த்தால் மிகச்சரியாகவே இருக்கிறது. அட, இதை ஏன் நான் ஞாபகப்படுத்திக்கொள்ளவில்லை என்று யோசித்தேன். அவள் அப்படித்தான் சினிமாவை ஒட்டி அந்தப் பேட்டி வந்தபோது நீங்கள் பத்தாம்வகுப்பு அல்லது பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்திருப்பீர்கள். தமிழ் நவீன இலக்கியம் பற்றி அன்றைக்கு பேசுபவர்கள் யார்? எப்படி தமிழிலக்கியம் அறிமுகமாகியிருக்கமுடியும்? எங்காவது குமுதம் விகடனில் நாலு வரி வந்தால்தான் நவீன இலக்கியவாதி என ஒருவன் இருப்பதே தெரியும்

நானும் உங்கள் வயதுதான். ஆங்கிலத்தில் ஹெமிங்வே படித்துக்கொண்டிருந்தவன் சுந்தர ராமசாமியின் பெயரை எப்படி கேள்விப்பட்டேன் தெரியுமா? அரசு பதில்கள் வழியாக. அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு எப்படி அறிமுகமாயிற்று தெரியுமா? அரசு பதில்கள் வழியாகத்தான். இலக்கிய அறிமுகமே அரசுபதில்கள் வழியாகத்தான்.

நீங்கள் மலையாள இலக்கியம் அறிமுகமாகி, ஆங்கிலமும் அறிமுகமாகி நெடுங்காலம் முறையாக தமிழிலக்கியம் அறிமுகமாகவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள். தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு என்று எழுதியிருக்கிறீர்கள். சுந்தர ராமசாமியைச் சந்திப்பதெல்லாம் 1985ல். மிகவும் பிந்தி.

இதெல்லாம் அப்பட்டமாகவே இருக்கிறது. ஆனால் இதை வைத்துக்கொண்டு ஏன் இத்தனை வம்பு வளர்த்தார்கள்? அதுவும் எவ்வ்ளவு நாள். ஆச்சரியமாக இருக்கிறது.

என்.ஆர்.ராஜ்குமார்

அன்புள்ள ராஜ்,

‘அவள் அப்படித்தான்’ படம் வெளியானபோது நான் மாணவன். அப்போது அந்தப்படம் நாகர்கோயிலில் கூட பேசப்படவில்லை. அது ஓரிரு அரங்குகளில் மட்டும் வெளியாகி குறைந்த ரசிகர்களுடன் வெற்றிபெற்றது- மிகக்குறைவான முதலீடு என்பதனால். அந்தப்படம் பற்றிய பேச்சுக்கள் வலுப்பெற்றதெல்லாம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப்பின்னர்தான். கமல் பேட்டியில் அவள் அப்படித்தான் பற்றி உயர்வாகச் சொல்லிக்கொண்டிருந்தார், பல ஆண்டுகளுக்கு

கமல் அப்போது தீவிர- சிறிய சினிமாக்களின் முகம். பதினாறுவயதினிலே முதல் அவருக்கு அப்படியொரு அடையாளம் உருவாகியிருந்தது. ஒரேயடியாக அவர் ‘ஸ்டார்’ ஆனதெல்லாம் பின்னர் சகலகலாவல்லவன் வெளிவந்தபோதுதான். அப்போது தொடர்ச்சியாக இலக்கியம்- கலை பற்றியெல்லாம் பேசும் ஆளுமையாகவே அறியப்பட்டார்.பாதல் சர்க்கார் பற்றியெல்லாம்கூட தமிழில் அவரே பேசிக்கொண்டிருந்தார். அது அவருடைய தனியடையாளமாகவும் இருந்தது.

இதை முன்னரும் சொல்லியிருக்கிறேன். ஆனால் இப்போது    அதை ஏன் குறிப்பிடவேண்டியிருந்தது என்றால், ஏதோ அரசியலுக்கு வந்தபின் ஒரு பிம்ப உருவாக்கத்துக்காக அவர் இலக்கியம் புத்தகங்கள் என்று பேசிக்கொண்டிருப்பதாக இலக்கியமோ கலையோ அறியாத ஒரு விடலைக்கூட்டம் பேசிக்கொண்டிருப்பதை மறுப்பதற்காகத்தான்.

கமல் நாற்பதாண்டுகளாக நம் அறிவுச்சூழலின் ஒரு முகம்.இலக்கியச்சூழலுடனும் கலைச்சூழலுடனும் நெருக்கமான உறவிலிருந்தவர். அவர்ஒரு ஆரம்பகால முன்னோடி என்பதை இக்காலத்தையவர்களுக்கு என்னைப்போன்று அக்காலத்தை அறிந்தவர்கள் எடுத்துச் சொல்லவேண்டியிருக்கிறது.

[ஆனால் இந்த விளக்கமெல்லாம் வம்பர்களுக்கு ஒரு பொருட்டல்ல. பல ஆண்டுகளுக்கு அவர்கள் தாங்கள் சொன்னதையே சலம்பிக்கொண்டிருப்பார்கள்]

தமிழ் வணிக எழுத்தின் சூழலில் கர்நாடக சங்கீதம் தவிர எந்த நுண்கலைக்கும், நவீன இலக்கியத்திற்கும் பொதுவாக இடமிருக்கவில்லை. மிகஅரிதாகச் சில செய்திகள் வெளிவரும். அவையெல்லாமே என் மனதில் பதிந்து நாற்பதாண்டுகளுக்கு பின்பும் தெளிவாக நினைவில் நின்றிருக்கின்றன. அதை எண்ணுகையில் அன்றிருந்த தாகம் என்ன என உணரமுடிகிறது

நாகர்கோயிலில் தங்கப்பட்டறைக்கு முன்பு இரவெல்லாம் தூசியை சிறு தூரிகையால் தோய்த்து வருடி சேர்த்து எடுப்பார்கள். அதை நீரிலிட்டு சலித்து எடுத்தால் அரைகிராம் தங்கம் கிடைக்கும். பட்டறையிலிருந்து தெறித்தது. அவ்வாறு தங்கம் எடுப்பது ஒரு தொழில். அதைப்போல கிடைக்கும் செய்திகள் இவை

நான் எதையாவது ஒன்றைப்பற்றி எழுதும்போது அன்று கண்ட செய்தியை நினைவுகூர்வதுண்டு. சத்யஜித்ரேயின் அகானி சங்கேத் சினிமா பற்றி குமுதம் ஒரு படம்போட்டு நான்கு வரி எழுதியிருந்தது. ஒருபெண் கணவன் மார்பில் முகம் புதைத்து கதறி அழும் படம் அது. சமீபத்தில் ரே படங்களைப் பார்த்தபோது அதை நினைவுகூர்ந்தேன்

சென்ற ஆண்டு மீண்டும் நிர்மால்யம் படம் பார்த்தபோது அதைப்பற்றி குமுதத்தில் ‘பூசாரிக்கும் பக்தைக்கும் காதல்’ என்ற கோணத்தில் எழுதப்பட்ட நாலைந்துவரிகள் வெளிவந்திருந்ததை நினைவுகூர்ந்தேன். டெல்லி உலகத்திரைப்பட விழாவைப்பற்றி ஒரு கட்டுரையில் ’ஜாடிசெய்யும் கலைஞன்’ என்ற படம் பற்றி எழுதியிருந்ததை சிலநாட்களுக்கு முன் ஏனோ நினைவுகூர்ந்தேன். அது என்ன படமென்று கண்டுபிடிக்கமுடியவில்லை.

இப்படித்தான் ஒருகாலத்தில் இங்கே இலக்கியத்துக்கு இளையதலைமுறையினர் வந்துசேர்ந்தார்கள். அன்று ஜனநாயக வாலிபர் சங்கம் இளைஞர்களை இலக்கியம் நோக்கி ஈருக்கும் அமைப்பு. ஆனால் அவர்கள் மக்சீம் கோர்க்கியின் தாய் நாவலில் தொடங்கி ஐந்தாறு படைப்புக்களுக்குமேல் படிக்க விடமாட்டார்கள். அந்தவழியாக வந்த நல்ல வாசகர்கள் மிகக்குறைவு.

இதெல்லாம் நானே பலமுறை எழுதியது. எழுபதுகளிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் நவீன இலக்கியம் இருந்த நிலைபற்றி. தமிழ்மணி- ஐராவதம் மகாதேவன், சுபமங்களா- கோமல்சுவாமிநாதன், இந்தியா டுடே -மாலன் மற்றும் வாசந்தி , குங்குமம்- பாவை சந்திரன் ஆகியோரின் கொடையை இந்தச் சூழலில்தான் தொடர்ந்து அடையாளப்படுத்தி வருகிறேன். எனக்கு நவீன இலக்கியவாதிகளின் பெயர்கள் அறிமுகமானது கமல்,சுஜாதா [வசந்த்] வழியாக என்று முன்னரும் எழுதியிருக்கிறேன். இது அன்றைய சூழல்.

தமிழ்மணி வந்தபின்னரும்கூட இலக்கிய மதிப்பீடுகள் அறிமுகமாக தனிப்பட்ட தொடர்புகள் தேவைப்பட்டன. எனக்கு சுந்தர ராமசாமி வழியாக. சுந்தர ராமசாமி அன்று ஒரு சைக்ளோஸ்டைல் நகல் வைத்திருப்பார்- படிக்கவேண்டிய நூல்களின் பட்டியல். அதிலுள்ள நூல்களை தேடி மதுரையிலிருந்து நாகர்கோயில் வருவார்கள் அன்று. நான் மதுரை சென்று பாலசுந்தரம் என்பவரிடமிருந்து பசித்தமானுடம் பிரதியை பெற்று கொண்டுவந்து படித்து திருப்பிக்கொடுத்தேன்.

இச்சூழல் இன்று தெரியாமலிருக்கலாம். பின்னர் வந்த அலையில் இலக்கிய அறிமுகமடைந்தவர்களால் நம்பமுடியாமலும் இருக்கலாம். அவர்களில் சிலர் தாங்கள் கருவிலேயெ திரு கொண்டவர்கள் என காட்ட விரும்பலாம். இதெல்லாம் என்றுமிருப்பதுதான்

இந்த வம்புகள் ஏன் ? இவர்களால் இந்த வம்புகளையே பேசமுடியும் என்பதனால்தான். சமீபத்தில் நான் எழுதியவற்றில் முக்கியமான கட்டுரை தல்ஸ்தோய் மனிதநேயரா . இதுவரை ஓர் எதிர்வினைகூட இல்லை. ஒரு கடிதம்கூட வரவில்லை.

*

பொதுவாக இலக்கியத்திற்கு கருத்துப்பூசல்கள் [polemics] நலம்பயப்பவை என்பது என் எண்ணம். ஏனென்றால் இலக்கிய விமர்சனம் என்பது சற்று சோர்வூட்டுவது. அது தீவிரமடையும்தோறும் தத்துவம் நோக்கிச் செல்கிறது.இலக்கியவிமர்சனம் என்பது ஆராயவேண்டியது, பயிலவேண்டியது. இலக்கியக்கருத்துக்களை இலக்கியவிமர்சனத்திலிருந்து சற்றே ‘சூடாக்கி’ பொதுவான பேசுபொருளாக ஆக்குவதில் கருத்துப்பூசல்களுக்கு பெரும் பங்கு உண்டு.

உலகமெங்கும் இலக்கியம்- தத்துவம் ஆகிய துறைகளில் கருத்துப்பூசல்கள் நடந்துகொண்டேதான் உள்ளன. சிலசமயம் அவை கொஞ்சம் தரம் தாழ்வதும் தனிப்பட்ட தாக்குதல்களாக மாறிவிடுவதும் உண்டு என்றாலும் அவை ஒரு சூழலில் சில அடிப்படையான கருத்துக்கள் தொடர்ச்சியாகப் பேசப்பட வழிவகுக்கின்றன. இலக்கியவாதிகள், இலக்கியப்படைப்புக்கள் மீளமீள விவாதத்தில் நிலைகொள்ளச் செய்கின்றன.

இந்தத்தளத்திலேயே தொடர்ச்சியாக இலக்கியப்பூசல்களை காணலாம். ஆனால் அதில் ஏதேனும் ஆசிரியரோ, நூலோ பேசப்பட்டிருக்கவேண்டும் என்றும் இலக்கியக்கருத்துக்கள் குறிப்பிடப்பட்டிருக்கப்பட வேண்டும் என்றும் கவனம் கொள்வேன். அப்படி அல்லாத இலக்கியப்பூசல்களை ஊக்குவிப்பதில்லை. அத்துடன் ஓர் இலக்கியப்பூசலில் சொல்லப்படுவன சொல்லப்பட்டாயிற்று என்றால் அங்கேயே நிறுத்திக்கொள்வேன், நீட்டிக்கொண்டு செல்லமாட்டேன். ஏனென்றால் அதற்கப்பால் இருப்பது வெறும் ஆணவமோதல் மட்டுமே.

இலக்கியப்பூசல்கள் வழியாகவே இளம் வாசகர்கள் பெரும்பாலும் இலக்கியத்துக்கு அறிமுகமாகிறார்கள். அதிலுள்ள சண்டை அவர்களை கவர்கிறது. பெயர்களும் கொள்கைகளும் அறிமுகமாகின்றன. பின்னர் அவர்களே வாசிக்கத் தொடங்குகிறார்கள். இலக்கியச் சூழலில் இலக்கியம் ஓர் அரட்டையாகவும் நிலைகொள்ளவேண்டும் என்பது என் எண்ணம். கேலி, கிண்டல், கொஞ்சம் பூசலாக.

ஆனால் அதன் எல்லைகளும் கவனத்துக்குரியவை. சிலர் ஓரிரு ஆண்டுகள் மேலோட்டமாக இலக்கியம் படித்துவிட்டு அதன்பின் இலக்கிய வம்புகளை மட்டுமே கவனித்து ,அதிலேயே திளைத்து, வாழ்நாளெல்லாம் அதிலேயே கிடப்பார்கள். முதல்பார்வைக்கு அவர்கள் இலக்கியவாதிகள் என்று தோன்றுவார்கள். ஆனால் எந்த இலக்கிய ஆக்கம் பற்றியும் இலக்கியக் கருத்துக்கள் பற்றியும் அவர்களுக்கு கருத்தே இருப்பதில்லை என்றும், அவர்கள் வம்புகளாக மட்டுமே இலக்கியத்தை அறிந்திருக்கிறார்கள் என்றும் காலப்போக்கில் தெரியவரும்.

இன்னொரு தரப்பினர், சாதி- மதப் பற்று காரணமாக மட்டுமே இலக்கியத்துள் புழங்குபவர்கள். உள்ளே சாதிப்பற்றை வைத்துக்கொண்டு இலக்கியப்பூசலில் வெறுப்பு ,ஏளனம், நையாண்டி என கக்கிக்கொண்டே இருப்பார்கள். இவர்களும் எப்போதுமுண்டு.

மூன்றாம்தரப்பினர், வலுவான அரசியல் நிலைபாடு கொண்டவர்கள். அரசியல் என்றால் கொள்கையரசியல் அல்ல. அன்றாட அரசியலில் ஏதோ ஒரு தரப்பின்மேல் பற்று, அவ்வளவுதான். அது ஒருவகை மூர்க்கமாக திரண்டிருக்கும். அதை அத்தனை விவாதங்களிலும் கொண்டுவந்து குப்பைபோலக் கொட்டிக்கொண்டிருப்பார்கள்

இம்மூன்று அணியினரும் இலக்கியப்பூசலை வெட்டிப்பூசலாக ஆக்கிவிடுபவர்கள். இலக்கியத்தைப் பற்றிய ஆழமான விவாதமே நிகழாமல் தடுப்பவர்கள். இவர்களிடமிருந்து இலக்கியவாசகன் எதையும் அறிந்துகொள்ள முடியாது. மயிர்சுட்டுக் கரியாகாது, வாழைமரம் விறகாகாது என்பார்கள். இவர்களுக்கு வேறேதும் தெரியாது, வம்பிலிருந்து வம்புக்குச் சென்றுகொண்டே இருப்பார்கள்

இலக்கியப்பூசல்கள் முக்கியமானவை. புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்குமான தழுவல் பற்றிய பூசல், பாரதி மகாகவியா என்ற பூசல், கலைக்கும் அறவுணர்வுக்கும் தொடர்புண்டா என வெங்கட் சாமிநாதனுக்கும் கைலாசபதி கோஷ்டியினருக்குமான பூசல் போன்றவை முதல் நிலை. வெ.சாமிநாதனுக்கும் பிரமிளுக்குமான தனிப்பட்ட பூசல் போன்றவை இரண்டாம் நிலை.

பூசல்களை மதிப்பிடும் அளவுகோல்கள் இரண்டு, அப்பூசலில் ஏதேனும் புதியன பேசப்பட்டிருக்கிறதா? அப்பூசலை நிகழ்த்துபவர் அந்த பூசலுக்கு அப்பால் பொருட்படுத்தும்படி எதையாவது எழுதியிருக்கிறாரா? இரண்டுக்கும் இல்லை என்றால் அப்பூசலை அப்படியே ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிடவேண்டும். அது ஒரு மாபெரும் வெட்டிவேலை.

ஜெ

முந்தைய கட்டுரைபுவியரசு- கடிதம்
அடுத்த கட்டுரையானை டாக்டர் இலவசப்பிரதிகள்