உப்புவேலி- கடிதம்

உப்புவேலி

உப்புவேலி – தன்னறம் நூல்வெளி

அன்பின் ஜெ,

நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளியில் காந்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு காந்தியின் வாழ்க்கை பற்றி ஒரு புத்தகத்தை கொடுத்தார்கள். அதை படித்து அதனுடன் வந்த கேள்விகளுக்கு பதில் எழுதி அனுப்பினால் சான்றிதழும் காந்தியின் படத்துடன் உள்ள அஞ்சலட்டையும் தந்தார்கள். அந்த வயதில் என்னை கவர்ந்தது அவருடைய சத்தியம் பற்றிய குறிப்பு. சற்றே வளர்ந்தபோது அஹிம்சை, புலால் உண்ணாமை முதலியன. ஆனால், கல்லூரியின்போது அவரை முழுவதுமாக பிடிக்காமல் போனது. அதுவும் இந்த கிழம் பகத் சிங்கும் நேதாஜியும் சுதந்திரத்திற்கு போராடும்போது கடற்கரையில் போய் உப்பு காய்ச்சுகிறது, எல்லாம் நாட்டின் தலையெழுத்து என்னும் எண்ணம்.

பிறகு, மெல்ல மெல்ல முதிர, இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது ஒருவர் உப்பினை காய்ச்சினால், ஏதோ இருக்கும், அதுவும் நான் மிகவும் விரும்பிய வியாசர் விருந்து புத்தகத்தை எழுதிய ராஜாஜியும், என் ஆதர்சமான காமராஜரும் வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சியிருக்கிறார்கள். ஏதோ இருக்கிறது என தேடும்போது, வழமைகளில் ஒன்றான உங்கள் தளத்தில் தேடினேன். அப்போது கிடைத்ததுதான் உப்புவேலி என்னும் புத்தகம்.

புத்தகத்தின் ஆசிரியர் ராய் மாக்ஸம், தேயிலை தோட்டாக்காரர், கலைப்பொருள் கண்காட்சி வைத்திருந்தவர், லண்டன் நூலகத்தில் ஆவணகாப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். தமிழில் சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

தெருவோரம் இருக்கும் ஒரு சிறிய கடையில் இருபத்தைந்து பவுண்டுகளுக்கு வாங்கிய “ஒரு இந்திய அதிகாரியின் புலம்பல்களை நியாபகங்களும்” என்ற புத்தகத்தில் இருந்த அடிக்குறிப்பை வைத்து ஒரு மாபெரும் வேலியை தேடத்தொடங்குகிறார். முதலில் புத்தகங்களிலும் ஆவணங்களிலும், வரைபடங்களிலும்… அதற்காக அவர் கடும் உழைப்பினை அளித்துள்ளார், நம் நாட்டின் வரலாற்றாளர்கள் பலரும் (பலரும் என்ன, அனைவரும்) தவறவிட்ட ஒன்றினைப்பற்றி..

ராபர்ட் கிளைவ் அடித்த கொள்ளை, அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் “பெரியவர்களை” லஞ்சம் மூலம் தன்பக்கம் வைத்துக்கொள்வது, கம்பெனி முகலாய மன்னரை பெயரளவில் வைத்து பொம்மை ஆட்சி நடத்தியது என வரலாற்று நிகழ்ச்சிகளுடன் புத்தகம் துவங்குகிறது. தனக்கும் தன நண்பர்களுக்குமான ‘பிரத்யேகமான கம்பெனி’யை நிறுவி கொள்ளையை மேலும் வலுப்படுத்துகிறார். இங்கிலாந்தில் அவரது சொத்துமதிப்பு கடும் விமர்சனத்திற்குள்ளாகிறது. வயிற்றுவலியால் அவதிப்பட்டு 49வது வயதில் தற்கொலை என முடிகிறது அவரது வாழ்க்கை. திரும்பிப்பார்த்தால் 32வது வயதில் பெரும் பணக்காரரான ஒருவர் பதினேழு ஆண்டுகளில் இறந்துவிடுகிறார்.

இன்றும் ஆங்கிலேயர்களால் ‘இந்தியாவின் கிளைவ்’ (Clive of India) என அழைக்கப்படும் ஒருவர் தனிநபராக சேர்த்த செல்வமே இவ்வளவு என்றால், மொத்த கம்பெனி, இங்கிலாந்து அரசு, நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. மற்றொரு உதாரணமாக கிளைவின் சகஊழியர் வருடத்திற்கு நான்கு லட்ச ருபாய் வீதம் உப்பு வரியையும் சேர்த்து அறுவது லட்சரூபாயை தன நாட்டிற்கு கொண்டுசெல்கிறார். இங்கிலாந்தின் தனிநபர்களும், கம்பெனியும் இங்கிருந்து கொண்டுசென்ற பணத்தை இங்கிலாந்தில் செலவு செய்கின்றனர், இங்கே ஏற்பட்டிருக்கவேண்டிய வேலைவாய்ப்புகள் வெளிநாட்டில் உருவாயின.

உப்பின் வரி எவ்வாறெல்லாம் விதிக்கலாம், ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தின் அளவு, கால்நடைகளுக்கு உப்பின் அவசியம், அந்த காலகட்டத்தில் ஏழை இந்திய குடும்பத்தின் சராசரி வருமானம், என பல விவாதங்கள் கம்பெனிக்குள் நடக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான தங்கள் ஒரு குடும்பத்தின் உப்புக்கான செலவு அக்குடும்பத்தின் இரண்டுமாத சம்பளத்திற்கு சமானம்  என்பதே.

கம்பெனியின் வருமானத்தை பெருமளவு பாதித்த எல்லைக்கு அப்பாலிருந்து கொண்டுவரப்பட்ட உப்பை கட்டுக்குள் கொண்டுவரவே இந்த உப்புவேலியினை அமைக்க முடிவாகிறது.

கஸ்டம்ஸ் என்னும் வார்த்தையின் கஷ்டம், பல்வேறு வார்த்தைகளின் கலப்பில் புதர்வேலி பற்றி தேடுதல் என ஆராய்ச்சியை ராய் தொடர்கிறார். சில நண்பர்களின் உதவி மற்றும் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி Royal Geographical Soceity-யில் அவருக்கு வரைபடம் கிடைக்கிறது.

ஆங்கிலேயரின் வார்த்தைகளிலேயே அந்த புதர்வேலி எவ்வளவு பெரிய அபத்தம் என கூறுகிறார். சுங்கத்துறையில் வேலைசெய்த உள்ளூர் அதிகாரிகளுக்கு சம்பளம் எதுவும் தராததால் வாழ்வாதாரத்திற்கு, அரசிடம் கட்டுப்பாடில்லாத வழிகளுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். மிரட்டல், சண்டை, குறைந்த காலத்தில் அதிகமாக பணம் சுருட்டுதல் என பல சீர்கேடான வழிகளுக்கு தள்ளப்படுகிறார்கள். இளநிலை சுங்க அதிகாரிகள் செய்த அட்டூழியங்களை பலநிலைகளில் விளக்குகிறார், ஆனால் ஒருமுறை கூட உப்போ சர்க்கரையோ பிடிபடுவதில்லை எனவும் ஒரு அலுவலர் குறிப்பிடுகிறார்.

வாரிசில்லா கொள்கையினை (Doctrine of Lapse) வைத்து பல சிற்றரசுகளை பறித்துக்கொள்வது போன்ற கம்பெனியின் புதிய சட்டங்களையும், சுங்ககாவலர் ரோந்து செய்யும்போது தன்னுடைய காலடி தவிர மற்ற காலடிகளுக்கு பொறுப்பாக வேண்டும் என்பன போன்ற கடுமையான நடவடிக்கைகளும், 1770ம் ஆண்டின் பஞ்சமும், கம்பெனியின் கடுமையான நிலவரிவசூலினால் உழவு செய்தவர்கள் கடத்தல்காரர்கள் ஆனதும் மனதை உலுக்கிவிடுகின்றன.

பிறகு அவருக்கு உதவும் தோழி, தோழியின் மருமகன் சந்தோஷ் அவர்களின் உணவு, குடும்பம் என ஒருபக்கமும், தேடுதல் மறுபக்கமும் என நூல் செல்கிறது. கடைசியில் நகைமுரணாக பர்மத்லைனை காணப்போகும்முன் பிரித்தானியா பிஸ்கெட்டுகளை சாப்பிடுகிறார். கடைசியில் வளர்ச்சிக்காகவும் புதிய சாலைகளுக்காகவும் அழிக்கப்பட்டு மீதமிருக்கும் மேடான இடத்தினை ஒருவர் உப்புவேலியின் மிச்சம் என அவருக்கு காட்டுகிறார்.

வேலிக்காக பயன்பட்ட மரங்கள், அவற்றின் குணங்கள், இந்தியாவில் உப்பினை பயன்படுத்தும் அளவு, உப்புக்குறைபாட்டினால் வரும் உடல்நலக்கேடுகள், பல்வேறு ஆங்கிலேய அதிகாரிகளின் மனநிலை, அவர்கள் வேலைசெய்தவிதம், குற்றபரம்பரைகளின் பின்னணி, என பல தகவல்களை கொண்டுருக்கும் அற்புதமான புத்தகம்.

இந்த புத்தகத்திற்காக ராய் மாக்ஸம் அளித்துள்ள உழைப்பு அளவிடமுடியாதது. ஆனால் கடைசியில், உப்புவேலியின் மிச்சங்களை கண்டபிறகு, அவருக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக வருத்தமும் சோகமுமே அவரின் மனதை ஆக்கிரமிக்கின்றன.

புத்தகத்தை படித்து முடித்ததும் என் மனது வெறுமையாக இருந்தது. ஒரு சாதாரண உப்பு, சோடியம் குளோரைடு என பள்ளிகளில் நாம் படித்து, அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது, இந்திய வரலாற்றில் எவ்வளவு முக்கியமான கொள்ளைகளில் இடம்பெற்றிருக்கிறது எனவும், அதே உப்பினால் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் அரையாடை கிழவர் நாட்டு மக்களின் உள்ளத்தையும், வாழ்க்கையையும் தொட்டார் எனவும் அறிந்துகொள்ள முடிந்தது.

 

அன்புடன்,

கோ வீரராகவன்.

உப்புவேலி, இலக்கிய முன்னோடிகள் -கடிதங்கள்

உப்புவேலி -கேசவமணி

உப்புவேலி பற்றி பாவண்ணன்

முந்தைய கட்டுரைவாசிப்பு பற்றிய உரைகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனில் கிருஷ்ணன்