அறம் திருவிழா
அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,
‘அறம்’ தொகுப்பு வாசித்தேன். வாழ்வில் தொடர்ந்த படியேயிருக்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களுக்கும் இடையிலான மகத்தான தன்மைகளில் ஒளிந்துள்ள உணர்வுநிலைகளின் ஆகச்சிறந்த சாராம்சத்தையே ஒற்றைக்குறிக்கோளாகக் கொண்ட கதைமாந்தர்களின், கதைகளின் தொகுப்பு இது. சலனமற்றுக் கிடக்கும் தினசரிக்கான மனநிலையிலிருந்து அலைதலின் வழியே அதன் அனுபவப்பரப்பை மிக விசாலமானதாக மாற்றிக்காண்பிக்கும் நுட்பமும் அழகியலும் கொண்ட சொற்கள் இவை. வாழ்வின் எல்லாச் சாளரங்களிலிருந்தும் நிகழ்வுகளின் தொடர்புகளிலிருந்தும் அறம் சார்ந்த அடிப்படை செயலாக்கங்களை ஒற்றைப்புள்ளியில் உணர்த்துவதான தளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கதைகளை வாசித்த பின் விரிந்திடும் மனவெழுச்சிகளின் நெருக்கங்கள் ஆழமான தியானங்களின் அமைதியையும் மற்றும் அதன் மன நெகிழ்வுகளையும் ஏற்படுத்துவதாகயிருக்கின்றன.
மிக நீண்ட நாட்களுக்கு முன்பு வாசித்த தங்களின் ‘நிழல்வெளிக் கதை’களின் தீவிரத்தன்மையில் நிறைய்ய நாட்கள் இருந்திருக்கிறேன். பயத்துடன், மனப்பிறழ்வுகளின் சிக்கலுடன், உள்ளும் புறமுமான தேடல்களுடனான அக்கதாப்பாத்திரங்களின் தூரங்களை மனதில் நிறைய்ய நாட்கள் அளந்திருக்கிறேன். அவைகளுக்குப்பிறகு இக்கதைகளில் படர்ந்திருக்கும் நிஜங்களின் நெருடல்களால் வாழ்விற்கு மிகஅருகில் உணர்ச்சிவசத்துடனும் மகிழ்ச்சியுடனும் நிறைய்ய நாட்களுக்கு நிச்சயமாக இருந்திடுவேன். மிகுந்த மனச்சோர்வகளின் பிடியிலிருந்த இத்தருணத்தில் இத்தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது மிகத்தற்செயலானது என நம்புவதற்கில்லை, அகத்தின் இடைவெளிகளில் இவை உண்டாக்கியிருக்கும் புத்துணர்ச்சிகளே புதிய தேடல்களை உருவாக்கித்தருகின்றன. மேலும் வாசித்தலென்பதே அதுதானே. ‘என்ன ஒரு டிவைன் ஸ்டோரிஸ் சார்…’
மிக்க அன்பும் நன்றியும்,
ஜீவன் பென்னி.
***
மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு ,
வணக்கம்.
அறம் சிறுகதைத் தொகுப்பில் முதல் சில சிறுகதைகளைப் புத்தாண்டில் படித்த பிறகு எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். உண்மை மனிதர்களின் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக என்னை பாதித்தன. வியப்பில் ஆழ்த்தின.
வணங்கான், யானைடாக்டர் மற்றும் சோற்றுக்கணக்கு படிக்கும்போது பல இடங்களில் கண்களையும் புத்தகத்தையும் மூடிக்கொண்டு அதே நினைப்பில் இருந்தேன். கண்கள் நிறைந்தன.
அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற உந்துதலை நான் உணர்ந்தேன். ஏனென்றால் இவை அதிகப்படியான தமிழ் படிக்காத மற்ற வாசகர்களை அடைய வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உண்மையில் உங்கள் எழுத்து அனைத்துமே எல்லா மொழி வாசகரையும் சென்று சேர வேண்டும். திரு S L Bhyrappa அவர்களின் படைப்புகளைப்போல.
உங்கள் வாசிப்புக்காக முதல் இரண்டு கதைகள், அதாவது அறம் மற்றும் வணங்கான் ஆகியவை இங்கு இணைக்கப்பட்டுள்ளன. அறம் சிறுகதைத் தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளையும் தங்கள் அனுமதியுடன் மொழிபெயர்க்க விழைகிறேன், மேலும் ஆங்கில வாசகர்களை சென்றடைய பொருத்தமான ஊடகத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறேன்.
உங்கள் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அன்புடன்
ராஜ் ஸ்வரூப்
சிங்கப்பூர்