சிங்கை நாவல்பட்டறை- குறிப்புகள்

அன்புநிறை ஜெ,

சிங்கை நூலகமும் வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய நேற்றைய (5/12/2020) நாவல் பயிலரங்கில் தாங்கள் பேசியவற்றின் சுருக்கமான நினைவுக் குறிப்புகள்:

இது நாவல் எழுதத் தொடங்குவோருக்கான பயிலரங்கு. நாவல் என்பதை பெருநாவல் (Great novel), சிறிய நாவல் என்று வகுத்துக் கொள்ளலாம். விஷ்ணுபுரம், தல்ஸ்தோயின் போரும் அமைதியும், ஜோ. டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு போன்றவை பெருநாவல்கள். அவற்றின் வடிவம் அவை எதிர்கொள்ளும் வடிவப்பிரச்சினைகள் வேறு. பெருநாவல் குறித்ததல்ல இப்பயிலரங்கு.

பெருநாவல் என்பது ஒரு களத்தை ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிட முயல்கிறது. ஆகவே ஏராளமான கதைமாந்தர்களைக் கொண்டுள்ளது. அவர்களின் வளர்ச்சிப்பரிணாமத்தைச் சொல்லும்பொருட்டு பெரிய கால அளவை எடுத்துக்கொண்டுள்ளது. அந்தக்களத்தில் நிகழும் வாழ்க்கையைச் சொல்வதனூடாக ஒரு அடிப்படையான தத்துவார்த்தமான கேள்வியை பரிசீலிக்கிறது. அந்த கேள்வியின் எல்லாப்பக்கங்களையும் முழுமையாக ஆராய்ந்துவிட விரும்புகிறது

குறுநாவல் (novellete) என்பதையும் இங்கே குறிப்பிடவில்லை. குறுநாவல் என்பது சிறுகதையின் நீட்சியாக அமைவது. சிறுகதை அதன் முடிப்பில், உச்சத்திருப்பத்தில் விசைகொள்வது. மையத்தை முடிவில் நிகழ்த்துவது. அந்த முடிவை நோக்கி அதன் உடல்பகுதி கூர்மையாக முன்செல்லும். அந்த உடல்பகுதி பல கிளைகளாக, பலகதைகளாக விரியும் என்றால் அது குறுநாவல். சற்று தன்னை விரித்துக்கொண்ட சிறுகதைதான் குறுநாவல்.

இங்கே பேசுபொருள் என்பது சிறுநாவல். இருநூறு-முந்நூறு பக்கங்கள் அளவிலான ஒரு சிறிய நாவல் எழுதுவதைப் பற்றி இங்கே பார்ப்போம். இவ்வகை நாவல்களே இன்று விரும்பிப் படிக்கப்படுகின்றன. இலக்கியப்படைப்பா வணிகப்படைப்பா என்பதை நாம் கருத்தில்கொள்ளவேண்டியதில்லை. சிறுநாவலின் வடிவத்தைப்பற்றி மட்டும் ஆராய்வோம்.

நேர்த்தியாக சொற்றொடர்களை அமைக்கத் தெரிந்த ஒவ்வொரும் நாவல் எழுதமுடியும்.. அது உங்கள் ஒருவருக்கு மட்டுமேயான படைப்பாக இருந்தாலும், வேறொருவருக்கும் அது நல்ல படைப்பாகத் தோன்றவில்லை என்றாலும் உங்கள் ஒருவருக்காக மட்டுமாவவது நாவல் எழுதுங்கள் என்றுதான் சொல்வேன். பிரசுரிக்காமலே இருந்தால்கூட நாவல் எழுதிப்பார்க்கலாம்.

ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வி எழலாம். இரண்டு காரணங்களுக்காக. ஒன்று உங்களுக்காக. இன்னொன்று சமூகத்திற்காகவும் அறிவுச்சூழலுக்காகவும்.

நாவல் எழுதும் அந்தக் காலகட்டம் முழுக்க, ஓரிரு வருடங்கள், நீங்கள் மகிழ்வுடனிருப்பீர்கள். நீங்கள் வாழும் அன்றாடவாழ்க்கைக்கு நிகரான இன்னொரு கற்பனை வாழ்வில் மிக உற்சாகமாக இருந்திருப்பீர்கள். நாவல் எழுதும்போது நாம் அடையும் முழுமையான கவனக்குவிப்பும் கற்பனையின் இன்பமும் நமக்கு அரிதாகவே பிறச் செயலில் கிடைக்கின்றன.

ஒரு கிராமியவாழ்க்கையில் , பழங்குடி வாழ்க்கையில் உழைப்பில் படைப்பூக்கமும் இன்பமும் உள்ளது. நவீன வாழ்க்கையில் அது இயல்வதல்ல. அவர்கள் செய்யும் வேலையிலிருந்து கிடைத்த மனநிறைவு என்பது இன்றைய வாழ்வில் கிடைக்க வாய்ப்பில்லை. ஒரு மாபெரும் கட்டுமானத்தில் அல்லது உருவாக்கத்தில் ஒரு சிறு துளியை செய்யும் பணியே இன்று அனைவருக்கும் கிடைக்கிறது. அது திரும்பத்திரும்ப ஒன்றையே செய்வதுதான். இதைநான் செய்தேன் என நிறைவுகொள்ள முடியாததுதான்

நீங்களே முழுமையாகச் செய்யும் ஒரு செயல் உங்களுக்கு நிறைவளிக்கும். முழுமையாக உங்களுடைய படைப்பு என்று ஒன்று இருக்கட்டுமே. அந்த நிறைவுக்காக நாவல் எழுதுக. ஆகவே “கொலை புரிக!”

நாவல் எழுதுவதற்கான சமூகக்காரணம் என்ன ?இன்று நம் வாழ்க்கையின் மிகமிகச்சிறிய பகுதி மட்டுமே எழுதப்பட்டுள்ளது. நான் அமெரிக்காவில் ஒருவரை பார்த்தேன். அவருடைய தொழில் என்ன என்று கேட்டேன். பல அடுக்குகள் கொண்ட மாபெரும் கட்டிடங்களுக்கு வெளிப்பக்க ஒளியை வடிவமைப்பது. அதற்கான மென்பொருட்களை எழுதுவது.

எத்தனை விசித்திரமான தொழில்! இன்னொரு நண்பர் ஒருவர் குதிரைகளுக்கான மருத்துவர். குதிரையோட்ட நிபுணரும்கூட. இப்படி எத்தனை தொழில்களில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். என்னென்ன வாழ்க்கைக் களங்கள் வழியாக கடந்து வருகிறோம். எத்தனை சிக்கல்கள் நமக்கு வருகின்றன. அவற்றை நாம் எழுதியிருக்கிறோமா? இவற்றையெல்லாம் எழுதும்போதுதான் நம் வாழ்க்கையை நாம் எழுதுகிறோம் என்று பொருள்

இன்று எழுதுபவர்கள் மிகச்சிறிய எண்ணிக்கையினர். அவர்களும் திரும்பத்திரும்ப எளிமையான ஆண்பெண் உறவுக்கதைகள், அரசியல்கருத்துக்கள் ஆகியவற்றை எழுதுகிறார்கள். சினிமா பார்த்து அதை நம்பி எழுதுகிறார்கள். நாம் எழுதவேண்டியது பிரம்மாண்டமாக வெளியே மிச்சமிருக்கிறது. பல்லாயிரவர் எழுதவரட்டும். எல்லா வாழ்க்கையும் எழுதப்படட்டும். உங்கள் பங்களிப்பு என்றும் ஒன்று இருக்கலாம்.

*

நாவல் எழுதுவதின் விதிகளைச் சொல்லவில்லை. இது நாவலை எழுதுவதற்கான அடிப்படை வழிகள். இப்படி எழுதினால் அது வாசிப்புக்குரியதாக அமையும். இந்த விதிகளை கடந்து எழுதுவதென்பது உங்கள் திறமையாக இருந்தால் அது நல்லது

நாவல் எழுதுவதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை சுருக்கமாக இவை. நாவலின் வடிவம் பற்றி சில பொதுவான கருத்துக்களைச் சொல்கிறேன்

. சிறிய நாவல் என்பது குறைந்தது 80 பக்கங்களுக்கு மேல் இருக்கவேண்டும் என வைத்துக்கொள்ளலாம். சராசரியாக 150 -200 பக்கங்கள் எனக் கொள்ளலாம்.

பக்க அளவு முக்கியமா என்றால் முக்கியம். முந்நூறு பக்கங்களுக்குமேல் ஒரு நாவல் செல்கிறது என்றால் வாசகன் அது பெருநாவலாக, முழுவாழ்க்கையையும் சொல்லமுயலும் படைப்பாக இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பான். ஒரு சிறுநாவலுக்கான கருவை முந்நூறு பக்கம் நீட்டினால் வாசகனுக்கு சலிப்பு வரும். எண்பது பக்கங்களுக்கு கீழே எழுதினால் நாவலுக்குரிய களமே அமையாது. நாவலில் இறங்கி வாசித்து மீண்ட நிறைவு கிடைக்காது

. நாவலை அத்தியாங்களாகப் பிரித்துக் கொள்ளுதல் முக்கியம். ஏறத்தாழ ஒரே பக்க அளவிலான அத்தியாயங்களாக அவை இருக்க வேண்டும். உதாரணமாக 200 பக்க நாவல் என்றால் 10 பக்கங்கள் கொண்ட 20 அத்தியாயங்கள் என்றோ, 20 பக்கங்கள் அளவிலான 10 அத்தியாயங்கள் என்றோ வகுத்துக் கொள்ளலாம்.

அத்தியாயங்களாக வகுத்துக் கொள்வது வாசகனுக்கு மிக முக்கியம். அது வாசகனை படிப்படியாக ஒரு நாவலை வாசிக்க வைக்கிறது.. ஒவ்வொரு அத்தியாயமாகத்தான் வாசகனால் உள்வாங்கிக் கொள்ளவும் நினைவிலிருத்திக் கொள்ளவும் இயலும். தொடர்ச்சியாக எழுதிச் செல்வது வாசிப்புக்கு இடையூறாகக்கூடும்.

ஓர்அத்தியாயம் ஒரு உணர்ச்சியையோ ஒரு நிகழ்வையோ பேசி முடிக்கலாம். ஒரு கதைப்பகுதி பேசி முடிக்கப்படலாம். ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு தனிக்கதை போல ஒரு தொடக்கமும் முடிவும் இருக்கும் என்றால் அது நல்லது.

அத்தியாங்களில் ஒன்று அளவிற் பெரியதாகவும் ஒன்று மிகச் சிறியதாக என்று இருப்பது வாசிப்பிலிருந்து வாசகனை விலக்கி விடக்கூடும். உதாரணமாக திடீரென்று ஒரு அத்தியாயம் மட்டும் ஐம்பது பக்கங்கள் போனால், வாசகன் இன்னும் எத்தனை பக்கங்கள் இந்த அத்தியாயத்தில் என்று அயர்ச்சியோடு புரட்டிப் பார்க்கும்போது அவன் அந்த வாசிப்பிலிருந்து விலகிவிடுகிறான். இரு பக்கங்களுக்கு ஒரு அத்தியாயத்தை எழுதினால் அது மனதில் பதியாமல் போகும்.

. இந்துஸ்தானி இசையில் அரைமணிநேரம் சுருதி சேர்க்கவே நேரம் செலவிடுவார்கள். ஏனென்றால் அவர்கள் பலமணிநேரம் பாடுவார்கள். ஒருமணிநேர கச்சேரியில் பதினைந்துநிமிடம் சுருதி சேர்க்கக்கூடாது. சிறிய நாவலில் பொறுமையாக சுருதி சேர்க்கவோ ஆலாபனைக்கோ கிடையாது. நேரடியாக பிரச்சினையின் nucleus ல் இருந்து தொடங்க வேண்டும். முதல் அத்தியாயத்தின் முதல் சில பத்திகளிலேயே நாவல் தொடங்கிவிடவேண்டும்

. சிறிய்நாவல் வாசகனை ஈர்ப்பான தொடக்கம் வழியாக உள்ளிழுக்கவேண்டும். ஒரு தீவிரமான நிகழ்வு, அல்லது ஒரு நல்ல சொற்றொடர் வழியாக. ஹா ஜின் எழுதிய வெயிட்டிங் என்ற நாவல் இப்படித் தொடங்குகிறது. “ஒவ்வொரு கோடையிலும் லின் காங் கூஸ் கிராமத்துக்கு தன் மனைவியை மணவிலக்கம் செய்யும்பொருட்டு வருவதுண்டு”

. சினிமாக்கள் தொடக்கத்திலேயே அது எந்தவகை படைப்பு என்பதை உணர்த்திவிடவேண்டும். அது சிறியநாவலுக்கும் பொருந்தும். ஏனென்றால் அதில் பக்கங்கள் மதிப்பு மிக்கவை. பதினைந்து பக்கம் படித்தபின் இது திரில்லர் என்று வாசகனுக்கு தோன்றக்கூடாது.அது குடும்பப்படைப்பா, திரில்லரா, காதல்படைப்பா என்பதை வாசகன் முன்னரே உணர்வது அவன் கூர்மையாக நாவலுக்குள் நுழைய உதவும்

. திரைக்கதையில் ‘ஷிஃப்ட்’ என்ற ஒரு பிழை உண்டு. அது நாவலுக்கும் பொருந்தும்.மூன்றுவகை தளமாற்றப்பிழைகள் உண்டு. ஒரு கதாபாத்திரத்தை மையமாக காட்டிவிட்டு இன்னொருவரை கதைமையமாக மாற்றிக்கொள்வது. கதை நடக்கும் களத்தை மாற்றிக்கொள்வது. கதைபேசவந்த பிரச்சினையை மாற்றிக்கொள்வது

ஏன் மாற்றக்கூடாது என்றால் வாசகன் கொஞ்சநேரத்திலேயே மையக்கதாபாத்திரம், கதைக்களம், கதைச்சிக்கல் ஆகியவற்றில் பொருந்திவிடுகிறான். அவனை அங்கிருந்து தூக்கி இன்னொன்றில் போடுவது பெரிய பிழை. அது அவன் வாசித்து வந்த ஆர்வத்தை அழித்துவிடும்

*

சிறியநாவலின் கதைசொல்லும் முறைபற்றி சிலவற்றைச் சொல்லலாம் என நினைக்கிறேன். இவையும் இப்படித்தான் சொல்லவேண்டும் என்பதற்காக அல்ல. இப்படிச் சொல்வது வாசகனை எளிதில் உள்ளிழுத்து வாசிக்கவைக்கும் என்பதற்காக.

. கதை எவருடைய பார்வையில் செல்கிறது, எவருடன் இணைந்து வாசகன் உள்ளே செல்லவேண்டும் என்பது முக்கியமானது. அந்த மையமும் அந்தப்பார்வைக்கோணமும் மாறக்கூடாது. கதை மையக்கதாபாத்திரத்தின் பார்வைக்கோணத்திலேயே செல்ல வேண்டும். அந்தப் பாத்திரம் ஒரு சூழலை எப்படிப் பார்க்க புரிந்து கொள்ள இயலுமோ அவ்விதமாகவே கதை நகர வேண்டும்.

ஓர் எட்டு வயதுக் குழந்தையின் பார்வையில் கதை நகர்கிறதென்றால் அதற்குத் தகுந்த விதமாகவே வர்ணனைகளும் எண்ண ஓட்டங்களும் அமைய வேண்டும். அது கதையின் நம்பகத்தன்மையை உருவாக்குகிறது

. ஒரு கதையில் ஆங்காங்கே திடீரென ஆசிரியர் குரல் இடையிடக்கூடாது. ஆரம்பநிலையில் பலர் செய்யும் தவறு இது. ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்வார்கள். ‘லலிதா சிஙகப்பூர் சாங்கி விமானநிலையத்தை வந்தடைந்தாள்’ என்று விரிவாகச் சொன்னபின் “லலிதாவுக்கு சொந்த ஊர் கும்பகோணம் அவளுடைய குடும்பம் மிகப்பெரியது” என்று ஆசிரியர் பேச ஆரம்பிப்பார். வாசகனுக்கு எரிசலூட்டுவது இது. அவன் லலிதாவை தானே பார்த்துக்கொண்டிருக்கிறான். லலிதா என்ன செய்கிறாள், என்ன நினைக்கிறாள் என்பதுதான் முக்கியம்.

சரி, லலிதாவின் பின்னணியை கதையில் சொல்லவேண்டுமென்றால் என்ன சொல்லலாம்? அவள் தன் பின்னணியை நினைத்துக்கொள்ளலாம். அவளுடன் எவராவது உரையாடும்போது அவளே சொல்லலாம். எவ்வளவோ வழிமுறைகள் உள்ளன. அவளே நினைத்துக்கொள்ளும்போதுகூட அது இயல்பான நினைப்பாக இருக்கவேண்டும். அவளே சுருக்கி வாசகனிடம் சொல்வதுபோல இருக்கலாகாது.

. பாத்திரப் பிண்ணனி அல்லது மையப்பாத்திரத்தின் மன ஓட்டம் போன்றவற்றை சொல்ல வேண்டுமென்றால் அதற்கு சில புனைவு உத்திகள் உள்ளன. கண்ணெதிரே பார்க்கும் ஒரு காட்சி அல்லது நபர் கிளர்த்தும் எண்ணங்களாகவோ, அல்லது வேறொரு பாத்திரம் பேசுவதாகவோ வரலாம். ஆனால் அதன் விரிவு கதையின் ஓட்டத்தை பாதிக்காது இருக்கவேண்டும்.

. நாவலில் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சி இருக்கவேண்டும். ஒரு சினிமாவை எந்த புள்ளியில் நிறுத்தினாலும் அதற்கு முன்பிருந்த சம்பவத்தில் இருந்து அது இயல்பாக தொடர்ந்து வந்திருக்கவேண்டும், அதற்கு அடுத்த சம்பவத்தை தொடங்கிவைத்திருக்கவேண்டும் என்பார்கள். அதுதான் தொடர்ச்சி. நிகழ்ச்சிகள் ஒரு சைக்கிள் ஸ்டேண்டில் ஒரு சைக்கிளை தள்ளிவிட்டால் ஒவ்வொன்றாக வரிசையாக சரிவது போல ஒழுக்கு அமைய வேண்டும். ஒரு நிகழ்வு அடுத்ததற்கு இட்டுச் செல்ல வேண்டும்.

. ஓர் இடத்தில் அந்த நிகழ்ச்சித் தொடரை நிறுத்திவிட்டு இன்னொரு இடத்தில் தொடரலாமா? தொடரலாம். ஆனால் அப்படி நிறுத்திய இடம் முக்கியமானதாக இருக்கவேண்டும். அங்கே ஒரு தீவிரமான கேள்வியோ தேடலோ இருக்கவேண்டும். அது அடுத்த தொடக்கத்தில் விடைசொல்லப்படவேண்டும்.

. நிகழ்ச்சிகளைச் சொல்லாதீர்கள், காட்டுங்கள். நுண்விவரனைகளிலேயே கலை இருக்கிறது. நாம் வழக்கமாக நிகழ்ச்சிகளை சுருக்கிச் சொல்வோம். ஆனால் புனைவு அப்படி அல்ல. ஒருதெருவில் வண்டியில் செல்பவனுக்கு விபத்து நடக்கிறது. தெருவை விரிவாக காட்சிவடிவில் சொல்லுங்கள். தகவல்களை கொடுங்கள். வாசகன் அந்த தெருவை கண்களால் பார்க்கவேண்டும்.

. பெருநாவல்களிலியே மிக விரிவான வர்ணனைகளுக்கு இடமிருக்கும். ஆகவே சிறியநாவல்களில் விவரணைகளும் வர்ணணைகளும் சுருக்கமாக கூர்மையாக இருக்கவேண்டும்

. பெருநாவல்களில் விரிவான தத்துவ விவாதங்கள் இருக்கலாம். ‘லே மிசரபிள்’ போன்ற பெருநாவல்களில் ஐந்திலொரு பங்கு நேரடி தத்துவ விவாதம் உண்டு. சிறிய நாவல்களில் பெரிய தத்துவ விவாதங்களுக்கு இடமிருக்காது. ஆகவே எண்ணங்கள், கருத்துக்கள், விவாதங்கள் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும். தேவையென்றால் சுருக்கமாகச் சொல்லலாம்

*

சிறியநாவல் என்னும் வடிவத்தை பயில்வதற்கு பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் உருவான த்ரில்லர் வகைமை உருவாக்கிய வடிவம் சிறந்த முன்னுதாரணம். அவை இலக்கியங்கள் அல்ல. ஆனால் கதையின் வடிவம் என்பதை அவை மிகச்சிறப்பாக செதுக்கியிருக்கின்றன. ஒரு கூட்டுமுயற்சியாக உருவாகி வந்தது அத நாவல்களின் வடிவம். தொடர்ச்சியான வாசக எதிர்வினை வழியாக அதை வடிவமைத்திருக்கிறார்கள்

அந்நாவல்கள் எடுப்பு – முதிர்வு – முடிவு என்னும் மூன்றடுக்கு வடிவம் கொண்டவை. ஒரு தீவிரமான தொடக்கம் இருக்கும். அதில் பேசப்படும் கதாபாத்திரங்கள் அந்தக்கதைக்களங்களில் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும். அப்பிரச்சினை முதிர்வடைந்து தீவிரமாகும். அதன்பின் ஒரு முடிவு நிகழும்.

ஒரு கதையின் முடிவு நாவலின் முடிவல்ல. நாவல் சொல்லி வரும் பிரச்சனை தீர்ந்து அல்லது முடியமிடத்தில் கதை முடியலாம். ஆனால் நாவல் அங்கு முடிவு பெற்றால் ஒரு சுவாரசியமான கதை என்ற அளவில் அது நின்றுவிடும். அந்த முடிவின் வழியாக மேலதிகமான ஒரு கண்டடைதல் அல்லது தத்துவார்த்தமான ஒரு புரிதல் வருமிடத்திலயே ஒரு நாவல் அறிவார்ந்த நிறைவை அடைகிறது

இது மிகச் சுருக்கமான தொகுப்பு. பிறகு சில கேள்வி பதில்கள் இடம்பெற்றன.குறுநாவல்-சிறிய நாவல்-பெருநாவல் வேறுபாடுகள், கதையை எழுதுவதற்கு storyboard போன்றவற்றைக் கையாள்வது எனப் பல கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

*

நாவல் எழுதும்பயிற்சியிலிருப்பவர்களுக்கான ‘டிப்ஸ்’ சில சொல்லப்பட்டன

.நாவலை எழுத சிறந்த வழி, ஆரம்பித்துவிடுவதுதான். ஆரம்பித்தபிறகுதான் என்னென்ன ஆராய்ச்சி தேவை என்று தெரியும். எழுதுவதையும் ஆராய்ச்சியையும் சேர்த்தே செய்யலாம்

.நாவலில் தடங்கல் ஏற்பட்டால் அங்கேயே முட்டிக்கொண்டிருக்கக் கூடாது. அது உணர்வுரீதியான தடையாக இருக்கலாம். தத்துவரீதியான தடையாக இருக்கலம. அதை அப்படியே விட்டுவிட்டு இன்னொரு இடத்தில் அக்கதையை தொடங்கி முன்னகர்வது நல்ல வழி

. நாவல் சரியாக வரவில்லை என்றால் விட்டுவிட்டு கொஞ்சநாள் கழித்து எழுதலாம் என நினைக்கக்கூடாது. கொஞ்சநாள் கழித்து மீண்டும் அந்த மனநிலைக்குள் செல்லமுடியாது. அதிலேயே தொடர்ச்சியாக முயன்றபடி இருக்கவேண்டும்.

இது நினைவுவிலிருந்து அளிக்கும் குறிப்பு மட்டுமே. எனவே சில குறிப்புகள் விடுபட்டிருக்கலாம். விரிவாக சொல்லப்பட்ட பல  உதாரணங்களை, கதையமைப்பின் மாதிரிகளை இதில் எழுதவில்லை.

மிக்க அன்புடன்,

சுபா


நாவல் – ஒரு சமையல்குறிப்பு

புதுயுக நாவல்

நாவல் உரை


நவீன நாவல் -விஷால்ராஜா

நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்

நவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை

நவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை

நவீன நாவல் -எதிர்வினைகள்


பேரழிவு நாவல்கள்


இரண்டாயிரத்துக்குப்பின் நாவல்

இரண்டாயிரத்துக்குப் பின் நாவல்- கடிதம்


நாவல் வாசிப்பும் இந்திய ஆங்கில எழுத்தும்

வரைகலை நாவல்கள் – கடிதம்

அமிஷ் நாவல்கள் -கடிதங்கள்

அமிஷ் நாவல்கள்


தன் வரலாற்று நாவல்கள்

சரித்திர நாவல்கள்

நாவல்,முன்னுரை


தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு

தேசிய புத்தக நிறுவனம் [ Nathional Book Trust ] வெள்யிட்டுள்ள முக்கியமான தமிழ் நாவல்கள்

சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள்

பிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்

முந்தைய கட்டுரைசீமைக்கருவேலத்திற்காக ஒரு குரல்
அடுத்த கட்டுரைநீலச்சிலை