புனைவுக் களியாட்டு சிறுகதைகள் – தொகுப்பு
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களின் யாதேவி கதைக்கு வரும் கடிதங்கள் மிகுந்த ஆச்சரியம் அளிக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிந்து கொள்ளப் பார்க்கிறார்கள். இதுவே உங்களின் கதையின் வெற்றி.
சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் எழுதிய ஒரு கணத்துக்கு அப்பால் என்ற கதையின் மறுபக்கமாக இதை நான் காண்கிறேன். வலுவிழந்த ஒரு முதியவர் எப்படி மீண்டு வருகிறார் என்று என்று சொல்லும் அக்கதை. அவருக்கு மீட்பு அளிப்பது பாலியல் தளங்கள். யாதே வியில் பாலியல் தளங்களில் நடிக்கும் எல்லாவிற்கு எப்படி மீட்பு என்பதே கதை. இளமை திரும்புவதற்கு ஏதோ ஒரு பிடிமானம் இரண்டு கதைகளிலும். ஒருவருக்கு அதில் நுழைவது இன்னொருவருக்கு அதை விடுவது. எப்பொழுதும் போல் உங்கள் கதைகளில் வரும் குறியீட்டு பெயர்கள்,ஆன்செல் பெண்தெய்வ அனுக்கிரகம் உடையவள் என்ற பெயர். அனுக்கிரகம் அளிப்பது ஸ்ரீதரன். இந்தக் கதையை எழுதிய இதே நேரத்தில் வெண்முரசில் திரௌபதி புறவய அலங்காரங்களை துறந்து இளமைக்கு திரும்புவதும் அழகு.
அன்புடன்,
மீனாட்சி
அன்புள்ள ஜெயமோகன் சார்,
“கரவு ” சிறுகதை சிறுவயதில் கிளர்ச்சியும் பீதியுமாய் பார்க்கும் சுடலைமாட சுவாமி கோயில் கொடையை நினைவு படுத்தியது. சுடலை சாமியாடும் போதும் , ரத்த பலி குடிக்கும்போதும்,வேட்டைக்கு போகும்போதும் எனக்கு ” ஏன் இவ்ளோ வெறியா ..இவ்ளோ ஆவேசமா ஏன் சாமி இருக்கணும்? ” “ஏன் அதை கும்பிடணும் ?” என்று தோணும். ஆனாலும் ரத்தபொட்டு வாங்கும்போது மனதில் ஒரு திமிர் வரும். உங்களின் “மாடன் மோட்சம்” கதை முதல் சுடலை மாடன் பல வடிவங்களில் வந்துகொண்டு இருக்கிறார். ஆசான் அப்புவிடம் அவனது அம்மா பாட்டி எல்லாம் திட்டு வாங்குகிறார்கள்.
முதலில் என் சுடலை மாடனுக்கும் இரவுக்கும் என்ன சம்பந்தம் என ? ஒரு கேள்வி .அதற்கு ……… “ஏன்னா அவனுக கள்ளன் இல்லல்ல?அவனுக பகலிலே சீவிச்சுதவனுக. நாம ராத்திரியிலே சீவிச்சுதோம். ராத்திரியிலேயாக்கும் பாம்பு சீவிச்சுதது. பேயும் பூதமும் சீவிச்சுதது. கெந்தர்வனும் மாடனும் மாயாண்டியும் சீவிச்சுதது… இவனுகள பாரு… அந்தியானா வீட்டுக்குள்ள வெளக்க வச்சிட்டு இருக்குதவனுக. இவனுகளுக்கு ராத்திரியக் கண்டா பயம்” என பதிலாக தங்கன் கூறுகிறான்.
அடுத்தது என் சுடலைமாடனை ஒரு பயத்தோடு ஒரு ஒவ்வாமையோடு கும்பிடுகிறோம் ? …..அதற்கும் தங்கனே ” “பகலு கண்ணு முன்னால தெளிஞ்சு கெடக்கு. ராத்திரின்னா சொப்பனமுல்லா? சொப்பனத்திலே என்ன உண்டுண்ணு எப்பிடித் தெரியும்? சாதாரணக்காரனுக்கு சொப்பனத்தைப்போல பயம் வேற இல்ல. வாற சொப்பனத்திலே முக்காலும் கெட்ட சொப்பனமாக்கும்” “கள்ளன் வாறது அந்த சொப்பனத்திலே. சொப்பனத்திலே அவனுகளுக்க பெண்டாட்டிகளுக்க கொணமும் வேறேயாக்கும்னு அவனுக்கு தெரியும். பகலிலே அவளுகளை அடைச்சு போடலாம். சொப்பனத்துக்கு தாப்பாள் இல்ல பாத்துக்க” பதில் கூறுகிறான். தங்கன் பிடிபட்டபின் பெரியவர் ஒருவர் ” “அவனுகளுக்கு ஆயிரம் மந்திரமும் தந்திரமும் உண்டு.” என்கிறார். ஒரு கிழவர் “மாயம்படிச்ச கள்ளனாக்கும்…” என்கிறார்.
அதுதான் நம்மால் முடியாத மாயமும் தந்திரமும். ஒரு இயலாமை. நம் வீட்டு பெண்களையே தடுக்க முடியாது என்று உள்ளுர வந்து அறையும் இயலாமை.
கடைசியில் வரும் சம்பவம்தான் சிறப்பு. ….”மாயாண்டி சாமி “டேய், எவண்டா என் தோழனை கட்டியது? அறுத்துவிடுடா அவனை!” என்றது “டேய்! இப்பவே அறுத்துவிடுடா.”….தங்கன் சுடலைமாடனின் தோழன்.
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்