பிழைகளை வாசிப்பது

 எலிகள் 

அன்புள்ள ஜெ

பிழை பற்றிய உங்கள் கடிதத்தைக் கண்டேன், நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் கடிதம் மகிழ்ச்சியை அளித்தது [எலிகள்]

பிழையை ஒரு ‘இடைவெளி’யாக வாசிக்கலாம் என்று சொன்னீர்கள். ஆனால் கதைகளில் பலவகையான பிழைகளை காண்கிறேன். அடிப்படையான பிழைகள் இல்லாத லா.ச.ராமாமிருதத்தின் கதைகளை நான் வாசித்ததே இல்லை. சுந்தர ராமசாமியின் பிள்ளைகெடுத்தாள் விளையில் காலக்கணக்கே பெருங்குழப்பமாக, பிழையாக உள்ளது. பலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால் அதை நீங்கள் அக்கதையைச் சொல்பவன் உருவாக்கும் குழப்பம் என விளக்கிவிட்டீர்கள்.

பிழை எப்படி ஒரு திறப்பாக அமைய முடியும்? விளக்குவீர்கள் என நினைக்கிறேன்.

எம்.ராகவேந்திரன்

 

அன்புள்ள ராகவேந்திரன்

பிழையை எப்படி புரிந்துகொள்வது? ஓர் உதாரணம். தி.ஜானகிராமனின் எழுதிய ‘கண்டாமணி’ என்ற கதை. அதில் ஒரு உணவுவிடுதிக்காரர் சமைக்கும்போது சாம்பாரில் பாம்புக்குஞ்சு ஒன்று விழுந்துவிடுகிறது. அவர்கள் சாம்பாரைப் பரிமாறுகிறார்கள். பின்னர் சாம்பாரைக் கிளரும்பும்போது உடல்வெந்துவிட்ட பாம்பு கிடைக்கிறது. சாம்பாரை கொட்டிவிடுகிறார்கள்.

ஆனால் சாம்பாரை உண்ட ஒரு பண்டாரம் விஷம் உள்ளேபோய் செத்துவிடுகிறான். அந்தப்பாவத்தைப் போக்க அவர்கள் ஒரு கண்டாமணி வாங்கி கோயிலுக்கு கொடுக்கிறார்கள். ஆனால் அந்த கண்டாமணியின் ஓசை அவர்களின் குற்றவுணர்ச்சியை தூண்டும்படி ஓங்கி ஒலிக்கிறது. அந்த மணியை திரும்பிப்பெற்றுக்கொள்ள முயல்கிறார்கள். சிறிய வெள்ளிமணிகளை வாங்கித்தருவதாக பேசிப்பார்க்கிறார்கள். அந்த கண்டாமணியின் நாதம் அற்புதமாக அமைந்துவிட்டமையால் அதை திருப்பித்தர ஆலயம் மறுத்துவிடுகிறது.

இதிலுள்ள முக்கியமான பிழை, நாகம் கடித்தாலன்றி நஞ்சு வெளிவருவதில்லை. நஞ்சை அது கக்கியது என எடுத்துக்கொண்டாலும்கூட அது உணவுடன் உண்ணப்பட்டால் எந்த ஆபத்தும் இல்லை. உணவுவழியாக உயிர்நஞ்சுகள் எனப்படுபவை [Venom] உள்ளே சென்றால் உடலைப் பாதிப்பதில்லை. பாம்பின் நஞ்சை நேரடியாக வாயால் உறிஞ்சினால் வாயில் ரணமிருந்தால் சற்றே உள்ளே போகக்கூடும். அதுகூட அவ்வளவு ஆபத்தில்லை.

மற்றபடி அதை குடித்தால்கூட கெடுதல் கிடையாது, சிலவகை சீரணப்பிரச்சினைகள் உருவாகலாம். மற்றபடி ஓர் அண்டா சாம்பாரில் கலந்து கொதிக்கவைக்கப்பட்ட குட்டிப்பாம்பின் துளிவிஷம், விஷம் வெளிவந்தது என்று எடுத்துக்கொண்டாலும்கூட, எந்தவகையிலும் ஆபத்தானது அல்ல.

இதை என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன். மலைப்பகுதிகளில் எழுபதுகளில் சாராய ஊறல்போடுவார்கள். எங்கள் ஊர்களில் அதுதான் பெருந்தொழிலே. அந்த பானைகளில் பெரும்பாலும் சிறு பாம்புக்குஞ்சுகள் கிடக்கும். உயர்வகை நாகங்கள். ஊறல்கள் நொதித்து பொங்கி கலத்தை உடைக்காமலிருக்க போடப்படும் சிறு துளைகள் வழியாக நுழைகின்றன. ஊறலின் வாடை கவர்கிறது. அவற்றை தூக்கிப்போட்டுவிட்டு காய்ச்சுவார்கள்.

[இதைக்கண்டு சிலர் உச்சகட்டபோதைக்காக நாகப்பாம்பை போட்டு சாராயம் காய்ச்சுவதுண்டு என்று சொல்லியிருக்கிறார்கள். சாராய வியாபாரிகளும் அப்படிச் சொல்லி கிக் ஏற்றுவதுண்டு. அது எந்த வகை விளைவையும் உருவாக்குவதில்லை என்பதே உண்மை. ஏனென்றால் எதுவுமே சேர்வதில்லை. நாகம் விஷத்தை கக்காது. வெந்து கலங்கினால் அது விஷமும் அல்ல.]

பிழைகள் இருவகை. ஒரு கதையின் மைய உருவகம், கரு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட அடிப்படைத் தகவல்களில் வரும் பிழை முதன்மைப்பிழை எனப்படுகிறது. அக்கதை உருவாக்கும் களம் சார்ந்த தகவல்களில் உள்ள பிழை எளியபிழைகள் எனப்படுகின்றன. விமர்சகர்கள் இவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைச் சுட்டியிருக்கிறார்கள்.

செய்திகளில் ஆசிரியன் திட்டமிட்டு உருவாக்கும் திரிபுகள், இயல்பாக உருவாகிவிடும் திரிபுகள் இங்கே பிழை என சுட்டப்படவில்லை. மாறுபட்ட கோணங்களும் பிழைகள் அல்ல.அவை புனைவின் உத்திகள். தெரியாமல், உண்மை என நம்பி எழுதிவிடும் தகவல்சார்ந்த பிழைகளே பிழைகள் என சுட்டப்படுகின்றன.

சுந்தர ராமசாமியின் கோயில்காளையும் உழவுமாடும் என்னும் கதையில் ஒரு பண்டாரம் தனிமனிதனாக கிணறுவெட்டியதைச் சொல்கிறார். அதை உள்ளூர் விமர்சகர் ஒருவர் ‘தனிமனிதனாக எப்படி கிணறுவெட்டமுடியும், ஒரு ஏணிகூட இல்லாமல்?’ என்று எழுதியிருந்தார். ஏணியை பண்டாரம் செய்துகொண்டார், அது கதையில் சொல்லப்படவில்லை என எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். அது மையத்துடன் சம்பந்தமற்ற பிழை.

மாறாக, இங்கே ஜானகிராமன் எழுதியிருப்பது முதன்மைப்பிழை. கதையின் கருவிலேயே பிழை அமைந்துள்ளது. கதையை நிறுவும் அடிப்படைச்செய்தியே பிழையாக சொல்லப்பட்டுள்ளது.

அப்படியென்றால் இப்பிழை கதையையே தோற்கடித்துவிடுகிறது அல்லவா?  முன்பு சுந்தர ராமசாமியிடம் இப்பிழையைச் சுட்டிக்காட்டி நான் பேசியபோது அவர் இது அடிப்படைப்பிழை என்றும், கதையையே ரத்து செய்துவிடுகிறது என்றும் சொன்னார். நானும் அவ்வாறு எண்ணினேன்.

ஆனால் பின்னர் வாசக ஏற்பு கொள்கைகளை வாசிக்கையில் என் எண்ணம் மாறியது. அதுவும் அக்கதையின் ஒரு பகுதியே என்று கொள்ளலானேன். தி.ஜானகிராமன் உருவாக்குவது ஒரு புறவய யதார்த்தம். அது ஒரு புனைவே. அது புனைவென தெரிந்தே அதை உண்மை என வாசகனாகிய நான் ஏற்கிறேன். அதில் ஒரு பிழை இருந்தாலும் அதை கணக்கில்கொண்டு அந்த புறவய யதார்த்தத்தை என்னால் உருவாக்கிக்கொள்ள முடிகிறது. அதில் நிகழும் அக்கதையின் உணர்வுகளையும் மெய்மையையும் என்னால் வளர்த்தெடுத்துக் கொள்ள முடிகிறது. பிறகென்ன?

கண்டாமணி கதையில் அந்த உணவுவிடுதிக்காரர் நஞ்சை பரிமாறிவிட்டதாக நினைத்துக்கொண்டால் அது அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுநிலைக்குச் சான்று. அதை உண்டவர் இறந்துவிட்டதாக அவர் கேள்விப்பட்டால், அல்லது நம்பினாலும்கூட அது அந்த கதாபாத்திரத்தின் அகவய உண்மை மட்டுமே. அவர் அப்படி எண்ண என்ன காரணம் என்று நான் யோசிக்கவேண்டும்.அக்கதாபாத்திரத்தின் ஆழம்நோக்கிச் செல்வதற்கான இடைவெளி அது.

ஆனால் இக்கதையில் ஆசிரியரே பாம்பு விழுந்த உணவை உண்டு ஒரு பண்டாரம் இறந்துவிட்டதாகச் சொல்கிறார். அந்நிலையில் அது ஆசிரியரின் ஆழுளம் நோக்கிச் செல்வதற்கான ஒரு ரகசிய வாசல். இருநிலையிலும் அது அப்புனைவை மேலும் ரகசியம்கொண்டதாக ஆக்கும் ஒன்றே.

எனக்கு அக்கதையில் முக்கியமானது அந்த கண்டாமணியின் ஓசையின் நாதம்தான். பழியில் ,குற்றவுணர்வில் வைக்கப்படும் மணிக்கு மட்டும் அத்தகைய கார்வை எப்படி வருகிறது? அது உணவகக்காரர் கற்பனைசெய்துகொள்வது அல்ல, உண்மையிலேயே அப்படி ஒரு நாதம் அதற்கு அமைந்திருக்கிறது, பிறரும் அதை அறிகிறார்கள். அது ஏன்? எதைச் சொல்லவருகிறார் ஜானகிராமன்? அதுதான் எனக்கு அதை குறிப்பிடத்தக்க புனைவாக ஆக்கும் நுட்பம்.

அப்படிப் பார்த்தால் அந்தப் பாம்பு எனக்கு வேறொரு பொருள் அளிக்கிறது. சாம்பாரில் விழுவது வேறொரு நச்சுப்பொருள் என்றால் கதையில் தகவல்சிக்கலே எழப்போவதில்லை. ஆனால் அது பாம்பாக ஏன் இருக்கிறது? ஏன் அது பாம்பு என இக்கதையில் இருக்கிறதோ அதே காரணம்தான் பாம்பென்பதே எல்லாவகையிலும் நஞ்சு என ஜானகிராமனை நினைக்கவைக்கிறது.

அந்தப்பாம்பை தொடர்ந்து நெடுந்தொலைவு செல்லமுடியும். ஜானகிராமனின் கனவிலெழும் பாம்புகள் வரை. விமர்சகனாக நான் இங்கே நிறுத்திக்கொள்வேன், வாசகனாக மேலும் செல்வேன்.

தி.ஜாவை சந்தித்தால் இப்பிழையை திருத்திக்கொள்ளும்படிச் சொல்லமாட்டேன். அதை ஏன் அவர் எழுதினார் என்று அறிய மேலதிக தகவல்கள் உண்டா என்று பார்ப்பேன்.

பிழையை வாசிக்கவேண்டிய விதம் இதுதான். பிழை ஒர் ஆழுள்ளத்து வாசல்.

ஜெ

தி.ஜானகிராமன் விக்கி

அதற்காகத்தான் இத்தனை நடனமா ?

ஏற்புக் கோட்பாடு

நாவல்,முன்னுரை

முந்தைய கட்டுரைஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஎம்.வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்,கோவை