விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு
சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள்
சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’, ‘மாபெரும் சூதாட்டம்’, ‘ நள்ளிரவில் சூரியன் ‘ ஆகிய மூன்று தொகுப்புகளில் அறுபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள் உள்ளன. இவற்றில் பாதிக்கு மேல் இரு தொகுப்புகளிலாவது மீண்டும் பதிப்பிக்கப் பட்டவை
நினைத்ததை வடிகட்டாமல் பேசுபவர்களுக்கு மன நோய் வருவதில்லை என்று ஒரு கோட்பாடு உண்டு. சுரேஷ்குமாரின் பாத்திரங்கள் நினைத்ததை நேரடியாகப் பேசுகிறார்கள். அதனால் குறைவான சொற்களே தேவைப் படுகின்றன, . இயந்திர மொழியில் நேரடியாக எழுதப்படும் நிரல் போல.
நமக்கு ஒருவரை அல்லது ஒன்றை ஏன் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்பதை முழுமையாக அறியக் கூடுவதில்லை நமது இயல்பு அல்லது உண்மை நிலை இதுதான் என்று ஒன்றைப் பற்றிக் கொள்வது தான் மூளை கலங்காமல் இருக்க வழி.
பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வின் அடிப்படைகள் மற்றும் உறவுகளின் உன்னதம் குறித்த ஆரோக்கியமான கற்பிதம் பொய்ப்பதில்லை. அல்லது பொய்ப்பதற்குள் வாழ்வு முடிந்துவிடுகிறது. ஒரு ஒளிக்கற்றையின் அலைநீளத்திற்குள் அடங்கிவிடும் சிற்றுயிர் போல
இந்தப் பொதுவான கற்பிதங்கள் பொய்ப்பிக்கப்படும் சிறுபான்மையினரின் உலகில் தான் விசித்திரங்கள் நடக்கின்றன. அதில் அளவு கடந்து மனம் பேதலிக்கிறது, அலைகிறது, குழம்புகிறது. இதுவே இவரது உலகம்.
தற்செயல்கள் அரியவை அல்ல என்று இவரது படைப்புலகம் நிரூபிக்க முயல்கிறது. இவரது பாத்திரங்கள் நடக்கும் வழிதான் வழி.பாதை தவறுதல் என்று ஒன்று இல்லை ஏனென்றால் பாதை என்றே ஒன்று இல்லைஅப்பட்டமான அக உலகைச் சித்தரித்த போதும் மனதின் மேல் தோலை மட்டுமே நீக்கிப் பார்த்திருப்பதாகப் படுகிறது. அவ்வளவுதான் மொழியும் சிந்தனையும் செல்லும் தொலைவு
“இந்த வீட்டுக்குள்ளே இருந்துட்டு எப்படி இத்தனை அறிவோட இருக்கான் ” “மன உளைச்சல் வந்தால் காரா சேவை சாப்பிடுவேன் ” போன்ற நேரடித் தொடர்கள் ஃ ப்ராய்டு கூறும் நாப்பிறழ் வகையில் வருபவை. நாகரிக உலகில் வெளியில் சொல்லாத ஆனால் ஆளுமையை அறிந்து கொள்ள அவசியமான அக உலகம்.
இவருடைய கதை மாந்தர் வாழ்வுப் பாதையில் நடக்கும்போது நழுவிவிடும், அதன் பின் குற்ற உணர்ச்சி கொள்ளும் மனநிலை வாசகனை அணுக்கமாக செய்கிறது. அலங்காரங்கள் அற்ற மனதின் சுயத்தை ஆழம் தோண்டிப் பார்க்கிறது.
முகத்தில் அடிக்கும் அப்பட்டம் இவரது சிறப்பு எனலாம். யதார்த்தத்தின் செறிவு நிலை இது. ஒரு நடிகை பம்பாய் சென்று விட்ட தன் கணவரை இலேசாக விசாரித்து விட்டுவிடுகிறார். இதைப் போல ஆழ் மனம் ஏற்றுக் கொள்கின்ற ,. புற மனம் நம்பவில்லை என்று சொல்லிக் கொள்ள விரும்புகிற சிக்கல்களால் ஆனது இவரது படைப்புலகு.
காரைக்காலுக்கு படப் பிடிப்புக்குச் செல்லும் நடிகை ஒரு கணம் காரைக்கால் அம்மையாரைத் தன் வாழ்க்கையுடன் ஒப்பிடுகிறார். ஒரு கணம் தான். பழைய படி தொழிலுக்கு வந்து விடுகிறார். ஆனால் அவர் என்றோ ஒரு நாள் வேறு ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க இது ஒரு விதையாக இருக்கலாம். நீண்ட காலப் பின்புலத்தில் மடை மாற்றத்தின் பல்வேறு வாயில்களில் , முழுமை பெறாத தகவுகளின சுழற்பாதைகளில் விளையாடுகிறார்.
நடையில் வேகம். வடிவில் புதுமை கொண்ட படைப்புகள். குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்கு மூலங்களை வைத்தே ஒரு கதை இருக்கிறது. பாத்திரப் பெயர்கள் தென் தமிழகத்தின் சாமானியர்களுடையவை (மச்சக் காளை, சித்தப்பா); ஊர்ப் பெயர்களிலும் மிகச் சரளமான யதார்த்தம் (கொப்புளாபுரம், பார்த்திபனூர்) . ஆனால் நிகழ்வுகள் அசாதாரணங்களின் தொகுப்பு.
‘புதிர் வழிப் பயணம்’ அவரது கதையுலகின் மாதிரி எனலாம். தற்செயல்களெல்லாம் சாதாரணமாகவும் சாதாரணங்கள் அரியவையாகவும் ஆகிவிடுகின்றன.‘மாய யதார்த்தம்’ கதை அந்த வகைப்பாட்டையே பகடி செய்கிறது எல்லாக் கற்பனைப் பறத்தல்களும் முடிந்தவுடன் கடைசியில் முக்கியப் பாத்திரம் கூந்தலை முடிச்சுப் போட்டு எழுந்து நடக்கும் போது கல்போல யதார்த்தம் வந்து நிற்கிறது.
சில கதைகள் இறப்பில் துவங்குகின்றன. மிகவும் எதிர்பாராத தருணத்தில் மரணம் வந்துவிடுகிறது. மானுட ஈர்ப்பின் அபத்தங்கள், காரணமே இல்லாத கள்ள உறவுகள், மனம் கொள்ளும் மயக்கங்கள் இவற்றை உள் மடிப்புகளுடன் சொல்கிறார். (ஒரு சுய சரிதை –நர்ஸ் ஆர் கே யின் மகளா என்ற கேள்வி)
மூளை என்னும் அந்த வழுக்கும் திரவக் கோளத்தின் நரம்பு இணைப்புகளில் நினைவுகள் குழப்பம் அடைகின்றன. நடந்தது தான் நினைவில் இருக்கவேண்டும் என்பதில்லை. ‘தன்னை அறியாமல் கொலை செய்துவிட்டு மறந்து விட்டோமோ?” என்பது மூளையின் நிலைத்தன்மையைப் பார்த்துச் சிரிக்கும் ஒரு உச்சம் (மர்மக் கதை)
பல திறந்த முனைகளை வாசகருக்குக் கொடுக்கிறார். பொதுவான அரசியல் சரித்தன்மைகளை உலுக்கிப் பார்க்கிறார். “ஓர் இடத்திற்குப் பல வரைபடங்கள்; ஒரு காலத்திற்குப் பல சரித்திரங்கள்” கதையில் குருபூஜையை ஏற்றுக்கொள்ளும் மகாகுருவிற்குக் கொட்டாவி வருகிறது.
இவரது கதைகளில் ஒரு தொடர் உணர்ச்சியைக் காண்கிறோம். மைய ஓட்டத்திலிருந்து விலகிய சமூக விமர்சனம் என்று இவற்றைக் கொள்ளமுடியாது. ஏனென்றால் இவரது உலகில் ஒவ்வொரு சொல்லும் மையம் தான். பெருமாள் சிலையின் கையிலிருந்து கரப்பான் ஊறுகிறது. . கடவுளை வணங்கி விட்டு வருபவன் அந்த இடத்திலேயே கொல்லப் பட்டு விடுகிறான். கோயிலில் இழுக்கும் தங்கத்தேர் நுகத்தடி போல உள்ளது. திருடுபவன் பெருமாளுக்கு பங்கு கொடுக்கிறான்.
இந்தத் தொடரும் உணர்வில், விமர்சனத்தையும் கடந்து இறை நம்பிக்கையை நையாண்டி செய்திருப்பது ரசனைக் குறைவாகத் தோன்றுகிறது. இதற்கு முற்போக்கு விளக்கங்கள் அளித்தாலும் ஒரு நெருடல் எஞ்சி நிற்கிறது.
மாபெரும் சூதாட்டம் ஒரு அழகான கதை. வாழ்வெனும் சதுரங்கத்தில், சீட்டாட்டத்தில் , உறவுகள், முக்கியமாக தம்பதியினர் விளையாடும் மன ஆட்டத்தைச் சொல்கிறது. இறுதியில் ஒருவர் மாண்டபின், மிச்சம் இருப்பவர் தனக்குத்தானே விளையாடிக்கொள்கிறார். இந்த ஒரு கதையே விஷ்ணுபுரம் விருதிற்கு தகுதி பெறச் செய்கிறது என நினைக்கிறேன்.
வீட்டு உரிமையாளர்கள் இல்லாத நாளில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணின் கதையும் இனியது. கதவு அவளிடம் மீண்டும் எப்போது வருவாய் என்று கேட்கிறது.
ஒரு கதையில் “ மூச்சு நிற்கும் போது எதைக் கண்டு பரவசம் அடைந்தார் என்ற கேள்வி “ முடிவில்லாத பெருங்குழியாக நிற்கிறது
வரலாற்றின் எலும்புக்கூடுகளை தற்கால அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்கள், சுதந்திரப் போராட்டத்தின் மறைவான வாழ்க்கையில் புத்தி தடுமாறி நின்று விட்ட மறைந்து திரியும் கிழவன், தமிழ் திரைப்படங்களின் முட்டாள் தனமான வீரவழிபாடும் அதே போன்ற நம்பகத்தன்மையே அற்ற அரசின் நிதி அறிக்கைகளும், குழந்தை மனங்கொண்ட போர்வீரன் குற்ற உணர்ச்சியால் போரில் பலியாவது-இவையெல்லாம் இங்கு ஏன் இப்படி இருக்கின்றன ? இந்த விடையிலா வினா சமைக்கும் மாய உலகம் தான் சுரேஷ்குமார் இந்திரஜித்தின் படைப்புலகம்.
இவர் புள்ளிகளை மட்டும் தூவி விட்டு , சில பிசிறுகளை கோடிகாட்டி, கோடுகள் இப்படி இருக்கலாமோ என்ற ஊகத்தை மட்டும் சுட்டி விட்டு விலகி நிற்கிறார். தெறிக்கும் சொற்றொடர்களில் குழப்பும் சம்பவங்கள் . அவற்றில் துலங்காமல் துலங்கும் மனதின் சலனங்கள்.
ஆன்மிகதளத்தில் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொள்ளும் மனிதன் மீது அக்கறையும் அவன் பற்றிக் கொண்டிருப்பதன் மீது அவ நம்பிக்கையும் கொண்ட படைப்புகள். தற்செயல்களின் விசுவரூபம் சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்
ஆர் ராகவேந்திரன்
கோவை