அடையாள அட்டை- கடிதம்

சொட்டும் கணங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சொட்டும் கணங்களில் தாங்கள் கூறியது 100% உண்மை.

இந்தியாவின் இன்றைய அடையாள அட்டை அரசியலின் மிகப்பெரிய ஆபத்து ஒன்று மெல்லமெல்ல இனிமேல்தான் வரவிருக்கிறது. இங்கே இன்று நாடெங்கும் நிலையற்று அலையும் துறவிகளுக்கு அடையாள அட்டை தேவை என இந்த அரசு சொல்லிவிடும் என்றால் இந்து மதம் என்னும் அமைப்பின் கண்ணுக்குத்தெரியாத அடித்தளம் அழியும்.

2017 இல் கங்கோத்ரியில் இதனைப் பார்க்க நேர்ந்தது. எலும்பை ஊடுருவும் குளிரில் அனைவரும் பத்து பதினைந்து ஆடைகளோடு அலைய, இருவர் மட்டும் ஏறக்குறைய அம்மணமாய் பாகீரதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஒரு மக் (mug) தண்ணீரை கையில் வைத்துக் கொண்டு, அதைத் தலையில் ஊற்றிக்  குளிப்பதைப் பற்றி நான் எனக்குள்ளேயே தேர்தல் நடத்திக் கொண்டிருந்த போது,  அவர்கள் இருவரும் பனிக்கட்டிகள் மிதந்து வரும் ஆற்றின் நடுப் பகுதிக்குப் போய் மூன்று முங்குகள் போட்டு விட்டு கரை ஏறிச்   சென்றார்கள். அந்தக் கணம் மானஸீகமாய் அவர்கள் காலில் விழுந்தேன்.

அடுத்த நாள், கங்கோத்ரியில் இருந்து கோமுக் (நடந்து) செல்லும் போது வழியில் உள்ள காட்டிலாக்கா செக் போஸ்ட்டில் அனைவரின் ஆதார் அட்டைகளையும் வாங்கி வைத்துக் கொண்டனர். என் பின்னே, அவ்விருவரும் வந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு ஆதார் அட்டை இருக்குமா? என்று நான் யோசித்துக் கொண்டிருந்த தருணத்தில், இருவரிடமும் அதிகாரிகள்  ஆதார் அட்டை இல்லாமல் விட மாட்டோம் என அவர்கள் ஏதும் சொல்வதற்கு முன்பே கறார் குரலில் சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்கள் தாம் கோவணம் போல் கட்டியிருந்த துணியில் இருந்து தங்களின் ஆதார் அட்டையைச் சமர்ப்பித்தனர். எனக்கு துணுக்கென்றிருந்தது. அதை அவ்விருவரும் எப்படியோ உணர்ந்து விட்டனர். நடக்கும் வழியில், “மகனே! எங்களிடம் அடையாள அட்டை கேட்பது, எங்கள் மேல் உள்ள கவலையால் அல்ல, உங்கள் மேல் உள்ள கவலையால்” என்றும் “நாங்கள் இந்த மலையில் காணாமல் போக அரை மணி நேரம் போதும். நாங்கள் அப்படிப் போனால் இவர்கள் வந்து எங்களைத் தேடுவார்கள் என நினைக்கிறாயா?” என்று சொல்லி விட்டுச் சென்றனர்.

அவர்கள் சொன்னது அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போது புரிகிறது.

ஆனாலும் அவர்களிடம் ஆதார் அட்டை கேட்டதை ஜீரணிக்க முடியவில்லை.

ஸ்ரீனிவாசன்

முந்தைய கட்டுரைஅஞ்சலி-பெ.சு.மணி
அடுத்த கட்டுரைஉற்றுநோக்கும் பறவை, நம்பிக்கையாளன் – கடிதங்கள்