அணுக்கம்- கடிதம்

கோடை மழை

சென்னைவாசியான  ஒரு சிறு தொழில் முனைவோனின் வழக்கமான நாள் தான் இன்றும். எப்போதும் போலவே இன்றும் சரக்கு வரத்  தாமதம். எனது வாடிக்கையாளர்களின் தொடர்  அழைப்புக்களால் அலைக்கழிந்து இருந்தேன். காத்திருப்பின் கடுப்பில் எதிரே இருந்த உணவகத்தில் நுழைந்து ஒரு காபி சொல்லிவிட்டு உங்கள் வலைத்தளத்தில் நுழைந்தேன்.

“கோடைமழை” யை பார்த்ததும் உடனே ஆர்வமாகிவிட்டது. சவேரியார் குன்று வேளிமலை என்று உங்கள் அக்கம்பக்கத்தைப்  பற்றி படிக்கப்போகிறோம் என்று புரிந்தது . மெதுவாய் வாசிக்கத்  தொடங்கினேன்.

“இரவில் வானில் தழல் கொடி”

“மழை மழை என எல்லா இலைகளும் அசைந்தன . ஆனால் மழை வரவில்லை. கொடித்துணிகள் தவித்தது தான் மிச்சம்.”

இவ்வார்த்தைகள் உங்களுக்கு உருவாவது எவ்விதம்? இவை போல் எத்தனையெத்தனை கட்டுரைகளில்  விஸ்தரிப்புக்கள், விவரணைகள். உங்கள் கதைகளை தாண்டி எப்போதும் இவை போன்ற வரிகளே என்னோடு எப்போதும் கூட வருகின்றன.

நின்று திரும்ப திரும்ப வாசித்தேன். எனது நெருக்கடி மனநிலை சட்டென  விலகியது. இது எத்தனையாவது முறையாக(உங்கள் எழுத்துக்களால்) எனக்கு நிகழ்கிறது?  தெரியவில்லை. எப்போதுமே அடித்து பிடித்து ஓடும் வாழ்வைகொண்டு, நேரக்கணக்கு எதுவும் இல்லாமல் சுற்றும் எனக்கு, மனைவியை அழைத்துவர ரயில் நிலையத்தில் காத்திருக்கையில், வாடிக்கையாளர்களை சந்திக்க செல்லும் இடைவெளியில் உங்கள் கட்டுரைகளை படிக்கையில்  என் மனதை மலர வைக்க  இந்த வர்ணனைகள் போதுமானதாக இருக்கிறது.

உங்கள் அன்றாடத்தை எழுதும் போது அது என் போன்றவர்களுக்கு தரிசனமாக மாறுவதை நீங்கள் உணர்ந்து இருக்கறீர்களா?

வருடத்தின் ஒன்பது மாதங்கள் மெட்றாஸின் தகிப்பில் வசிக்கும் எனக்கு உங்கள் பார்வதி புரமும், வேளிமலையும் அங்கு பெய்யும் மழையும் மிகவும் பரிச்சயம். ஒரே ஒரு முறை நாகர் கோயிலுக்கு ரயில் பிடித்து பார்வதி புரத்திலும் பறக்கையிலும் சுற்றியிருக்கிறேன். பறக்கை என்ற சிற்றூரில் லஷ்மி மணிவண்ணன் நடத்திய அரங்கில் உங்களோடு காலை முதல் மாலை வரை இருந்தது பிரமிப்பை அளித்தது. அது போன்றஒரு நிறைவை நான் மிகவும் அரிதாகவே அடைந்திருக்கிறேன்.

சென்னையில் உங்கள் ஒவ்வொரு சந்திப்பிலும் உங்களுடன் அணுக்கமாக (ஆனால் நீங்கள் அறியாமல்) இருந்துவிட்டு வீடு திரும்புகையில் அதையே அசை போட்டுகொண்டு திரும்பி இருக்கிறேன்.

உங்கள் சொல்லாடல்களை, மேற்கோள்களை  என் மனைவியிடமோ நண்பரிடமோ நினைவு கூறாமல் ஒருநாளும் கழிவதில்லை.

ரயிலில் ஈரோடு செல்லும்போது நீங்கள் என்னுடன் தற்செயலாக பயணப்பட்டால் எப்படி உங்களுடன் பேசுவது என்று என் மனது ஒத்திகை பார்ப்பதை நினைத்து சிரித்து இருக்கிறேன். ரயில் பயணத்தில் உங்களை எரிச்சல் படுத்தாமல் பயணிப்பது எப்படி என்பது எனக்கு தெரியும் என்றும் பெருமைபட்டிருக்கிறேன்.

உங்களுடன் இது வரை ஒரு வார்த்தை கூட பேசாமல், உங்களை எனக்கு மிகவும் அணுக்கமானவராக நான் நினைத்து கொள்வது ஒரு புதிர் தான். ஆனால்  இதை போல் எத்தனை வாசகர்கள் தங்களது உளநிலையை எந்தவித தங்குதடையுமின்றி உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதையும் அறிகிறேன்.

பலமுறை இதை உங்களிடம் எழுதி விடவேண்டும் என்று நினைத்து, ஆனால் தயங்கி விடுவேன். இன்று எழுதிவிட்டேன்.

நன்றி

மிக்க அன்புடன்

சண்முகம் ஜி

 

அன்புள்ள சண்முகம்

பொதுவாக எழுத்தின் வேலை என்பது அருகமையச் செய்வதுதான். எழுத்தாளர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு என்பது வாசகனுடன் அணுக்கமாகப் பேசுவது. ஒரு கட்டத்தில் எழுத்தாளனின் சிக்கல்களும் தோல்விகளும்கூட தெரியும் அளவுக்கு. அந்த அணுக்கத்திலிருந்து நம்மால் விடுபடமுடியவில்லை

அந்த அணுக்கம் எனக்கு என்னை கவர்ந்த ஆசிரியர்களுடன் உண்டு. அதே அணுக்கத்தை என் வாசகர்களிடமும் உணர்கிறேன். நான் நாட்குறிப்புகளையும் வெளியிடுவது என்னுடன் அணுக்கமாக இருப்பவர்களுக்கு அவை உதவும் என்னும் எண்ணத்தால்தான்

ஜெ

முந்தைய கட்டுரைதோழர் மெஸ்கள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇரவுமழை- கடிதங்கள்