கன்னிநிலம் பற்றி

காஷ்மீரத்தின் லடாக் பகுதிக்கு, எக்கனாமிக்ஸ் ஆஃப் ஹாப்பினஸ் நிகழ்வுக்கூடுகைக்காக சில மாதங்கள் முன்பு நண்பர்களுடன் சென்றிருந்தேன். செயல்படுவோர்களின் பெருங்கூட்டத்துக்குள் வைத்து சதீஸ்குமார் அவர்களைச் சந்தித்தேன். காந்தியால் தாக்கம்பெற்று தத்துவமடைந்தவர் சதீஷ் குமார். இராஜஸ்தானில் 1936ல் பிறந்து தனது ஒன்பது வயதில் சமணத்துறவியாக வீட்டைவிட்டு வெளியேறியவர்.

1962ல் அணு ஆயுதங்களுக்கு எதிரான ஒத்துழையாமையை வலியுறுத்தி, அப்போதைய அணுஆயுத நாடுகளின் 8000 மைல்களுக்கும் அதிகமான தொலைவு வரை நடந்தே செல்லும் ‘அமைதிக்கான புனித நடைப்பயணத்தை’ வினோபாவின் ஆசியுடன் நிறைவேற்றியவர். அணுஆயுத எதிர்ப்பாளராகவும், இந்தியக் களச்செயல்பாட்டளராகவும், சுற்றுச்சூழல் இதழான ரீசர்ஜன்ஸ்&எகாலஜிஸ்ட்-ன் ஆசிரியராகவும், கல்வித்துறவியாகவும் இன்று உலகறியப்படுகிறார். உயிர்ச்சூழல்களுக்கான உலகளாவிய ஆய்வுக்கல்வியை வழங்கும் சூமேக்கர் கல்லூரியின் காரணகர்த்தா மற்றும் நிறுவனர் இவர்.

சதீஷ்குமார் தனது குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப விருப்பமின்மையால், தி ஸ்மால் ஸ்கூல் எனும் சிறுபள்ளியை 1982ல் இங்கிலாந்தில் துவங்கினார். மாணவர்கள் செடிவளர்ப்பது, சமைப்பது, பரிமாறுவது, உரையாடுவது, வாசிப்பது, வாழ்வது இவைகள்தான் அங்கு கல்வி. மதியவுணவு முடிந்த பிறகு புகைப்படவியல், யோகா, குயவுத்தொழில், தச்சுவேலை இவைகளில் ஏதாவதொன்றை விருப்பமாகத் தேர்ந்தெடுத்து மாணவர்கள் அன்றாடம் பயிற்சி செய்வார்கள்.

லடாக்கில் நிகழ்ந்த அந்நிகழ்வில் சதீஸ்குமார் பேசிய உரையின் செறிவு, ஒட்டுமொத்த உலகமனங்களுக்கும் கல்விகுறித்தான உண்மையாழத்தை எடுத்துரைப்பதாக எளிமைப்பட்டு இருந்தது. அவர் மீண்டும் மீண்டும் அழுத்திச்சொல்கிற கருத்தென்பது, “இந்தக் கல்விமுறை நம் குழந்தைகளை கற்பனைகளை நம்பவிடாமல் செய்துவிடுகிறது. தனக்காக ஒரு மேஜிக் நிகழும் என்று நம்புகிற ஒரு குழந்தை மனதை, அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்றுசொல்லி தர்க்கப்படுத்துகிறது இக்காலக் கல்விமுறை.

ஆனால் என்னைப்பொறுத்தவரை, கற்பனைகளையும் சகமனிதனையும் நம்பச்சொல்லும் கல்விமுறைதான் நமக்கு அவசியத்திலும் அவசியம். கற்பனை என்பதை வெற்றுநம்பிக்கை அல்ல, அதுதான் வேர்நம்பிக்கை. இயற்கைப் பேருலகம் மனிதனுக்கு வழங்குகிற கற்பனையைத் தடுக்கும் இடர்களைக் கடப்பதே கல்வியின் இலக்காக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் முழுச்சுதந்திரமாக கற்பனைக்க வேண்டும். சடங்குமுறைக் கல்விகள் உடைக்கப்பட்டு மானுடக்கல்வி உருவாகிவர வேண்டும்.

ராக்கெட் வேகத்தைக் கணக்கிடுவது மட்டும் கல்வியல்ல. ஒரு மண்புழு ஊர்வதை கவனமாகப் பார்ப்பதுகூட ஒரு குழந்தைக்கான கல்விதான். இயற்கையின் இறைத்தன்மை கல்விக்குள் தானாக மேலெழுந்து வரவேண்டும். எல்லாவற்றையும் வெறுமனே துறையாகப் பார்க்காமல், சிலவற்றை நாம் இறையாகவும் பார்க்கிற கற்பனை நம் குழந்தைகளுக்கு நிகழவேண்டும்…”

வெறும் தர்க்கமாகவும், வணிகமாகவும் இக்காலக் கல்விமுறை தன்மைபிறழ்ந்து வாழ்வுக்கு அச்சம் தருகிற இச்சூழலில், ஒரு குழந்தையின் பூமனதுக்குள் நிறமழியாத ஒரு நற்கனவினை ஆழவிதைப்பது ஒன்றுதான் அதற்கான நிகர்மாற்று என்பதை சதீஸ்குமாரின் சொற்கள் அன்று எனக்குள் நெஞ்சுபுகுத்தின.

இச்சமகாலத்தில், அன்றாடம் உருவாக்கிற நெருக்கடியும், சகவுறவுகள் சார்ந்த சலனங்களும் பெரியளவில் மனவீழ்ச்சிக்குள் என்னைக் கொண்டுசென்றன. கடந்த இரண்டு மாதங்களாக மனம் முழுக்க உச்ச சலனத்தில் உறைந்துகிடந்தது. அப்படியானதொரு நாளின் நீட்சியில் நேற்றைய முன்தினம் என் கையில் உங்களுடைய ‘கன்னிநிலம்’ நாவல் வந்துசேர்ந்தது.

லடாக் நிகழ்வில் சதீஸ்குமார் அவர்கள் பேசிய உரையின் ஒட்டுமொத்த சாரமென்பது, ‘ஒவ்வொரு இளையமனதும் ஒருவித சாகச மனநிலையைத் தனக்குள் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்’ என்பதாகவே இருந்தது. இந்நாவலின் தொடக்கமே அந்த சாகச மனநிலையில் வேர்விட்டு எழுந்ததாகவே எனக்குள் தோன்றியது.

***

“சற்றே சலிப்பு உருவான நாளில் எனக்கு நானே உற்சாகப்படுத்திக் கொள்வதற்காக…” 

“நான் எழுதுவதன் முதல்நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான், சில சமயம் ஆழமான மனஎழுச்சி சில சமயம் ஆழமான தேடல், சில சமயம் வெறும் சலிப்பை வெல்லப் பகல்கனவுகளை உருவாக்கிக்கொள்ளவும்…”

இப்படியாகத் துவங்குகிற உங்களுடைய முன்னுரை என்னளவில் ஒரு ஆற்றுப்படுத்துதலை நிகழ்த்தத்துவங்கி நாவலுக்குள் மெல்லமெல்ல மலையேற வைத்தது.

“நான் ஒன்றைக் கண்டுகொண்டேன். அச்சம்தான் சித்ரவதையின் முக்கியமான கருவி. அச்சத்துக்கு ஆட்படாமலிருந்தாலே பாதி வென்றது போலத்தான். ஆனால் அச்சம் நம்மை மீறுகிறது. அதை வெல்ல ஒரே வழி அதை உதாசீனம் செய்வது. உதாசீனம் செய்யச் சிறந்தவழி பிறிதொன்றைக் கவனிப்பது…”

 “பேசக்கூடாது. பேசுவதென்பது அவன் சொல்வதைக் கவனிப்பது. கவனித்தால் அதற்கு மனம் எதிர்வினைச் செய்யும். அஞ்சும். அது எனக்கான சொல்லே இல்லை. எனக்குப் புரியும் மொழியே இல்லை. அது வெறும் ஒலி. அது என் முன் ஒலிக்கவேயில்லை…” 

என்னுடைய ஒட்டுமொத்தமான மனச்சிடுக்குகளில் இருந்து மீட்கிற ஒரு மேலான விடுதலையை இந்த வார்த்தைகள் வெகு அனிச்சையாக நிகழ்த்தியது. என்னை வாட்டுகிற சுயவலியிலிருந்து என்னுடைய கவனந்திருப்புவதற்கான பெருஞ்சந்தர்ப்பத்தை இவ்வரிகளின் வாயிலாக நான் உள்ளூர அடைந்திருப்பதை உணரமுடிந்தது.

பெருங்காட்டுக்குள் ஒரு எளிய இனக்குழுவுக்கும், அதிகாரம் மிகுந்த இராணுவத்துக்கும் இடையில் நிகழும் போரை விவரிக்கிற காட்சிகள் ஒவ்வொரு அத்தியாயமாக விரிந்துசெல்கிறது. எல்லா காடுகளும் மண்ணடியில் வேர்களால் ஒன்றிணைவதைப் போல, எல்லா மனிதர்களும் அவர்களின் உள்ளாழத்தில் அன்பால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற மையஇழை ஒருகணம்கூட இக்கதையில் என்னைவிட்டுத் தவறவில்லை.

“இவனைப் பாருங்கள்… நாயர். இவன்தான் உங்களைப் பிடிச்சவன். உங்களை துரோகின்னு தண்டிச்சா அதை கண்டுபிடிச்சதுக்காக இவனுக்கு இன்னும் ஒரு பிரமோஷன் கிடைக்கும். காப்டன் ஆயிருவான். ஆனா சேம்பருக்குவந்து என் காலில விழுந்து அழுதான். உங்களுக்குப் பரிஞ்சு பேசினா இவன் மேலேயும் சந்தேகம் வரும். ஆனா அதைத் தெரிஞ்சுகிட்டே உங்களுக்காக உயிர்ப்பிச்சை கேட்டு அழுதான்… உங்களை மாத்திக்காட்டுறேன்னு உங்ககிட்ட வந்தான். இவனோட அன்புகூட உங்களுக்கு முக்கியமில்லையா? நாடு, குடும்பம், நட்பு எல்லாத்தையும்விட பெரிசா நீங்க சொல்ற அந்த பிளாட்டானிக் லவ்?”   

“என் தொண்டை அடைத்தது. சட்டென்று திரும்பி நான் நாயரின் கைகளைப் பற்றினேன். “தெரியும் சார். ஐ நோ ஹிம்…” அதற்குமேல் என்னால் பேசமுடியவில்லை”

இவ்வரிகளை வாசிக்கையில், சட்டென சூழல்மறந்து நான் உடைந்து அழுதிருப்பதை உணர்ந்தேன். மனிதர்களை மீளமீள நேசிப்பதற்கான எத்தனை வாய்ப்புகளை ஒரு படைப்பு தன்னுள் பொதிந்துவைத்திருக்கிறது.

“வலியைப்பற்றிய அச்சமளவுக்கு பயங்கரமானதல்ல வலி. வலியைத் தாங்கமுடியாது என்ற கற்பனையே பொய். வலியைத் தாங்கமுடியும். மனிதனால் மிகமிகக் கடுமையான வலியைக்கூட தாங்கமுடியும். அதை உணர உணரத்தான் சித்ரவதைமுறைகள் மேலும் மேலும் கடுமையாகின்றன. அவை அப்படிக் கடுமையாக ஆவதிலிருந்தே மனிதன் வலியை வெல்கிறான் என்று தெரிகிறது. இதோ என்னைப்போல. நானும் வலியை வென்றிருக்கிறேன். என்னாலும் முடியும்… அந்த வெற்றியுணர்வு என்னைப் பூரிக்கச்செய்தது. என்னைப்பற்றி எப்போதும் உணராத பெருமிதம் உருவாயிற்று” 

மற்ற எல்லாவற்றையும்விட என்னை நிலைகுலைத்த சொற்கள் இவை. ஒவ்வொரு மனிதனின் சுயஅச்சங்கள் சென்றடையும் உணர்வாழத்தை இவ்வரிகள் துல்லியப்படுத்தி நெஞ்சசைக்கிறது. வலியைப்பற்றிய நம் மதிப்பீடுகள் தான் என்ன? நிஜத்தில் நாம் யாருமே வலியைப் புரிய முற்படுவேயில்லை. வலியைப்பற்றி நாம் அறிந்துவைத்துள்ள ஒரு பிழைமுள்ளை நம் நெஞ்சைக்கீறி இரத்தச்சூட்டோடு எடுத்துப்போடுகிறது இவ்வார்த்தைகள்.

 கன்னிநிலம் – ஒரு கனவு என்பது எப்போதும் மிகையுணர்ச்சிகளால் தான் மனதுள் நிலைபெறுகிறது. கனவென்பதே ஒருவகையில் மிகையுணர்வுதான். வாழ்வினை ஒரு சாகச மனதோடு எதிர்கொள்வதற்கானத் துணிவினை இந்த மிகையுணர்வுதான் வழங்குகிறது. அவ்வாறான மிகையுணர்வுகளின் சாகசத்தால் நிரம்பிவழிகிற இந்நாவல்… எனக்கு இன்னொரு ‘தன்மீட்சி’ புத்தகமாகவே மனம் பதிந்திருக்கிறது.

உண்மையில் நான் அங்கே இருப்பதாகவேப்பட்டது. அந்தச் சிறையும் வதையும் வெறும் கனவென மனம் பிரமை காட்டியது. எது உண்மை எது பிரமை? அது மனம்கொள்ளும் தெரிவுதானா? உடலை வெல்ல மனம் செய்யும் மாயமா இது? உடைந்து போகாமலிருக்க மனம் செய்யும் முயற்சியா?”

 இவ்வாறான மீட்பின் சொற்களைத் தருகிற உங்களுடைய படைப்புமனதுக்கான பிரார்த்தனையை, அஹிம்சைக்காக நாடு நாடாக நடந்தே அலைந்த காந்தியவாதி சதீஸ்குமாரின் பாதங்களில் வைத்து மனம் வேண்டிக்கொள்கிறேன்.

நன்றியுடன்,

சிவராஜ்

முந்தைய கட்டுரைகலையும் பகுத்தறிவும்
அடுத்த கட்டுரைவிமர்சனம், ரசனை – கடிதம்