பத்திபிரித்தல்

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு, வண்க்கம்.

இன்று (22-03-20) கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுயஅடங்கலில் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை.

பொழுது போகாமல் புத்தக அலமாரியை பார்வையிடும் போது விஷ்ணுபுரம் கண்ணில் பட்டது. சரி, மறுவாசிப்பு செய்யலாம் என்று படிக்கத் தொடங்கினேன்.

வாசிப்பின் வேகம் அங்கங்கே தட்டுப்பட்டது. என்ன காரணம் என்று புரியவில்லை. தொடர்ந்து வாசிக்கமுடியாமல் ஒரு சோர்வு வந்ததது. நடையும் பொருள் நுட்பமும் காரணம் இல்லை. ஆனால் வேறு ஏதோ ஒன்று.

நிதானமாக, என்ன காரணம் என்று ஆராய்ந்ததில் சட்டென்று கண்ணுக்குப்பட்டது, நீண்ட பத்திகள். பக்கம் பக்கமான பத்திகள். மூச்சு விடமுடியாத அளவிற்கு பாரத்தை சுமந்து கொண்டே செல்லவேண்டிய பத்திகள்.

இப்படி சொற்களை மூட்டைகட்டி சுமக்கும் அனுபவம் அசோகமித்திரன் கதைகளிலும் எனக்கு ஏற்பட்டது.

உதாரணத்திற்கு விஷ்ணுபரத்திலேயே, ஸ்ரீபாதம் தோற்றுவாயில் 14ம் பக்கம் முழுக்க ஒரே பத்தி. 26 தொடங்கி 28 வரை. 217 தொடங்கி 218, 219 -222 வரை ஒரே பத்தி. இதுபோல் ஏராளம். (தற்போது படித்தவரை குறிப்பிட்டுள்ளேன்)

இப்படி நீண்ட பத்திகள் உரைநடைக்கு அவசியமா? வாசகனின் நினைவு சுமையை இது கூடுதலாக்குவதால் ஒரு சலிப்பு மனநிலை உருவாகாதா? எளிய கேள்விதான், ஆனாலும் கேட்கத் தோன்றியது.

அன்புடன்,
எம்.எஸ்.ராஜேந்திரன்.
திருவண்ணாமலை.

அன்புள்ள ராஜேந்திரன்,
ஆம், வாசிப்புக்கு அது ஒரு தடைதான். ஆனால் உண்மையில் ஓர் எழுத்தாளன் ஒரு தடையை அங்கே நீங்கள் உணரவேண்டும் என விரும்பினால் என்ன செய்யமுடியும்? அதற்காகவே அப்படிச் செய்யலாம் அல்லவா?

நாம் இன்று காணும் அச்சுவடிவ நூல்கள் உருவாகி இருநூறாண்டுகளே ஆகின்றன. நம் வாசிப்புப்பழக்கம் சென்ற நூறாண்டுகளில் எப்படி உருவாகியது என்று பார்த்தால் இந்த விஷயத்தை ஆராயமுடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டு நூல்கள் பலவற்றில் பத்திகளே இல்லை. பலவற்றில் ஓர் அத்தியாயம் ஒரு பத்தி. உதாரணமாக மே.வீ.ராமானுஜாச்சாரியாரின் மகாபாரத மொழியாக்கம்.

அன்றைய எழுத்தாளர்களுக்கு பத்தி என்பது ஆச்சரியமான விஷயமாக இருந்திருக்கும். நாம் பேசும்போது பத்திபிரித்தா பேசுகிறோம்? தஸ்தயேவ்ஸ்கி நாவல்களில் நீண்ட தன்னுரைகள் வருகின்றன. எப்படி நாம் பேசுகிறோமோ அப்படியே ஒரே ஒழுக்காக, தங்குதடையற்ற போக்காக அவை உள்ளன. பத்திபிரிக்கப்படவில்லை.

ஐம்பதாண்டுகள் முன்புள்ள நிலப்பதிவு ஆவணங்களை பார்த்திருக்கிறீர்களா? பத்திகளே இருக்காது. என் அப்பா பத்தி பிரிப்பதே இல்லை. அவர் ஆவணப்பதிவாளர். அக்கால கடிதங்கள் பத்தியே இல்லாமல்தான் இருக்கும்.

சிறிய பத்திகளாக பிரித்து எழுதுவதை செய்தி ஏடுகளே உருவாக்கின. அது வாசிப்பதற்கு எளிதானது, செய்திகளை பல பிரிவுகளாக ஆக்கினால் நினைவிலும் நிற்கும் என்று ஏடுகள் கண்டுகொண்டன. பாரதி அவர் காலத்தில் சீராக பத்தி பிரித்து எழுதிய எழுத்தாளர்.

செய்திமொழி வழியாகத்தான்  பத்திபிரித்தல் இலக்கியத்திற்கு வந்தது. தொடக்ககாலத்தில் நீளமான பத்திகள்தான் எழுதப்பட்டன. வார இதழ்களில் கதைகள் வெளியிடப்பட்டபோது இதழியலின் தேவைக்காக சிறிய பத்திகளாக ஆக்கப்பட்டன. கல்கி இதழாளர், ஆகவே சீரான பத்திகள். ஆனால் சாண்டில்யன் நீண்டபத்திகளாகவே எழுதினார்.

பின்னர் மிகச்சிறிய பத்திகள் வந்தன. ஒருவரி ஒரு பத்தியாக அமையத் தொடங்கியது. ராணி வார இதழ் அடிமட்ட வாசகர்களுக்காக அத்தகைய ஒருவரி ஒரு பத்தி முறையைக் கொண்டுவந்தது. புஷ்பாதங்கத்துரை போன்றவர்கள் அப்படி எழுதினர்.

ராணி வாசகர் ஒருவர் பாலகுமாரனை வாசித்தால் நீண்ட பத்தி என நினைப்பார். பாலகுமாரன் வாசகர் சாண்டியல் நீளநீள பத்திகளாக எழுதுவதாக நினைப்பார். இதெல்லாம் உளப்பழக்கம், விழிப்பழக்கம் மட்டுமே. எழுத்தின் மாறாநெறிகள் அல்ல. அப்படி ஆக்கிக்கொள்ளக்கூடாது

நான் சொல்லவருவது இதுதான், பத்தி பிரிப்பது உரைநடையின் அடிப்படை விதி அல்ல. பொதுவான உரைநடையில் அச்சுப்பக்கத்தின் காட்சியழகு, வாசகனின் வசதி ஆகியவற்றுக்காக உருவாக்கிக்கொண்ட ஒரு வழக்கம் மட்டும்தான் அது. அத்தகைய வழக்கங்களுக்கு இலக்கியம் கட்டுப்படவேண்டும் என்பதில்லை.

இலக்கியம் மொழிக்குள் தனக்கான மொழியை உருவாக்கிக்கொண்டு படைப்புகளை உருவாக்குகிறது. செய்திமொழி, கல்வித்துறை மொழி போன்றவற்றுக்கு ‘சீரான தரப்படுத்தல்கள்’ இருக்கலாம். புனைவெழுத்துக்கு அப்படி ஒரு சீரான இலக்கணமோ, வடிவமுறையோ இருக்கமுடியாது.

பத்திபிரிப்பது ஓர் எழுத்து உத்தி மட்டுமே. இரண்டு காரணங்களுக்காக பத்தி பிரிக்கப்படுகின்றன. ஒன்று, மொழியோட்டத்தை துண்டுகளாக ஆக்கி அளிக்கவேண்டும் எனும்போது. இரண்டு, அச்சுப்பக்கம் கண்ணுக்கு சலிப்பூட்டாமல் தெரியவேண்டும் என்னும்போது.

இலக்கியநூல்களில் இரண்டாவது காரணம் பொருட்டாக நினைக்கப்படுவதில்லை. அதையெல்லாம் கடந்துவந்தவர்களுக்காகவே இலக்கியநூல்கள் அச்சிடப்படுகின்றன. பொதுவாசகர்களின் உளநிலை கருத்தில்கொள்ளப்படுவதில்லை.

மொழியின் ஓட்டத்தை எதன்பொருட்டு துண்டுகளாக்க வேண்டும் என்று ஆசிரியன், அந்தப்புனைவின் தேவைக்கேற்ப முடிவுசெய்யவேண்டும். உதாரணமாக, ஒரு மனஓட்டத்தை ஆசிரியன் சொல்கிறான். தங்குதடையில்லாமல் உள்ளம் பெருகி ஓடுகிறது. அதை துண்டுகளாக ஆக்கினால் அந்த ‘பெருக்கு’ என்னும் அனுபவத்தை வாசகன் இழந்துவிடுவான்.

பொங்கிப்பெருகிச்செல்லும் உள்ளம் மொழியாக ஆவது என்னும் அனுபவம்தான் முக்கியம், அதில்சொல்லப்பட்ட கருத்துக்களோ நிகழ்வுகளோ அல்ல என்று ஆசிரியனுக்கு தோன்றலாம். அது அப்புனைவின் தேவையாக இருக்கலாம். விஷ்ணுபுரத்தில் தியான அனுபவங்கள் அவ்வாறு எழுதப்பட்டுள்ளன. உணர்வுக்கொந்தளிப்புகள் அவ்வாறு எழுதப்பட்டுள்ளன. ஆகவே நீண்ட பத்திகள், பத்தியே இல்லா பக்கங்கள் அதிலுள்ளன.

இதேபோல நீண்ட தன்னுரைகளுக்கு பத்தி தேவையில்லாமல் இருக்கலாம். இன்னும் பலவகையான தேவைகள் புனைவில் இருக்கலாம். உதாரணமாக, ஒருவன் ஒரேபார்வையில் ஒரு காட்சியைப் பார்க்கிறான். அது ஒரே பத்தியாக ஒட்டுமொத்தமாக இருந்தால்தான் அந்த உணர்வு வரும். மாறாக சிறுபத்திகளாக எழுதினால் தனித்தனியாக பார்ப்பதுபோலத்தான் வாசகனுக்குத் தோன்றும்.

அதேசமயம் ஒரு கதை வாசகன் தான் வாசிப்பதையே அறியாமல் ஒழுகிச்செல்லவேண்டும் என ஆசிரியன் விரும்பினால் அவன் வாசகனுக்கு வசதியான சிறுபத்திகளாக ஆக்குகிறான். ஓர் எண்ணம் அல்லது ஒரு கருத்து அதற்கு அடுத்த எண்ணம் அல்லது கருத்துடன் ஒட்டாமல் தனியாக நிற்கவேண்டும் என்று கருதினால் தனிப்பத்தியாக ஆக்குகிறான்.

நான் கட்டுரைகளில் ஒருகருத்தை பல அலகுகளாக பிரித்துக்கொள்கிறேன். ஒர் அலகு ஒரு பத்தி. அது ஒரு தனிக்கருத்தாக நிலைகொள்ளவேண்டும் என நினைப்பேன்.

இணையத்தில் எழுத ஆரம்பித்தபோது அச்சுப்பக்கத்திலுள்ள சில வசதிகள் இங்கில்லை என உணரத்தொடங்கினேன். ஸ்க்ரோல் செய்து வாசிக்கவேண்டும். நீண்டபத்திகள் அத்தகைய வாசிப்பில் நாம் விரும்பிய ஒழுக்கை அளிப்பதில்லை, ஏனென்றால் ஸ்க்ரோல் செய்தாலே ஒழுக்கு முறிந்துவிடுகிறது.

அத்துடன் கணிப்பொறியின் பக்கங்களில் சீரான இடைவெளியும் சீரான அமைப்பும் கொண்ட பத்திகள்தான் சரியாக வாசிக்க உதவுகின்றன. வெண்முரசு அத்தனை பத்திகளும் ஏறத்தாழ ஒரே அளவு கொண்டிருக்கும். ஒட்டுமொத்தமாக உணர்வுகள் பெருகியொழுகும்போதுகூட பத்திகளாக அதைப் பிரித்திருப்பேன்.

ஏனென்றால் வெண்முரசு தங்குதடையற்ற வாசிப்பை அளிக்கவேண்டும் என நான் நினைத்தேன். மிகநீளமான நாவல். அத்துடன் அது காட்சிவடிவ சித்தரிப்பு கொண்டது. வாசகன் சென்று மறைந்த ஒரு காலத்தையே அகக்கண்களால் பார்க்கவேண்டும். வாசிப்பதை மறந்து பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். அப்படிப் பார்க்கவேண்டுமென்றால் அது தன்னியல்பாக ஒழுகிச்செல்லும் வாசிப்பை அளிக்கவேண்டும். மொழியோ அமைப்போ தடையை அளிக்கலாகாது

ஆனால் நாளையே நான் இன்னொரு படைப்பை எழுதுகிறேன் என்று கொள்வோம். அதில் வாசகன் ஒழுகிச்செல்லக்கூடாது, நின்று நின்று வரிவரியாக வாசிக்கவேண்டும் என நினைக்கிறேன். அந்நிலையில் ஒரு வரி ஒரு பத்தியாக ஆகும் பாணியை கடைப்பிடிக்கலாம். வாசகன் மொழியில் சிக்கிச் சுழன்று சுழன்று அங்கேயே கொஞ்சநேரம் கிடக்கவேண்டும் என எண்ணினால் மிகநீளமான சொற்றொடர்கள் கொண்ட மொழியை உருவாக்கலாம். வாசகன் சட்டென்று மொழியில் ஏறி மிகமிக விசையுடன் சென்று மீளவேண்டும் என்று எண்ணினால் நீளமான பத்திகளை உருவாக்குவேன்.

பத்தி பிரிப்பது ஒருபக்கம் வாசகனின் வாசிப்பு வசதிக்காக. ஆனால் வசதிக்காக மட்டும் அல்ல. அதில் புனைவு உருவாக்கும் விளைவும் ஓர் அளவுகோல்.

ஜெ

முந்தைய கட்டுரைமுருகவேலன்- கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசும் தேசியங்களும்