வால்டிமர் அட்டெர்டக் – செல்மா லாகர்லொஃப்

ஹெல்க்விஸ்டின் தலைசிறந்த ஓவியமான ‘வால்டிமர் அட்டெர்டக் விஸ்பியைக் கைப்பற்றி கப்பம் வசூலித்தல்’யை கலைக்கழகத்தில் புதிதாக காட்சிக்கு வைத்திருந்தனர். ஒரு அமைதியான காலைப் பொழுதில் நான் அங்கு சென்றேன், அப்போது அந்த ஓவியம் அங்கு வந்திருப்பது எனக்குத் தெரியாது. செறிவான வண்ணங்களுடன் பல சித்திரங்களை கொண்ட அந்த பெரிய ஓவியத்திரை பார்த்தவுடன் பிரம்மிப்பை ஏற்ப்படுத்தியது.  நான் வேறு எந்த படத்தையும் பார்க்கவில்லை, நேராக அதை நோக்கிச் சென்று ஒரு இருக்கையை போட்டு ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தேன். ஒரு அரை மணி நேரம் மத்திய காலகட்டத்தில் வாழ்ந்தேன்.

வெகுசீக்கிரமே விஸ்பி சந்தைப்பகுதியில் நிழந்த காட்சிக்குள் சென்றுவிட்டேன். அரசன் வால்டிமர் அட்டெர்டக் கட்டளையிட்ட தங்க பானத்தால் நிரம்பியுள்ள மூன்று பீர் கொப்பரைகளையும் அதைச் சுற்றி கூடியுள்ள மக்களையும் பார்த்தேன். ஒரு செல்வச் செழிப்புள்ள வணிகன் தனது தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் குனிந்து ஒரு வீரனால் இழுத்துச் செல்லப்படுவதை பார்த்தேன்; அந்நகர இளைஞன் ஒருவன் அரசனைப் பார்த்து தனது கையை முறுக்குவதை பார்த்தேன்; கூர்முகம் கொண்ட துறவி தனது அரசனை உன்னிப்பாக கவனிக்கிறான்; கந்தலான ஆடையில் இருந்த பிச்சைக்காரன் தனது செம்புக்காசுகளைக் கொடுக்கிறான்;  ஒரு கொப்பரைக்கு அருகில் ஒரு பெண் விழுந்து கிடக்கிறாள்; அரசன் அரியனையில் அமர்ந்துள்ளான்; படை வீரர்கள் குறுகலான வீதி வழியாக கூட்டமாக வருகிறார்கள்; உயர்ந்த மாடங்கள், சிதறிக் காணப்படும் திமிரான காவலார்கள் மற்றும் பிடிவாதமான மக்கள் அனைத்தையும் பார்த்தேன்.

ஆனால், திடீரென நான் ஒன்றை கவனித்தேன், இந்த ஓவியத்தின் மைய சித்திரம் அரசன் அல்ல, அந்நகர வாசிகள் யாரும் அல்ல, இரும்பு உடை  அணிந்துள்ள, அரசனின் கேடய வீரர்களில் ஒருவன், இரும்பு தலைக்கவசத்தால் முகத்தை மூடியிருப்பவன்.

அந்த உருவத்திற்குள் கலைஞன் ஒரு வினோதமான ஆற்றலை புகுத்தியிருக்கிறான். அவனது உடலில் ஒரு முடியைக் கூட பார்க்க முடியாது; அவன் இரும்பால் உலோகத்தால் ஆனவன், முழுவதுமே. அங்கு சுற்றிலும் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கும் எல்லாவற்றிற்கும் சரியான தலைவன் ’தான்’ என்ற தோற்றத்தை அளிக்கிறான்.

”நான் வன்முறை; நான் கொடுங்கொள்ளை, விஸ்பியில் கப்பம் வசூலிப்பவன் நான். நான் ஒரு மனிதன் அல்ல; நான் வெறும் இரும்பு, உலோகம். நான் மகிழ்வது துயரிலும் தீமையிலும். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை சித்திரவதை செய்யட்டும். இன்று, விஸ்பியின் எஜமானன் நான்” என்று அவன் கூறுகிறான்.

“தெரிகிறதா, எஜமானன் நான் என்பதை உன்னால் பார்க்க முடிகிறதா?” என தன்னை காண்பவரிடம் சொல்கிறான் “உன் கண்களுக்கு எட்டும் தொலைவு வரை மக்கள் ஒருவரையொருவர் சித்திரவதை செய்துகொண்டிருக்கின்றனர், வேறெதுவுமே இங்கு இல்லை. அவர்கள் வெறுக்கிறார்கள் பயப்படுகிறார்கள், ஆனால் அடிபணிகிறார்கள். மேலும் வெற்றியடைந்தவர்களின் ஆசையோ பயங்கரமாக அதிகரிக்கிறது, இன்னமும் தங்கம் வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். டென்மார்கின் அரசராக இருந்தால் என்ன அவனின் படைவீரனாக இருந்தால் என்ன, இன்று ஒரு நாள் அவர்கள் எல்லோரும் என் சேவகர்கள் அல்லவா? நாளை, அவர்கள் ஆலயத்திற்கு செல்லலாம், அல்லது அவர்களின் விடுதியில் அமைதியாக மகிழ்ச்சியாக உட்காரலாம், அல்லது அவர்களின் வீட்டில் ஒரு நல்ல தந்தையாக நடந்துகொள்ளலாம், ஆனால் இன்று அவர்கள் எனக்கு சேவை செய்கிறார்கள்; இன்று அவர்கள் ராட்சசர்கள் காமுகர்கள்”.

அவன் சொல்வதை நீண்ட நேரம் கேட்கும் ஒருவனால் இந்த ஓவியம் என்ன என்பதை நன்றாக பிரிந்துகொள்ள முடியும்; மக்கள் ஒருவரையொருவர் எப்படி சித்திரவதை செய்வார்கள் என்ற பழைய கதையின் சித்திரம் மட்டுமே இது, வேறெதுவுமல்ல. மீட்புக்கான எந்தவொரு அம்சமுமே இதில் இல்லை, கொடூரமான வன்முறை மட்டுமே, வெறுப்பு மட்டுமே, ஆதரவற்ற துயரம் மட்டுமே.

விஸ்பி சூறையாடப்படாமலும் எரியூட்டப்படாமலும் இருக்க வேண்டும் என்றால் அந்த மூன்று பீர் கொப்பரைகளும் நிரப்பப்பட்டாக வேண்டும். அப்படி இருக்கும் போது ஏன் அந்த ஹான்சீட்டர்கள்* உற்ச்சாகத்துடன் வரவில்லை? ஏன் பெண்கள் நகைகளுடன் விரைந்து வரவில்லை? களிமகன்கள் ஏன் தங்கள் மதுக்கோப்பைகளுடன் வந்து கூத்தாடவில்லை? இந்த தியாகத்திற்கு ஏன் மதகுருக்கள் தங்களின் திருச்சின்னங்களுடன் ஆவலாகவும் உற்சாகமாகவும் வரவில்லை? ”உனக்காக, இது உனக்காக, எங்கள் அன்புக்குறிய நகரமே! இது உனக்காக என்ற போது நீ எங்களுக்காக படைகளை ஏன் அனுப்ப வேண்டும்! ஓ, விஸ்பி, எங்கள் தாயே, எங்கள் பெருமையே! நீ எங்களுக்கு என்னென்ன கொடுத்தாயோ அதையெல்லாம் திரும்பப்பெற்றுக்கொள்!”

ஆனால் ஓவியர் அவர்களை இப்படி பார்க்க விரும்பவில்லை, நிஜத்தில் அப்படி இருந்திருக்கவும் இல்லை. உற்சாகம் கிடையாது, வழுக்கட்டாயம், அடக்கியுள்ள எதிர்ப்பு, கூச்சல் மட்டுமே. அவர்களுக்கு அனைத்துமே தங்கம் தான், பெண்களும் ஆண்களும் தாங்கள் கொடுக்கப்போகும் தங்கத்திற்காக துயரப்பெருமூச்சு விடுகிறார்கள்.

“பார் அவர்களை!” என அரியானையின் படிகளில் நின்றிருக்கும் அந்த சக்தி சொல்கிறது “அவற்றைக் கொடுப்பதற்கு அவர்களின் இதயம் வலிக்கிறது. அவர்களுக்காக ஒருவன் பரிதாபப்படலாம்! ஆனால் அவர்களோ கீழ்தரமானவர்கள், பேராசைக்காரர்கள், ஆணவம் கொண்டவர்கள். அவர்களோ அவர்களுக்கு எதிராக நான் அனுப்பிய கொள்ளையர்களை விட உயர்ந்தவர்கள் அல்ல.”

ஒரு பெண் கொப்பரைக்கு அருகில் விழுந்துகிடக்கிறாள். தனது தங்கத்தைக் கொடுப்பதற்கு அவளுக்கு மிகவும் வலிக்கிறதோ? அல்லது குற்றவாளிகளில் ஒருவராக இருப்பாளோ? இந்த புலம்பல்களுக்கு எல்லாம் அவள் தான் காரணமா? இந்த நகருக்கு துரோகம் செய்தது அவள் தானா? ஆம், அரசன் வால்டிமரின் ஆசைநாயகியாக இருந்தது அவள் தான். உங்-ஹன்சியின் மகள் அவள்.

அவளுக்கு நன்றாக தெரியும் தான் எந்த தங்கத்தையும் கொடுக்க வேண்டியதில்லை என்று. அவள் தந்தையுடைய வீடு சூறையாடப்படாது, ஆனால் அவள் தன்னிடம் இருப்பதை எடுத்துக்கொண்டு வந்திருந்தாள். சந்தைப் பகுதியில் நடந்துகொண்டிருந்த இந்த துயரங்கள் அனைத்தையும் பார்த்து கடந்து அவள் இங்கு வந்திருக்கிறாள், இப்போது எல்லையற்ற மனவருத்தத்தில் விழுந்துகிடக்கிறாள்.

சில வருடங்களுக்கு முன், அவன் துடிப்பான மகிழ்ச்சியான இளைஞனாக இருந்த போது அவள் தந்தையின் இல்லத்தில் பொற்கொல்லனாக பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தான். அப்போது இதே சந்தைப் பகுதியில் இந்த மாடங்களுக்கு பின்னால் நிலவு மேலெழுந்து விஸ்பியின் அழகை ஒளிபெறச் செய்துகொண்டிருக்கும் போது அவனுடன் உலாவருவது இனிமையாக இருக்கும். அவள் அவனை பற்றி, அவளது தந்தையை பற்றி, அவளின் நகரைப் பற்றி பெருமிதம் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அவள் அங்கு விழுந்துகிடக்கிறாள், துக்கத்தால் உடைந்துகிடக்கிறாள். அப்பாவி, ஆனால் குற்றமிழைத்தவள்! ரத்தம் உறைந்துபோய் கொடூரமாக அரியனையில் அமர்ந்திருப்பவன், இந்நகருக்கு இப்பேரழிவைக் கொண்டுவந்திருக்கும் அவனா, அதே மனிதன் தானா இனிய வார்த்தைகளில் மென்மையாக அவளிடம் கொஞ்சியவன். அவனை சந்திக்கவா முந்தைய இரவு தனது தந்தையின் சாவியை திருடி ரகசியமாக நகர கதவை திறந்தாள்? பொற்கொல்ல பயிற்சி மாணவனாக இருந்த தனது ஆடவனைக் கண்ட போது அவனுக்கு பின்புறம் கையில் வாளுடன் போர் வீரன் ஒருவனும் இரும்பு கேடயமேந்திய ஒருவனும் நின்றுகொண்டிருந்தனர், அப்போது அவள் என்ன நினைத்திருப்பாள்? அவள் திறந்துவிட்ட கதவு வழியாக இரும்பு ஆறு அலையலையாக சென்றதைப் பார்த்த போது பிச்சியானாளா அவள்? மங்கையே, இனி புலம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை! உன்னுடைய நகர்த்தின் எதிரியை நீ ஏன் காதலித்தாய்? விஸ்பி வீழ்ந்துவிட்டது, அதன் பெருமையும் அழிந்துவிடும். நீ ஏன் நகர வாயிலின் முன் விழுந்து, வந்து கொண்டிருக்கும் வெள்ளத்தின் இரும்பு கால்களில் மிதிபட்டு நசுங்கிச் சாகவில்லை? அங்கு ஊடுருவி வருபவர்கள் மீது சொர்கத்தின் மின்னல் தாக்குவதை பார்ப்பதற்காகவா வாழ விரும்புகிறாய்?

ஓ மங்கையே, அவனருகில் வன்முறை நின்று அவனைக் காத்துக்கொண்டிருக்கிறது. நம்பிய ஒரு பெண்னை ஏமாற்றியதைவிட பல புனிதமான விஷயங்களை மீறியுள்ளான். கடவுளின் ஆலயத்தைக் கூட விட்டுவைக்கவில்லை அவன். இறுதி கொப்பரையை நிரப்புவதற்கு ஆலயச் சுவரில் பலபலத்துக் கொண்டிருந்த பதாகையையும் உடைத்துக் கொண்டுவந்தான்.

இந்த ஓவியத்தில் இருக்கும் சித்திரங்கள் ஒவ்வொன்றின் நடத்தைகளும் மாற ஆரம்பிக்கிறது. உயிருடன் இருக்கும் ஒவ்வொன்றுக்குள்ளும் குருட்டு பீதி நிரம்புகிறது. கொடூரமான சிப்பாய்கள் வெளிறிப் போகிறார்கள்; நகர வாசிகள் தங்களின் கண்களை சொர்க்கத்தை நோக்கி உயர்த்துகிறார்கள்: அனைவரும் கடவுளின் தண்டனைக்காக காத்து நிற்கிறார்கள்; அரியணை படிகளில் நின்றிருக்கும் வன்முறையும் அதன் சேவகனான அரசனையும் தவிர அனைவரும் நடுங்கிப்போகிறார்கள்.

அக்கலைஞன் என்னை விஸ்பி துறைமுகத்திற்கு கூட்டிச்செல்ல இன்னமும் கொஞ்ச வருடங்கள் உயிருடன் இருந்திருக்கலாம். நான் அங்கு, புறப்பட்டுச் செல்லும் கப்பல்களை கண்களால் பின்தொடர்ந்த நகர வாசிகளை கண்டிருப்பேன். அவர்கள் அலைகளைப் பார்த்து சாபம் விடுக்கிறார்கள். “அவர்களை அழித்துவிடு! அவர்களை அழித்துவிடு! ஓ கடலே, எங்கள் நண்பனே, எங்கள் செல்வத்தை திருப்பி எடுத்து வா! தேவநம்பிக்கையற்ற அவர்களுக்கு, விஷ்வாசமற்ற அவர்களுக்கு மூச்சுதிணறவைக்கும் உன்னுடைய ஆழத்தை திற” என கத்தினார்கள்.

பிறகு, கடல் மெளனமாக முனுமுனுத்தது, அரச கப்பலில் நின்றிருந்த ‘வன்முறை’ அதற்கு ஓப்புதல் அளித்து தலை அசைத்தது. “அதுதான் சரி, துன்புறுவதும் துன்புறுத்தப்படுவதுமே என்னுடைய சட்டம். புயலும் கடலும் கொள்ளைகாரர்களின் இந்த கப்பலை அழிக்கட்டும், என்னுடைய ராஜ சேவகனின் செல்வங்களையும் எடுத்துக்கொள்ளட்டும்! வெகுசீக்கிரமே புதிய பேரழிவுப் பயனங்களை நாம் மேற்க்கொள்ளப் போகிறோம்.” என்றது வன்முறை.

கடற்கரையில் நின்றுகொண்டிருந்த நகர வாசிகள் திரும்பி தங்கள் நகரைப் பார்த்தனர். தீ சீறி எரிந்துகொண்டிருந்தது; கொள்ளை அதன் வழியாக தான் கடந்து சென்றது; சூறையாடப்பட்ட வீடுகளின் கதவுகள் பிளந்து கிடந்தன. காலியான தெருக்களையும் நாசமடைந்த ஆலயங்களையும் பார்த்தனர்; ரத்தம் தோய்ந்த பிணங்கள் குறுகலான சந்துகளில் கிடந்தன, பெண்கள் பயத்தால் வெறிபிடித்தது போல் நகரில் ஓடிக்கொண்டிருந்தனர். இங்கு நடந்த விஷயத்தில் அவர்கள் செயலிழந்து நின்றனரா? அவர்களால் யாரையும் பலிவாங்க முடியாதா, யாரையும் சித்திரவதை செய்து அழிக்க முடியாதா?

சொர்கத்தில் வசிக்கும் கடவுளே, பார்! அந்த பொற்கொல்லனின் வீடு சூறையாடப்படவில்லை எரியூட்டப்படவில்லை. இதற்கு என்ன அர்த்தம்? அவன் எதிரியின் கூட்டாளியாக இருக்கிறானா? நகர கதவுகள் ஒன்றின் சாவியை அவன் வைத்திருந்தான் அல்லவா? ஓ, நீ, உங்-ஹன்சியின் மகளே, பதில் சொல், இதற்கு என்ன அர்த்தம்?

வெகு தொலைவில், அரசக் கப்பலில், வன்முறை நின்றுகொண்டு அவனின் ராஜ சேவகனைப் பார்த்து தன் இரும்பு தலைக்கவத்திற்குள் புன்னகைத்தது. “புயலின் சீற்றத்தைக் கேளும், ஐயா, புயலின் சீற்றத்தைக் கேளும்! நீ கொள்ளையடித்த தங்கம் வெகு சீக்கிரமே கடலுக்கு அடியில் நீ தொடமுடியாத இடத்திற்கு சென்றுவிடும். திரும்பி விஸ்பியைப் பார், என்னுடைய மதிப்பிற்குரிய தலைவனே! நீ ஏமாற்றிய பெண் இப்போது மதகுருக்களுக்கும் சிப்பாய்களுக்கும் நடுவில் நகரின் சுவருக்கு கொண்டு செல்லப்படுகிறாள். அவளை பின்தொடர்ந்து மக்கள் கூட்டம் சபித்தும் வசைபாடியும் செல்வதை உன்னால் கேட்க முடிகிறதா? பார், கொற்றன்கள் சுண்ணாம்புக் கலவையுடனும் பூச்சுக்கரண்டிகளுடனும் வருகிறார்கள்! பெண்கள் கற்களுடன் வருகிறார்கள்! அவர்கள் அனைவருமே கற்களுடன் வருகிறார்கள், அனைவரும், அனைவரும்!”

ஓ அரசே, விஸ்பியில் என்ன நிகழ்கிறது என்பதை உன்னால் பார்க்க முடியாவிட்டால், அங்கு நடப்பதை நீ கேட்டு தெரிந்துகொள்ளலாம். உன் அருகில் நிற்கும் வன்முறையை போல நீ இரும்பாலும் உலோகத்தாலும் ஆனவன் அல்ல. முதுமையின் இருண்ட நாட்கள் வரும் போது, மரணத்தில் நிழலில் நீ வாழும் போது உங்-ஹன்சியின் மகளின் சித்திரம் உன் நினைவில் ஓங்கும்.

அவள் அவளுடைய மக்களின் அவமதிப்பையும் இகழ்ச்சியையும் பெற்றதால், அவளின் முகம் மரணத்தில் மூழ்கியிருப்பது போல வெளிறியிருப்பதைப் காண்பாய். மதகுருக்களுக்கும் சிப்பாய்களுக்கும் இடையில் அவள் மணி ஒலிக்கும் இடத்திற்கும் கடவுளின் துதிகள் பாடப்படும் இடத்திற்கும் இழுத்துச் செல்லப்படுவதைக் காண்பாய். மக்களின் கண்களில் அவள் ஏற்கனவே இறந்துவிட்டாள். தனது இதயத்தில் தான் இறந்துவிட்டதாகவே உணர்கிறாள் அவள், தான் எதைக் காதலித்தாலோ அதாலேயே கொல்லப்பட்டாள். தூணில் கட்டப்பட்டிருக்கும் அவளைக் காண்பாய், எப்படி கற்கள் அடுக்கப்படுகின்றன என்பதையும் காண்பாய், பூச்சுக்கரண்டிகளின் உரசலைக் கேட்பாய், தங்கள் கற்களுடன் முந்தியடிக்கும் மக்களின் சத்தத்தைக் கேட்பாய். “அடே கொற்றா, என்னுடையதை எடுத்துக்கொள், என்னுடையதை எடுத்துக்கொள்! பழிதீர்க்க என்னுடைய கல்லை எடுத்துக்கொள்! காற்றிலிருந்தும் வெளிச்சத்திலிருந்தும் அவளை புதைக்க என்னுடைய கல் உதவட்டும்! விஸ்பி வீழ்ந்துவிட்டது, புகழ்பெற்ற விஸ்பி! கடவுள் உன் கைகளை ஆசீர்வதிப்பார், அடே கொற்றா! பழிதீர்க்க நான் உதவுகிறேன், என்னை அனுமதி!”

சவ அடக்கத்திற்காக துதிபாடல்களும் மணியும் ஒலித்தன.

ஓ வால்டிமர், டென்மார்க்கின் அரசனே, இது நீ மரணத்தை சந்திக்கப்போகும் உனக்கான விதியும் கூட. நீ உன் படுக்கையில் வீழ்வாய், பெருவலியை கேட்பாய், பார்த்து, துன்பப்படுவாய். பூச்சுக்கரண்டிகளின் சத்தத்தை, பழிதீர்க்கும் அவற்றின் கதறலைக் கேட்பாய். மதநிந்தனையாளனின் ஆத்மாவின் சாவிற்கு ஒலிக்கும் புனித மணி எங்கே? பரந்த வெண்கல தொண்டையுடைய அவை எங்கே? கடவுளே உன்னுடைய கிருபைக்காக கூக்குறலிடும் நாக்குகள் கொண்ட அவை எங்கே? இசையுடன் மெல்ல அதிரும் ஓசை எங்கே? கடவுளின் இடத்திற்கு ஆன்மாவைக் கொண்டு செல்லும் அவ்வோசை எங்கே?

ஓ, லண்ட்டின்* பெரிய மணிகளே, எஸ்ரோமுக்கு* உதவுங்கள், சோரோமுக்கு* உதவுங்கள்!

தாமரைக் கண்ணன்
கோவை.

* * * * * * *

ஹான்சீட்டர்கள் (Hanseaters) – Hanseatic League என்ற வணிக கூட்டமைப்பின் உறுப்பினர்கள். இந்த கூட்டமைப்பு 11-14ஆம் நூற்றாண்டுகளில் வடமேற்கு மற்றும் மைய ஐரோப்பாவில் இருந்த வணிக குழு மற்றும் வணிக நகர்களின் கூட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு.

லண்ட் (Lund) – சுவீடனில் உள்ள ஒரு நகரம்.

எஸ்ரோம் (Esrom) – டென்மர்கில் உள்ள ஒரு நகரம்.

சொரோ (Sorø) – டென்மர்கில் உள்ள ஒரு நகரம். அரசன் வால்டிமரின் உடல் அங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய கட்டுரையதார்த்தவாதம் ஏன்?- கடிதம்
அடுத்த கட்டுரைபுனைவாளனின் கவிதை