கதைகளும் நோய்க்காலமும்

அன்புள்ள ஜெ,

கொரோனா தொற்றுக்கு பயந்து நான் வாழும் தென் கலிஃபோர்னியாவில் அத்தனை பள்ளிகளும், அலுவலகங்களும் மூடப்பட்டு நாங்கள் அனைவரும் வீடுகளில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளோம். வீதிகளில் வாகனங்கள் பெரிதளவில் இல்லை, எங்கும் ஒரு அமைதி. வேறு வழியில்லாததால் நாங்கள் நால்வரும் ஒன்றாக அமர்ந்து பேச ஆரம்பித்து உள்ளோம். தினமும் 2 படங்கள் சேர்ந்து பார்க்க முடிவு செய்துள்ளோம். மார்வெல் திரைப்படங்கள் பார்ப்பது என்பது எனது 14 வயது மகளால் முன்மொழியப்பட்டு 7 வயது மகனால் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை அயன் மேன் (2008) மற்றும் ஹல்க் (2008) படங்கள் பார்த்துள்ளோம். எனக்கு இப்படி வீட்டில் அடைபட்டு கிடப்பது மிகவும் பிடித்தமானதாகவே ஆகிவிட்டது.

சிறுவயதில் இருந்து கதைகள் படித்து வளர்ந்த எனக்கு எப்பொழுது பேசினாலும் எதாவது ஒரு கதை சொல்வதென்பது இயல்பானது. என் நண்பர்கள் என்னை கேலி செய்தும்  (அய்யய்யோ கதை சொல்ல ஆரம்பிச்சிட்டான் என்றும், வேணாம் என்றால் சொல்லாமல் விட்டுவிடுவாயா என்றும்) என் கதைகளை ரசித்தும் என்னை சகித்தும் வருகிறார்கள்.

சமீப காலத்தில், எங்கள் தமிழ் பள்ளியில் திண்ணை என்ற நிகழ்வில் நான் உங்கள் அறம் கதைகளை சொல்ல ஆரம்பித்து உள்ளேன். எனது நண்பர்கள் என்னை மேலும் மேலும் கதை சொல்ல மற்றும் ஏதாவது எழுத நிர்பந்திக்கிறார்கள். இப்பொழுது வீட்டில் கட்டாய ஓய்வில் (work from home) உள்ளதால் எதாவது எழுதலாம் என்று தோன்றுகிறது.

படித்த கதைகளை சொல்லுவது என்பது வெகு இலகுவாக இருந்தது ஆனால் ஒரு உணர்வெழுச்சி இல்லாமல் என்னால் எழுத முடியவே இல்லை. நேற்று அவ்வாறான உணர்வுமிகு நிலையில் நான் எழுதிய ஒரு பத்தியை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன். சரியாக எழுதி இருக்கிறேனா என்பதைவிட ஏதோ எழுதினேன் என்பது எனக்கு நிறைவாக உள்ளது. இதை என் மதிப்பிற்க்குரிய உங்களுக்கு அனுப்பி வைக்க எதோ என்னை உந்துகிறது. நான் எழுதிய பத்தியின் மற்றும் நான் சொல்லிய தங்கள் கதைகளின் சுட்டிகள் தங்கள் பார்வைக்கு.

சமத்துவ உலகு படைக்கும் கொரோனா எனும் புதிய விதி

ஸ்ரீராம் காமேஸ்வரன்

முந்தைய கட்டுரைவடகரோலினா,2019
அடுத்த கட்டுரைஆன்மிகமும் சுதந்திரமும்