இருவகை இலக்கியங்கள்

அன்புள்ள ஜெ வணக்கம்.

தங்களின் அறம் தான் நான் வாசித்த முதல் புத்தகம். அதன் பின்னர் தான் தங்களின் சிறுகதைகள் வாசிக்க ஆரம்பித்தேன். குக்கூ சிவராஜ் மூலம் தங்களின் கட்டுரைகள் பெற்று எம் மாணவர்களுக்கு வாசிக்க கொடுத்தோம். அறம் புத்தகம் சார்ந்து எம் மாணவர்கள் அப்புத்தகம் தங்களை எப்படியெல்லாம் பாதித்தது என்று பதிவிட்டார்கள்.

ஆனால் எனது பதினோரு வயது மகள் அர்ஷா சோற்றுக் கணக்கு தனக்கு ஏன் பிடித்தது என்பதுடன் அக்கதையை பற்றி சுவராஸ்யமாக விவரித்தார். எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தங்களின் சிறுகதைகள் வாசிக்க ஆரம்பிக்கிறார்.

ஆனால் எனக்குத்தான் வாசிக்கிற சிறுகதைகள் சில புரிந்து கொள்ள முடியவில்லை. சிறுகதைகள் என்ன சொல்ல வருகிறது என்று புரிந்து கொள்ள கஷ்டப்படுகிறேன். மௌனியின் சிறுகதைகள் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் என்ன வாசிக்க வேண்டும் எப்படி வாசிக்க வேண்டும் என்று தாங்கள் எழுதிய கட்டுரை அல்லது பேசிய வீடியோ இணைப்பு அனுப்பினால் எனக்கு பேருதவியாக இருக்கும்.

தங்களின் அறம் என்னை பாதித்த அளவிற்கு வேறு யாரும் பாதிக்கவில்லை. மேலும் வாசிப்பில் மிகவும் பின்தங்கி உள்ளதால் புத்தகம் தேர்வு செய்வதிலும் புரிந்து கொள்ளும் நிலையிலும் கஷ்டப்படுகிறேன். தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள் ஜெ.

தாங்கள் காந்திகிராமம் வந்த போது நான் தான் உங்களையும் குக்கூ சிவராஜ் அண்ணாவையும் கவனித்து கொள்ள தன்னார்வலராக விருப்பம் தெரிவித்தேன். ஆனால் அன்று எனக்கு அலுவலக பணி சார்ந்து சென்னைக்கு அனுப்பப்பட்டேன். எனவே அரிய வாய்ப்பை இழந்தாலும் என் மாணவர்களை அனுப்பி வைத்தேன்.

தங்களை மீண்டும் எனது மாணவர்களோடு சந்திக்க விரும்புகிறேன். அதற்கு முன் தங்களின் படைப்புகளை   அனைவருமே வாசித்து வருகிறோம்.

சந்திப்பு நடைபெறும் என்று நம்புகிறேன். நன்றி.

வின்சென்ட் ராஜசேகர்

***

அன்புள்ள வின்செண்ட்

குக்கூ நிகழ்ச்சிகள் எதிலாவது சந்திப்போம்

இந்த கொரோனா காலம் சந்திப்புகளை மிகவும் குறைக்கிறது

மௌனி கதைகள் தொடக்க கால வாசிப்புக்கு உரியவை அல்ல. அவை முதிர்ந்த வயதிலுள்ளவர்களுக்கு, வாசிப்பில் சற்று பழக்கம் உடையவர்களுக்கு உரிய கதைகள்.

கதைகள்  இருவகை உண்டு. வாழ்க்கையை நோக்கிச் சுட்டக்கூடியவை, தன் வடிவிலேயே வாழ்க்கையின் ஒரு பகுதியை முழுமையாக வைத்திருப்பவை ஒருவகை. சோற்றுக்கணக்கு அத்தகையது. கெத்தேல்சாகிப், அவருடைய வாழ்க்கைச்சூழல், அவருடைய பணி எல்லாமே அக்கதையில் உள்ளது. அது வாழ்க்கையிலுள்ள முன்னுதாரணம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது

ஆனால் சிலவகைக்கதைகள் வேறு இலக்கியப்படைப்புகளைச் சுட்டுபவை. இலக்கியங்களிலிருந்து உருவாக்கப்பட்டவை. அந்த இலக்கியப்படைப்புக்களை நீங்கள் படித்திருந்தால்தான் அவற்றை புரிந்துகொள்வதற்கான களம் அமையும். அந்த கதையில் அது சுட்டும் இலக்கியப்பரப்பை குறிப்பாலுணர்த்தும் விஷயங்கள் தான் இருக்கும். அது வாழ்க்கையைச் சுட்டாது

மௌனி கதைகளில் அவை நிகழும் களம், அவற்றின் மனிதர்கள் எதுவுமே சொல்லப்படுவதில்லை. அவை வாசகன் கற்பனைக்கே விடப்படுகின்றன. அவன் தான் வாசித்த பலகதைகளில் இருந்து அதை கற்பனையால் உருவாக்கிக்கொள்ளவேண்டும். மௌனியின் கதைகள் பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதைகள் மற்றும் கதைகளின் நீட்சியாக அமைந்தவை. அவற்றை ஒட்டி தமிழில் எழுதப்பட்ட கதைகளையும் அவை குறிப்புணர்த்துகின்றன.

அவற்றில் பழக்கமுள்ள வாசகர்களே இவற்றை உண்மையாக வாசிக்கமுடியும். நகுலன் எழுதும் கதைகளும் இத்தகையவை இவற்றை எழுத்திலிருந்து எழுத்து எனலாம். ஒருவகை metawriting என்று வரையறை செய்யலாம். இவை வாழ்க்கையப் பற்றி பேசுவதில்லை, வாழ்க்கையைப் பற்றி ஏற்கனவே பேசியவற்றை சில நுட்பங்களுடன் மீண்டும் பேசுகின்றன.

இலக்கிய வாசிப்பின் தொடக்கத்தில் நேரடியாக வாழ்க்கையிலிருந்து எழும் இலக்கியங்களையே நாம் வாசிக்கவேண்டும். அறம் போன்றவை. இலக்கிய வாசிப்பு முதிர்ந்து நாமே இலக்கியநூல்களை ஒட்டிச் சிந்திக்க ஆரம்பிக்கும்போது நாம் இலக்கியத்திலிருந்து உருவாகும் இலக்கியங்களை பற்றி வாசிக்கலாம். அவற்றைப்பற்றி கேட்டு அறிந்தபின் நூல்களை தெரிவுசெய்யலாம்

ஜெ

முந்தைய கட்டுரைஅபயா கொலைவழக்கு,சட்டமும் நடைமுறையும்- கடிதம்
அடுத்த கட்டுரைதுரியோதனன் காதல்